Posted by : kayalislam
Monday, 14 January 2013
நாயகம் பிறந்து விட்டார் – நபிகள்
நாயகம் பிறந்து விட்டார்
பூவகம் மீதினில் பேரொளி உதயம்
காரிருள் நீங்கியே மகிழ்ந்தன இதயம்
ஓரிறைக் கொள்கை உறங்கிய நிலையில்
உலகத்தையே ஆள உயிரற்ற சிலைகள்
மாந்தரின் உள்ளங்கள் மடமையின் வலையில்
மாட்டியே சிக்கித் திணரும் அந்நிலையில்
மக்கத்து மாந்தருக்கு மதி உயர் உண்டோ?
மங்கையர் வாழ்வுக்கு விடிவேதும் உண்டோ?
பெண் சிசு பிறந்தால் புதைப்பதுமுண்டோ?
பெருநெருப் பெரிவதை அணைத்திட வென்றோ?
தடையற்று தவறுகள் நடைபெற்ற காலம்
உடையற்று கஃபா வலம் வரும் கோலம்
குடை பிடித்தாளும் குஃப்ரென்னும் கோரம்
முறை எடுத்தோதிட நாதியற்ற நேரம்
அடிமையின் நிலையோ கொடுமையின் பிடியில்
குலவிடும் குலமோ கோரத்தின் மடியில்
சிறுமை என்றுணராத சீமான்கள் செயலில்
சீரிடும் சிந்தைகள் சீர்கெட்ட நிலையில்
அருள் கொண்ட முகங்கள் அருகிக்கிடந்த நாள்
இருள்கொண்டு அகங்கள் கருகிக் கிடந்தநாள்
பொருளற்று பெருமைகள் பெருகிக் கிடந்தநாள்
கருவற்ற தர்க்கங்கள் பொழுதும் விடிந்த நாள்
மதுபான போதையில் மயங்கிக் கிடந்த நாள்
மங்கையர் மோகத்தில் மிருகத்தின் வாழ்நாள்
பொடி விஷயத்துக்கெல்லாம் போர்கள் மூண்ட நாள்
விடிவெள்ளி உதிக்காது இரவே நீண்ட நாள்
மா பாதகச் செயலாம் வழிபறிக் கொள்ளை
பேயாட்டம் ஆடிட பொய் அவர் எல்லை
சூதாட்ட வெறியில் சுபிட்சமே இல்லை
சூட்சிகளே மிகுந்த சுயநலத் தொல்லை
தலை கொய்ய வேண்டின் விலை பேசி முடிப்பார்
கொலைப் பாதகச் செயலைகலை என்று நினைத்தார்
குலம் பெருமைப் பேசி குலத்தையே புதைத்தார்
நிலமெங்கும் கொடுமைகள் நபிகளார் உதித்தார்
ஓரிறைக் கொள்கையை உயர்த்தி நிறுத்திட
உயர்மறைக் கலிமா உயர்ந்து ஒலித்திட
உண்மையாம் இஸ்லாம் உலகில் ஜொலித்திட
ஒளி மதீனம் இருந்து ஆட்சி புரிந்திட
நாயகம் பிறந்து விட்டார் – நபிகள்
நாயகம் பிறந்து விட்டார்