Posted by : kayalislam
Monday, 21 January 2013
அருளாளன் அன்புடையோன் அல்லாஹூவின் கருணைப்
பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே
மாநிலத்தின் மார்பிடமாம் மக்க நகர் மீதெழுந்த
தேங்குபுகழ் தேன் மலரே தேசுடைய நாயகமே
ஓங்கு புகழ் குறைஷியரின் உயர் கிளையில் வந்துதித்த
தேங்கு புகழ் தேன் மலரே தேசுடைய நாயகமே
அப்துல்லாஹ் செல்வமென ஆமினாரின் மணிவயிற்றுள்
ஒப்பில்லா நிலையடைந்த ஒளிவீசும் நாயகமே
ஹலீமாவின் பார்வையிலே ஆடகளை மேய்த்து வந்தீர்
நலிவோரைக் காக்க வரு; நற்றுணையே நாயகமே
பெற்றோரை இழந்திடினும் பெரியோனின் கருணையெனும்
வற்றாத சுனையாடி வளர்த்த நபி நாயகமே
பரிவார்ந்த பாட்டனாரின் பான் மொழியைக் கேட்டு வந்தும்
பெரிய தந்தை காவலிலும் பேணிவளர் நாயகமே
நாயகியார் கதீஜாவின் நல்வாணி பத்துரையில்
நேயமுடன் நேர்மையினை நிரூபித்த நாயகமே
நாடுகளைக் கண்டு வந்து நலிவடைந்து மக்கள் படும்
பாடுகளை நினைந்துரகிப் பரிதவித்த நாயகமே
உயிரிழந்தும் உணர்விழந்தும் உலைத்திருந்த பாருலகம்
உயர்வடையும் வழிகாண உருகிநின்ற நாயகமே
கதீஜாவின் நாயகராய்க் கடிமணத்தைச் செய்த பின்னர்
புதிதாக ஒரு வலிமை புகழ் பெற்றீர் நாயகமே
மலை மீது தனித்திருந்து மறையோனை நினைந்துரகி
நிலையான பேரொளியால் நெஞ்சுவந்த நாயகமே
ஹீராவின் குகைக்குள்ளே இறைதூதர் ஜிப்ரீலும்
மாறாத மறையளிக்க மனமொளிரும் நாயகமே
கறை போக்கி நிறைவூட்டும் காவலனின் மறையுரையைப்
பறை கொட்டிச் சொன்னதுவும் பழியாமோ நாயகமே
ஒன்றிறைவன் ஒன்று குலம் ஒன்று நிறை என்றருளி
மன்பதைகள் பிணி நீக்கும் மருந்தாக்கும் நாயகமே
பெண்ணாசை பொன்னாசை பேர் அரசைப் பெற்றிடுமோர்
மண்ணாசை யாலசையா மாசில்லா நாயகமே
செங்கதிரும் தண்மதியும் சேர்த்துக் கையில் தந்திடினும்
எங்கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நாயகமே
நடைவழியில் முள்ளிட்டும் நற்கழுத்தில் துணியிட்டும்
தடைசெய்தோர் தொல்லைகளால் தயங்காத நாயகமே
விலங்குகளின் குடலையுங்கள் வீசு கதிர் மேனியிலே
கலங்காமற் போட்டவர்க்கும் கருணை பொழி நாயகமே
கால் கடுக்கத் தாயிபேகி கனிமொழியை ஈந்ததற்கோ
பால்வதனம் புண்ணாகும் பரிசேற்றீர் நாயகமே
சொன்மாரி பொழிந்ததற்காய்க் கள்மாரி பெய்து விட்ட
வன்மனத்தார் திருந்துவதற்கு வழி வகுத்த நாயகமே
மழலை மொழி குழவியரும் மாண்புடைய முதியவரும்
தழையருந்தித் தங்கொள்கை தனைக் காத்தார் நாயகமே
அடல் சான்ற வீரரெல்லாம் அண்ணலுமை யாதரித்துப்
புடம் போட்ட பொன்னே போல் பொலிவடைந்தார் நாயகமே
அடைக்கலமாய் எண்பது பேர் ஹபஷாவுக் கனுப்பி வைத்தும்
அடையலர்கள் இடைவாழ அஞ்சாத நாயகமே
அனல் வீசும் மணல் மீதில் அருமை பிலால் உடல் கருகும்
கனல் வீசும் காதையினால் கண்கலங்கும் நாயகமே
காலிரண்டும் ஒட்டகையில் கட்டியோட்டி யாஸிரினைக்
கேலி செய்த கிழித்ததனைக் கேட்டுருகும் நாயகமே
அம்பீட்டி வாட்களினால் ஆருயிரை இழப்பதற்கும்
அம்புயம் போல் மெல்லியலார் அஞ்சவில்லை நாயகமே
சந்திகளில் வெந்தவரும் சவுக்கடியால் வீழ்ந்தவரும்
சிந்தையிலே உறுதியினைச் சேர்க்கின்றார் நாயகமே
நல்லிரவில் இல்லமதை நண்ணியுயிர் குடிக்க வந்த
உள்ளமிருள் ஊனர்களால் ஊர் துறந்த நாயகமே
அஞ்சாத நெஞ்சுடைய அலியாரின் ஆதரவு
வெஞ்சினத்துப் பகைவருக்கு வியப்பூட்டும் நாயகமே
தங்கவபூ பக்கருடன் தவ்ரென்னும் குகைக்குள்ளே
பொங்கிவரும் பகை விடுத்துப் பொறுத்திருந்த நாயகமே
உயிராடும் போதினிலும் உளனன்றோ இறையென்ற
அயராத திடமனந்தான் அரிதரிது நாயகமே
மாசில்லா மனமுடைய மதீனாவின் நன்மணிகள்
வீசியபே ரொளியதனால் விறல் படைத்த நாயகமே
முந்நூற்றுப் பதின் மூன்று முஸ்லீம்களுடன் பத்ரில்
தந்நலத்தின் தருக் கொழித்த தளபதியே நாயகமே
ஊரெல்லாம் திரண்டெழுந்தே உஹதென்னும் களத்தெதிர்த்தும்
சீரெல்லாம் அழிந்துபடச் சிதைத்தனரே நாயகமே
மக்க நகர் வெல்வதற்க மாவீரர் பலரிருக்க
தக்க ஹுதைபிய்யாவில் தணித்திருந்த நாயகமே
ஆக்க மறு வைரிகளால் அபுஜந்தல் வெந்தபின்பும்
வாக்குறுதி காத்துவந்த வள்ளலிமாம் நாயகமே
கத்தியின்றி ரத்தமின்றி கடும் பகையை வென்று விட்டீர்
இத்தரையில் மக்க வெற்றிக் கிணையேது நாயகமே
இறுதி ஹஜ்ஜில் அரஃபாத்தில் இறைசாட்சி யாயுரைத்த
மறுவில்லா மணிமொழிகள் மதிவிளக்கம் நாயகமே
அறுபத்து மூன்றாண்டும் அருமுறையில் வாழ்த்து நெறி
நிறுவியபின் மறைவதற்கோ நிலத்துதித்தீர் நாயகமே
உலகத்தார் அனைவோர்க்கும் உயர்வான கொடையாக
அலகில்லா அருளாளன் அருளியவோர் நாயகமே
தூய்மை மிகம் இறையவனின் தூதுவனாய் யான் வரினும்
ஆய்குணத்தில் மனிதனென்றே அறைந்த ஹபீப் நாயகமே
மன்பதைகட் கெவர்வழியாய் மாநன்மை கிடைத்திடுமோ
மன்பதைக்குள் அவருயர்வை மனத்துணர்ந்த நாயகமே
இறையொருவன் பிறப்பில்லான் இறப்பில்லான் இணையில்லான்
நிறைவனைத்தும் உடையனென நிகழ்த்து நபி நாயகமே
நாளொன்றுக் கைவேளை நாயகனைப் புகழ்ந்தேத்தித்
தூளாகும் வாழ்வுக்குத் துணிவூட்டும் நாயகமே
வறியோரின் பசிப்பிணியை வல்லோரும் அறிவதற்கு
நெறியான நோன்புரைத்த நேயமிகு நாயகமே
செல்வத்தின் செழிப்புடையோர் சேர் பொருளில் நாற்பதிலொன்(று)
இல்லார்க்கு பகிர்ந்தளிக்க இயம்புகின்ற நாயகமே
வசதிகளைப் பெற்றிருப்போர் வாழ் நாளில் ஒரு தடவைக்
கசடோட்டும் கஃபாவைக் காண நவில் நாயகமே
தாம் விரும்பும் பொருளினையே தம்மோர்க்கும் விரும்பாதார்
யாம் விரும்பும் முஃமினாகார் என நவிலும் நாயகமே
எவர் நாவால் கரங்களினால் எழிலுறுமோ மனிதகுலம்
அவர் சிறந்த முஸ்லிமென அருளுமெமின் நாயகமே
சீனாவிற் சென்றேனும் சீர்கல்வி பெறுகவெனத்
தேனான வாய் திறந்து தெளிவூட்டும் நாயகமே
கல்விக்காய் உயிர் கொடுப்போன் காசினியில் மாளாமல்
நல்விதமே வாழ்வனென நவின்ற நபி நாயகமே
போர்க்களத்தில் குருதியினும் போதமிகு எழுதுகோலின்
ஓர் துளிமை உயர்ந்ததென உரைத்த ரஸுல் நாயகமே
கற்றறிந்தோன் யாவனெனில் கற்றதனைச் செயல் முறையில்
பற்றிடுவோன் என நவின்ற பயகம்பர் நாயகமே
அறிவடையச் சென்றிடுவோன் அதிலிருந்து திரும்பும் வரை
இறைவழியில் நின்றிடுமென் றியம்புகின்ற நாயகமே
கையேந்தும் செய்கையினும் காடு சென்று விறகு வெட்டி
மெய்யேந்தும் வாழ்வதனை மெச்சுகின்ற நாயகமே
வியர்வையது உலருமுன்னர் வேலை செய்வோர் கூலியினை
நயமாக கொடுப்பதற்கு நவின்ற நபி நாயகமே
தனக்கேனும் பிறர்க்கேனும் தகுபணிகள் செய்யாதோன்
எனதிறையின் பரிசு பெறான் என நவிலும் நாயகமே
பிறர் பிழையை பொறுத்தருள்வோர் பொறுமையுடன் வறுமை நிற்போர்
திறமான செயல்புரியும் திறமுரைத்த நாயகமே
துன்புறுவோர் மனப்பிணியைத் துடைப்பதற்கா யுதித்திடுமோர்
இன்சொல்லே பெருங்கொடையென் றியம்பு முபீன் நாயகமே
உள்ளத்தில் சொல் செயலில் உண்மையுடன் இருப்பவரைக்
கள்ளமிலா உத்தமராய்க் கண்ட யாசீன் நாயகமே
நற்குணங்கள் அனைத்தினுக்கும் நன்மை தரும் அடக்கமெனும்
பொற்குணத்தை அடிப்படையாய் புகன்ற நபி நாயகமே
தன் குழவிக் கன்பில்லான் தளர் முதியோர் தமைமதியான்
என் குழுவைச் சாரானென் றெடுத்துரைத்த நாயகமே
தனயனிடம் தந்தையைப் போல் தம்பியிடம் அண்ணனுக்குக்
கன உரிமை மிகுதமெனும் கருத்துரைத்த நாயகமே
தகுவொழுக்கம் அறிய வந்தோன் தரணியில் வாழ்வதற்க
வெகுளி தவிர் என நவின்றீர் வேந்தரெங்கள் நாயகமே
சினப் பேயை ஓட்டிவிட்டுச் சீரியதீர்ப் பெழுதிவிடல்
வனப்பாகும் வழக்காய்வோர் வழிக்கென்ற நாயகமே
மறைவாகச் செயுங் கொடையே மன்னானின் வெகுளியினைக்
குறைவாகச் செய்யுமெனக் கூறுமஸீஸ் நாயகமே
இன்னாத செய்தவர்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயன் சால்புதரும் என வாழ்ந்த நாயகமே
பசி தணிக்கக் கல்கட்டிப் பருங்கயிற்றுக் கட்டிலின் மேல்
பசுமேனி நோவடையப் படுத்திருந்த நாயகமே
தெருவிடையே பெருநாளில் தேம்பியழும் அனாதையினை
அருமையுடன் அணைத்தெடுத்தே அலங்கரித்தீர் நாயகமே
மரநிழலில் துயிலுகையில் மனந்துணிந்து வெட்ட வந்தோன்
கரம் நடுங்கி வாள் நழுவக் கடைக்கணித்தீர் நாயகமே
வழிப் போக்கன் உணவருந்தி வள்ளலுங்கள் படுக்கையிலே
கழித்தமலம் கைம்மலரால் கழுவியநன் நாயகமே
பாதுகையைச் செப்பனிட்டீர் பால் கறந்தீர் துணி தைத்தீர்
யாதுமற்றோர்க் குதவி நின்றீர் யாமுவக்கும் நாயகமே
சிற்றப்பர் ஹம்ஸாவின் சீரீரல் மென்றுமிழ்ந்த
புற்றரவாம் ஹிந்தாவின் புகலிடமே நாயகமே
ஒன்றுமபூபக்கருக்கும் ஒட்டகத்தின் விலை கொடுத்துத்
தன் மானம் காத்து நின்ற தங்க நபி நாயகமே
பகைவர்களும் பார்த்துமது பால் மனத்தை வியந்தனரேல்
மிகையாமோ ஸாதிகென மிளிருமுரை நாயகமே
பெரும் பகையின் அபூசுஃப்யான் பேரரசர் முன்னிலையில்
செருக் கொழிய நும்மியல்பைச் செப்பலையோ நாயகமே
பணியாளர் அனஸென்பார் பத்தாண்டு பணியாற்றி
அணிபோலும் வாழ்வதனால் அகநெகிழ்ந்தார் நாயகமே
திருநபியின் திருவாழ்வு திருமறையின் திருவுருவென்
றருளினரே நாயகியார் ஆயிஷாவும் நாயகமே
காவலற்ற விதவைகட்கும் கதியில்லர்க் குழவி கட்கும்
காவலரென் றபூதாலிப் கண்ட நபி நாயகமே
அருமையெங்கள் ஜஃபரென்பார் ஹபஷாவின் அதிபதிமுன்
பெருமையுடன் நும்மியல்பைப் பேசினரே நாயகமே
என்னருமை முஹம்மதைப் போல் எழிலுருவம் கண்டதில்லை
என்றேயபூ ஹுரைராவும் எடுத்துரைத்தார் நாயகமே
வனப்பிழந்த மணல்வெளியில் வாழ்ந்திருந்தோர் தமைத்திருந்தி
மனவொளியால் மாநிலத்தின் மணிவிளக்காம் நாயகமே
இருட்டறையில் இடறிவிழும் இனத்தவர்க்கே இஸ்லாத்தின்
பெருவிளக்கைக் காட்டவந்த பெருமானே நாயகமே
கார்குலத்தைக் கண்டவுடன் களித்தாடும் மயில் போலும்
சீர் முகத்தைக் கண்ட தோழர் சிறப்படைந்தார் நாயகமே
மதிநாடும் மகவினைப்போல் மலர் நாடும் வண்டினைப் போல்
அதிநேய சித்தீக்கின் அகம் நாடும் நாயகமே
வானெடுத்து வெட்டவந்து வழியிடையே மறைக் கேட்டுத்
தாளடைந்த வீரருமர் தமையணைத்த நாயகமே
மாதிரங்கள் புகழ் பரப்பும் மாமறையைத் தொகுத்தளித்த
மாதவத்தார் உதுமானின் மாமனாராம் நாயகமே
போரிடத்தில் பெயர் பொறித்த புரவிமிசைப் புலி அலியார்
பாரிடத்தில் உமது வீரம் பகர்ந்தனரே நாயகமே
பெண்ணினத்தின் பெரும்பயனாய் பேரறிவின் நிலைக்களனாய்
கண்ணான பாத்திமத்தைக் கண்டெடுத்த நாயகமே
குடியரசைக் காப்பதற்கு கொதித்தெழுந்து தலைக்கொடுத்த
படிபுகழும் ஹுஸைனாரின் பாட்டனாராம் நாயகமே
பொய்புனைந்தோர் தளபதியாய்ப் போர்தொடுத்த காலிதினை
ஸைபுல்லாஹ் ஆக்கி விட்ட சாந்தி நபி நாயகமே
உற்றபெரும் இனத்தவரை ஹுதைபிய்யா விற்றடுத்த
உற்வத்பின் மஸ்வூதின் உளங்கவர்ந்த நாயகமே
அடைக்கலமாய் ஹபஷாவின் அதிபதியை அடுத்தவரைத்
தடைசெய்த அம்ருபின் ஆஸ் தமைத் தழுவும் நாயகமே
அருமை மிகு ஸஹாபாக்கள் அன்புரவாம் தாபியீன்கள்
பெரும் தபஅத் தாபியீன்கள் பேச்சிலூறும் நாயகமே
நலியாத நடத்தைகளால் நானிலத்தில் புகழடைந்த
வலிமார் தம் சிந்தைகளில் ஒளியான நாயகமே
கருநிறத்தின் ஹபஷியரைக் காதல் மிகு பார்சியரை
பெருஞ்செருக்கின் அரபியரை பிணைத்தெடுத்த நாயகமே
அருமையுறு மதத்துறையில் அரசியலில் சமூகத்தில்
பொருளியலில் தலைமையினைப் பூண்டிருக்கும் நாயகமே
ஆதரவில் ஒருமகவாய் அரியதொரு வணிகருமாய்
நீதமிகு பெருமகராய் நிலமாண்ட நாயகமே
வஞ்சமிலாக் குழவியரை வதைத்துவந்த கொடியவர்கள்
நெஞ்சுருகி திருந்துதற்கு நெறிகாட்டும் நாயகமே
குடிவெறியில் மூழ்கியவர் குடமுடைத்து மதுவெறுக்கும்
புடை செய்த காட்சியினை படைத்த பஷீர் நாயகமே
மதுவெறியில் இனவெறியில் மனமிழந்த மக்கள் தமைப்
புதுநெறியிற் போக்கியுயர் புகழூட்டும் நாயகமே
தூங்கி விழும் தன்மையைப் போல் துஞ்சி வரும் மாந்தர்களை
தாங்கிவரும் தரணிக்கு தாயகமாம் நாயகமே
ஊனேறி உயிரேறி உதிரத்தில் தோய்ந்தேறி
வானேறி நிற்குமரை வழங்கியருள் நாயகமே
தேம்பலாவின் சுளைபோல தெவிட்டாத தேன் போல
மேம்பாலின் சுவை போல மேமொழியின் நாயகமே
உள்ளினித்தும் புறமினித்தும் உரையாடும் சொல்லினித்தும்
வள்ளலென வாய்த்தவெங்கள் வானரசே நாயகமே
பாலைகளில் காடுகளில் பனி படர்ந்த நாடுகளில்
சோலைகளில் தீவுகளில் சொல் நாட்டும் நாயகமே
உலகிலொரு நற்படையாய் உருவாகும் முஸ்லீம்களின்
நலம் பெருகும் நெஞ்சுகளின் நல்லொளியே நாயகமே
முஹம்மதெனும் பெயர்பூண்டு முழுமதிபோல் உலகினுக்கு
முகமதென உயர்வடைந்து முன்னிற்கும் நாயகமே
அகமதெனும் பெயர் தாங்கி அவனிவரு பேரறிஞர்
அகமதிலே தங்கிவிட்ட அன்புருவே நாயகமே
முத்தொளிவின் முஸ்தஃபாவே முத்திநெறி முhதழாவே
சித்த முறை முஜ்தபாவே சித்திபெறு நாயகமே
குறையகற்றும் நிறை தூதே குணக்குன்றாம் இறைதூதே
மறையுள்ளு முறைதூதே மாசில்லா நாயகமே
மணல்வெளியின் பரிமளமே மனங்கவரும் திருவளமே
மணம்பெருகும் பெரு வளமே மதிவிளக்கும் நாயகமே
பாருலகின் பெருமணமே பலர்நுகர வருமணமே
சீருலவும் ஒரு மணமே சிந்தையொளிர் நாயகமே
இணையற்ற ஒளிமணியே இதயத்தின் கண்மணியே
துணையற்றோன் நபி மணியே துய்தான நாயகமே
தஞ்சமருட் கஞ்சுகமே தஞ்சமய நெஞ்சகமே
விஞ்சையொளி ரஞ்சகமே விஞ்சுபுகழ் நாயகமே
கரையற்றோன் தருமலரே கவின்வளரும் தண்மலரே
நிறையுடைய புதுமலரே நெஞ்சுவக்கும் நாயகமே
தேமலரே காமலரே தேற்றவரு மாமலரே
தூமலரே நறுமலரே தூதுரைத்த நாயகமே
சீமானே கோமானே சிந்தையொளிர் பூமானே
ஈமானுக்குறுதி தரும் எம்மானே நாயகமே
அடியேனின் சிந்தையிலே அரும்பியெழும் ஆசையினால்
முடியாத மாலையிதை முடித்தளித்தேன் நாயகமே