Posted by : kayalislam
Wednesday, 17 August 2011
சுடர் விட்டு இருள் கொல்லும் சூரியனை கண்டேன்
இது என் நாயகத்தின் திருவதன பிரகாசம் என்றேன்
பதினைந்தாம் நாள் இரவின் வான்மதியை கண்டேன்
இது என் நாயகத்தின் மாசில்லாத மதிமுகம் என்றேன்
பளிங்கு போல் ஒளி தரும் விண்மீன்களை கண்டேன்
இது என் நாயகத்தின் ஒளி விசும் விழிகள் என்றேன்
காலை பனியில் குளித்த ரோஜா இதழ்களை கண்டேன்
இது என் நாயகத்தின் தேன் சொட்டும் செவ்விதழ்கள் என்றேன்
வெடித்த இலவில் வெளியேறிய மெல்லிய பஞ்சினை கண்டேன்
இது என் நாயகத்தின் அள்ளி வழங்கும் அற்புத கையின் பிஞ்சு விரல்கள் என்றேன்
இன்ப மணம் வீசும் இயற்கையின் கஸ்தூரியை கண்டேன்
இது என் நாயகத்தின் பொன்னுடல் வீசும் வியர்வை மணம் என்றேன்
நினைக்கும்போதே நாவு சுரக்கும் தேன் அமிர்தத்தை கண்டேன்
இது என் நாயகத்தின் சுகந்த வாய் சுரக்கும் இனிய எச்சில் துளிகள் என்றேன்
கடிக்கும்போது இனிமை தரும் சுவைமிகு கற்கண்டினை கண்டேன்
இது என் நாயகத்தின் நறுமண நாவு பேசும் அழகிய வார்த்தைகள் என்றேன்
எவைகளை கொண்டு நான் என் நாயகத்தை புகழ்ந்தேனோ
அவையெல்லாம் என்னை சினம் கொண்டு பார்த்தன
அறிவில்லாத அப்துல் ரஹ்மானே
யாரிடம் இரவல் வாங்கி நாங்களெல்லாம் சிறப்பு பெற்றோமோ,
அந்த மாபெரும் அருட்கொடையை எங்களின் சாதாரண சிறப்பை கொண்டா உவமிக்கிறாய்
கடல் நீரில் இருந்து ஒருதுளி நீர் எடுத்து
அற்பமான அந்த ஒரு துளி நீரை கொண்டு
மாபெரும் கடலுக்கே நீ வரையறை செய்கிறாயா
என்று என்னிடம் சீறி பாய்ந்தன
உடனே என் எழுதுகோலை மூடி விட்டேன்
என் நாயகத்தை புகழ நான் ஆயிரம் ஜென்மம்
பிறவி எடுத்துவந்தாலும் அது என்னால் முடியாது
என்று கூறியவனாக
அற்பமான விட்டில் பூச்சி நான்
பேரொளி கொடுக்கும் என் நாயகத்தின் சுடரொளியில்
நான் கரிந்து போகிறேன்
இதுவே எனக்கு போதும்
by
Abdul Rahuman