Posted by : kayalislam
Saturday, 4 August 2012
வாய் திறந்தால் அல்லாஹ்வென வாய் திறப்பேன்
உம்மென இருந்தால் முஹம்மதென மௌனமாய் கிடப்பேன்
கண் திறந்தால் கஃபாவை காண்பதற்கே துடிப்பேன்
கண் மூடினால் மதீனாவின் கனவுகளில் மிதப்பேன்
உலகத்தை நேசிக்கும் பேதையரே இன்ப
பேரின்ப சுகம் காண வருவீரோ
அல்லாஹ் முஹம்மது அன்பால் இணைந்தது
இரண்டுமே ஒன்று அல்ல என்றாலும் வேறு அல்ல
என்முகம் கண்டவர் இறைவனைக் கண்டார்
என்பது நபி மொழி வார்த்தையன்றோ
நபி சொல் கேட்டவர் என் சொல் கேட்டார்
என்பது இறைவனின் ஆயத்தன்றோ
அண்ணலின் இதயம் வாழும் அல்லாஹ்வை தேடுவேன்
அவனுக்குள் குடி புகுந்த பெருமானை பாடுவேன்
குர்ஆனின் நாவெடுத்து குணநபியைப் போற்றுவேன்
கோமானின் சொல்லெடுத்து வல்லோனை வாழ்த்துவேன்
ஜம்ஜம் நீர் பருகும் போது கௌதரை நான் எண்ணுவேன்
தொழுகையில் மிஃராஜுக்கு நபியுடன் தான் செல்லுவேன்
ஒரு வரம் தான் தருவேனென்றால் நபியை மட்டும் வேண்டுவேன்
உலகத்தை வெறுப்பாய் என்றால் நபியை வைத்துக் கொள்ளுவேன்
வானுலகக் கூட்டணிக்குள் நானும் ஒன்றுக் கூடுவேன்
வள்ளல் மீது ஸலவாத்தோத வல்லோனுடன் சேருவேன்
ஸலவாத்தின் ஓசை கேட்டு கோள்கள் ஆடக் காண்கிறேன்
அர்ஷோடு குர்ஸில் கூட அருள் மயக்கம் பார்க்கிறேன்
அண்ணலுக்காய் படைத்த உலகம் அதிலே நாமும் வாழ்கிறோம்
அவர்களுக்காய் படைத்த பொருளை அனுபவித்து போகிறோம்
நபிகளின் வருகைக்காக உலகம் முன்னர் இருந்தது
நபிகளின் புகழை பேச உலகம் இன்னும் இருக்குது
மனிதரோடு மனிதராக நபிகள் தோற்றம் இருந்தது
மலக்குகளின் தலைவரோடு பேச்சும் அங்கு நிகழ்ந்தது
இறைவனின் அடிமை என்று புனித நாவு உரைத்தது
எனது ஹபீபு நீங்களென்று இறையின் வாக்கு ஒலித்தது