தேனின் ஞான இன்பமுதை
தேனின் ஞான இன்பமுதை தெவிட்டிடா தெமக்கீந்த
தன் மதி ஒளி நீரே
ஓளியாய் மிளிர்ந்தெங்கள் விழி தன்னில் ஜொலித்திடும்
நிறைமதி எம் நூரே
உம்மின் புகழோதி மகிழ்ந்திடுவோம்
உள்ளமை ஒன்றென உரைத்தவர் நீரே
உண்மையில் ஓரிறை காணச் சொன்னீரே
கண்டவர் வென்றவர் என்றுரைத்தீரே
வேற்றுமை இருளோட்டி பாரில் ஞானத்தின் விதை தூவி
விதையினில் நிறைந்த நல் தரு தரும் கனியதின் சுமை எமின்
பெருமானேநாவால் பாகூறி குளிர்ந்திடுவோம்
முஹம்மது எனுமுயர் சுகவன நாமம்
சுவனத்தின் வாசலில் சூடியே நாயன்
பார்த்தகம் குளிர்ந்தே அழகுயர் முஹமதின்
தரிசனம் தந்து மகிழ்ந்தானே
தரணியில் அருள் மழை பொழிந்தானே
ஆதியில் ஜோதியாய் அழகுற ஜொலித்து
மேதியில் ஆதமாய் அவனியில் ஜனித்து
புகழ்மிகு தீபத்தில் புவிவானம் படைத்து
மலரென மணம் வீசி மங்கா தாரகையாய் மின்னி
மண்ணில் ஃபஹ்மென்னும் பரிதியாய் ஞானந்தூவும்
பரமனின் ஒளியென பிறந்தீரே
எம்மின் மருளதை களைந்தீரே
சுகந்த மேவும் தேகரே
சுகந்த மேவும் தேகரே
சீரெழில் விலாசரே
செம்மலெங்கள் நாதரே!
ஏகனின் தூதரே இணையில்லாத தூயரே
எம்பாலிரங்கும் மாணல் நுமது இனிய பேரை நெஞ்சிலே
ஏந்தினோமே யாம்சதா ஏந்தல் யா முஹம்மதே
திருத்தலம் மக்காவிலே பிறந்த ஞான ஆழியே
தீது மாய்த்துப் பாரெல்லாம் தீனின் சுடரை ஏற்றியே
தேசு சேர்மெய் வேதமே தந்த மேரின் தீபமே
மறக்குமோ இம்மானிலம் மாணல் நுமது சேவையை
மாந்தர் வாழ்வு சீருறும் சாந்திமார்க்கம் காட்டவே
மேதையோர்க்கு மேதையாய் வந்துதித்த நீதரே
அயர்ந்திடா தென்னாளுமே அண்ணலார் நும் மீதிலே
ஆர்வமாக கூறிடும் அமுதமாம் ஸலவாத்தினால்
ஆருமெங்கள் சோகமே ஆற்றுகின்ற ஆன்றலே
நாங்கள் வாழும் காலமெல்லாம் நாயனே
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யாரப்பி ஸல்லி அலன் நபியி முஹம்மதி
நாங்கள் வாழும் காலமெல்லாம் நாயனே
நலம் வளம் இருபதியிலும் தந்தருள்வாய்
குபிர் பிணி வறுமை ஆபத்தணுகாமலே
கை தாங்கும் எங்களை காலமெல்லாம் ரப்பனா
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யாரப்பி ஸல்லி அலன் நபியி முஹம்மதி
மாணிக்க இரத்தினம் மணிகள் கொண்டு அழைத்திடும்
காணிக்கை யாவும் கவனம் சேர்ப்பாய் ரபன்னா
நானே உன் கஃபாவை நாங்கள் காணவே
நாதர் நபி சமூகம் சேர்ப்பாய் ரப்பனா
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யாரப்பி ஸல்லி அலன் நபியி முஹம்மதி
வாழும் நெறி வான் மறை அளித்த வல்லவா
வான்புகழ் வணக்கம் உனக்கே அல்லவா
அளவில்லாப் புகழ் அறிவின் ஆழ்கடல் நன்நபி
அருளன்பு பண்பிற்கீடில்லை இவ்வவனியில்
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யாரப்பி ஸல்லி அலன் நபியி முஹம்மதி
மண்ணின் தாயகம் மக்கா ஷரீபைக் காணவே
மாசிலா நபி மணி பொருட்டால் சேர்த்தருள்
ஆல நபியின் அருகில் நாங்கள் அமரவே
காலமெல்லாம் காட்சி அருள்வாய் ரப்பனா
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யாரப்பி ஸல்லி அலன் நபியி முஹம்மதி
முன்னவன் தூதர் புகழ் பாடிடுவோம்
வெண்மனிக் கடலும் தன்னிசை அலையால்
அண்ணலின் புகழினை பாடும் பாடும்
பொன்மணிக் குயிலும் இன்னிசை குரலால்
கண்மணி நபியினைத் தேடும் தேடும்
சந்தன மணம் கொண்டு அந்தியின் தென்றல் வந்து
சுந்தர தலைவர் புகழினை பாடும்
மெல்லான சிரிக்கும் மல்லிகைப் பூவும்
வள்ளலின் வருகைக்கு சுகந்தம் தூவும்
சுள்ளென எரிக்கும் சூரிய கதிரும்
சொர்கத்து வேந்தருக்கு சோபிதங்கள் கூறும்
எண்ணத்தில் நிறைந்து மனக் கிண்ணத்தில் உறைந்து
முன்னவன் தூதர் புகழ் பாடிடுவோம்
வானத்தை பிளக்கும் மின்னல்கள் யாவும்
ஞானத்தின் வேந்தருக்கு மாலைகள் சூடும்
வானத்தில் மிளரும் வானவில்கள் யாவும்
புண்ணிய தூதருக்கு பொன்னாடை போர்த்தும்
எண்ணத்தில் நிறைந்து மனக் கிண்ணத்தில் உறைந்து
முன்னவன் தூதர் புகழ் பாடிடுவோம்
எங்கே நபியோ நானும் அங்கே நபியோடு
எங்கே நபியோ நானும் அங்கே நபியோடு
உறவாட அருள் புரிவாயே அல்லாஹு யா அல்லாஹு
எங்கே நபியோ நானும் அங்கே நபியோடு
உறவாட அருள் புரிவாயே அல்லாஹு யா அல்லாஹு
( எங்கே நபியோ )
மாமதீனா எம்மாநபி வாழும் நந்நகராம்
நானிலத்தில் சுவனம் என்னும் பொன்னகராம்
மதீனா சென்று சில காலம் மன்னர் நபிகளின் சந்நிதானம்
மகிழ்வாய் நானும் வாழ்வதற்க்கு அருள்வாய் அல்லாஹு
( எங்கே நபியோ )
மஹ்ஷரிலே மானிடரெல்லாம் தவிக்கையிலே
மாநபிகள் லிவாவுல் ஹம்தின் நிழலினிலே
காப்போன் உந்தன் அணைப்பினிலே கருணை நபியின் அருகினிலே
அடியேன் பாவியும் ஒதுங்கிடவே அருள்வாய் அல்லாஹு
( எங்கே நபியோ )
அடிமை நான் சுவனம் செல்ல அருள்வாயே
அண்ணல் நபி அரங்கினில் எனக்கோர் பணிதருவாய்
சீமான் உந்தன் அருளினிலே சுந்தரர் நபிகளின் ஹித்மத்திலே
அழியாக் காலம் இருப்பதற்கு அருள்வாய் அல்லாஹு
( எங்கே நபியோ )
அருள் மதீனச் சோலையிலே
அருள் மதீனச் சோலையிலே
மணங்கமழும் நபிமணியின்
சந்தன திரு ரவ்ழாவை காண்போமே!
தீன்குலத்தின் சீலர்களே
திருநபியின் உம்மத்தோரே
வாருங்களேன் மதினப்பதி ஏகிடுவோம்!
வாருங்களேன் மதினப்பதி ஏகிடுவோம்!
( அருள் மதீனச் )
கருணை நபி தரிசனத்தை பெற்று கரம் தொட்டு முத்தம்
செய்து ஸலாம் மொழிந்திடுவோம் வாரீரோ!
கருணை நபி தரிசனத்தை பெற்று கரம் தொட்டு முத்தம்
செய்து ஸலாம் மொழிந்திடுவோம் வாரீரோ!
கல்புகளில் தேன்சுரக்கும்
கனிவுடனே அருள் கிடைக்கும்
கை நிறைய அள்ளிடுவோம் வாரீரோ!
கை நிறைய அள்ளிடுவோம் வாரீரோ!
( அருள் மதீனச் )
நெஞ்சங்களில் நினைவுகளில் குருதியோடும் நாளங்களில்
நிறைந்தொளிரும் நேசரே நபிநாயகமே!
நெஞ்சங்களில் நினைவுகளில் குருதியோடும் நாளங்களில்
நிறைந்தொளிரும் நேசரே நபிநாயகமே!
உங்கள் நுபுவத்தென்னும் முத்திரையை
முகம் பதித்தே மலர்ந்திடவே
அகம் நிறைந்தே அணி வகுப்போம் ஆருயிரே!
அகம் நிறைந்தே அணி வகுப்போம் யாஹபீபே!
( அருள் மதீனச் )
எம்மை இங்கு ஏங்கவிட்டு எங்கு சென்றீர் எழில் மதியே
பொங்கி மனம் பார்க்க உமை துடிக்கின்றதே!
எம்மை இங்கு ஏங்கவிட்டு எங்கு சென்றீர் எழில் மதியே
பொங்கி மனம் பார்க்க உமை துடிக்கின்றதே!
நீர் பிரிந்து மீன் வாழ
நினைத்திடுமோ நாயகமே
உமை இழந்த வாழ் விங்கு எமக்கேனோ!
உமை இழந்த வாழ் விங்கு எமக்கேனோ!
( அருள் மதீனச் )
சித்திரமே ரத்தினமே முத்து நபி நாயகமே
முழுமதியாம் முகம் காண ஏங்குறதே!
சித்திரமே ரத்தினமே முத்து நபி நாயகமே
முழுமதியாம் முகம் காண ஏங்குறதே!
எங்களது வேண்டுதலை
ஏற்றருளி காட்சி தர
கண்மணி நும் பாதம் தழுவிடுவோம்!
கண்மணி நும் பாதம் தழுவிடுவோம்!
( அருள் மதீனச் )
என்னை ஆளும் எந்நாளும் என் இதயம் வாழ் திரு நபி நாதா
என்னை ஆளும் எந்நாளும் என் இதயம் வாழ் திரு நபி நாதா
மன்னவா இறையோன் மஹ்மூதா
( என்னை )
உம்மை அல்லாது உலகை நான் படையேன்
உம்மைப் போல் ஒரு படைப்பை நான் அமையேன்
என்று இறை பகர் மறை நபிநாதா நற்குண வழி போதா
இன்று எம் குறை தீர்ப்பீர் மஹ்மூதா
( என்னை )
பாலை மக்களைப் பதமாக்க நாடி
காலை யூன்றினீர் அவர்களைத் தேடி
வேலை வேகவைத் தெறிந்தவர் வாழ்வில் வளந்தந்த வேதா
வேண்டினீரே துஆ மஹ்மூதா
( என்னை )
உம்மை அடித்தவர் நாண அணைத்தீர்
ஊரு விளைத்தவர் வாகுறச் செய்தீர்
இம்மை மறுமையில் எமக்கருள் புரிவீர் எம் பிழை நீக்கும் நாதா
அண்ணலே நபியே மஹ்மூதா
( என்னை )
மானில் பிணைநின்று அல்லாஹ்வின் துணையால்
மக்கள் வாழ்வில் முனைந்தீர் நல்வழியால்
தேனின் ருசி நானும் தெளிவான இஸ்லாம் எனும் ஒன்றில் நீதா
தேற்றினீர் எங்களை மஹ்மூதா
( என்னை )
அற்ப துன்யாவின் பாசத்தினாலே
அன்பும் பண்பும் இல்லாமல் வாழ் நாளே
விரயமாகாது வளர்ப்பீரே யாசீனை இஸ்லாமில் நாதா
வின்னவா மன்னவா மஹ்மூதா
( என்னை )
நாவினில் நாளும் நயந்தரும் நாமம்
நாவினில் நாளும் நயந்தரும் நாமம்
நபிமணி தாஹா உங்கள் நாமம்
காவினில் பூக்கும் கவின் மலர் தேனின்
கனிசுவை யூட்டும் கண்ணிய நாமம்
( நாவினில் )
இறைவனும் வானின் அமரரும் அன்பாய்
இதமுடன் வாழ்த்தும் எழில் மிகு நாமம்
இறைவனின் தூய அர்ஷதன் மேலே
எழுத்தினில் வாகாய் இலங்கிடும் நாமம்
( நாவினில் )
இறைவனை தாழ்ந்தே வணங்கிடும் போதும்
இசைவுடன் தீனோர் இயம்பிடும் நாமம்
பாவத்தில் நீந்தும் புவியினர் நெஞ்சில்
பண்பது மேவ உதவிடும் நாமம்
( நாவினில் )
காசினி இதழில் சரித்திர ஏட்டில்
கனகத்தின் வரியாய் திகழ்ந்திடும் நாமம்
அஹ்மத் என்றும் முஹம்மது என்றும்
அனைவரும் போற்றி புகழ்ந்திடும் நாமம்
( நாவினில் )
நாயகம் பிறந்த நல் தினமது
நாயகம் பிறந்த நல் தினமது நலம் பெற
நாடிடுவோம் எமின் தோழர்களே / தோழியரே
தாயகமாய் ஜெக ஜோதியாய் புவிதனில்
பிறந்த நல்தினத்தை கொண்டாடிடுவோம்
உச்சிக்கு நெய்யிட்டு கண்கள் சுருமாயிட்டு
இலட்சணமாகவே சுன்னத்துடன்
திங்கள் சுடரொளியாய் எங்கும் ஜொலித்திடும்
எங்கள் நபி தினத்தை கொண்டாடிடுவோம்
சன்மதம் முழங்கிடும் விக்ரகம் கவிழ்ந்திடும்
சாஷ்டாங்கமுடன் நபி பிறந்தனரே
சுத்த மிஸ்தூலம் கஸ்தூரிகள் முழங்கிடும்
சத்திய தினத்தை கொண்டாடிடுவோம்
மலர் கமழ் வீசிடும் வானோர்கள் போற்றிடும்
பலர் புகழ் ஹாஷிம் திசை மதி போல்
மாதாகி ஆமினா குத்ரத்தில் வந்திடும்
நாயகம் தினத்தை கொண்டாடிடுவோம்
பரமனின் மேடையில் மயில் ரூபம் கொண்டவர்
வரம் தர பாடிடும் (நூஹின்) எங்கள் துதி
தேனினும் இன்பமாய் அவதார நபி தினம்
நானிலமே நலம் பெற கொண்டாடிவோம்
கண்கள் இரண்டும் நபி பாதம் காண தேடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம் காண தேடுதே
திங்கள் இரஸூலே உங்கள் அன்பை மனம் நாடுதே
( கண்கள் )
மக்காநகர் மண்ணாய் பிறந்தேனா நானும்
மாநபி பாதம் தொடத்தானே வேணும்
என்னவென்று சொல்வேன் எங்கள் நபிநாதர்
எழிலான தோற்றம் கண்டாலே ஏற்றம்
( கண்கள் )
மதீனாவிலே ஓர் மரமாகினேனா
மாநபிக்கு தென்றல் காற்று தந்தேனா
அவர்கையில் ஏந்தும் வாளாகினேனா
அண்ணல் நபியின் அன்புக்கு ஆளாகினேனா
( கண்கள் )
கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
காப்பவன் வீட்டில் உள்ளாகினேனா
கடும்பசி தாங்கி கருணை நபியின் வயிற்றில்
கட்டிய கல்லில் இடமாகினேனா
( கண்கள் )
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஜனன பைத்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
பேர்காலமான போது சொர்க்கத்து மாதர்களும்
மலக்குகளும் பட்சிகளும் ஆமினத்தை சூழ்ந்தார்கள்
அவர்களுடைய தஸ்பீஹும் ஓசை சப்தம் தொனிகளையும்
ஆமினத்தும் ஆசையுடன் இன்பமாய் கேட்டார்கள்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
அவ்வேளை தன்னில் எங்கள் வள்ளல் முஸ்தஃபா நபியும்
ஆண்டவனை ஒர்மையாக்கி விரலை கொண்டே சாடை செய்தே
தொப்புளும் அறுக்கப்பட்டும் கத்னாவும் செய்யப்பட்டும்
தலை எண்ணெய் பூசப்பட்டும் கண்சுருமா போடப்பட்டும்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
கலிமாவை ஓதிக்கொண்டும் அழகான சூரத்திலே
ஆதிக்கு சாஷ்டாங்கம் செய்து நபி பிறந்தார்கள்
பிறந்த உடன் தாயாரும் பெற்றதற்கு யாதொன்றும்
அடையாளம் காணாமல் தூய்மையாக ஆகி விட்டார்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
நபியுடைய ஓர் ஒளிவு ஷாம் ஊர் கோட்டைகளை
கண்ணாலே பார்க்கு மட்டும் வெளிப்பட்டு நின்றதுகான்
ஆயிரம் வருடமாக அமராத நெருப்பதுவும்
அஹ்மதவர் பிறந்ததினால் அமர்ந்து நூர்ந்து விட்டதுகான்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
புத்துகளும் அடித்துக் கொண்டு கீழ்விழுந்து விட்டதுவே
கிஸ்ராவும் போதமாறி தட்டழிந்து போய்விட்டான்
அவ்வேளை ரப்பில் நின்றும் இந்த நபி தம்மைக் கொண்டு
அடங்கலிலும் சுற்றுமென சப்தத்தை கேட்டார்கள்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
அப்போது பூமியிலும் வானநகர் அடங்கலிலும்
இமைகொட்டும் நேரத்திலே மலக்கு சுற்றி மீண்டார்கள்
ஆலத்தூர் அனைவர்களும் அஹ்மதவர் பிறந்ததினால்
சந்தோஷம் எனும் கடலில் மூழ்கி சுகமெடுத்தார்கள்
மௌலாய ஸல்லி வஸல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக கைரில் கல்கி குல்லிஹிமி
(யாரஸூலுல்லாஹ்!) தங்கள் ஜனன தினத்தை நாங்கள் கொண்டாடுவோம்
அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸூலுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் யாஹபீபல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் யாநபியல்லாஹ்
தங்கள் ஜனன தினத்தை நாங்கள் கொண்டாடுவோம்
உங்கள் உகப்பை தினமும் பெற மன்றாடுவோம்
( அஸ்ஸலாமு )
முர்ஸலீன் களுக்கரசராய் வந்தவராம்
முர்தழா என்னும் நன்னபி நாயகராம்
முத்தகீன்களை அனுதினம் காப்பவராம்
தங்கள் ஜனன தினத்தை நாங்கள் கொண்டாடுவோம்
உங்கள் உகப்பை தினமும் பெற மன்றாடுவோம்
( அஸ்ஸலாமு )
மக்கமா நகரில் பிறந்த மாணிக்கமே
மதிக்க வொண்ணா மரகத வடி மயமே
மக்களை தினம் மஹ்ஷரில் கார் ஜெயமே
தங்கள் ஜனன தினத்தை நாங்கள் கொண்டாடுவோம்
உங்கள் உகப்பை தினமும் பெற மன்றாடுவோம்
( அஸ்ஸலாமு )
அன்பியாக்கள் எல்லாம் அனைக்கும் அந்நாளிலே
அஹ்மதானவரை நினைக்கும் பொன்னாளிலே
ஆதரித்தருள் தந்திடுவீர் அந் நன்னாளிலே
தங்கள் ஜனன தினத்தை நாங்கள் கொண்டாடுவோம்
உங்கள் உகப்பை தினமும் பெற மன்றாடுவோம்
( அஸ்ஸலாமு )
மக்கமா நகர் பிறந்தீரே மதீனாவில் சிறந்தீரே
மக்கமா நகர் பிறந்தீரே
மதீனாவில் சிறந்தீரே
யா ரஸூலே யாஹபீபே
ஏக வல்லோனின் திருத் தூதே
( மக்கமா நகர் பிறந்தீரே )
மஹ்மூதென்னும் குருநீரே
மஹ்ஷர்தனில் வருவீரே
மன்றாடி காப்பீரே
மா பாவிக்கும் கேட்பீரே
வல்லோனுடன் வானவரும்
சொல்லுவார் ஸலவாத் தினம்
யா ரஸூலே யாஹபீபே
ஏக வல்லோனின் திருத் தூதே
( மக்கமா நகர் பிறந்தீரே )
நீர் இன்றேல் இவ்வுலகமில்லை
நிருமணம் சொல்லுக்கிணையுமில்லை
நீரோடு நிலம் சேர்த்து
நிலைகுலைந்திருந்த போது
பாரெங்கும் அருட்கொடையாய்
பரிசளித்தான் உமை இறைவன்
யா ரஸூலே யாஹபீபே
ஏக வல்லோனின் திருத் தூதே
( மக்கமா நகர் பிறந்தீரே )
தேனூறு வெள்ளம் பாய
தேக்க இயலா தேனீ போல
தித்திக்கும் குர்ஆன் வழியும்
தீன்சுவை நபி மணி மொழியும்
இருந்தும் வழியறியாமல்
இருக்கின்றோம் அருள் புரிக
யா ரஸூலே யாஹபீபே
ஏக வல்லோனின் திருத் தூதே
( மக்கமா நகர் பிறந்தீரே )
அண்ணல் நபியின் அருட்கொடையே
அண்ணல் நபியின் அருட்கொடையே
அது இல்லா இடமே இங்கில்லையே
இந்த அகிலம் முழுதும் அமைந்ததெல்லாம்
எங்கள் அஹமது நபியின் ஒளியாலே
விண்ணுலகம் உங்கள் துதி கூறும் - இம்
மண்ணுலகு உங்கள் புகழ் பாடும்
இரு உலகினை ஆளும் இறைதூதே - எம்
இதயத்தில் வாழும் மறைவேந்தே
இன்பத்தை தந்திடும் மக்மூதரே
துன்பத்தை நீக்கிடும் அஹ்மதரே - எங்கள்
துன்பத்தை நீக்கிடும் அஹ்மதரே
( அண்ணல் நபி )
உங்கள் தரிசனம் கண்டிடவே - என்றும்
எங்கள் நெஞ்சம் ஏங்கிடுதே
கனவிலும் நினைவிலும் வந்திடனும் - அதை
நாங்கள் கண்டு மகிழ்ந்திடனும்
நீங்கள் தரிசனம் தந்திடனும்
அந்த நாளும் இன்றே வந்திடனும்
அந்த நந்நாளும் இன்றே வந்திடனும்
( அண்ணல் நபி )
அதபுடன் உயர் ஸலவாத்தோதினோம்
அழுதுங்கள் காதலில் உருகி நின்றோம்
அன்புடன் ஷஃபாஅத்தை வேண்டி நின்றோம்
அனுதினம் தந்தருள் அஹ்மதரே
இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம்
இதமுடன் ஏற்ப்பாய் யா அல்லாஹ் - என்றும்
இதமுடன் ஏற்ப்பாய் யா அல்லாஹ்
( அண்ணல் நபி )
நபிநாயகமே தாஹா நபியே எங்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட இறைதூதரே
நபிநாயகமே தாஹா நபியே - எங்கள்
நெஞ்சை கொள்ளை கொண்ட இறைதூதரே
உம்மை நெஞ்சார நேசிக்கின்றோம் அண்ணலே
உங்கள் பேரில் ஸலவாத் சொல்லுகிறோம்
( நபி நாயகமே )
சுபுஹுக்கு முன்னும் தொழுகைக்குப் பின்னும்
தவறாமல் ஸலவாத் ஓதுகிறோம்
வாரங்கள் தோறும் வெள்ளிகிழமையன்று
ஸலவாத் அதிகமாய் ஓதுகிறோம்
( நபி நாயகமே )
நபி மொழிகளை நாம் செவி சாய்ந்து கேட்கிறோம்
நபி சொன்னதை நாம் சட்டமென்று ஏற்கிறோம்
உம்மை நெஞ்சார நேசிக்கின்றோம் அண்ணலே
உங்கள் பேரில் ஸலவாத் சொல்லுகிறோம்
( நபி நாயகமே )
ஆண்டாண்டு தோறும் ரபியுல் அவ்வல் மாதம்
மௌலிது உங்கள் பேரில் ஓதுகின்றோம்
மீலாது நபியும் வருடங்கள் தோறும்
விழாக் கொண்டாடி மகிழ்கிறோம்
( நபி நாயகமே )
உம்மை காணாமல் உயிர் பிரிந்து போகும் போகுமா?
உம்மை காணும் எங்கள் ஆசை நிறைவேறுமா?
உம்மை நெஞ்சார நேசிக்கின்றோம் அண்ணலே
உங்கள் பேரில் ஸலவாத் சொல்லுகிறோம்
( நபி நாயகமே )
என்னிறை ஈந்த இன்னருளே
என்னிறை ஈந்த இன்னருளே
நன்னபி புகழைப் பாடுகிறேன்
அண்ணலர் கீர்த்தி யோதி யோதி
என்னின் தேவைகள் நிறைக்கின்றேன்
என்னுயிரே அர்ப்பணம் என்னன்னபிக்கே
என் உடலும் அர்ப்பணம் அன்னவர்க்கே
பெற்றோரும் அர்ப்பணம் எம் நபிக்கே
எல்லாமே அர்ப்பணம் அன்னவர்க்கே
நேசர் நபியின் பாசமோங்கி
தாசன் நானும் பாடுகின்றேன்
யா ரசூலல்லாஹ் வென்றுரத்து
கூவியழைத்தே மகிழ்கிறேன்
கண்ணின் மணியாம் காஸிம் நபியின்
விண்ணுற ஓங்கும் புகழ்க கூறும்
அன்னவர் காதலர் நமக்கெப்போதும்
என்றும் மவ்த்தின் பயமேது
கப்ரில் செல்லும் போது கூட
முஸ்தபாவின் புகழ் சொல்வேன்
முஸ்தபாவின் பித்தன் இவனென்
உலகோர் கூற நான் மகிழ்வேன்
அதரம் அசைந்து பேசுந் தோறும் என்
அஹ்மதர் புகழே நிலைத்திருக்கும்
மஹ்மூதர் புகழைப் பாடி பாடி
மகிழுயர் நிலையை யடைவோமே
கன்னியர் காதலில் தோய்ந்து தோய்ந்து
புண்ணியம் பெற்றார் ஷெய்க் சஅதி
மன்னவர் புகழை பாடுமவரே
"பலகல் உலா நவின்றாரே"
மதீனா தைபா மா நகர் ஒளியில்
மதீனா தைபா மா நகர் ஒளியில்
அண்டம் ஒளி கொண்டிலங்கினவே
மதியும் வானின் மீனினம் முழுதும்
நபி கொண்டே துலங்கினவே
யா ரஸூலல்லாஹ் எமின் உயிரே!
எம் உயிரின் உயிரே கண்மணியே!
அருளாம் உங்கள் பிறை நுதல் என்றும்
அழகாம் மகுடமாய் ஒளிர்ந்ததுவே
யா ரஸூலே நாம் உங்கள் அடிமை
நீங்களோ மன்னவர் மன்னவரே
பாரில் யாமும் பலன் பெறவே
எமை நூராம் ஒளியால் நிறைத்திடுவீர்
மகுடம் தரித்த மன்னவர் கூட
தங்கள் மதி முகம் கண்டதுமே
பணிந்தே தாழ்ந்தே புகழ்ந்து நிற்பரே
எங்கள் உயிரே யா நபியே
அருள் உங்கள் இதயம் ஒளி விளக்காகும்
அழகிய உடலே மணி மாடம்
தங்கள் சூரத்தின் எழில் உரைத்திடவே
சூரத்து நூரும் வந்ததுவோ
ஒளி தனக்குண்டோ நிழலது எங்கும்?
நிழலது இலையே ஒளி தனக்கே
ஒளியாம் தங்களின் பொன்னுடல்
தனக்கும் நிழலே இலையே யா நபியே
தொட்டிலில் தவழும் பாலகர் அஹ்மதர்
சுட்டிடும் தளிர் விரலசைவினுக்காய்
வானின் மதியும் ஆடியசைந்தே
மன்னவர் மனங்கொள விழைந்ததுவே
"காஃப் ஹாயா அய்னு ஸாதே!"
ஒளியின் முகவெழில் விரிவுரையே
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
ரஜா எனும் அஹ்மதின் புகழ்ப்பா உயர்ந்திட
ராஜர் அஹ்மதர் இன்னருளே
நாடும் எமை மன்றாடிக் காப்பீர்
நாளை மஹ்ஷரில் கண்மணியே
ஏகோன் தூதே எமையாளும் வேந்தே
ஏகோன் தூதே
எமையாளும் வேந்தே
எம் நேசர் நபியே
எம் முயிரினு மேலே
ஆமினா பீபியின் நறு நந்தவனத்தின்
அருந்தென்றல் அணைய வீசுதே
வானும் பூவும் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கூறக் கேட்குதே மதனீ
ரபீஉல் அவ்வல் பத்தோடிரண்டில்
ரஹ்மத் எம்மிடை வந்ததே
நுபுவத்தின் ஒளியாய்
ரிசாலத்தின் முடிவாய்
அருங்குணக் குன்றாய்
பிறந்தார்கள் மதனீ
முத்தினைப் பளிக்கும் புன்
முறுவல் பூக்கும் இன்
முகம் கண்டார் பெறுவார்கள் ஜெயமே
ஒளியே நிரப்பும் சந்திர வதனா
நிலையான ஏகன் ஹபீபான மதனீ
பாலகர் அஹ்மதர் சந்தணத் தொட்டில்
தாலாட்டுப் பாடி மகிழவே வந்தார்
வானவர் கோனும் ரஹ்மத்தே ஆலம்
கண்வளர்தற்காய்
பண்பாடி திளைத்தார்
முடிவு துவக்கம் என் "ஆக்கா" அறிவார்கள்
அருகும் தூரமும் அன்னவர்க் கொன்றே
மறைவிலிருக்கும் செய்திகள் சொல்லும்
இறையோன் ஹபீப்(ஆன) எங்களின் மதனீ
ஹாமித், மஹ்மூத் இன்னும் முஹம்மது
ஹூல்வத்தான பெயர் கூறி மகிழ்வோம்
இகத்திலும் பரத்திலும்
ஈடேற்றும் தலைவர்
ஈமானுள்லோர்க்கு
இன்னுயிரிலும் மேலாம்
மின்னத்து நபியின் நேசமே
மின்னத்து நபியின் நேசமே - ஜன்னத்தில் சேர்க்குமே
ஜன்னத்து நபியின் காதலே - மின்னத்தில் சேர்க்குமே
நம் விதியினை அமைத்திடுவார்கள் - தம் வாசலுக்கழைத்திடுவார்கள்
மஹ்மூதரின் காதலர்க்கு - பயமேயிலை பாரினிலே
மதீனாவுக்கேகும் மாண்பரே – மதிதென்னை நீங்களே
மா நபியின் மன்றினுக்கே – அழைத்தங்கு சேர்ப்பீரே
அழகென்றால் அழகும் அதுவே – அருள் நபிகள் பசுமை மன்றே
கவர்ந்தீர்க்கும் காதல் தலம் மேல் – கவியேற்றி போற்றுவேனே
சர்க்காரும் என்னை அழைத்து மதீனாவைக் காட்டினால்
ஷபா..அத் நஸீபு அன்று.. எனை வந்து சேருமே
பூமான் நபியின் பூ.. முகம் – இப் பூ..வில் காணேனாயின்
கண் பெற்றும் பலனும் யெதுவோ – பலனேதும் இல்லையே
யா ரப்பு இன்றே இவ்விரவிலே - என் நேசரின் காட்சி தா
மண் வாழ்வில் ஒரு முறை யேனும் - மதீனாவின் வாழ்வு தா
கபுரிலே சர்காரைக் கண்டு
கருணை கதத்தினில் வீழ்ந்திடுவேன்
அன்போடு அமரர் எனை எழுவென்று
சொல்லுமப்போது நான் பகர்வேன்
புண்ணிய பாதத்தில் வீழ்ந்திட்ட யானும்
எங்கணம் உடனே எழுந்திடுவேன்
மன்னிய நபியின் காட்சி பெறவே
மவுத்தின் கசப்பையிம் அருந்தினனே
கடல் போலும் காதல் அலைகள் - கல்பில் எழுந்ததால்
கருணை நபியின் பாதம் கண்டு – நிலை இன்றி வீழ்ந்தேனே
நிழலில்லா கொடு வெம்மை மஹ்ஷரில்
நிழலது சாயார் பரிந்துரையை
மறந்தவர் நிலை அந்தோ பாவம்
போக்குவர் எவரும் இல்லையே
இனியாயினும் ரசூலின் மண - முந்தானை பற்றியே
தனியான மஹ்ஷர் வேளை அபயம் – காண்பாயே நஜ்தியே
சிற்றடிமை யானும் எந்தன் நபியின் முற்றான காதலால்
பெற்றோர் பிறந்தோர் பொருளின் உதவி அற்றான காலையில்
வற்றாத அருளாம் நபியின் உதவி பெற்றுய்வேன் உண்மையே
நான் மதீனத்து மலர் காண துடிக்கின்றேன் இங்கே
நான் மதீனத்து மலர் காண துடிக்கின்றேன் இங்கே
அன்பு பூ முகம் மலர்ந்திடுமோ எம் விழியன் முன்னே
அந்த சுடர் வீசும் நாளே தான்
என் வாழ்வின் பொன்னாள்
எம் கனவிலும் நனவிலும் அருள் வாயே அல்லாஹ்
( நான் மதீனத்து மலர் காண )
மலை போல பிழை செய்த பாவிகள் நாங்கள்
உங்கள் தர்பாரில் மன்றாடி நிற்கின்றோம் கூடி
நீர் பிரிய மீன் வாழ முடிந்திடுமோ உலகில்
உமதன்பில்லாத வாழ்வு
வேண்டாம் ஏந்தல் நபியே
( நான் மதீனத்து மலர் காண )
காரிருள் சூழ்ந்த வெண்பாலை
மண்ணிற்குள் உயிர்கள்
துடித்திட புதைத்த பெண் இனம் காத்த நபியே
பெண் மகவேதான் எனதன்பு குழந்தைகள் என்று
நின் பாசத்தால் காத்த தந்தை எம் நபியே
( நான் மதீனத்து மலர் காண )
மரணத்தின் மடியிலும் மறக்காத மன்னர்
கடும் மஹ்ஸர் அனலிலும் அணைத்திடும் அன்பே
பூமணம் கமழம் ரவ்ழா முன் வந்தவர்களாய் யாமும்
பணிவாக நின்று ஸலாம் சொல்வேனே நபியே
( நான் மதீனத்து மலர் காண )
அண்ணல் நபி நாதர் பிறந்தார்
அண்ணல் நபி நாதர் பிறந்தார்
அன்பானமொழி நாளும் பகர்ந்தார்
கருணையின் கடலாக புவியில்
காருண்ய நபி நாதர் பிறந்தார்
ரபீயுல் அவ்வல் மாதம் தன்னில்
வளரும் நிறைவான பிறை பன்னிரெண்டில்
திங்கள் தினம் காலைப் பொழுதில்
எங்கள் நபி நாதர் பிறந்தார்
புகழ் மேவும் பொன் மக்கப் பத்தியில்
குன்றா எழில் பொங்கும் குறைஷி குளத்தில்
குறை யேதும் இல்லா செங்கதிர் போல்
பூமான் நபி நாதர் பிறந்தார்
மாதாமினார் அப்துல்லாவின்
மாண்பு மிளிர்கின்ற திரு மைந்தராக
ஏகாந்த இறையோனின் ஒளிவாய்
இரஸூல் நபி நாதர் பிறந்தார்
அஹதோனின் அருள் ஆசியோடு
பாரோர் பாவத்தின் இருள் நீக்க வந்தார்
வாகான மதி மேதையாக
வள்ளல் நபி நாதர் பிறந்தார்
வானோரும் தீனோரும் போற்றும்
பண்பு பேரோங்கும் மெய்ஞான தீபம்
வேதத்தின் தெழிவான வடிவாய்
வேந்தர் நபி நாதர் பிறந்தார்
தேனள்ளி சொறிகின்ற உறையும்
நெஞ்சம் தீன் அள்ளி தருகின்ற முறையும்
தான் கொண்டு தருகின்ற ஊற்றாய் எங்கள்
தாஹா நபி நாதர் பிறந்தார்
யா நபி ஸலாம் அலைக்கும் பைத்தின் தமிழ் பொருள்
நபியே ஸலாம் அலைக்கும்
தூதரே ஸலாம் அலைக்கும்
எம் நேசரே ஸலாம் அலைக்கும்
இறையருள் உம்மீது ஒளிரும்
முழுமதி எம்மீதுதித்ததே
மற்றொளியெல்லாம் மங்கி மறைந்ததே
அழகொளிர் உங்கள் முகம் போல்
அண்ணலே யாம் கண்டதில்லை
மதியுடன் கதிரொளியும் நீரே
மாசில்லா பேரொளியும் நீரே
பிணியகற்றும் அருமருந்தும் நீரே
உள்ளிருளகற்றும் ஒளிவிளக்கும் நீரே
எம் பாசரே! யாமுஹம்மது!
பார்க்கெலாமினிய மாணளரே
சீர்மிகு கிப்லாவிரண்டிற்கும்
சிறப்புயர் தலைவர் நீரே
உம் பூ முகம் கண்டோர்க்கு ஜெயமே
எம் பெற்றோரினு மினிய அன்பாளரே
குளிர் மிகு நும் துய்ய ஹவ்ழில்
மறுமையில் யாம் பருக வேண்டும்
சிறு பெரும் பிழைகள் யாவும்
இழிவுறும் இன்னல்கள் யாவும்
அகற்றிடும் அன்பாளர் நீரே
எம்மாருயிர் பண்பாளர் நீரே
நன்மையின் நன்நேசர் நீரே
நிலை உயர்த்தும் நாதர் நீரே
எம்பாவப் பிழைகள் யாவும்
பொறுத்தெம்மை என்றும் காப்பீரே
ஆழிய மெஞ்ஞான வேந்தே
எம் உளமிறைஞ்சல் ஏற்போர் நீரே
நலமுறு நற்செயல்களாற்ற
நாயனே நமக்கருள்வாய்
ஏகோனின் தூதரே யா ரஸூலல்லாஹ்
ஏகோனின் தூதரே யா ரஸூலல்லாஹ்
எழிலான நேசரே யா ஹபீ பல்லாஹ்
எம் நெஞ்சில் வாழுவீர் யாஷஃபியல்லாஹ்
ஏந்தினோம் கரங்களை யா நபியல்லாஹ்
( ஏகோனின் தூதரே )
விரல்களில் விண்ணப்பம் உம்மை அணுகவே
விழிகளிலும் தேடுதே வதனம் காணவே
பாதமே பணியவே பாசம் தேடுதே
முத்தவே முஹம்மதே இதழ்கள் துடிக்குதே
( ஏகோனின் தூதரே )
ஊனிலே உயிரிலே உறைந்த நாயகம்
உம்மன்றி பாரிலே யார் எமக்குண்டு
உம்மத்தீ உம்மத்தீ என்று தேடிடும்
தேன் சுவை தென்றலே யாரஸூலல்லாஹ்
( ஏகோனின் தூதரே )
அண்ணலே அவனியில் உதித்த நாளிதே
கன்னலே கண்களில் காட்சி தருவீரே
மண்ணிலும் அதிகமே பாவம் போக்குவீர்
அடியவர் அகந்தனில் அழுக்கை நீக்குவீர்
( ஏகோனின் தூதரே )
வெண்ணிலா தன்னொளி ஜோதி நாயகம்
மெய்யிலே மேவியே வீசுதே மணம்
மேதினி மீதிலே உதித்த நாயகம்
மேன்மையை வழங்கவே ஏந்தினோம் கரம்
( ஏகோனின் தூதரே )
எழிலான ஏந்தலர் எங்கள் முஸ்தஃபா
எழிலான ஏந்தலர் எங்கள் முஸ்தஃபா
கனிவான காவலர் ஷஃபீயுள் முத்னியின்
ஒளிவான உத்தமர் உதய தினத்திலே
ஏற்றியே போற்றுவோம் இதயதீபமே
( எழிலான ஏந்தலர் )
உங்கள் முகம் ரோஜா சுடரொளிருமே
உம் கன்னம் முல்லை மணம் வீசுமே
வியர்வையோ கஸ்தூரி மணம் கமழுமே
உங்கள் உமிழ் நீர் இனிய தேனாகுமே
( எழிலான ஏந்தலர் )
கண்மணியை கண்ட கண்கள் குளிர்ச்சியடைந்ததே
கல்புகள் துலும்பாமல் சாந்தி பெற்றதே
தங்களை பார்த்த நாட்கள் சந்தோஷம் பெற்றதே
பெருநாட்களாக தன்னையும் மாற்றி விட்டதே
( எழிலான ஏந்தலர் )
பூமான் நபியே இமாம் பூசிரிக்கு
அணிவித்த போர்வை போல் எமக்கு வேண்டுமே
போர்வையை போர்த்திய பாச நபியே
எங்கள் மேனியில் அணிவிப்பீர் உம் பாச போர்வையை
( எழிலான ஏந்தலர் )
மரத்தை அழைத்த மஹ்மூதர்
மரத்தை அழைத்த மஹ்மூதர்
மாதா பிதாக்குயிர் கொடுத்தவர்
கரத்தைப் பிடித்து கரை சேர்ப்பவர்
காயில் முஹம்மதே யா அஹ்மத்
மானுக்கு பினை கொடுப்பவர்
மாராய் கருணை கொடுப்பவர்
தீன் வழி சேர்ப்பீர் அனைவரை
ஜெம்மல் முஹம்மதே யா அஹ்மத்
சீரிய ஞானமும் செய்முறையும்
ஜெகம் எங்கும் ஓதிய போதகர்
நேரிய பண்புகள் யாவுமே
நின்றிலங்கும் மஹ்மூதரே
ஆதி இறைவன் சொன்ன முறையை
அனுவுமே வாழ்வில் பிசகிடாது
ஓதி உணர்ந்து நடைபழக்கம்
உத்தமரே மஹ்மூதரே
வாருங்கள் இரஸூல் நாயகமே
வாருங்கள் இரஸூல் நாயகமே
வல்லவனின் திருத்தூதரே
தாங்கள் எங்கள் ஆதாரமே
தாஹா இரஸூல் நீதரே
தாஹா இரஸூல் நீதரே
அஞ்சி உங்களை கெஞ்சுகின்றோம்
தஞ்சமது உங்கள் ஆதாரமே
சஞ்சலத்தை தீர்த்து வைப்பீர்
தாஹா இரஸூல் நீதரே
தாஹா இரஸூல் நீதரே
கஷ்டம் பெருகுமாம் சக்ராத்திலே
துஷ்டன் இபுலீஸ் வராமலே
சித்திரை கலிமா எம் நாவினிலே
முத்திரையாம் புவி யாரஸூலே
முத்திரையாம் புவி யாரஸூலே
இருட்டறை என்னும் கபுருக்குள்ளே
குருட்டு தலமாய் இருக்கையிலே
ஹக்கன் மலக்கு கேட்கையிலே
தக்க முறையில் பகர செய்வீர்
தக்க முறையில் பகர செய்வீர்
பாரும் புகழும் மக்கா வாழும்
அண்ணல் அப்துல்லா நன் மணியே
சீராய் மதீனாவில் வாழும்
செல்வ ஆமினா கண்மணியே
செல்வ ஆமினா கண்மணியே
சல்லாபவரே சர்குணரே
சுவனலோகத்து இரட்சகரே
ஸல்லி அலா முஹம்மதுவே
சொல்லும் ஸலாம் மீதிலே
சொல்லும் ஸலாம் மீதிலே
கண்ணின்மணி நாயகமே கல்பில் நிறைந்த மாணிக்கமே
கண்ணின்மணி நாயகமே - கல்பில் நிறைந்த மாணிக்கமே
எண்ணி எண்ணி பாடுகிறேன் - என்தன் நிலை காண்பீரோ!
புனிதம் பூக்கும் மதினா நகர் வருவேன் வருவேன் நானே
பூமானே உங்கள் ரவ்ழாவை தஞ்சம் எனநான் அழுவேன்
உங்கள் அருள் வேண்டுமே எனக்கது போதுமே
என மன்றாடி கரமேந்துவேன்
பாவ பிழைகள் மீதே தினம் உழன்றேன் உழன்றேன் நானே
பாசம் பொழியும் நபியே உம்மை அல்லால் யாரிடம் போவேன்
உங்கள் அருள் வேண்டுமே எனக்கது போதுமே
என மன்றாடி கரமேந்துவேன்
தீர்ப்பின் நாளின் எந்தன் கதியறியேன் அறியேன் நானே
தங்கள் கொடியின் நிழலில் இடம் தருவீர் தருவீர் கோனே
உங்கள் அருள் வேண்டுமே எனக்கது போதுமே
என மன்றாடி கரமேந்துவேன்
வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்
வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்
நீங்கள் வருகை தாருங்கள்
வருகை தாருங்கள் வள்ளல் யாஹபீபல்லாஹ்
எங்கள் இல்லம் வருகை தாருங்கள்
ஏங்கும் காதல் நெஞ்சம் மகிழ
எழை எங்கள் கனவில் தாங்கள்
வருகை தாருங்கள்
( வருகை தாருங்கள் )
மன்னவரே! மண்ணில் தாங்கள் பிறந்ததினாலே
இந்த மண்ணகமே விண்ணை மிஞ்சும் பெருமை பெற்றதே
தண்ணீரும் தன்னுடைய தாகம் தீர்க்கவே
என்றும் தாவி வர தக்கதுணை தாங்களல்லவா
( வருகை தாருங்கள் )
ஏற்றமிக்க தங்கள் பார்வை பட்டு விட்டாலே
கொடும் எறி நெருப்பும் குளிர்ந்து பனிபோல உருகுமே
காற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால்
அங்கே கை கொடுக்கும் சுவாசக் காற்று தாங்களல்லவா
( வருகை தாருங்கள் )
மெத்த புகழ் தங்கள் பாதம் முத்தக்கிடைத்தால்
எந்தன் மெய்சிலிர்த்து பேரின்பம் பொங்கி வழியுமே
சத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின்
உயர் ஸலவாத்தாய் என்னுடைய இதயம் துடிக்குதே
( வருகை தாருங்கள் )
உம்மி நபியே உங்கள் பெயரை உச்சரித்தாலே
ஊரும் உமிழ் நீரில் எங்கள் வாயும் வுழுவும் செய்யுதே
செம்பவழ ஹூருல் ஈன்கள் சிட்டுக்கள் பாடும்
தேன் சிந்தினை போல் தங்கள் நாமம் செவியில் பாயுதே
( வருகை தாருங்கள் )
கண்ணொளியை வழங்கும் தங்கள் நாமம் ஓதியே
இருகண்களிலும் தடவு விரல்கள் குளிர்ச்சியூட்டுதே
கண்ணியம்சேர் தங்கள் மேனி கமழச் செய்திடும்
உயர் கஸ்தூரி வாசம் நுகர மூக்கும் ஏங்குதே
( வருகை தாருங்கள் )
மக்கத்தில் மலர்ந்த மாணிக்க ரோஜாவை
மக்கத்தில் மலர்ந்த மாணிக்க ரோஜாவை
சொர்க்கத்தில் நான் காண வேண்டும்
பக்கத்தில் நான் நின்று பாத மலர் காணும்
பாக்கிய நாளென்று தோன்றும் - என்
ஏக்கங்கள் தான் என்று தீரும்
என் ஏக்கங்கள் தான் என்று தீரும்
( மக்கத்தில் )
பன்னீர் மணக்கின்ற பாத மலர் எழில்
கண்ணீரின் புஷ்பங்களை காணிக்கையாய் தர வேண்டும்
முன்னர் நான் செய்த முழுதான பாவமெல்லாம்
மன்னர் உம் புன்னகையில் மூழ்கியே மறைய வேண்டும்
மன்னர் உம் புன்னகையில் மூழ்கியே மறைய வேண்டும்
( மக்கத்தில் )
முத்துக்கள் மிளிர்கின்ற மோகன முக மலரை
பத்து விரல் தொட்டு பார்த்து பரவசமே பெற வேண்டும்
பத்து விரல் தொட்டு பார்த்து பரவசமே பெற வேண்டும்
தேம்பிய சிறு மழலை தேனுண் டு சிரிப்பது போல்
சிந்தையில் இறைக் காண வேண்டும்
செம்மலர் அவர் ஆசி வேண்டும்
( மக்கத்தில் )