Posted by : kayalislam
Saturday, 19 January 2013
நபி பெருமான் தோன்றிய திருநாள்
ஆயிரம் நாளிங்கே வருவதுண்டு
ஆயினும் இதுபோல் புனிதமாய் ஒருதினம் வருமோ
யார் முகம் காண வானம் இருந்ததோ
யாரை சுமக்க பூமி தவம் கிடந்ததோ
யார் வருவாரென வேதங்கள் சொன்னதோ
தூதரவர் தோன்றி வந்த நாளே
அருட் கொடையாய் முஹம்மதெனும்
ஆருயிர் இங்கே வந்துதித்த நாள்
நபி பெருமான் தோன்றிய திருநாள்
நாம் கொண்டாடும் ஆனந்த பெருநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்
அன்னை ஆமினா தாயான முதல்நாள்
தந்தை அப்துல்லாஹ் காணாத விதிநாள்
அப்துல் முத்தலிப் பாடி மகிழ்நாள்
அன்று மக்காவே ஒளியால் திகழ்நாள்
அந்த அரேபிய நாட்டை உலகில்
நன்கு அறிமுகமாக்கிய விதைநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்
தாய் பாலுக்கும் புனிதம் வரும்நாள்
தாலாட்டுக்கும் மகிமை தரும்நாள்
வாய் முத்தங்கள் முத்தி பெறும்நாள்
இந்த மண்மீது சுவனம் வரும்நாள்
அனாதை களுடனே வாழ
அந்த அல்லாஹ்வின் அருட்கொடை வரும்நாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்
ஆகாயத்தில் விண்மீன் உதிர்ந்து
அங்கு அதிசயம் நிகழ்ந்ததை சொல்லும் நாள்
கஃபாவின் சிலைகள் கவிழ்ந்து
அவை கண்மூட போவதை சொல்லும் நாள்
பல மாற்றங்கள் இயற்கை நடத்தி
அந்த பண்பாளர் வரவை சொல்லும் நாள்
மண்ணில் மானுடம் உயிர் பெற்று எழும்நாள்
தீய மடமைகள் அடிபட்டு விழும்நாள்
இன வேற்றுமை நீக்கிய தவநாள்
என்றும் எல்லோரும் சமத்துவம் எனும்நாள்
புது விதியினை பூமிக்கு தரும்நாள்
மனம் பூபாலம் பாடிடும் இசைநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்