Posted by : kayalislam
Friday, 6 May 2011
நாவில் தேன் ஊறும் நாதர் உங்களின்
நாமம் தான் கூறிப் பாடும் பொழுதில்
பூவெங்கும் உள்ளோரின் நெஞ்சங்களிலே
புனிதம் பரப்பும் போதர் நபியே
( நாவில் )
தூவும் கருணை இறைவன் அவனின்
தூதாக மக்காவின் பதியில் பிறந்தே
தூராக்கிப் பொய்மை தெளிவாக்கி உண்மை
தீன் தந்த மஹ்மூதரே
( நாவில் )
கல்லை எரிந்தும் கடும் சொல்லை உமிழ்ந்தும்
கட்டாக உம் கொள்கை எதிர்த்த பகையோர்
உள்ளார நொந்தே உமை வாழ்த்த வைத்த
உயர் ஏந்தல் மஹ்மூதரே
( நாவில் )
கந்தங் கமழும் கஸ்தூரி மேனியில்
கவின் சான்ற வாய்மை துலங்கும் மொழியில்
மந்தார மேகம் குடையேந்தும் மன்னா
மதி வாணர் மஹ்மூதரே
( நாவில் )
சாந்தி தவழும் மதினப் பதியில்
செங்கோ லோச்சும் செம்மல் முஹம்மதரரே
சார்ந்தோர்கள் எம்மை மறுநாளில் அங்கே
சுவன் சேர்க்கும் மஹ்மூதரே
( நாவில் )
மாண்பிலங்கிடும் மாநபி பொருட்டால்
மன்னோனே எங்களின் நந்நாட்டங்களை
நிறைவேற்றி தந்து மகிழ்வோடு என்றும்
வாழவே அருள்வாய் அல்லாஹ்
( நாவில் )