Posted by : kayalislam
Wednesday, 22 August 2012
நூருக்குள் நூரான நூரே முஹம்மதியா
நுபுவத்தின் முத்திரையை முத்திடுவோம் வாருங்களேன்
கண்ணீரும் கரைந்தோட கண்மணியின் தர்பாரை
களிப்போடு காண்போமே அன்பான சோதரரே
( நூருக்குள் )
முதலாம் வசந்தமாம் ரபீயுல் அவ்வலிலே
முழுமதியாய் தோன்றிய முத்திரை நபி யழகே
ரஹ்மானின் புண்ணிய நேசராய் வந்தீரே
ரஹ்மத்துலில் ஆலமீனாய் ஆலத்தில் அவதரித்தீர்
அங்கம் கமழ்ந்திட பங்கம் மறைந்திட
அவதாரமாய்ப் பிறந்தீர் அன்பான ஆன்றலரே
( நூருக்குள் )
உங்களை யாசித்தோர் ஆஷிக்காய் மனம்பெற்றோர்
உங்களை வெறுத்தோர்கள் வெதும்பியே போனார்கள்
மன்னரே மஹ்மூதே முஸ்தபா மா நபியே
மலர வைப்பீர் எங்களையும் ஆஷிக்கீன் கூட்டத்திலே
தாஜுல் முத்தகீனே தாஹவே தவப்பொருளே
தலையினில் கிறிடமாய் சூட்டிடுவேன் தங்களையே
( நூருக்குள் )
இறை நெருக்கம் கிடைத்திட்ட மிஃராஜின் நேரத்திலும்
இறை சமுகம் நம்தனையே நினைந்துருகிய நாயகமே
நரகத்தில் பெண்ணின்நிலை கண்டு மனம் வெதும்பி
நாவதை பேணிக்கொள் நவின்றீர்கள் நாயகமே
பெண்மகவே என் மகள்தான் காத்தீரே பெண்ணினத்தை
பெருமானே உங்கள் புகழ் பாடி மகிழ்திடுவோம்
( நூருக்குள் )
ஸிராத்தென்னும் பாலமதை மின்னலென யான் கடக்க
சிறப்பான முந்தானையை தருவீர்கள் கோமானே
அர்ஸினை அலங்கரிக்கும் அல்லாஹ்வின் ஜோதியினை
அகங் குளிர முகம் மலர பார்த்திடனும் பார்த்திபரே
அல்லாஹ் நீ உகந்திடும் உயிரான உத்தமரின்
அருகினில் யாமிருக்க வரம் தருவீர் நாயகமே
ஷரீஅத்தின் நெறிமுறையை சருகாமல் நிறுத்திய
ஸாதாத்தாம் குருநாதர் முஹியித்தீன் ஆண்டகையின்
திருப்பாதம் எம்தோளில் சுமந்திட ஆசிக்கிறோம்
வலிமார்கள் கூட்டதில் சேர்த்திட யாசிக்கிறோம்
இகபர வாழ்வெல்லாம் இறையன்பும் நபியன்பும்
இறைஞ்சியே கேட்கின்றோம் தந்திடுவாய் ரஹ்மானே
( நூருக்குள் )