Posted by : kayalislam
Monday, 29 August 2011
உலகங்கள் எல்லாம் உருவாக்கிக் காத்தே
துலங்கிடும் உன்னைத் துதிக்கிறோம் அல்லாஹ்!
விண்ணாளும் இறை உன் வேதத்தைத் தந்த
கண்ணான நபிமேல் கணிவருள் அல்லாஹ்!
ரஹ்மத்துச் சொரியும் ரமலானில் எம்மேல்
ரஹ்மத்தைப் பொழிவாய் ரஹ்மானே! அல்லாஹ்!
மன்னிப்பின் மழையை மான்பாகப் பொழியும்
பொன்னான மாதம் பொறுத்தருள் அல்லாஹ்!
வான்மறை வந்த வளர்ரம லானில்
ஆன்மாவைத் துலக்கி அருள்புரி அல்லாஹ்!
அமல்களை நிறைவாய் ஆவலாய்ச் செய்தே
கமழும்நல் வாய்ப்பைக் கனிந்தருள் அல்லாஹ்!
வீண் பேச்சைத் தவிர்த்தே வேதத்தை ஓதும்
மாண்போங்கும் சூழல் மகிழ்ந்தருள் அல்லாஹ்!
இறையில்லத் துள்ளே இஃதிகாப் இருக்கும்
நிறைவாய்ப்பைத் தருவாய் நித்தனே அல்லாஹ்!
தவம்போன்று ஓங்கும் தராவீஹுத் தொழுகை
தவறாமல் தொழவே தயவருள் அல்லாஹ்!
இருப்பத்தாய் இலங்கும் இனிதான தராவீஹ்
அருமையாய் தொழவே அமைப்பருள் அல்லாஹ்!
தஹஜ்ஜுதுத் தொழுகை, தஸ்பீஹுத் தொழுகை
மிகச்சிறப் பாய்த்தொழும் மேன்மைதா அல்லாஹ்!
நானிலம் துயிலும் நள்ளிரா வேளை
தேனிகர் திக்ரில் திளைக்கச் செய் அல்லாஹ்!
இரு கண்கள் கசிந்தே இதயமே உருகி
அருந் தவ்பா செய்ய அருள்புரி அல்லாஹ்!
இப்த்தாரின் போது இறைஞ்சிடும் எங்கள்
ஒப்பரும் துஆவை ஒப்புக்கொள் அல்லாஹ்!
ஏற்றங்கள் மிக்க ரமலானில் நாங்கள்
ஏற்றிட்ட நோன்பை ஏற்றருள் அல்லாஹ்!
மறுமையில் ரமலான் மன்றாடும் வண்ணம்
அருள்நோன்பை அமைப்பாய், அருளாளன் அல்லாஹ்!
மாதமாம் ரமலான் மறுமையில் எமக்கு
சாதக சாட்சி சாற்றச் செய் அல்லாஹ்!
இறைபோற்றும் இரவாம் லைலத்துல் கத்ரில்
இறைஞ்சிடும் எம்பால் இரங்கிடு அல்லாஹ்!
இம்மையும் மறுமை எனுமிரு உலகம்
செம்மையாய் வாழும் சிறப்பருள் அல்லாஹ்!
பிணியேது மின்றி பெருவளம் சூழும்
மணியான வாழ்வை மகில்தருள் அல்லாஹ்!
அல்லல்கள் துயர்கள் அணுகாமல் என்றும்
நல்லருள் பொழிவாய் நாயனே! அல்லாஹ்!
உடல்விட்டு றூஹை உருவிடும் நாளில்
இடர்பட்டு நிற்கா இயல்பருள் அல்லாஹ்!
எரிக்கின்ற துன்பம் இல்லாமல் கப்ரை
விரிசோலை யாக்கு! வேந்தனே, அல்லாஹ்!
மகுஷரின் சூட்டால் மயங்கிடும் நாளில்
தகுமர்ஷின் நிழலைத் தந்தருள் அல்லாஹ்!
கனிநபி ஹவ்ழுல் கவ்தரில் நாங்கள்
பனிநீரைப் பருக பரிவருள் அல்லாஹ்!
இன்பத்தின் எல்லை ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
என்றும்யாம் தாங்கும் இடமாக்கு அல்லாஹ்!