பலஙல் உலா பிகமாலஹி


பலஙல் உலா பிகமாலஹி கஷபத் துஜா பி ஜமாலிஹி
ஹசுனத் ஜமீஉ ஹிஸாலிஹி ஸல்லூ அலைஹி வஆலிஹி

ஆதி முஹம்மது அந்தம் முஹம்மது
நூரு முஹம்மது ரூஹூ முஹம்மது
ழாஹிர் முஹம்மது பாதின் முஹம்மது
தாஜூ முஹம்மது தாஹா முஹம்மது
ஹாமிம் முஹம்மது யாஸின் முஹம்மது
மக்கி முஹம்மது மதனி முஹம்மது
அன்பும் முஹம்மது அருளும் முஹம்மது அகமும் முஹம்மது புறமும் முஹம்மது மேலும் முஹம்மது கீழும் முஹம்மது அஹ்மது அஹ்மது முஹம்மது முஹம்மது அஹ்மது ஹாமிது மஹ்மூது மஹ்மூது ஸல்லல்லாஹூ அலைக்க யாரஸூலல்லாஹ்

அல்லாஹ் அங்கே இப்பொழுது என்ன செய்கின்றான்?
எங்கள் அண்ணல் நபி மீது ஸலவாத்து சொல்கின்றான்
இப்பொழுது வானவர்கள் என்ன செய்கின்றார்?
அந்த ஏகனுடன் சேர்ந்து ஸலவாத்து சொல்கின்றார்
எட்டு திக்கும் என்ன சப்தம் கேட்கலானது?
ஞான முத்து நபி நாமம் அதை ஓதுகின்றது

சொர்க்கப் பாதை எங்கிருந்து செல்லுகின்றது?
அந்த ஜோதி மதீனாவிலிருந்து செல்லுகின்றது
எந்த இடம் பூமியிலே சொர்க்கமானது?
நபி ரவ்ழா ஷரீஃப் பூவுலகில் ஜன்னத்தானது
அண்ணலாரைக் கண்ட கண்கள் யாரைக் கண்டது?
அந்த ஆண்டவனை பார்த்ததாக அர்த்தமானது

ஏழை ஸஹாபாக்கள் பசி தீர்ந்ததெப்படி?
ஒளி ஏந்தல் முகம் பார்த்து பசி போனதப்படி
மாமதீனா மக்கள் தாகம் தீர்வதெப்படி?
அந்த மன்னர் விரல் பொங்கும் நீரில் தீர்ந்;ததப்படி
நாயகத்தின் வியர்வை எங்கும் வாசம் வீசுது
அதை பூசிய பரம்பரைக்கே வாசம் வந்ததே

காவலனை கண்ட கண்கள் யாருடையது?
பிலால் கருப்பை ரசித்த நபி கண்கள் தானது
அர்ஷில் நடந்த கால்கள் யாருடையது?
அன்னை ஆமினா முத்தம் பதித்த பாதம் தானது
ஜிப்ரயீல் கட்டிக் கொண்ட மேனி யாரது?
பூமி முத்தமிட ஏங்கும் சுத்த மேனி தானது

கைத்தடியால் செங்கடல் பிளந்து கொண்டது
விரல் காட்டியதும் வெண்ணிலவு இரண்டாய் ஆனது
கல்லெறிந்து யானையை அபாபில் கொண்டது
நபி கையெறிந்தக் மண்ணுக்கந்த ஆற்றல் வந்தது
காலப்போக்கில் அற்புதங்கள் காலமாகுது
எல்லா காலங்களை தாண்டி குர்ஆன் வாழுகின்றது

நாயக மாலை


அருளாளன் அன்புடையோன் அல்லாஹூவின் கருணைப்
பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே

மாநிலத்தின் மார்பிடமாம் மக்க நகர் மீதெழுந்த
தேங்குபுகழ் தேன் மலரே தேசுடைய நாயகமே

ஓங்கு புகழ் குறைஷியரின் உயர் கிளையில் வந்துதித்த
தேங்கு புகழ் தேன் மலரே தேசுடைய நாயகமே

அப்துல்லாஹ் செல்வமென ஆமினாரின் மணிவயிற்றுள்
ஒப்பில்லா நிலையடைந்த ஒளிவீசும் நாயகமே

ஹலீமாவின் பார்வையிலே ஆடகளை மேய்த்து வந்தீர்
நலிவோரைக் காக்க வரு; நற்றுணையே நாயகமே

பெற்றோரை இழந்திடினும் பெரியோனின் கருணையெனும்
வற்றாத சுனையாடி வளர்த்த நபி நாயகமே

பரிவார்ந்த பாட்டனாரின் பான் மொழியைக் கேட்டு வந்தும்
பெரிய தந்தை காவலிலும் பேணிவளர் நாயகமே

நாயகியார் கதீஜாவின் நல்வாணி பத்துரையில்
நேயமுடன் நேர்மையினை நிரூபித்த நாயகமே

நாடுகளைக் கண்டு வந்து நலிவடைந்து மக்கள் படும்
பாடுகளை நினைந்துரகிப் பரிதவித்த நாயகமே

உயிரிழந்தும் உணர்விழந்தும் உலைத்திருந்த பாருலகம்
உயர்வடையும் வழிகாண உருகிநின்ற நாயகமே

கதீஜாவின் நாயகராய்க் கடிமணத்தைச் செய்த பின்னர்
புதிதாக ஒரு வலிமை புகழ் பெற்றீர் நாயகமே

மலை மீது தனித்திருந்து மறையோனை நினைந்துரகி
நிலையான பேரொளியால் நெஞ்சுவந்த நாயகமே

ஹீராவின் குகைக்குள்ளே இறைதூதர் ஜிப்ரீலும்
மாறாத மறையளிக்க மனமொளிரும் நாயகமே

கறை போக்கி நிறைவூட்டும் காவலனின் மறையுரையைப்
பறை கொட்டிச் சொன்னதுவும் பழியாமோ நாயகமே

ஒன்றிறைவன் ஒன்று குலம் ஒன்று நிறை என்றருளி
மன்பதைகள் பிணி நீக்கும் மருந்தாக்கும் நாயகமே

பெண்ணாசை பொன்னாசை பேர் அரசைப் பெற்றிடுமோர்
மண்ணாசை யாலசையா மாசில்லா நாயகமே

செங்கதிரும் தண்மதியும் சேர்த்துக் கையில் தந்திடினும்
எங்கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நாயகமே

நடைவழியில் முள்ளிட்டும் நற்கழுத்தில் துணியிட்டும்
தடைசெய்தோர் தொல்லைகளால் தயங்காத நாயகமே

விலங்குகளின் குடலையுங்கள் வீசு கதிர் மேனியிலே
கலங்காமற் போட்டவர்க்கும் கருணை பொழி நாயகமே

கால் கடுக்கத் தாயிபேகி கனிமொழியை ஈந்ததற்கோ
பால்வதனம் புண்ணாகும் பரிசேற்றீர் நாயகமே

சொன்மாரி பொழிந்ததற்காய்க் கள்மாரி பெய்து விட்ட
வன்மனத்தார் திருந்துவதற்கு வழி வகுத்த நாயகமே

மழலை மொழி குழவியரும் மாண்புடைய முதியவரும்
தழையருந்தித் தங்கொள்கை தனைக் காத்தார் நாயகமே

அடல் சான்ற வீரரெல்லாம் அண்ணலுமை யாதரித்துப்
புடம் போட்ட பொன்னே போல் பொலிவடைந்தார் நாயகமே

அடைக்கலமாய் எண்பது பேர் ஹபஷாவுக் கனுப்பி வைத்தும்
அடையலர்கள் இடைவாழ அஞ்சாத நாயகமே

அனல் வீசும் மணல் மீதில் அருமை பிலால் உடல் கருகும்
கனல் வீசும் காதையினால் கண்கலங்கும் நாயகமே

காலிரண்டும் ஒட்டகையில் கட்டியோட்டி யாஸிரினைக்
கேலி செய்த கிழித்ததனைக் கேட்டுருகும் நாயகமே

அம்பீட்டி வாட்களினால் ஆருயிரை இழப்பதற்கும்
அம்புயம் போல் மெல்லியலார் அஞ்சவில்லை நாயகமே

சந்திகளில் வெந்தவரும் சவுக்கடியால் வீழ்ந்தவரும்
சிந்தையிலே உறுதியினைச் சேர்க்கின்றார் நாயகமே

நல்லிரவில் இல்லமதை நண்ணியுயிர் குடிக்க வந்த
உள்ளமிருள் ஊனர்களால் ஊர் துறந்த நாயகமே

அஞ்சாத நெஞ்சுடைய அலியாரின் ஆதரவு
வெஞ்சினத்துப் பகைவருக்கு வியப்பூட்டும் நாயகமே

தங்கவபூ பக்கருடன் தவ்ரென்னும் குகைக்குள்ளே
பொங்கிவரும் பகை விடுத்துப் பொறுத்திருந்த நாயகமே

உயிராடும் போதினிலும் உளனன்றோ இறையென்ற
அயராத திடமனந்தான் அரிதரிது நாயகமே

மாசில்லா மனமுடைய மதீனாவின் நன்மணிகள்
வீசியபே ரொளியதனால் விறல் படைத்த நாயகமே

முந்நூற்றுப் பதின் மூன்று முஸ்லீம்களுடன் பத்ரில்
தந்நலத்தின் தருக் கொழித்த தளபதியே நாயகமே

ஊரெல்லாம் திரண்டெழுந்தே உஹதென்னும் களத்தெதிர்த்தும்
சீரெல்லாம் அழிந்துபடச் சிதைத்தனரே நாயகமே

மக்க நகர் வெல்வதற்க மாவீரர் பலரிருக்க
தக்க ஹுதைபிய்யாவில் தணித்திருந்த நாயகமே

ஆக்க மறு வைரிகளால் அபுஜந்தல் வெந்தபின்பும்
வாக்குறுதி காத்துவந்த வள்ளலிமாம் நாயகமே

கத்தியின்றி ரத்தமின்றி கடும் பகையை வென்று விட்டீர்
இத்தரையில் மக்க வெற்றிக் கிணையேது நாயகமே

இறுதி ஹஜ்ஜில் அரஃபாத்தில் இறைசாட்சி யாயுரைத்த
மறுவில்லா மணிமொழிகள் மதிவிளக்கம் நாயகமே

அறுபத்து மூன்றாண்டும் அருமுறையில் வாழ்த்து நெறி
நிறுவியபின் மறைவதற்கோ நிலத்துதித்தீர் நாயகமே

உலகத்தார் அனைவோர்க்கும் உயர்வான கொடையாக
அலகில்லா அருளாளன் அருளியவோர் நாயகமே

தூய்மை மிகம் இறையவனின் தூதுவனாய் யான் வரினும்
ஆய்குணத்தில் மனிதனென்றே அறைந்த ஹபீப் நாயகமே

மன்பதைகட் கெவர்வழியாய் மாநன்மை கிடைத்திடுமோ
மன்பதைக்குள் அவருயர்வை மனத்துணர்ந்த நாயகமே

இறையொருவன் பிறப்பில்லான் இறப்பில்லான் இணையில்லான்
நிறைவனைத்தும் உடையனென நிகழ்த்து நபி நாயகமே

நாளொன்றுக் கைவேளை நாயகனைப் புகழ்ந்தேத்தித்
தூளாகும் வாழ்வுக்குத் துணிவூட்டும் நாயகமே

வறியோரின் பசிப்பிணியை வல்லோரும் அறிவதற்கு
நெறியான நோன்புரைத்த நேயமிகு நாயகமே

செல்வத்தின் செழிப்புடையோர் சேர் பொருளில் நாற்பதிலொன்(று)
இல்லார்க்கு பகிர்ந்தளிக்க இயம்புகின்ற நாயகமே

வசதிகளைப் பெற்றிருப்போர் வாழ் நாளில் ஒரு தடவைக்
கசடோட்டும் கஃபாவைக் காண நவில் நாயகமே

தாம் விரும்பும் பொருளினையே தம்மோர்க்கும் விரும்பாதார்
யாம் விரும்பும் முஃமினாகார் என நவிலும் நாயகமே

எவர் நாவால் கரங்களினால் எழிலுறுமோ மனிதகுலம்
அவர் சிறந்த முஸ்லிமென அருளுமெமின் நாயகமே

சீனாவிற் சென்றேனும் சீர்கல்வி பெறுகவெனத்
தேனான வாய் திறந்து தெளிவூட்டும் நாயகமே

கல்விக்காய் உயிர் கொடுப்போன் காசினியில் மாளாமல்
நல்விதமே வாழ்வனென நவின்ற நபி நாயகமே

போர்க்களத்தில் குருதியினும் போதமிகு எழுதுகோலின்
ஓர் துளிமை உயர்ந்ததென உரைத்த ரஸுல் நாயகமே

கற்றறிந்தோன் யாவனெனில் கற்றதனைச் செயல் முறையில்
பற்றிடுவோன் என நவின்ற பயகம்பர் நாயகமே

அறிவடையச் சென்றிடுவோன் அதிலிருந்து திரும்பும் வரை
இறைவழியில் நின்றிடுமென் றியம்புகின்ற நாயகமே

கையேந்தும் செய்கையினும் காடு சென்று விறகு வெட்டி
மெய்யேந்தும் வாழ்வதனை மெச்சுகின்ற நாயகமே

வியர்வையது உலருமுன்னர் வேலை செய்வோர் கூலியினை
நயமாக கொடுப்பதற்கு நவின்ற நபி நாயகமே

தனக்கேனும் பிறர்க்கேனும் தகுபணிகள் செய்யாதோன்
எனதிறையின் பரிசு பெறான் என நவிலும் நாயகமே

பிறர் பிழையை பொறுத்தருள்வோர் பொறுமையுடன் வறுமை நிற்போர்
திறமான செயல்புரியும் திறமுரைத்த நாயகமே

துன்புறுவோர் மனப்பிணியைத் துடைப்பதற்கா யுதித்திடுமோர்
இன்சொல்லே பெருங்கொடையென் றியம்பு முபீன் நாயகமே

உள்ளத்தில் சொல் செயலில் உண்மையுடன் இருப்பவரைக்
கள்ளமிலா உத்தமராய்க் கண்ட யாசீன் நாயகமே

நற்குணங்கள் அனைத்தினுக்கும் நன்மை தரும் அடக்கமெனும்
பொற்குணத்தை அடிப்படையாய் புகன்ற நபி நாயகமே

தன் குழவிக் கன்பில்லான் தளர் முதியோர் தமைமதியான்
என் குழுவைச் சாரானென் றெடுத்துரைத்த நாயகமே

தனயனிடம் தந்தையைப் போல் தம்பியிடம் அண்ணனுக்குக்
கன உரிமை மிகுதமெனும் கருத்துரைத்த நாயகமே

தகுவொழுக்கம் அறிய வந்தோன் தரணியில் வாழ்வதற்க
வெகுளி தவிர் என நவின்றீர் வேந்தரெங்கள் நாயகமே

சினப் பேயை ஓட்டிவிட்டுச் சீரியதீர்ப் பெழுதிவிடல்
வனப்பாகும் வழக்காய்வோர் வழிக்கென்ற நாயகமே

மறைவாகச் செயுங் கொடையே மன்னானின் வெகுளியினைக்
குறைவாகச் செய்யுமெனக் கூறுமஸீஸ் நாயகமே

இன்னாத செய்தவர்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயன் சால்புதரும் என வாழ்ந்த நாயகமே

பசி தணிக்கக் கல்கட்டிப் பருங்கயிற்றுக் கட்டிலின் மேல்
பசுமேனி நோவடையப் படுத்திருந்த நாயகமே

தெருவிடையே பெருநாளில் தேம்பியழும் அனாதையினை
அருமையுடன் அணைத்தெடுத்தே அலங்கரித்தீர் நாயகமே

மரநிழலில் துயிலுகையில் மனந்துணிந்து வெட்ட வந்தோன்
கரம் நடுங்கி வாள் நழுவக் கடைக்கணித்தீர் நாயகமே

வழிப் போக்கன் உணவருந்தி வள்ளலுங்கள் படுக்கையிலே
கழித்தமலம் கைம்மலரால் கழுவியநன் நாயகமே

பாதுகையைச் செப்பனிட்டீர் பால் கறந்தீர் துணி தைத்தீர்
யாதுமற்றோர்க் குதவி நின்றீர் யாமுவக்கும் நாயகமே

சிற்றப்பர் ஹம்ஸாவின் சீரீரல் மென்றுமிழ்ந்த
புற்றரவாம் ஹிந்தாவின் புகலிடமே நாயகமே

ஒன்றுமபூபக்கருக்கும் ஒட்டகத்தின் விலை கொடுத்துத்
தன் மானம் காத்து நின்ற தங்க நபி நாயகமே

பகைவர்களும் பார்த்துமது பால் மனத்தை வியந்தனரேல்
மிகையாமோ ஸாதிகென மிளிருமுரை நாயகமே

பெரும் பகையின் அபூசுஃப்யான் பேரரசர் முன்னிலையில்
செருக் கொழிய நும்மியல்பைச் செப்பலையோ நாயகமே

பணியாளர் அனஸென்பார் பத்தாண்டு பணியாற்றி
அணிபோலும் வாழ்வதனால் அகநெகிழ்ந்தார் நாயகமே

திருநபியின் திருவாழ்வு திருமறையின் திருவுருவென்
றருளினரே நாயகியார் ஆயிஷாவும் நாயகமே

காவலற்ற விதவைகட்கும் கதியில்லர்க் குழவி கட்கும்
காவலரென் றபூதாலிப் கண்ட நபி நாயகமே

அருமையெங்கள் ஜஃபரென்பார் ஹபஷாவின் அதிபதிமுன்
பெருமையுடன் நும்மியல்பைப் பேசினரே நாயகமே

என்னருமை முஹம்மதைப் போல் எழிலுருவம் கண்டதில்லை
என்றேயபூ ஹுரைராவும் எடுத்துரைத்தார் நாயகமே

வனப்பிழந்த மணல்வெளியில் வாழ்ந்திருந்தோர் தமைத்திருந்தி
மனவொளியால் மாநிலத்தின் மணிவிளக்காம் நாயகமே

இருட்டறையில் இடறிவிழும் இனத்தவர்க்கே இஸ்லாத்தின்
பெருவிளக்கைக் காட்டவந்த பெருமானே நாயகமே

கார்குலத்தைக் கண்டவுடன் களித்தாடும் மயில் போலும்
சீர் முகத்தைக் கண்ட தோழர் சிறப்படைந்தார் நாயகமே

மதிநாடும் மகவினைப்போல் மலர் நாடும் வண்டினைப் போல்
அதிநேய சித்தீக்கின் அகம் நாடும் நாயகமே

வானெடுத்து வெட்டவந்து வழியிடையே மறைக் கேட்டுத்
தாளடைந்த வீரருமர் தமையணைத்த நாயகமே

மாதிரங்கள் புகழ் பரப்பும் மாமறையைத் தொகுத்தளித்த
மாதவத்தார் உதுமானின் மாமனாராம் நாயகமே

போரிடத்தில் பெயர் பொறித்த புரவிமிசைப் புலி அலியார்
பாரிடத்தில் உமது வீரம் பகர்ந்தனரே நாயகமே

பெண்ணினத்தின் பெரும்பயனாய் பேரறிவின் நிலைக்களனாய்
கண்ணான பாத்திமத்தைக் கண்டெடுத்த நாயகமே

குடியரசைக் காப்பதற்கு கொதித்தெழுந்து தலைக்கொடுத்த
படிபுகழும் ஹுஸைனாரின் பாட்டனாராம் நாயகமே

பொய்புனைந்தோர் தளபதியாய்ப் போர்தொடுத்த காலிதினை
ஸைபுல்லாஹ் ஆக்கி விட்ட சாந்தி நபி நாயகமே

உற்றபெரும் இனத்தவரை ஹுதைபிய்யா விற்றடுத்த
உற்வத்பின் மஸ்வூதின் உளங்கவர்ந்த நாயகமே

அடைக்கலமாய் ஹபஷாவின் அதிபதியை அடுத்தவரைத்
தடைசெய்த அம்ருபின் ஆஸ் தமைத் தழுவும் நாயகமே

அருமை மிகு ஸஹாபாக்கள் அன்புரவாம் தாபியீன்கள்
பெரும் தபஅத் தாபியீன்கள் பேச்சிலூறும் நாயகமே

நலியாத நடத்தைகளால் நானிலத்தில் புகழடைந்த
வலிமார் தம் சிந்தைகளில் ஒளியான நாயகமே

கருநிறத்தின் ஹபஷியரைக் காதல் மிகு பார்சியரை
பெருஞ்செருக்கின் அரபியரை பிணைத்தெடுத்த நாயகமே

அருமையுறு மதத்துறையில் அரசியலில் சமூகத்தில்
பொருளியலில் தலைமையினைப் பூண்டிருக்கும் நாயகமே

ஆதரவில் ஒருமகவாய் அரியதொரு வணிகருமாய்
நீதமிகு பெருமகராய் நிலமாண்ட நாயகமே

வஞ்சமிலாக் குழவியரை வதைத்துவந்த கொடியவர்கள்
நெஞ்சுருகி திருந்துதற்கு நெறிகாட்டும் நாயகமே

குடிவெறியில் மூழ்கியவர் குடமுடைத்து மதுவெறுக்கும்
புடை செய்த காட்சியினை படைத்த பஷீர் நாயகமே

மதுவெறியில் இனவெறியில் மனமிழந்த மக்கள் தமைப்
புதுநெறியிற் போக்கியுயர் புகழூட்டும் நாயகமே

தூங்கி விழும் தன்மையைப் போல் துஞ்சி வரும் மாந்தர்களை
தாங்கிவரும் தரணிக்கு தாயகமாம் நாயகமே

ஊனேறி உயிரேறி உதிரத்தில் தோய்ந்தேறி
வானேறி நிற்குமரை வழங்கியருள் நாயகமே

தேம்பலாவின் சுளைபோல தெவிட்டாத தேன் போல
மேம்பாலின் சுவை போல மேமொழியின் நாயகமே

உள்ளினித்தும் புறமினித்தும் உரையாடும் சொல்லினித்தும்
வள்ளலென வாய்த்தவெங்கள் வானரசே நாயகமே

பாலைகளில் காடுகளில் பனி படர்ந்த நாடுகளில்
சோலைகளில் தீவுகளில் சொல் நாட்டும் நாயகமே

உலகிலொரு நற்படையாய் உருவாகும் முஸ்லீம்களின்
நலம் பெருகும் நெஞ்சுகளின் நல்லொளியே நாயகமே

முஹம்மதெனும் பெயர்பூண்டு முழுமதிபோல் உலகினுக்கு
முகமதென உயர்வடைந்து முன்னிற்கும் நாயகமே

அகமதெனும் பெயர் தாங்கி அவனிவரு பேரறிஞர்
அகமதிலே தங்கிவிட்ட அன்புருவே நாயகமே

முத்தொளிவின் முஸ்தஃபாவே முத்திநெறி முhதழாவே
சித்த முறை முஜ்தபாவே சித்திபெறு நாயகமே

குறையகற்றும் நிறை தூதே குணக்குன்றாம் இறைதூதே
மறையுள்ளு முறைதூதே மாசில்லா நாயகமே

மணல்வெளியின் பரிமளமே மனங்கவரும் திருவளமே
மணம்பெருகும் பெரு வளமே மதிவிளக்கும் நாயகமே

பாருலகின் பெருமணமே பலர்நுகர வருமணமே
சீருலவும் ஒரு மணமே சிந்தையொளிர் நாயகமே

இணையற்ற ஒளிமணியே இதயத்தின் கண்மணியே
துணையற்றோன் நபி மணியே துய்தான நாயகமே

தஞ்சமருட் கஞ்சுகமே தஞ்சமய நெஞ்சகமே
விஞ்சையொளி ரஞ்சகமே விஞ்சுபுகழ் நாயகமே

கரையற்றோன் தருமலரே கவின்வளரும் தண்மலரே
நிறையுடைய புதுமலரே நெஞ்சுவக்கும் நாயகமே

தேமலரே காமலரே தேற்றவரு மாமலரே
தூமலரே நறுமலரே தூதுரைத்த நாயகமே

சீமானே கோமானே சிந்தையொளிர் பூமானே
ஈமானுக்குறுதி தரும் எம்மானே நாயகமே

அடியேனின் சிந்தையிலே அரும்பியெழும் ஆசையினால்
முடியாத மாலையிதை முடித்தளித்தேன் நாயகமே

கல்புக்குள்ளே தங்களை வைத்தேன் யாரஸுலல்லாஹ்


கல்புக்குள்ளே தங்களை வைத்தேன் யாரஸுலல்லாஹ்
கலிமாவை மனதில் வைத்தேன் யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

ஐந்து கடமை அகத்தில் கொண்டேன் யாரஸுலல்லாஹ்
அரணாக ஷரீஅத் கண்டேன் யாரஸுலல்லாஹ்
சங்கையான ஏகத்துவத்தை யாரஸுலல்லாஹ்
நான் சரியாக ஈமான் கொண்டேன் யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

முன்னவனின் தன்னொளியே யாரஸுலல்லாஹ்
உங்கள் முஹப்பத்தில் உகப்பானேன் யாரஸுலல்லாஹ்
கண்மணியே காத்தமுன்னே யாரஸுலல்லாஹ்
உங்கள் கரம் பிடிக்க துடிக்கின்றேன் யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

இறையருள் நிறை முகமே யாரஸுலல்லாஹ்
தாங்கள் ஏந்தி வந்த மறைக் குர்ஆன் யாரஸுலல்லாஹ்
பிறை குலத்தின் பெருமையன்றோ யாரஸுலல்லாஹ்
நான் பிசகாமல் தான் நடப்பேன் யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

மஹ்ஷரின் மகிபதியே யாரஸுலல்லாஹ்
உங்கள் மகிமைக்கு ஈடு உண்டோ யாரஸுலல்லாஹ்
மிஃராஜின் நாயகரே யாரஸுலல்லாஹ்
உலக மேன்மையதின் தாயகரே யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

நெஞ்சத்தில் சஞ்சரிக்கும் யாரஸுலல்லாஹ்
உங்கள் பிஞ்சு முகம் காண வேண்டும் யாரஸுலல்லாஹ்
மஞ்சள் உங்கள் ஓர்மையிலே யாரஸுலல்லாஹ்
உங்கள் விஞ்சு முகம் காண வேண்டும் யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

நுபுவத்தின் நுண்ணறிவே யாரஸுலல்லாஹ்
தாங்கள் நுகர்ந்த குணம் ஈமான் வேண்டும் யாரஸுலல்லாஹ்
ஆயுலகில் ஓர் தடவை யாரஸுலல்லாஹ்
உங்கள் அழகு முகம் காணவேண்டும் யாரஸுலல்லாஹ்
கனிவு மனம் பணிவு குணம் யாரஸுலல்லாஹ்
நாளும் கடமையாக்கி வாழ்ந்திடுவேன் யாரஸுலல்லாஹ்

மஹ்மூது நபிகள் பிரானே




மஹ்மூது நபிகள் பிரானே
மதீனாவில் வாழும் கோனே
மதீனாவை ஆளும் கோனே
மஹ்மூது நபிகள் பிரானே

இறைவன் தூதாக வந்தீர்
இதமான போதம் தந்தீர்
குறைகள் எல்லாம் களைந்தீர்
குன்றாமல் சேவை செய்தீர்
மறை போற்றும் ஞானச் சுடரே
மன்னர் ரஸூலுல்லாஹ்வே
மஹ்மூது நபிகள் பிரானே

பொல்லாத மூர்க்கர் சேர்ந்து
தொல்லை தந்தார்கள் தொடர்ந்து
அல்லாஹ்வின் கருணையாலே
ஆபத்தெல்லாம் கடந்து
அடைந்தீர்கள் வாகையாளும்
அண்ணல் ரஸூலுல்லாஹ்வே
மஹ்மூது நபிகள் பிரானே

மக்காவில் வாழ்ந்த அன்று
மகத்தான தொல்லை கண்டீர்
தக்கோராம் பக்கரோடு
தன்மை மதீனா சென்றீர்
முத்தாக வாழ்ந்த நபியே
முதன்மை ரஸூலுல்லாஹ்வே
மஹ்மூது நபிகள் பிரானே

படு நாச உஹது போரில்
பலமான எதிரி மோத
திடமாக போர் புரிந்தீர்
திரளான நன்மை கண்டீர்
உயர்வான சாந்த வடிவே
உண்மை ரஸூலுல்லாஹ்வே
மஹ்மூது நபிகள் பிரானே

தீன்மார்க்கம் ஓங்க உழைத்தீர்
வான் சேவையால் தளைத்தீர்
ஆண்டவன் அருளை ஏந்தி
அறமான வாழ்வு வாழ்ந்தீர்
பொறுமை நிறைந்த நபியே
அருமை ரஸூலுல்லாஹ்வே
மஹ்மூது நபிகள் பிரானே

கமழும் கஸ்தூரி வாசம்
கனிவாய் தர்பாரில் வீசும்
அமுதான ஜோதி மேவும்
அருளான முஸ்தபாவே
அன்பாய் ஸலாமுரைத்தேன்
அஹ்மது ரஸூலுல்லாஹ்வே
மஹ்மூது நபிகள் பிரானே
மஹ்மூது மஹ்மூது மஹ்மூது நபிகள் பிரானே
மதீனாவில் வாழும் கோனே
மதீனாவை ஆளும் கோனே

சந்திரனும் ஈடாகுமா


சந்திரனும் ஈடாகுமா.....
சங்கை நபி முகம் நோக்கினால்
சந்திரனும் ஈடாகுமா.....
சங்கை நபி முகம் நோக்கினால்
சூரியனும் ஒளி வீசுமா.....
தூய நபி உடல் நோக்கினால்

மா நபி கால் பட்ட பூமி
மகிமைக்கு நிகர் சொர்க்கமில்லை
மாதவர் கைபட்டதாலே
மறுமாசம் அது போவதில்லை
மன்னர் நபி இதழ்பட்டதால்
ஹுஸைனார்க் கீடில்லையே

கோன் நபியை பெற்றதாலே
ஆமினா போல் தாயுமில்லை
தாலாட்டி பாலூட்டினாரே
ஹலீமாவின் புகழ்யார்க்குமில்லை
பண்பு நபிமகளானதால்
ஃபாத்திமா போலில்லையே

அன்புநபி அணிகின்ற ஆடை
அந்த உடைபோல் ஏதும் இல்லை
உம்மி நபியை சுமந்ததாலே
ஒட்டகைக்கு விலை ஏதும் இல்லை
நிழல் தந்த மேகத்துக்கே
நிகரான குடை இல்லையே

வள்ளல் நபிகள் பிறந்ததாலே
மக்கா போல் ஊர் ஒன்றும் இல்லை
கன்னல் நபி வலம் வந்ததாலே
கஃபா போல் இறை வீடு இல்லை
நாயகமே தொழ வைத்ததால்
நபவி போல் பள்ளி இல்லையே

தங்க நபி தவம் செய்ததாலே
ஹீராபோல் குகை ஏதும் இல்லை
உண்மை நபி ஒளிகின்றதாலே
தௌரை போல் இடமொன்றும் இல்லை
செம்மலரைக் காத்து நின்ற
சிலந்திக்கும் நிகரில்லையே

சந்திரனும் ஈடாகுமா.....
சங்கை நபி முகம் நோக்கினால்
சூரியனும் ஒளி வீசுமா.....
தூய நபி உடல் நோக்கினால்

உயிருக்குள் உயிரான உத்தமரே




உயிருக்குள் உயிரான உத்தமரே - எம்
உளம் சிறக்க எம் இதயம் வாருங்களேன்
உம்மத்தை நினைதுருகும் உம்மியரே
உயர் ஷபாஅத்தை உண்மையாய் தாருங்களேன்.

நூறுக்குள் நூரான முகம்மதரே - எம்
நானென்னும் நிலை போக்க வாருங்களேன்
நூறே முகம்மதிய எனும் ஜோதியில்
நூர்ந்தே விட வேண்டும் என் ரூஹுமே - யாம்
நுழைந்திடும் இருளான மண்ணறையை
நந்தவன புஷ்பமாய் ஆக்குங்களேன்.
உயிருக்குள் உயிரான உத்தமரே

சந்தன மனம் கமழும் சர்தார் நபியே - உம்
சுந்தர ரவ்ழாவை சுற்றி வருவேன்
சுகந்தமாய் சலவாத் சலாமுரைப்பேன்
சுபீட்சமாய் பதில் தருவீர் சீமான் நபியே !
சிராத்தென்னும் பாலமதில் சிதறாமலே
சீராக கடந்திட தாருங்களேன் - கரம்
உயிருக்குள் உயிரான உத்தமரே

கண்ணை கவர்ந்திடும் பேரழகை
கல்பை பறித்திடும் வியப்பழகை
மயக்கும் மன்னரின் முக அழகை
சிரிக்கும் சுந்தரரின் இதழ் அழகை
தரிசித்தே திரு கலிமா நா ஓதவே
தாஹா வே தயவாய் அருளுங்களேன்.
உயிருக்குள் உயிரான உத்தமரே

ஆதியின் ரசனையில் வந்த நூறே
ஆமினாவின் மணிவயிற்றில் மலர்ந்த பூவே
ஆயிரம் காலம் இறை ரசித்த மன்னா
அகிலமெல்லாம் ஒளிவான ஜோதி கண்ணா
கனவிலும் நனவிலும் காட்சி தாரீர் - எம்
தாகமும் சோகமும் போக்க வாரீர்.
உயிருக்குள் உயிரான உத்தமரே

கொஞ்சும் மழலைகளின் புகழிடமே
பிஞ்சு அனாதைகளின் அடைக்கலமே
மழலைகள் செல்வமில்லா மங்கையர்க்கு
மணமான குழந்தைகள் பாக்கியமே
வயது நெடுகவும் சிரப்புமுள்ள
வாழ்வுமுள்ள அவ்லாதை தாருங்களேன்.
உயிருக்குள் உயிரான உத்தமரே

எங்கே நான் சென்று தேடுவேன்


எங்கே நான் சென்று தேடுவேன்
எங்கள் முஹம்மது முஸ்தஃபா
இங்கே அவர் புகழ் பாடுவேன்
இரஸுல் முஹம்மது முஸ்தஃபா
                                                                          ( எங்கே )

பாலைவனத்து வெண்மண்ணிலா
பேரீச்ச மாமர நிழலிலா
சோலை இல்லாமலை புதரிலா
சொர்க்க மெனும் இன்ப வீட்டிலா
                                                                          ( எங்கே )

பாரில் அரேபியா நாட்டிலா
பரந்த இப்பூலோக ஊரிலா
கூறும் எங்கோனின் கஃபாவிலா
குழந்தையாகுமுன் சிறு நெஞ்சிலா
                                                                          ( எங்கே )

ஓட்டகமே சென்று பார்க்கவா
ஓடும் பரீரதம் ஏறவா
அட்டதிசை வலம் ஏகவா
அடியேன் மதீனா போகவா
                                                                          ( எங்கே )

இறைநூரில் வந்த நூரே அன்பே ரஸூலுல்லாஹ்வே


இறைநூரில் வந்த நூரே அன்பே ரஸூலுல்லாஹ்வே
விண்மேகம் வாழ்த்து கூறும் வள்ளல் ரஸூலுல்லாஹ்வே
அறியாமை போக்க வந்தீர் நபியே!
அறியாமை போக்க வந்தீர் இறை அருமை நபிகள் நீர்
இறைநூரில் வந்த நூரே அன்பே ரஸூலுல்லாஹ்வே

ஈமானின் ஏற்றம் காண ஈடேற்ற பாதை சொன்னீர்
ஆராய்ந்து பார்க்க சொல்லி அருள் வேதம் வாங்கி தந்தீர்
ஓயாத தியானத்தாலே உயர்வான ஆற்றல் கண்டீர்
ஆதாரமான தீனின் - உயிரே
ஆதாரமான தீனின் அடிவேரும் ஆகி நின்றீர்
இறைநூரில் வந்த நூரே அன்பே ரஸூலுல்லாஹ்வே

மக்காவில் உங்கள் வாக்கை நம்பவில்லை ஜாஹில் கூட்டம்
மதீனாவில் உரைத்த போது மனதார ஏற்ற மார்க்கம்
அல்லாஹ்வின் ஆசி சூழ வையம் தந்ததிந்த மார்க்கம்
உண்மை உண்டான தீனின் - உயிரே
உண்மை உண்டான தீனின் உயிராக வாழ வந்தீர்
இறைநூரில் வந்த நூரே அன்பே ரஸூலுல்லாஹ்வே

ஆயிரம் ஆயிரம் ஸலவாத்து


ஆயிரம் ஆயிரம் ஸலவாத்து
அண்ணல் பெருமான் நபி மீது
அவர் கிளை தோழர் வழி மீது
அள்ளிச் சொரிவாய் அல்லாஹு

அர்ஷு முதல் அதிபாதாளம்
இறை உன் படைப்பு ஏராளம்
ஆதி முதல் அந்தம் வரையும்
அனைத்து படைப்பு எண்ணளவு

இறை நீ பொருத்தம் கொள்ளளவு
இறை உன் அர்ஷின் எடையளவு
இறை உனை நினைப்போர் எண்ணளவு
இறை உனை மறந்தோர் எண்ணளவு

கடல் வாழ் உயிர்களின் எண்ணளவு
காலமும் அவை விடும் மூச்சளவு
திடல் வாழ் உயிர்களின் எண்ணளவு
தினமும் அவை விடும் மூச்சளவு

காடுகள் மரம் செடி கொடியளவு
காய் கனி பூக்கள் பிஞ்சளவு
கோடிகள் தாவர விதையளவு
கணக்கிலா அவைகளின் இலையளவு

நெல் நவதானிய வித்தளவு
பல்கிப் பெருகிடும் சொத்தளவு
கொள்மண் பூமியின் மணலளவு
கொட்டிடும் மழையின் துளி அளவு

கடல் நீர்நிலைகள் அலையளவு
கிளம்பும் அவைகளின் நுறையளவு
உடல்மேல் உயிர்களின் முடியளவு
உயர் நபி மிஃராஜ் அடியளவு

வானின் விண்மீண் எண்ணளவு
வான் மறைகள் எழுத்தின்னளவு
வானம் பூமி கொள்ளளவு
வல்லவன் அல்லாஹ் சொல்லளவு

இம்மை மறுமையின் பொருளளவு
இயக்கும் இறை உன் அருளளவு
நன்மை தீமைகள் நிறையளவு
நபிமணி அகத்தின் அருளளவு

ஏக இறை என் இல்மளவு
ஏகமாய் உன் சங்கையளவு
எத்தனை உதயம் அஸ்தமனம்
அத்தனை இரவு பகலளவு

சாந்தி நபிமேல் ஸலவாத்து
சொல்வோர் எண்ணிக்கையளவு
சர்தார் நபிமேல் ஸலவாத்து
சொல்லார் எண்ணிக்கையளவு

வானவர் எண்ணிக்கையளவு
தீனவர் நம்பிக்கையளவு
கோனவர் பொருந்திக் கொள்ளளவு
யானவர் அடிமைக் கவியளவு

ஆயிரம் ஆயிரம் ஸலவாத்து
அண்ணல் பெருமான் நபி மீது
அவர் கிளை தோழர் வழி மீது
அள்ளிச் சொரிவாய் அல்லாஹு

யா ஸெய்யதீ வாழ்வினில் உமை காண்பேனா


யாஸெய்யதீ! யாரஸூலல்லாஹ் !
யாஸெய்யதீ! யாரஸூலல்லாஹ் !
அண்ணலே உங்களை எண்ணியே நான் வாழுகின்றேன்
யாஸெய்யதீ!
வாழ்வினில் உமை காண்பேனா
நீயே என் நினைவானீர்
ஒளிவான தளமானீர்
காணாமல் நான் மடிவேனா?
யாஸெய்யதீ! ..........................

பூவும் தேனும் வார்த்தை பேசும்
தூதர் நபியை காணும் தேட்டம்
வானில் நீந்தும் நிலவை போலே
வாஞ்சைக் காட்டும் முகத்தின் சுபாவம்
என்னில் உருவாகும் தேட்டம் நிறைவாகி
வாழ்வில் உமை காண்பேனா
யாஸெய்யதீ! ..........................

ஞானப் பார்வை ஏற்றும் தீபம்
நேர்மைப் பூக்கள் வீசும் வாசம்
ஆய்ந்து நாளும் தேய்ந்த தேகம்
அருமை மறையில் பதிந்த நாதம்
நெஞ்சில் அலைமோதும் தேட்டம் நிறைவாகி
வாழ்வில் உமை காண்பேனா
யாஸெய்யதீ! ..........................

நபி பெருமான் தோன்றிய திருநாள்


நபி பெருமான் தோன்றிய திருநாள்
ஆயிரம் நாளிங்கே வருவதுண்டு
ஆயினும் இதுபோல் புனிதமாய் ஒருதினம் வருமோ
யார் முகம் காண வானம் இருந்ததோ
யாரை சுமக்க பூமி தவம் கிடந்ததோ
யார் வருவாரென வேதங்கள் சொன்னதோ
தூதரவர் தோன்றி வந்த நாளே
அருட் கொடையாய் முஹம்மதெனும்
ஆருயிர் இங்கே வந்துதித்த நாள்

நபி பெருமான் தோன்றிய திருநாள்
நாம் கொண்டாடும் ஆனந்த பெருநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்

அன்னை ஆமினா தாயான முதல்நாள்
தந்தை அப்துல்லாஹ் காணாத விதிநாள்
அப்துல் முத்தலிப் பாடி மகிழ்நாள்
அன்று மக்காவே ஒளியால் திகழ்நாள்
அந்த அரேபிய நாட்டை உலகில்
நன்கு அறிமுகமாக்கிய விதைநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்

தாய் பாலுக்கும் புனிதம் வரும்நாள்
தாலாட்டுக்கும் மகிமை தரும்நாள்
வாய் முத்தங்கள் முத்தி பெறும்நாள்
இந்த மண்மீது சுவனம் வரும்நாள்
அனாதை களுடனே வாழ
அந்த அல்லாஹ்வின் அருட்கொடை வரும்நாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்

ஆகாயத்தில் விண்மீன் உதிர்ந்து
அங்கு அதிசயம் நிகழ்ந்ததை சொல்லும் நாள்
கஃபாவின் சிலைகள் கவிழ்ந்து
அவை கண்மூட போவதை சொல்லும் நாள்
பல மாற்றங்கள் இயற்கை நடத்தி
அந்த பண்பாளர் வரவை சொல்லும் நாள்
மண்ணில் மானுடம் உயிர் பெற்று எழும்நாள்
தீய மடமைகள் அடிபட்டு விழும்நாள்
இன வேற்றுமை நீக்கிய தவநாள்
என்றும் எல்லோரும் சமத்துவம் எனும்நாள்
புது விதியினை பூமிக்கு தரும்நாள்
மனம் பூபாலம் பாடிடும் இசைநாள்
இது உலகின் தேசிய திருநாள்
வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள்
அருள் ஆயிரம் இறங்கும் ஒருநாள்

அஹமது யார் முஹம்மது


அஹமது யார் முஹம்மது ரசூலுல்லாஹ்
அண்ணலரே கூறுகின்றார் அனமின் நூரில்லாஹ்
நூருல்லாஹ் என்றாலது சிபத்துல்லாஹ்
ஸிஃபத்துல்லாஹ் ஆகாது கைருல்லாஹ்
ரசூலுல்லாஹ் ... ஐனுல்லாஹ் ...

வானம் பூமி ஒளி அல்லாஹ் தன்னொளி என்றான் - அவன்
ஞானநபி வானம் பூமி என்னொளி என்றார் – ஞானம் கொண்டு
ஈரொளியும் ஓரொளி என்போம் - எங்கும்
கானம் பாடி நபியொளியை இறையொளி என்போம்
ரசூலுல்லாஹ் ... ஐனுல்லாஹ் ...

ஒளியின்றி படைப்பெல்லாம் ஜொலிக்க முடியுமா? நூம்
ஜொலிப்பதற்கு ஒளி தேவை மறுக்க முடியுமா?
தேவை பூர்த்தி செய்யும் ஒளிபடைப்பு ஆகுமா? அந்த
பேரொளிதான் ரசூலுல்லாஹ் கைரு ஆகுமா!
ரசூலுல்லாஹ் ... ஐனுல்லாஹ் ...

ரிஸாலத்தும் நுபுவத்தும் என்ன தெரியுமா? இறை
விலாயத்தும் மஃரிபத்தும் என்ன தெரியுமா?
இல்மு என்னும் பொக்கிஷத்தின் எடை தெரியுமா?
இறை இல்மு அது கைருக்கு தடை தெரியுமா?
ரசூலுல்லாஹ் ... ஐனுல்லாஹ் ...

தனித்தவனாம் அல்லாஹ் தன்னை
அஹது என்றுரைத்தான் - அவன்
மகிமை துலங்க மீமை சேர்த்து
அஹமது என்றுரைத்தான்
மீம் என்ற முஹம்மதை அஹதில் காட்டினான் - அந்த
முஹம்மதுக்குள் மக்லுக்கு முழுதும் காட்டினான்
ரசூலுல்லாஹ் ... ஐனுல்லாஹ் ...

கோடி கோடி படைப்பிலங்கும்
தன்மை தெரியுமா? அது
நூருல்லாஹ்வின் வெளிப்பாடே
உண்மை புரியுமா?
பாடி பாடி கைருல்லாஹ் ஞானம் கூறுமா!
இந்த அடிமையும் நூருல்லாஹ்வில்
அடக்கம் தெரியுமா?
ரசூலுல்லாஹ் ... ஐனுல்லாஹ் ...

அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்





அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்ப்பேன்
அஸ்ஸலாமு அழைக்கும் முகமன் கூறி
ஆரத் தழுவ விரைவானா
ஸலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து
சப்தத்துடனே ஒலிப்பேனா

களிப்பின் கடலில் ஆளா மிளிர்ந்து
கண்ணீர் வழிய பார்ப்பேனா
கண்களில் வெளிச்சம் அதிகமாகி
காண முடியாமல் அழுவேனா

வாழ்த்தி கவிதை பாட நினைத்தும்
வார்த்தை வராமால் தவிப்பேனா
வார்த்தைகள் கோடி வளமாய்
வந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா

சிந்தனை இழந்து செயல் பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா
உணர்ச்சிகள் மீறி உயிர் நிலை மாறி
தரையில் விழுந்து சறிவேனா

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
யா ரப்பி ஸல்லி அலைஹிவ ஸல்லம்

ஜிஸ்மே ஜிஸ்மே ரசூல்


ஜிஸ்மே ஜிஸ்மே ரசூல் கல்பே கல்பே ரசூல்
ரூஹே ரூஹே ரசூல் சிர்ரே சிர்ரே ரசூல்
வாருங்கள் மாமதீனா வாருங்கள் மாமதீனா
கேளுங்கள் நபிகள் மகாம் பாருங்கள் ரப்பின் மகாம்

மாநபிகள் இன்றி எவர்க்கும் மஃரிபத்து கிடையாது
மாபெரியோன் தன்னை அறிய மாற்றார்க்கு முடியாது
நம் ஜஸதில் நம் ரசூலைக் கண்டு களிப்போம்
நபி கண்ணில் தெரியும் விந்தை நாமும் ரசிப்போம்

மாநபிபோல் வேடமிட்டால் மகத்துவங்கள் கிடைக்குமா?
மாமன்னர் அகத்தை கொண்டால் மகிமை என்ன தெரியுமா?
நம் கல்பில் நம் ரசூலை மட்டுமே வைப்போம்
நம் சிந்தை சொல்வதென்ன நாமும் மகிழ்வோம்

உயிரற்ற சவம் போல வாழ்ந்து விட்டால் போதுமா?
உன் உயிரின் மகத்துவத்தை உணர மனம் நாடுமா?
நம் ரூஹில் நம் ரசூலை மட்டுமே உணர்வோம்
நபி உணர்வை நம்மில் கண்டு நாமும் துடிப்போம்

உனை படைத்த ரகசியத்தை உணர காலம் இல்லையா?
தனை அறிந்தால் தன் ரப்பை அறிதல் பெரும் பேரைய்யா
நம் சிர்ரும் நம் ரசூலின் சிர்ரே என்போம்
நபி நிலையும் என்ன அது நாமும் அறிவோம்

ஓடுவோர்கள் ஓடட்டும் ஒரு கவலை இல்லை
நாடுவோர்கள் நாடட்டும் நம் நிலையே எல்லை
நாம் நம்மில் நம் ரசூலை கண்டு களிப்போம்
ஃபாரூக்கி கவியை விண்டு பலனை அடைவோம்

வாரும் நபியே நீர் வாரும் நபியே




வாரும் நபியே நீர் வாரும் நபியே – எம்
வள்ளல் இரசூல் நபியே நூருன் நபியே
ஆளும் நபியே எமை ஆளும் நபியே – அகம்
ஆனந்தமே அள்ளித் தரவாரும் நபியே
வழிமீது விழிவைத்து வரும் வேளை நோக்குகிறோம்
வாரும் நபியே முகம்பாரும் நபியே – எங்கள்
வாஞ்சை மன ஏக்கமதை தீரும் நபியே

அவ்வலும் நீரே ஆகிரும் நீரே
ஆதியில் நூராய் வந்த ஜோதி நபியே
அகமதும் நீரே முகமதும் நீரே
அல்லாஹ்வின் தூதாய் வந்த நீதி நபியே – எங்கள்
இன்பதுன்பம் அனைத்திலும் எங்கள் துணையே – உங்கள்
அன்பு நெஞ்சம் பாவி தஞ்சம் புகும் மனையே – நீர்
இல்லாமல் வாழ்வில்லை உண்மையே - இதை
சொல்லாமல் வாழ்ந்தென்ன நன்மையே
உடலோடு உடலாக உயிரோடு உயிராக
வாழும் நபியே எம்மில் வாழும் நபியே – உம்
வாஞ்சை முகம் காண வேண்டும் வாரும் நபியே
வாரும் நபியே நீர்வாரும் நபியே – வந்த
வாசல் ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கோடான கோடி கல்புகள் நாடி
கோவென்று போற்றிக் கொண்டாடும் நபியே
பாமாலை சூடி பொழுதெல்லாம் கூடி
பாசத்தை கொட்ட மனம் நாடும் நபியே – உயர்
மஞ்சத்திலே வீற்றிருக்கும் மன்னர் நபியே – எம்
நெஞ்சத்திலும் வீற்றிருக்க வாரும் நபியே – உமை
காணாமல் ஒளி இல்லை கண்ணிலே – மொழி
கேளாமல் சுகமில்லை நெஞ்சிலே
பேரின்ப காதல் மனம் பாவி எங்கள் நெஞ்சுக்குள்ளே
வீச நபியே நீர் வாரும் நபியே – வரும்
பாதைமலர் தூவுகின்றோம் வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கஸ்தூரி வாசம் வீசும் மெய் தேகம்
கருமேகம் குடை இடும் காமில் நபியே
மெய்யவன் நேசம் வாரியே வீசும்
மிஃராஜு ராஜர் எங்கள் மேன்மை நபியே – வழி
தோரணங்கள் கட்டிவைப்போம் வாரும் நபியே – சுப
சோபனங்கள் பாடிநிற்போம் வாரும் நபியே – உமை
கொண்டாடும் உள்ளங்கள் தவிக்குது – தினம்
மன்றாடி கண்ணீரில் மிதக்குது
மதீனாவின் திசைநோக்கி ஸலவாத்தை இசையாக்கி
பாடிநிற்கின்றோம் முகம் தேடி நிற்கின்றோம் - எங்கள்
மன்னர் உங்கள் வரவையே நாடி நிற்கின்றோம்
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

லட்சிய கீதம் லட்சத்தில் ஓதும்
முத்திரையிடப்பட்ட சொர்க்க நபியே
உச்சத்தின் உச்சம் உம்மத்தின் நேசம்
உள்ளத்தில் கொண்ட உயர்வர்க்க நபியே
உடல் நாளம் போடும் தாளம் உங்கள் காதல் இசையே
எங்கள் காலம் ஓடும் காதல் நபி காலடியிலே
இந்த இகவாழ்வில் எமை காக்கும் நாயகம்
நீர் மறுவாழ்வில் கரைசேர்க்கும் தாயகம்
கலிமாவின் பொருள் சொல்ல வலிமார்கள் வழிவந்து
வாழும் நபியே எமை காரும் நபியே
உங்கள் காதல் மொழி காதில் விழ வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

மக்கத்தில் நீரும் துயர் கண்ட நேரம்
பக்கத்தில் இல்லை நாங்கள் பண்பு நபியே
மதீனத்து வீதி மகிழ்ந்தாடும் நேரம்
மகிழ்ந்தாட இல்லை நாங்கள் மாண்பு நபியே – தாங்கள்
தாயிஃபிலே பட்ட துயர் கொஞ்ச நஞ்சமா – உயர்
தாயின் மனம் கொண்ட உம்மில் அருள் பஞ்சமா – நீர்
தரவேண்டும் திருக்காட்சி கண்ணிலே – உடன்
வரவேண்டும் அடிமைகள் முன்னிலே
குருநாதர் உருவாக திருஞானம் தருவோரே
வாரும் நபியே துயர் தீரும் நபியே – கவி
பாடும் எமின் ஏக்கம் தீர வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

நாயகம் பிறந்து விட்டார்


நாயகம் பிறந்து விட்டார் – நபிகள்
நாயகம் பிறந்து விட்டார்
பூவகம் மீதினில் பேரொளி உதயம்
காரிருள் நீங்கியே மகிழ்ந்தன இதயம்

ஓரிறைக் கொள்கை உறங்கிய நிலையில்
உலகத்தையே ஆள உயிரற்ற சிலைகள்
மாந்தரின் உள்ளங்கள் மடமையின் வலையில்
மாட்டியே சிக்கித் திணரும் அந்நிலையில்

மக்கத்து மாந்தருக்கு மதி உயர் உண்டோ?
மங்கையர் வாழ்வுக்கு விடிவேதும் உண்டோ?
பெண் சிசு பிறந்தால் புதைப்பதுமுண்டோ?
பெருநெருப் பெரிவதை அணைத்திட வென்றோ?

தடையற்று தவறுகள் நடைபெற்ற காலம்
உடையற்று கஃபா வலம் வரும் கோலம்
குடை பிடித்தாளும் குஃப்ரென்னும் கோரம்
முறை எடுத்தோதிட நாதியற்ற நேரம்

அடிமையின் நிலையோ கொடுமையின் பிடியில்
குலவிடும் குலமோ கோரத்தின் மடியில்
சிறுமை என்றுணராத சீமான்கள் செயலில்
சீரிடும் சிந்தைகள் சீர்கெட்ட நிலையில்

அருள் கொண்ட முகங்கள் அருகிக்கிடந்த நாள்
இருள்கொண்டு அகங்கள் கருகிக் கிடந்தநாள்
பொருளற்று பெருமைகள் பெருகிக் கிடந்தநாள்
கருவற்ற தர்க்கங்கள் பொழுதும் விடிந்த நாள்

மதுபான போதையில் மயங்கிக் கிடந்த நாள்
மங்கையர் மோகத்தில் மிருகத்தின் வாழ்நாள்
பொடி விஷயத்துக்கெல்லாம் போர்கள் மூண்ட நாள்
விடிவெள்ளி உதிக்காது இரவே நீண்ட நாள்

மா பாதகச் செயலாம் வழிபறிக் கொள்ளை
பேயாட்டம் ஆடிட பொய் அவர் எல்லை
சூதாட்ட வெறியில் சுபிட்சமே இல்லை
சூட்சிகளே மிகுந்த சுயநலத் தொல்லை

தலை கொய்ய வேண்டின் விலை பேசி முடிப்பார்
கொலைப் பாதகச் செயலைகலை என்று நினைத்தார்
குலம் பெருமைப் பேசி குலத்தையே புதைத்தார்
நிலமெங்கும் கொடுமைகள் நபிகளார் உதித்தார்

ஓரிறைக் கொள்கையை உயர்த்தி நிறுத்திட
உயர்மறைக் கலிமா உயர்ந்து ஒலித்திட
உண்மையாம் இஸ்லாம் உலகில் ஜொலித்திட
ஒளி மதீனம் இருந்து ஆட்சி புரிந்திட
நாயகம் பிறந்து விட்டார் – நபிகள்
நாயகம் பிறந்து விட்டார்

Powered by Blogger.

Blog Archive

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.