Posted by : kayalislam Friday, 14 September 2012

بسم الله الرحمن الرحيم
اَلَّفَ اَلْاَلِفُ نِظَامَ مَدْحِ اَعْلَى الْعَالِ عَالْ
اَوَّلَ السُّطُوْرِ بِسْمِ اللهِ بَدْءَ الْقَالِ قَالْ
அல்லஃபல் அலிஃபு னிளாம மத்ஹி அஃலல் ஃஆலி ஃஆல்
அவ்வலச் சூதூரி பிஸ்மில் லாஹி பத்அல் காலி கால்

பொருள் : உயர்ந்த இடங்களிலெல்லாம் மிக உயர்ந்த இடத்திற்கு உயர்ந்து விட்டவரின் புகழாரத்தை ஒரு எளிமையானவர் கோர்வை செய்தார். வரிகளின் ஆரம்பத்தில் (அதாவது) பேச்சின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் சொன்னார்

விளக்கம் : பக்தரட்சகனும் சர்வ ஜீவ தயாபரனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எந்த நல்ல காரியம் பிஸ்மியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட வில்லையோ அதில் பறக்கத் இல்லை என்று ஹதீஸில் (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 6284) வந்துள்ளதால் முதன் முதலில் பிஸ்மில்லாஹ் சொல்லி மிக உயர்ந்த இடத்திற்கு உயர்ந்துவிட்ட (மிஃராஜுக்குச் சென்று வந்த) சர்வ லோக ரட்சகர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்புகழ் கோவையை ஒரு எளியவனாகிய அடியான் (உமர் வலியுல் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு) கோர்வை செய்கிறேன்.


اَحْمَدُ اللهَ مُصَلِّيًا مُسَلِّمًا عَلٰى
اَحْمَدٍ وَالْاٰلِ وَالْاَصْحَابِ مَنْ لِلْاٰلِ اٰلْ
அஹ்மதுல்லாஹ் ஹாமுஸல்லியன் முசல்லிமன் ஃஅலா
அஹ்மதின் வல்ஆலி வல்அஸ்ஹாபி மன் லில்ஆலி ஆல்

பொருள் : அஹ்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்தம் (பரிசுத்த) குடும்பத்தார் தோழர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரளவில் மீண்டவர்கள் (சேர்ந்தவர்கள்) மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொன்னவனாய் அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.

விளக்கம் : எந்த நல்ல காரியம் (பிஸ்மில்லாவுக்குப் பிறகு) ஹம்து ஸலவாத்தைக் கொண்டு துவங்கப்பட வில்லையோ, அது பரக்கத்தை விட்டு நீங்கியதாகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளதால் (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 6285 இப்னு மாஜா 1894) அஹ்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் தம் கிளையார்கள் தோழர்கள் அவ்லாதுர் ரஸூல்களான ஸாதாத்மார்களின் மீதும் இவர்கள் வழி ஒட்டி நடக்கின்ற நல்லோர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லியவனாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.

துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் அவசியம் :

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் பள்ளிக்குள் வந்து தொழுதார். தொழுது முடித்தவுடன் "இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் எனக்கு கிருபை செய்வாயாக!" என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "தொழுபவரே அவசரப்பட்டுவிட்டீர்; தொழுது முடித்து (துஆவுக்காக) அமர்ந்து விட்டால் அல்லாஹ்வை அவனுக்கு தகுதியான வார்த்தைகளால் புகழ்வீராக. இன்னும் என்மீது ஸலவாத் சொல்லி அதன் பிறகு அவனிடம் பிரார்த்திப்பீராக" என்று கூறினார்கள். இந்நிகழ்வு நடந்த சிறிதுநேரத்தில் வேறொரு மனிதர் வந்து தொழுதார். அதன் பின் அல்லாஹ்வை புகழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து, "தொழுதவரே நீர் பிரார்த்திப்பீரானால் உமது துஆ ஒப்புக் கொள்ளப்படும்" என்று கூறினார்கள். (திர்மிதி, மிஷ்காத் 86)

துஆவின் முடிவில் ஸலவாத் அவசியம் :

நிச்சயமாக பிரார்த்தனைகள் அனைத்தும் வானம் பூமிக்கிடையே தடுத்து வைக்கப்படுகிறது. உமது நபியின் பேரில் ஸலவாத் சொல்கின்ற வரை அது (வானத்தின் பால்) உயராது என்று உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத் 87 பாபுத்துஆஇ பித்தஷஹ்ஹூதி)

துஆ ஓதுவதின் ஒழுங்கு :

ஹம்து ஸலவாத்தைக் கொண்டு துவங்கி ஹம்து ஸலவாத்தையும் ஆமீனையும் கொண்டு முடிக்க வேண்டுமென்று ஷாபி மத்ஹபின் சட்ட நூலான பத்ஹூல் முயீன் என்ற கிரந்தத்தில் ஸிபத்துஸ் ஸலாத் என்ற பாடத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் விரிவுரையான "இஆனா" என்ற நூலின் முதலாம் பாகத்தில் எந்த ஹம்து ஸலவாத்து ஏற்றமானது என்ற விபரம் குறிபிடப்பட்டுள்ளது.


بَا لَغَ الْمَدَّاحُ فِيْ اَوْصَافِهِ فَمَا بَلَغْ
بَالِغٌ مِعْشَارَ مَا اُوْتِيْ بِمَا فِي الْبَالِ بَالْ
பால ஃக(غَ)ல் முத்தாஹு ஃபீ அவ்ஸாஃபிஹீ ஃபமா பலாஃக்(غ)
பாலி ஃகு(غٌ)ம் மிஃஷார மா ஊத்தீ பீமா ஃபில் பாலி பால்

பொருள் : (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்) புகழ்கிறவர்கள் தமது உள்ளத்தில் ஊசலாடியவைகளை யெல்லாம் வைத்து (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வர்ணிப்புகளில் கடும் முயற்சி எடுத்(துப்பார்த்)தனர். முயற்சித்தோர் எவரும் ( நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட (சிறப்புகளில்) ஆயிரத்தில் ஒன்றைக் கூட அடைந்து கொள்ளவில்லை.

கருத்து : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வளவுதான் புகழ்ந்தாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தன்மைகளில் ஆயிரத்தில் ஒன்றைக் கூட சம்பூரணமாகச் சொல்லி முடிக்க முடியாது. ஏனெனில் எவ்வளவுதான் நாம் பெருமானாரைப் புகழ்ந்தாலும் அனைத்தையும்விட அவர்களின் புகழ் மிக உயர்ந்ததாகவே இருக்கிறது.

விளக்கம் : நபிகள் நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நற்குணத்தின் தாயகமே! தாங்களை வர்ணித்துப் புகழ்வதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு கவிதீட்டிய எத்தைனையோ கவிஞர் பெருமக்கள் தம் மனதில் எழுந்தவைகளையெல்லாம் வைத்து தம்மால் இயன்ற அளவு தாங்களைப் புகழ்ந்தேற்றிப்பார்த்தனர். என்றாலும் அவர்களில் எவரும் தாங்களின் தன்மைகளில் ஆயிரத்தில் ஒன்றைக்கூட புகழ்ந்து முடிக்கவுமில்லை. புகழ முடியவுமில்லை. ஏனென்றால், "(நபியே!) முந்திய நிமிடத்தை விட பிந்திய நிமிடமே உங்களுக்கு சாலச் சிறந்தது" (அல்குர்ஆன் 93:4) என்றும் "(நபியே!) உம் புகழை நாம் மிக உயர்த்தி விட்டோம்" (அல்குர்ஆன் 94:4) என்பன போன்ற ஆயத்துக்களாகிறது தாங்களின் தன்மைகள் ஒரு வட்டதிற்குள் உட்படாமல், ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் தாங்களின் சிறப்புகள் ஒரு எல்லைக்குள் உள்ளடங்கி விடாமல் ஒவ்வொரு இமைப் பொழுதும் மேலோங்கிக் கொண்டே இருக்கின்றன என்றும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. (ஷரஹூல் ஸனூஸி பக்கம் 7)

தாங்களோ, "இன்னஹு லயுஃஆனு அலா கல்பீ ஃபஅச்தக்பிர்ஹுல்லாஹ மிம்மா கப்ல ஃதாலிக்" என்று கூறி இருக்கிறீர்கள். அதாவது சூடேற்றுவதற்காக அடுப்பில் வைக்கப்பட்ட நீர் பாத்திரம் கொதித்து அதில் நீர்க்குமிழிகள் கிளம்புவது போன்று என் இதயத்தில் தெய்வீக ஒளிக் கதிர்கள் ஒன்றோடு ஒன்று மோதிப் புதிது புதிதான தெய்வீக அறிவொளிகள் கிளம்புகின்றன. (இப்படி ஒவ்வவொரு நிமிடமும் புதுப்புது இறை உணர்வுகளால் உந்தப்படும் நான் இதற்கு முன்புள்ள நிமிடத்தின் நிலையை உணர்ந்து) இறைவனிடம் ஒவ்வொரு நாளும் நூறு முறை பாவ மன்னிப்புத் தேடிய வண்ணமாகவே இருக்கின்றேன். (முஸ்லிம் பகுதி 17, அபூதாவூத் 1515 மிஷ்காத் பக்.203 புகாரி 2-933 கிதாபுத் தாஅவாத்) என்று தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் தெளிவின் உச்சக் கட்டத்தை எய்தப் பெற்று ஒவ்வொரு இமைப்பொழுதும் அந்தஸ்தால் உயர்ந்து கொண்டே இருக்கிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். இப்படி இருக்க தாங்களின் வர்ணணைகளை வரையறுத்துக் கூற எவரால் தான் முடியும் நாயகமே! முடியவே முடியாது. ஒருக்காலமும் முடியாது.

குறிப்பு : மி ஃஷார் என்பது பத்தில் ஒன்றில் பத்தில் ஒன்றில் பத்தில் ஒன்றாகும். அதாவது இதன்படி மிஃஷார் என்பதற்கு ஆயிரத்தில் ஒன்று என்று பொருள் வரும். (துஹ்பத்துல் அலிப்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுக்கு அளவில்லை :

பெருமானாரின் குணம் குர்ஆனாகவே அமைந்து விட்டது என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு முஸ்லிம் கிதாபு ஸலாதில் முஸாபிரீன் பாபு ஜாமிஇ ஸலாத்தில்லைலி 1/512, 513 ஹதீஸ் எண் 746ல் பதிவாகியுள்ள மேற்படி ஹதீஸூம் பெருமானாரின் புகழுக்கு எல்லை இல்லை என்பதற்கு ஆதாரமாக அமைவதைக் காணலாம். எப்படி என்றால் இவ்வுலகில் உள்ள மரங்கள் செடிகொடிகள் அனைத்தையும் எழுதுகோள்(பேனாக்)களாக்கி ஏழு கடல்களின் நீரையும் மையாக்கி குர்ஆன் ஷரீபுக்கு விளக்கவுரை எழுதினாலும் ஏழுகடல்களின் நீர்தான் தீர்ந்து விடுமே அன்றி திருக்குர்ஆன் தெளிவுரைகள் தீர்ந்து விடாது என்று லுக்மான் ஸூராவின் 27வது வசனம் அறிவிக்கிறது. எனவே குர்ஆன் ஷரீபுக்கு எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் விளக்கம் சொல்லி முடிக்க முடியாது என்று ஆகும்போது குர்ஆன் ஷரீபாகவே இருக்கின்ற பெருமானாரின் பொற்குணத்தையும் புகழாரத்தையும் விவரித்து முடிக்க முடியாது என்பது வெள்ளிடை மலையாகும். இதைக் குறித்தே அல்லாமா ஸதக்கத்துல்லாஹில் காஹிரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சிறப்புகளை மலக்குகள் உட்பட மனிதர்கள் அனைவரும் ஏழு கடலையும் மையாக்கி சோர்வின்றி எழுதினாலும் எழுதி முடிக்கவே முடியாது." என்று தமது காபியத்துல் லாம் 3வது பைத்திலும், "நபியே! தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் சிறப்புகளில் உயர்ந்துகொண்டே இருக்கிறீர்கள்" என்று தமது காபியத்துல் மீம் 3வது பைத்திலும் குறிபிட்டுள்ளார்கள்.

பெருமானாரின் பொற்குணங்களில் சில

சுந்தர வதனம் கொண்டவர்களாகவே தவிர காணப்பட மாட்டார்கள். இரவு காலங்களில் பசித்த நிலையிலேயே இருந்து வருவார்கள். தமது பாதணிகளை தானே தைத்துக் கொள்வார்கள். தமது ஆடைகளுக்கு ஒட்டுப் போட்டுக் கொள்வார்கள். தமது ஆடுகளில் தாமே பால் கறப்பார்கள். தமது வீட்டைத்தாமே கூட்டி சுத்தம் பண்ணுவார்கள். தமது பணியாளுக்கு உதவியாக அவருடன் சேர்ந்து மாவு அரைப்பார்கள். தமது பொருள்களை தமது சிறப்பிற்குரிய தோள் புஜத்தில் சுமப்பார்கள். உணவு அருந்தும் போது தனது ஆண் அடிமைகளை விடவோ அல்லாது பெண் அடிமைகளை விடவோ உயர்ந்து இருக்கமாட்டார்கள் (மாறாக அடிமைகளில் ஒரு அடிமைபோன்றே இருந்து கொள்வார்கள்) . விருந்தையோ அன்பளிப்புகளையோ மறுக்கமாட்டார்கள். ஆட்டுக்காலின் குளம்பை கறியாக சமைத்து அதை உண்ண அழைக்கப்பட்டாலும் பதில் கொடுப்பேன் என்றும், எனக்கு ஆட்டின் முன்சப்பையை அன்பளிப்புச் செய்யப்பட்டாலும் அதை ஒப்புக்கொள்வேன் என்றும் கூறுவார்கள். மேலும் உங்களுடைய துன்யாவிலிருந்து என்பால் மூன்று வஸ்த்துக்கள் பிரியமாக்கப் பட்டுள்ளது. முதலாவது பெண்கள், இரண்டாவது மனம் கமழும் வாசனைகள், மூன்றாவது தொழுகையில் என் கண் குளிர்ச்சி என்றும் ஆண் மக்களை விட பெண் மக்கள் பிரியமக்கப்பட்டவர்களுக்கு எனது சுபசோபனம் உண்டாகட்டும் என்றும் கூறுவார்கள். கொடுக்கல் வாங்கல் அனைத்து மனிதரிலும் அழகாக இருப்பார்கள். யாரிடமாவது கடன் வாங்கினால் அதை முறையாக நிறைவேற்றி விடுவார்கள். மேலும் அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் உமது பொருளிலும் குடும்பத்திலும் உமக்கு பரகத் செய்வானாக என்று கூறுவார்கள். மன்னிப்பு கேட்போரின் மன்னிப்பை ஒப்புக்கொள்வார்கள். பலம் வாய்ந்தவனும் பலவீனனும் சொந்தக்காரனும் அன்னியனும் அவர்களிடம் சமமானவர்களே.

தமது தோழர்களுக்கிடையே எதையேனும் பங்கிட்டால் அவர்களில் வலது பக்கமுள்ளவர்களைக் கொண்டே ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கிடையே சமமாகவே பங்கிடுவார்கள். அவர்களில் ஒருவரைவிட ஒருவருக்கு விஷேசத் தன்மை இருந்தால் மாத்திரம் அவருக்கு கூடுதலாக்குவார்கள். அவருக்கு கூடுதலாக கொடுத்த விஷயத்தில் எவராவது மடத்தனமான முறையில் அவர்களைக் குறை கூறினால் அதைப் பொறுத்துக் கொள்வார்கள். எந்த விஷயத்திற்காகவும் சீ என்று கூறிவிடமாட்டார்கள். தொடர் கவலை கொண்டவர்களாக இருப்பார்கள். இறை நினைவிலும் இறைச் சிந்தனையிலும் நேமமாக இருந்து வருவார்கள். நீர் கொதிக்கும் பாத்திரத்திலிருந்து எழும் சப்தத்தைப் போன்று அவர்களின் விலாப் பகுதியில் இருந்து சப்தம் கேட்க்கும். ஆட்டின் முன்சப்பை, சுரைக்காய், ஹல்வா ஆகியவைகளை விரும்புவார்கள். ரொட்டியை சிர்க்காவுடன் சேர்த்து உண்பார்கள். கோழி, செங்கநாரை, கொக்கு ஆகியவைகளின் இறைச்சிகளை உண்பார்கள். தொலிக் கோதுமையை பேரீத்தம் பழத்துடனும் வெள்ளரிக்காயுடனும் அது போன்றே பேரீத்தம் பழத்தை வெண்ணையுடனும் சில சமயங்களில் கறிகளுடனும் சேர்த்து உண்பார்கள். மாட்டுஇறைச்சியை உண்ண மாட்டார்கள். உண்போரைத் தடுக்கவும் மாட்டார்கள். ஒரு ஆணத்தைவிட அறவே அதிகமாக்கமட்டார்கள். சமயத்தில் உப்பை மட்டும் வைத்தோ அல்லது நெய்யை மட்டும் வைத்தோ உணவு உண்பார்கள். மூன்று விரல்களில் உண்பார்கள். சாப்பிட்டு முடித்தபின் விரல்களை சிவக்கின்ற வரை சூப்புவார்கள். சாப்பாட்டு மேசையின் மீதோ அல்லது சாய்ந்த நிலையிலோ உணவு உண்ணமாட்டார்கள். சாப்பாட்டு விரிப்பின் மீது உண்பார்கள். சஹாபாக்களுடன் கலந்து பேசுவார்கள். அவர்களுடன் ஹாசியம் (தமாஸ்) பண்ணிக் கொள்வார்கள். அவர்களுடன் கலந்து ஆலோசிப்பார்கள். அவர்களின் பொற்குணங்களை வரையறுத்துச் சொல்ல முடியாது. (மின்ஹதுஸ் ஸரன்தீப் பக்கம் 122)

நபி புகழ் (மவ்லிது) பாடலாமா? அதுவும் பள்ளி வாசலிலா?

தாஹா நபியின் திருப் புகழ் பாடுவதற்காக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு என்ற கவிஞருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன்னபவியில் மேடை அமைத்துக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். இறைவா! ஹஸ்ஸான், நபியைப் புகழும் காலமெல்லாம் அவரை பரிசுத்த ஆவியான ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் மூலம் வலுப்படுத்துவாயாக என்று பிரார்த்திப்பவர்களாகவும் இருந்தார்கள் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, மிஷ்காத் பக்கம் 410 பாபுல் பயான் வஷ்ஷிஃர்). அல்லாஹ் தனது திருமறையில், "நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரஈலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்." (அல்-குர்ஆன் 97:1,2,3,4,5 ) . புண்ணியம் பூத்துக் குலுங்கும் இப்புனித இரவின்(லைலத்துல் கத்ரின்) பெருமையை உரைக்கும் இறைவன், அவ்விரவில் தன் அடியார்களுக்கு தன் அருள் மாறியை(மழையை) பொழிகிறான். அது வானவர்களின் வருகை, இன்னும் பரிசுத்த ஆவியான ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வருகை என அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான். அவ்விரவில் வானவர்கள் பூமிக்கு வருவதையே மகிமை படுத்தி கூறும் இறைவன் அந்த வானவர்களில் ஒருவரான ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை குறிப்பிட்டு கூறுவதன் மூலம் ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் பெருமையை இறைவன் பறைசாற்றுகிறான். நபிமார் களுக்கு வஹீ என்னும் இறைத்தூதை ஏந்தி வரும் ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உதவி புரியுமாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்ததிலிருந்து பூமான் நபியின் புகழைப் பாடும் புனிதர்களுக்கு லைலத்துல் இரவில் வணங்கிய வணக்கசாலிகளுக்கு பொழியும் அருளையே அல்லாஹ் பொழிகிறான் என்பதை தெளிவாக தெரியமுடிகிறது.


تَاهَ قَلْبِيْ مُدْ اَتَيْتُ وَادِيَ النَّقَافَمَا
تَابَ عَنْ وِدَادِ طٰهٰ تَالِيًا لِتَّالِ تَالْ
தாஹா கல்பி முத் அதைத்து வாதியன்ன கா ஃபமா
தாப அன் விதாதி தாஹா தாலியன் லித்தாலி தால்

பொருள் : பரிசுத்த ஓடை(யாம் புனிதம் பூக்கும் மாமதீனா நகரு)க்கு வந்த போது என் உள்ளம் நிலை குலைந்துவிட்டது. (பெருமானாருக்குப்) பக்கத்தில் வந்து விட்ட எவரும் தாஹா நபியின் பாசத்தை விட்டும் (மனோ இச்சையை) பின்பற்றக் கூடியவரை பின் பற்றிய நிலையில் திரும்பமாட்டார்.

விளக்கம் : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "அன செய்யிதுல் ஃஆலமீன்" நானே உலகத்தவர் அனைவருக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றும் "அன செய்யிதுன் னாசி யவ்மல் கியாமா" கியாமத் நாளில் நானே அனைத்து மக்களுக்கும் தலைவனாக இருப்பேன் (புகாரி கிதாபுல் அன்பியாஇ) என்றும் "அன செய்யிது உல்தி ஆதம வலா ஃபஃக்ர" பெருமைக்காகச் சொல்லவில்லை, உண்மையிலேயே ஆதாமின் பிள்ளைகள் அனைவருக்கும் நானே தலைவனாக இருக்கிறேன் (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண். 2693, இப்னு மாஜா ஹதீஸ் எண் 4308) என்றும் கூறித் தாங்களின் பெருமிதத்தைப் பற்றி தாங்களே எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இதை அறிந்த யான் தாங்களின் திவ்விய திருச்சன்னிதியை தரிசிக்க வேண்டுமென்ற அவாவில் திளைத்திருந்தேன். பரிசுத்த பூமியாம் புனிதம் பூக்கும் மாமதீனா நகர் வந்து தாங்களின் எழிலார்ந்த கம்பீரத்தை நேரில் கண்ட போது என் இதயம் நிலை குலைந்துவிட்டது. தாங்களின் அருகாமையில் வந்து தாங்களுடைய பேரழகைக் கண்டு பிரமித்து போன நான் இனி என் வாழ்நாளெல்லாம் தாங்களுடைய அன்பிலும் காதலிலும் பாசத்திலுமேயே திளைத்திருக்கப் போகிறேன்.

குறிப்பு :

1. மனோ இச்சையைப் பின்பற்றக் கூடியவர்களைப் பின் பற்றிய நிலையில் என்பதன் கருத்தாகிறது, மனோ இச்சைக்கு வழிபட்டு மாற்றுக்கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கும் நவீன வாதிகளைப் பின் பற்றி போகின்ற பாமர மக்கள் போன்று பெருமானார் மீது கொண்ட பேரன்பை விட்டு விட மாட்டேன் என்பதாகும்.

2. "தாலியன் லித்தாலி" என்பதற்கு அருள் மறையை ஓதிக்காட்டி அருளுரைகள் வழங்கிய அண்ணலாரைப் பின் பற்றிய நிலையில் அவர்களின் பாசத்தை விட்டுத் திரும்பமாட்டார் என்றும் பொருள் கொள்ள இடம் இருக்கிறது.

புனிதம் பூக்கும் மாமதீனாவின் மகிமைகள்

1. கொல்லனின் துருத்தியாகிறது இரும்பின் துருவைநீக்கி சுத்தம் செய்வது போல மதீனாவாகிறது மனிதர்களை (அகத்துருவை நீக்கி) பரிசுத்தப்படுத்தி விடும். (புகாரி ஷரீப், மிஷ்காத் 240)

2. புனித மதீனாவின் கணவாய்கள் (மலைப் பாதைகள்) மீது மலக்குகள் இருக்கிறார்கள். எனவே தஜ்ஜாலைப் போன்ற துஷ்டர்களும் பேதியைப் போன்ற பீதி தரும் காலரா நோய்களும் மதீனாவில் நுழையமுடியாது. (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் 240)

3. நிச்சயமாக இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மக்கமா நகரத்தை சங்கைப்படுத்தி புனிதம் மிகுந்ததாக ஆக்கினார்கள். நான் மதீனமா நகரத்தை சங்கைபடுத்தி புனிதமாக்கியிருக்கிறேன். (முஸ்லிம், இப்னு மாஜா ஹதீஸ் எண் 3113)

4. எவன் புனித மதீனா வாசிகளுக்கு (பாதகமாக) சூழ்ச்சி செய்வானோ அவன் தண்ணீரில் உப்பு கரைந்து (அழிந்து) விடுவது போல கரைந்து விடுவான். (புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா 3113)

5. எவர் புனித மதீனாவில் குடியேறி அதனுடைய சோதனைகளைப் பொறுத்துக் கொள்வாரோ அவருக்கு நான் கியாமத்து நாளில் சாட்சியாளராக இருப்பேன். (பைஹகீ, மிஷ்காத் 240)

6. இறைவா! புனித மக்காவில் நீ அருளியிருந்த பாக்கியங்களிலிருந்து இருமடங்கு (பாக்கியங்களை) புனித மதீனாவில் ஆக்குவாயாக. (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் 240)

7. எவராவது புனித மதீனாவில் மரணிப்பதற்கான பாக்கியத்தைப் பெற்றிருப்பாராகில் அவர் அங்கேயே மரணிக்கட்டும். ஏனென்றால் அங்கு மரணிப்பவர்களுக்கு நிச்சயமாக நான் பரிந்துரைப்பேன். (திர்மிதி, அஹ்மத், மிஷ்காத் 240, இப்னு மாஜா 3112)

மேற்படி ஹதீஸ்களும் இன்னும் அனேக ஹதீஸ்களும் மாமதீனாவின் புண்ணியங்கள் குறித்தும் புனிதங்கள் குறித்தும் வந்துள்ளதால் இந்தக் கவியடியில் மாதீனவுக்கு (வாதியன்னகா) பரிசுத்த பூமி என்று சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பு : வாதியன்னகா என்பது ஹிஜாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயராக இருந்தாலும் இங்கு புனித மதீனாவை குறித்துள்ளது எனலாம்.


ثَابَ ثَابِتُ الذُرَاى مِنَ السُّرٰي اِلىَ الثَرٰى
ثَانِيًا مَا ثَالِثَا بَلْ ثَانِيَ الْاَمْثَالِ ثَالْ
தா(ثَا)ப தா(ثَا)பிதுத் துரா மினச் சுரா இலத் த(ثَ)ரா
தா(ثَا)னியன் மா தா(ثَا)லித(ثَ)ன் பல் தா(ثَا)னியல் அம் தா(ثَا)லி தா(ثَا)ல்

பொருள் : இரவுப் பயணத்தின் மூலம்(மிஃராஜ் சென்று) உச்சியில் தரிப்பட்டிருந்தவர், இறைவனைப் புகழ்ந்த வண்ணம் (இப்)பூவுலகுக்கு திரும்பினார். (மிஃராஜில் இறைவனுடன் ஒன்றித்து இருந்த சமயத்தில்) மூன்றாவது நபரை (ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை) சேர்த்துக் கொள்ளவில்லை. மேலும் தம் போன்றவர்(நபிமார்)களில் மற்றவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை.

விளக்கம் : நபிகள் நாதரே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிஃராஜுக்காக இம்மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு சென்ற தாங்கள் இறைவனுடன் ஒன்றித்து உரையாடினீர்கள். அத்திருச்சன்னிதியில் மூன்றாவது நபர் (அதாவது ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள்) இருக்கவில்லை. இறைவனுடன் ஒன்றித்து சம்பாசிக்கும் இதுபோன்ற பாக்கியம் வேறு எந்த நபிக்கோ ரஸூலுக்கோ வழங்கப்பட வில்லை. ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக சுருக்கித்தந்த இறைவனை நன்றிப் பெருக்குடன் புகழ்ந்த வண்ணம் இப் பூவுலகுக்கு திரும்பினீர்கள்.

குறிப்பு : மூன்றாவது நபராகிய ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை என்ற சொற்றொடருக்கு கீழ்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைவதைக் காணலாம். ஏழு வானங்களை கடந்து ஸித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தை அடைந்தவுடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாத்திரம் அனுப்பிவிட்டு ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் (ஒதுங்கி) நின்று கொண்டார்கள். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் எம்மை இதுவரை அழைத்து வந்த தாங்கள் இப்போது ஏன் வராமல் ஒதுங்கி கொண்டீர்கள் என்று கேட்டபோது இந்த இடத்தை விட்டும் ஒரு விரலின் நுனி அளவு கடந்தாலும் இறைவனின் பேரொளி என்னைக் கரித்துவிடும் என்று பதில் அளித்ததாக தப்ஸீர் ரூஹுல் பயானிலும் (பாகம் 5 பக்கம் 120) தப்ஸீர் ஸாவியிலும் (பாகம் 3 பக்கம் 314) பதிவாகியுள்ளது. ஒரு முடியளவு கடந்தால் கூட கரிந்துவிடுவேன் என்று கூறியதாக மஸ்னவி ஷரீபிலும் வந்துள்ளது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் உங்கள் ரப்பை பார்த்ததுண்டா என்று கேட்டார்கள். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நடுங்கி விட்டார்கள். முஹம்மதே! நிச்சயமாக எனக்கும் அவனுக்குமிடையே ஒளியால் ஆன 70 திரைகள் இருக்கின்றன. அவைகளின் ஒன்றின் பக்கம் நெருங்கினால் கூட கரிந்துவிடுவேன் என்று கூறினார்கள். (மிஷ்காத் பக். 510)


جُوْدُ مَنْ جَادَالُوُجُوْدَ وُجُوْدُهُ جَادَالْجَوَى
جَمْعًا وَفَرْقًا بَعْدَ جَمْعِ الْجَمْعِ لِلرِّجَالِ جَالْ
ஜூது மன் ஜாதல் வுஜூத வுஜூதுஹு ஜாதல் ஜவா
ஜம் ஃஅன் வ ஃபர்க்கன் பக்த ஜம்யில் ஜம்யி லிர்ரிஜாலி ஜால்

பொருள் : எவரின் உஜூது (உள்ளமை) இவ்வுலகைக் கொடையாக ஈந்ததோ அவரின் கொடையாகிறது, ஜம்வுல் ஜம்வுக்கு பின்னால் "ஜம்வு" பர்க்கு என்ற இரு நிலைகளிலும் தான் தெரிவு செய்த (ஆன்மீகப்) புருசர்களுக்கு "ஜவாவை" நன்கொடையாக வழங்கியது.

கருத்து : வள்ளல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உண்டாகாவிட்டால் இவ்வுலகமே வந்திருக்காது என்றும் இறைவனில் முற்றிலும் அழித்துக் கொண்ட ஆன்மீகவாதிகளில் தாம் விரும்பியவருக்கு "ஜவா" என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொள்கின்ற ஆன்மீகக் காதலை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்குவார்கள் என்பதும் கருத்தாகும்.

விளக்கம் : வள்ளல் நபி நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்களின் உள்ளமையால் தான் எங்களுக்கு இவ்வையகத்தை கொடையாக ஈந்தீர்கள். தாங்கள் வராவிட்டால் இவ்வுலகமே வந்திருக்காது. அது போன்றே தம்மை இறைவனில் முற்றிலுமாக அழித்துக்கொண்ட மக்கள் பலரில் தாங்கள் விரும்பி தெரிவு செய்த ஆன்மீக புருசர்களுக்குத்தான் "ஜவா" என்ற மெஞ்ஞானப் பதவியை வழங்குகிறீர்கள்.

துஆ : நாயமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "அல்லாஹு முஃதீ வஅனல் காசிம்" அல்லாஹ் (என்னிடம்) கொடுக்கிறான் நான்தான் (உங்களுக்குப்) பங்குவைத்துத் தருகிறேன் என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். (அஹ்மது பாகம் 2 பக்கம் 433. புகாரி பாகம் 1 பக்கம் 16. கிதாபுல் இல்மி) எனவே "ஜவா" என்ற ஆன்மீகப் பட்டத்தை வழங்குவதற்காக எங்களைத் தெரிவு செய்வீர்களானால் நிச்சயம் நாங்கள் தேற மாட்டோம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் தாங்களின் மிகப் பெரிய சிறப்பையும் அளப்பரிய அருளையும் ஆதரவு வைத்தவர்களாக இருக்கிறோம். எனவே யா ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்களின் பாசத்திற்கு பாத்திரனமானவர்களாகவும் தாங்கள் வழங்கும் "ஜவா" என்ற எம்மெஞ்ஞான பரிசிலுக்கு பாத்தியப்பட்டவர்களாகவும் ஆக்கி தாங்களின் சொந்தமான அடியார்களுடன் எங்களையும் சேர்த்தருள் புரிவீர்களாக, ஆமீன்.

குறிப்பு : "ஜம்யில் ஜம்யி", "ஜம்வு", "பர்க்கு" என்பது சூபியாக்களின் பரிபாசையாகும். ஆகவே அதற்குரிய எதார்த்தமான விளக்கங்களை ஞானாசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இருப்பினும், மேலெழுந்த வாரியான ஒரு சிறு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டவன் மூலம் ஏற்படுகின்ற நன்மை தீமை விஷயத்தில் மனிதர்கள் இருநிலைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்

1. குஷ்டநோய் குஷ்டரோகிகளுடன் ஒட்டி உறவாடும் காரணத்தால் உண்டாகக் கூடியது என்பது சிலரின் கொள்கையாகும்.

2. குஷ்டம் என்பது குஷ்டரோகிகளிடமிருந்து தொற்றியது அல்ல; மாறாக இறைவனே ஏற்படுத்தியதாகும். முதல்பிரிவினர் காரணத்தை நம்புகின்றனர். இரண்டாமவர் காரணகர்த்தாவை நம்புகின்றனர். இரண்டுமே சரியானதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! தாங்களின் திருக்கரத்தை பிடித்து பைஅத் (உடன் படிக்கை) செய்து கொள்ள விரும்புகின்றேன் என்று ஒரு குஷ்டரோகி கேட்ட போது நபி அவர்கள் கையைக் கொடுக்கவில்லை. பைஅத் செய்து விட்டீர் என்று கூறிவிட்டார்கள். இந்நிகழ்ச்சி நோய்கள் தொற்றக்கூடியது என்பதை அறிவிக்கிறது.

இறைவன் மேல் நம்பிக்கை வைத்து அவன் மீது உறுதி பூண்டு அவன் திருப் பெயரைக் கொண்டு உண்ண ஆரம்பிக்கிறேன் என்று கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு குஷ்டரோகியுடன் உணவு உண்டார்கள். இந்நிகழ்ச்சி நோய்கள் தொற்றக்கூடியது அல்ல என்பதைக் தெளிவுபடுத்துகிறது.

காரணங்களின் மூலம் இறைவன் காரியம் ஆற்றுகின்றான் என்ற முதல் நிலைக்கு பர்குடைய நிலை என்று பெயர். காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் நாடினால் நடக்கும், இல்லாவிட்டால் இல்லை என்ற இரண்டாவது நிலைக்கு ஜம்வுடைய நிலை என்ற பெயர். இவ்விரு நிலைகளையும் ஒரு சேரக் கைக்கொண்டிருப்பது கடமையாகும். பர்குடைய நிலை இல்லாதவருக்கு உபூதியத் (பூரண அடிமைத்துவம்) இல்லை. ஜம்வுடைய நிலை இல்லாதவருக்கு மஃரிபா (அகமிய ஞானம்) இல்லை. இய்யாக்க நஃபுது என்பது முதல் நிலையைத் தரிபடுத்துகிறது. வஇய்யாக்க நாஸ்தஈன் என்பது இரண்டாம் நிலையைத் தரிபடுத்துகிறது. இவ்விரு அம்சங்களையும் கடந்த நிலைக்கு ஜம்வுல் ஜம்வுடைய நிலை என்று பெயராகும். அதாவது காரணத்தின் மூலம் இறைவன் காரியமாற்றுகிறான் என்றோ அல்லது நேரடியாக காரியம் ஆற்றுகிறான் என்றோ சிந்திக்காமல் இறைவனிலேயே தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டு அவனின்றி வேறில்லை என்ற ஏகாந்த நிலைக்கு வந்து விடுவதாகும். (நுக்பதுல் பிக்ரின் விரிவுரையான லுகதுத் துரர் பக்கம் 69)


حُبُّ حِنِّيْ حَبَّةً فِيْ لُبِّ قَلْبِيْ اَنْبَتَتْ
حُبُوْبُهَا مَاكُل حَبٍّ مِنْهُ لِلْمُحَالِ حَالْ
ஹுப்பு ஹிப்பீ ஹப்பதன் ஃபீ லுப்பி கல்பீ அன்பதத்
ஹுபூபுஹா மா குல்லு ஹப்பின் மின்ஹு லில்முஹாலி ஹால்

பொருள் : எனது நேசரின் நட்பாகிறது எனது உள்ளத்தின் (அடித்தளத்தில்) உள்ள லுப்பில் (ஒளிமயமான அறிவில் விதைக்கப்பட்டு) உள்ள வித்தாகும். அந்த வித்து அதனுடைய (அன்புடைய) பல வித்துக்களை முளைக்கச் செய்துள்ளது. அதிலிருந்துள்ள ஒவ்வொரு வித்தும் அழிவின் பக்கம் திரும்பவில்லை.

கருத்து : பெருமானாரின் மீது கொண்ட தூய்மையான அன்பு என்ற வித்து என் உள்ளத்தின் அடித்தளத்தில் ஆழமாக வேரூன்றி விட்டதால் அன்பு பாசமாகி பாசம் நட்பாகி நட்பு ஆசையாகி ஆசை காதலாகி காதல் மோகமாகி மோகம் யோகமாகி யோகம் இறைமோகமாகி இறை மோகம் மூர்ச்சையாகி மூர்ச்சை இறைப்பித்தாகி இப்படியே போய்க் கொண்டே இருக்கிறதே தவிர அழிந்து விடாது என்பதாகும்.

விளக்கம் : என் அன்பே நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் மீது நான் கொண்ட அன்பு என்ற வித்து என் உள்ளத்தின் அடித்தளத்தில் ஆழப் பதிந்து வேரூன்றிப் பூத்துக் குலுங்குகிறது. எனவே தாங்கள் மீது நான் கொண்ட பரிசுத்தக் காதல் இனி ஒரு போதும் அழியப் போவதில்லை.

குறிப்பு : கற்பனைகள், யூகங்கள் என்ற தொலிகளை விட்டும் தூய்மை பெற்ற பரிசுத்தமான பேரொளியால் பிரகாசம் அடைந்த அறிவுக்கு லுப்பு என்று கூறப்படும். (ஸூபதத்துல் அஸ்ரார் பக்கம் 128)

துஆ : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நாங்களோ தாங்கள் மீது அன்பு வைக்கத் தெரியாத பேதைகள் என்றாலும் எங்களின் சங்கைமிகு கீழக்கரை எஜமான் ஷைகுனா கல்வத் நாயகம் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களுக்கு விர்தாக ஆக்கித் (வழமை ஒதலாக்கி) தந்த "அல்லாஹும்ம ஹபீப் நபீயிக்க முஹம்மதன் ஃபீமா" யாஅல்லாஹ்! உனது திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எங்களுக்கு மிகவும் உகந்தவர்களாக ஆக்கி அருள்புரிவாயாக! என்ற துஆவை ஓதி வருகிறோம். எனவே இந்த துஆவின் ஹுர்மத்தினால் தாங்கள் மீது தூய்மையான அன்பு கொண்ட முஹிப்பீன்களுடைய பட்டியலில் எங்களையும் இடம் பெறச் செய்வீர்களாக, ஆமீன்.


خَلِّ خِلِّيْ خُلَّةَ الْخِذْلاَنِ خَوْفَ الْخَاتِمٰة
خَالِلْ خَلِيْلاً خَامِلَ الْوَصْفِ مِنَ الْخَلْخَالِ خَالْ
ஃகல்லி ஃகில்லீ ஃகுல்லதல் ஃகித்லானி ஃகவ்ஃபல் ஃகாத்திமா
ஃகாலில் ஃகலீலன் ஃகாமிலல் வஸ்ஃபி மினல் ஃகல் ஃகாலி ஃகால்

பொருள் : என் நண்பா! (கெட்ட) முடிவை பயந்து மோசமானவர்களின் நட்பை விட்டு விடு. கெண்டைக் காப்பை (பிரபல்யத்தை) விட்டும் நீங்கிய வர்ணிப்புகள் நூர்ந்து போன நபரி(ஷைகி)டத்தில் சகவாஸம் வைத்துக் கொள்.

கருத்து : இவ்வுலக பிரபல்யத்தையோ புகழையோ விரும்பாத நல்ல ஷைகுமார்களிடம் பைஅத் எடுத்துக்கொள்.

விளக்கம் : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சொல்லி வந்த நமது குதுபஸ் ஜமதுஸ் ஜமான் அஷ்ஷைய்கு உமர் வலியுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்தக் கண்ணியிலிருந்து நமக்கு தேவையான சில உபதேசங்களைச் செய்கிறார்கள்.

என் அன்பு சகோதரா! "இன்னமல் அஃமாலு பில் ஃகவாதிமி" செயல்களெல்லாம் இறுதி முடிவுகளைக் கொண்டாக இருக்கும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (மிஷ்காத் பக்கம் 20) ஆகவே உனக்கு இறுதி நல் முடிவு கிடைக்க வேண்டுமானால் புல்லோரின் நட்பை விட்டொழிந்து விட்டு பிரபல்யத்தை தேடாத நல்ல ஷைகுடைய சகவாஸத்தில் இருந்து வருமாறு உனக்கு முதல் முதலில் உபதேசிக்கிறேன்.

குறிப்பு :

1. "ஃகாமிலல் வஸ்ஃபி" என்பதற்கு பிரபல்யத்தை நாடாத (குருலட்சணங்கள் சம்பூரணமான) ஷைகு என்றும் விளக்கம் உண்டு.

2. இங்கு கெண்டைக் காப்பை குறிப்பிட்டிருப்பதன் காரணமாகிறது, தான் துறவி என்பதைக் காட்டிக் கொள்வதற்காக கால்களில் கெண்டைக் காப்பை அணிந்து கொள்வது முற்காலத்தில் வாழ்ந்த போலி ஷைகுமார்களின் வழக்கமாக இருந்தது என்பதைச் சுட்டி காட்டுவதற்காக.

பைஅத்தின் அவசியம்

நமது ஷைகுனா அவர்கள் "திப்பி திப்பின்" என்று துவங்கும் 17வது கண்ணியிலும் ஒரு குரு நாதரைப் பற்றிபிடித்து அவரின் சகவாஸத்தில் இருந்து வருவது அவசியம் என்பதை உணர்த்திக் காட்டுகிறார்கள். வல்ல ரஹ்மான் வான் மறை குர்ஆன் ஷரீபில், "இறை விசுவாசிகளே! இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் அவனளவில் சேர்த்து வைக்கின்ற உதவிச்சாதனத்தை தேடிக்கொள்ளுங்கள். மேலும் அவன் வழியில் மனப் போராட்டம் செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்." (ஸூரத்துல் மாயிதா:35) என்று கூறுகிறான்.

இந்த ஆயத்தில் நான்கு அம்சங்களைக் கடைபிடிக்குமாறு கூறுகிறான். முதலாவதாக ஈமான் கொள்வதன் மூலம் குப்ரு என்ற இருளை நீக்கி கொள்ளுமாறும் இரண்டாவதாக தக்வா என்ற இறை அச்சத்தின் மூலம் பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறும் மூன்றாவதாக வஸீலா என்ற உதவிச்சாதனத்தின் மூலம் நாஸூத்து என்ற மனித நிலையை லாஹூத்து என்ற இறைநிலையில் அழித்து அகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் நான்காவதாக மனதில் எழுகின்ற நான் என்ற அகங்காரத்தை அடக்கி ஒடுக்குவதற்காக மனப் போராட்டம் நடத்துமாறும் கூறுகிறான்.

இறைவனளவில் சேர்த்து வைக்கின்ற உதவிச்சாதனம் என்பது ஆகாமிய ஞானங்களை அறிந்த உலமாக்களும் தரீக்காவைச் சேர்ந்த ஷைகுமார்களுமாகும் என்று தப்ஸீர் ரூஹுல் பயானில் (பாகம் 2 பக்கம் 388) குறிப்பிடப்பட்டுள்ளது.

இறை விசுவாசிகளே! இறைவனை பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையானவர்களுடன் (சவகாஸம் வைத்து) இருங்கள். (அல்குர்ஆன் ஸூரதுத் தவ்பா:119) என்று கூறுகிறான். அதாவது ஈமான் கொண்டு ஷரீஅத்துடைய சட்டதிட்டங்களை பேணிக்கொள்வதுடன் நின்று விடாமல் "உலாமாவுல் ஹகீகத்" என்ற ஷைகுமார்களுடைய சகவாஸத்தில் இருந்து வருமாறும் உபதேசிக்கிறான். மேலும் அதற்கு உவமானம் வைத்தாற் போல் ஹிழ்ரு அலைஹிஸ் ஸலாம் அவர்களை தேடிக்கண்டு பிடித்து அகமிய ஞானம் பெறுமாறு மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு உத்தரவிட்டதைப் பற்றியும் மேலும் அவ்விருவருக்கும் மத்தியில் நடை பெற்ற நிகழ்வுகளையும் கஹ்பு ஸூராவில் (60-82) தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி ஒரு சிஷ்யன் தன் குருவிடம் எந்த அளவுக்கு அடக்க நெறிகளை ஒழுக்க முறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவுறுத்துகிறான். (ரூஹுல் பயான் பாகம் 05 பக்கம் 274) மேலும் இல்முஷ்ஷரீஅத் என்ற வெளிரங்க ஞானங்களை வழங்கப்பட்ட நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அகமிய ஞானங்களைப் படித்துக் கொள்வதற்காக ஹிழ்ரு அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் சென்று நான் உங்களைப்பின்பற்றி வரட்டுமா? என்று கேட்டதே ஒரு ஞானாசிரியரை (ஷைகை) அண்மித்து அகமிய ஞானங்களைத் தேடுவது கட்டாயமாகும் என்பதற்கு வலுப்பமான ஆதாரமாகும் என்று தபகாதுஷ் ஷஃரானி பாகம் 01 பக்கம் 05ல் கூறப்பட்டுள்ளது.

இரண்டு தடவை பிறத்தல்

இரண்டு முறை (பிள்ளையாக) பிறக்காதவன் பரலோக சாம்ராஜ்யம் பிரவேசிக்கமாட்டான் என்று நபி ஈசா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறியதாக இஹ்யாவில் வந்துள்ளது. இரண்டு தடவை பிறத்தல் என்பதன் விளக்கமாகிறது இவ்வுலகுக்கு வருவதற்கு காரணமாக இருந்த நம் தந்தைக்கு பிள்ளையாகப் பிறத்தல் என்பது ஒன்று. ஒரு ஆத்மீக குருவை (ஷைகை) அண்மித்து ஞான தீட்சை பெற்று அவரை ஞானத் தந்தையாக ஏற்று அவருக்குப் பிள்ளையாக இருந்து கொள்ளுதல் என்பது மற்றொன்று.

ஷைகே சிறந்த தகப்பனாவார்

(ஆலமுல் அர்வாஹ்) ஆன்ம உலகம் என்ற மெய்யூரில் சஞ்சரித்திருந்த நாம் தாயின் பைய்யூரில் பத்து மாதம் தங்கியிருந்த பின் துன்யா என்ற இப் பொய்யூர் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் நம் உடலுக்குத் தந்தையான நம்மை பெற்றெடுத்த தந்தைமார்கள். துன்யா என்ற இப்பொய்யூரிலிருந்து ஆகிறத் என்ற மெய்யூரின்பால் நம்மை ஏற்றம் பெறச் செய்பவர்கள் நம்முடைய ஆன்மீகத் தந்தைகளான ஷைகுமார்கள் ஆகும். இன்னொரு வகையில் சொல்வதென்றால் விண்ணுலகிலிருந்து இம்மண்ணுலகிற்கு நம்மை இறக்கி விட்டவர்கள் நம் பெற்றோர்கள். இப் பூவுலகிலிருந்து கொண்டே பரலோக சாம்ராஜ்யத்தின் பால் நம்மை ஏற்றி விடுபவர்கள் நமது ஷைகுமார்கள்.

அந்த வகையில் மேலுலகிலிருந்து நம்மைக் கீழே இறக்கிய நம் பெற்றோர்களை விட இவ்வுலகிலிருந்த வண்ணமே "ஆலமுல் மலகூத்" என்ற பரலோக சாம்ராஜ்யத்தின்பால் நம்மை ஏற்றிவிடும் ஷைமார்கள் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே நம்மை பெற்றெடுத்த தந்தையை விட நமது ஆன்மீக தந்தைமார்களான ஷைகுமார்க்ளை மிகவும் கண்ணியம் செய்யக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். எனவே தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உனக்கு ஞானம் புகட்டியவர்கள்தான் சிறந்த தகப்பன்" என்று கூறியுள்ளார்கள். (ஷரஹூதஃலீமுல் முதஅல்லிம் பக்கம் 17)

தீட்சையின் (பைஅத்தின்) மகத்துவம் குறித்து இமாமுல் அஃழம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

நமது இமாமுனா இமாமுல் அஃழம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தாங்களுக்கு வயது என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாமவர்கள், "இரண்டு ஆண்டுகள் இல்லாவிட்டால் இந்த நுஃமான் நாசமாகி இருப்பார்" என்று பதில் கூறினார்கள். இந்த பதிலைக் கேட்ட அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்றவர்கள் ஆச்ச்சரியப்பட்டவர்களாக இமாம் அவர்களிடம் திரும்பவும் கேட்டார்கள், "இமாம் அவர்களே! தலைமுடி தாடியெல்லாம் பஞ்சைப் போன்று நரைத்து முதிர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள் வயது இரண்டு என்கிறீர்களே. அதற்கான விளக்கம் யாது?" என்றார்கள். அப்போது இமாமுல் அஃழம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பேரரான இமாம் ஜாஃபர் ஸாதிக் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சமூகத்தில் ஈராண்டுகள் தங்கியிருந்து அகமிய ஞானங்களைப் படித்தேன். அப்படி அந்த ஈராண்டுகள் எமக்கு அமையாவிட்டால் என் வாழ்வில் இத்தனை முன்னேற்றமும் மகத்துவமும் அமைந்திருக்காது. எனவே அந்த ஈரான்டுகளைத்தான் என் வாழ்வில் பொற்காலமாக கருதுவதுடன் அந்த இரண்டு வருடத்தைத்தான் என் வயதாகவும் நினைக்கிறேன்" என்று கூறினார்கள்.

மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "தோழமை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது" என்றும் "ஒரு மனிதர் அவனுடைய நண்பருடைய குணத்தின் மீது இருக்கிறான். ஆகவே நல்ல நண்பனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" என்றும் கூறியிருக்கிறார்கள். (மிஷ்காத் 427, பாபுல் ஹுப்பி பில்லாஹ்)

நல்லோர்களுடன் தோழமை கொள்வது நல்லோராக ஆக்கி விடும். பொல்லாதவனுடன் பழக்கம் வைத்துக் கொள்வது நம்மையும் பொல்லாதவனாக ஆக்கிவிடும் என்று பாரசீக மெஞ்ஞானி ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது மஸ்னவி ஷரீபிலே கூறுகிறார்கள்.

எனவே தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இறைவா! உன் நேசத்தையும், உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன்னிடமே வேண்டுகிறேன்" என்று பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள் (மிஷ்காத் 219 பாபு ஜாமிஇத்துஆஇ) . மேலும், "இறைவா! என்னை நல்லோர்களுடன் சேர்த்து வைப்பாயாக" என்று யூஸூப் நபி அலைஹிஸ் ஸலாம் பிரார்த்தனை புரிந்ததாகவும் (அல்குர்ஆன் ஸூரத் யூஸூப்:101) "இறைவா! என்னை உன் திருவருளால் உனது நல்லடியார்களில் நுழைத்து விடுவாயாக" என்று ஸுலைமான் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள் என்றும் (அல்குர்ஆன் ஸூரத் நம்லு:19) "இறைவா! என்னை ஸாலிஹாணவர்களுடன் சேர்த்தருள்வாயாக" என்று இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பிரார்த்தனை செய்ததாகவும் (அல்குர்ஆன் ஸூரத் ஷுஅறா:83) குர்ஆன் ஷரீப் கூறுகிறது. இவ்வுலகில் உதித்த மனிதர்கள் அனைவரிலும் மிக உயர்ந்தவர்களான நபிமார்களே நல்லோர்களின் நட்பும் நெருக்கமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை புரிந்துள்ளார்கள் என்றால் சாதாரண மனிதர்களாகிய நம்மவர்களுக்கு நல்லமனிதர்களின் நெருக்கமும் நட்பும் சகவாஸமும் எவ்வளவு முக்கியமானது என்பதை சற்று சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப் பட்டவர்களாக இருக்கிறோம்.

பெரியார்களின் தொடர்பால் பிராணிகள் புனிதம் பெற்றது

பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பது போல பெரியவர்களின் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சாதாரணப் பொருள்கள் கூட புனிதம் அடைந்து விடும். குகை வாசிகளுடன் தோழமையை ஏற்படுத்திக் கொண்ட ஒரு நாய் உலகப் பொதுமறையாகிய குர்ஆன் ஷரீபில் குறிப்பிடப்படும் அளவிற்கு உன்னதம் பெற்றதுடன் (அல்குர்ஆன் ஸூரத் கஹ்பு:18) சுவர்க்கம் நுழையும் 10 பிராணிகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அது போன்றே ஸாலிஹ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் ஒட்டகமும் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் காளைக் கன்றும் இஸ்மாயீல் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் தும்பை ஆடும் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் காளை மாடும் யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் மீனும் உஸைர் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் கழுதையும் ஸுலைமான் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் எறும்பும் பல்கீஸ் ராணியுடன் சம்பந்தப்பட்ட ஹுத்ஹுத் பறவையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டகமும் சுவர்க்கம் செல்லக்கூடிய பிராணிகள் என்று (ரூஹுல் பயான் பாகம் 5 பக்கம் 226) குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியார்களின் தொடர்பால் உயிரற்ற பொருட்கள் உன்னதம் அடைந்தன

உயிரோ உணர்வோ இல்லாதவைகள் என்று நான் கருதுகின்ற கல், கரடு, கம்பு போன்றவைகள் கூட பெரியார்களின் தொடர்பால் அது போன்ற மற்றவைகளுக்கு இல்லாத ஒரு தனித்துவத்தைப் பெற்றுக் திகழ்வதுடன் மற்றவர்களால் கௌரவிக்கப்படும் அளவிற்கு ஏற்றம் பெற்றவைகளாக ஆகிவிடுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹது மலையைப் பற்றி கூறும் பொழுது, "உஹது மலை நம்மீது அன்பு வைக்கிறது. ஆகவே அதை நாமும் அன்பு வைக்க வேண்டும் என்று கூறினார்கள். (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 4083, 8084)

மகாமு இப்ராஹீம் என்ற பாறாங்கல் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் பொற் பாதங்களை தம் இதயத்தில் பதித்துக் கொண்ட காரணத்தால் அதைத் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று இறைவனால் உத்தரவிடப்பட்டுள்ளோம். (அல்குர்ஆன் ஸூரத் பகரா:125)

ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் அன்னை ஹவ்வா அலைஹிஸ் ஸலாம் அவர்களும் சற்று நேரம் தங்கியிருந்து ஒய்வு எடுத்த ஸபாவும் மர்வாவும் இறைவனின் அடையாளச் சின்னங்களாக ஆனதுடன் இவ்விரண்டு மலைகளிடையே தொங்கோட்டம் ஓடுவதை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரஸூலும் கடமையாக்கி இருக்கிறார்கள். இவ்விரண்டு மலைகளிடையே நாம் ஓடுகின்ற தொன்கோட்டமும் அன்னை ஹாஜிரா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் மகன் இஸ்மஈல் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் நாவரட்சியை நீக்குவதற்கு நீரைத்தேடி அவைகளிடையே ஓடிய ஓட்டத்தை அடிப்படியாகக் கொண்டு அமைந்திருக்கிறது. எனவேதான் மற்ற இடங்களில் ஓடுவதற்குக் கிடைக்காத மாண்பும் மகத்துவமும் இந்த இடத்தில் ஓடுவதற்கு மாத்திரம் கிடைக்கிறது.

அது போன்றே மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் கைத்தடி பாம்பாக மாறி பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட ஒரு பெரும் படையையே வென்றது. எதனால் என்றால் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் பொற் கரங்கள் பட்டதால் தான் என்பது தெளிவான செய்தியாகும். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு உருவிய வாளுடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த விரோதிகளின் கண்களை ஒரு கைப்பிடி மண் மயக்கி அவர்களை நிலைகுலைய வைத்தது என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துடைய நிகழ்ச்சி கூறுகிறது. அந்த மண்ணுக்கு அவ்வளவு பெரிய ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது என்றால் பெருமானாரின் பொற் கரங்கள் அதை சற்று நேரம் பொத்தி வைத்திருத்த பாரகத்தால்தான் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது.

யூசுப் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அணிந்திருந்த மேல்ச் சட்டை யாஃகூப் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் கண்களுக்கு பார்வையைக் கொடுத்ததாக குர்ஆன் ஷரீப் கூறுகிறது. (அல்குர்ஆன் ஸூரத் யூசுப்:96)

நமது நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புனித ஜுப்பாவும் அவர்களின் திரு முடியும் கண்ணுரையும் (கண் திருஷ்டி) இன்னும் இதர நோய்களையும் குணப்படுத்த வல்லது என்று அங்கீகாரம் பெற்ற ஹதீஸ்கள் கூறுகின்றன.

(புகாரி பாகம் 2. பக்கம் 875. கிதாபுல் லிபாஸ். முஸ்லிம் பாகம் 2. பக்கம் 190. கிதாபுல் லிபாஸ்)

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் அவர்களின் திரு முடியின் மூலம் பல போர்களங்களில் வெற்றிவாகை சூடியதாக காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ் ஸஹாபா) காஜா அபுல் ஹசன் ஹர்காணி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவும் மொகலாய மன்னர்களின் ஒருவருமான மாமன்னர் மஹ்மூது கஸ்னவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சோமநாதபுரத்தின் மீது 17 முறை போர் தொடுத்தும் தோல்வியைத்தான் தழுவினார்கள். இறுதிக் கட்டத்தில் தனது ஷைகு அவர்களுடைய புனித ஜுப்பாவை வஸீலாவாக்கி பிரார்த்தித்த மாத்திரத்திலேயே வெற்றி வாகை சூடினார்கள் என்று அவர்களின் வரலாறு கூறுகிறது. ஆகவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் நல்லோர்களுடைய நெருக்கத்தைப் பெற்ற காரணத்தால் தான் ஆறறிவற்ற உயிர்ப்பிராணிகளும் உயிரற்ற கல், மண், மலை, முடி, தடி, துணி போன்றவைகள் கூட உன்னதம் அடைந்திருக்கிறது. போர்க்களத்தில் வெற்றி வாகை ஈட்டித்தரும் அளவிற்கு வலிமை பெற்றிருந்தது. கண்பார்வையைப் கண் ஒளியைத்தரவும் சக்தி பெற்றதாக இருக்கிறது என்றால் மனிதர்களாகிய நாம் அதுவும் முஃமீன்களாகிய நாம் நல்லோர்கள் நாதாக்கள் நெருக்கத்தைப் பெற்று அவர்களின் சகவாஸத்தில் இருந்து வருவோமானால் கண்டிப்பாக உன்னதமும் உயர்ந்த அந்தஸ்த்தும் பெற்றவர்களாகத் திகழுவோம் என்பதில் எவ்வித சந்தேகம்முமில்லை. எல்லாம் வல்ல நாயன் ஈருலகிலும் அவனின் அருள் பெற்ற நல்லோர்களுடன் நம்மனைவரையும் சேர்த்தருள் புரிவானாக! ஆமீன்.

குறிப்பு : கெட்டமனிதர்களின் நட்பை விட்டுவிடு என்ற சொற்றொடருக்கு கீழ்வரும் விஷயங்கள் ஆதாரங்களாக அமைவதைக் காணலாம். மோசமானவர்களின் பால் அன்பு வைத்துக் கொள்ளாதீர்கள். (அத்து மீறி அன்பு வைத்தீர்களானால்) உங்களை நரகம் தீண்டிவிடும். (அல்குர்ஆன் ஸூரத் ஹூத்:113)

கெட்ட மனிதர்களின் வருகை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கடைசி காலத்தில் பொய்யர்களும், ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும் உங்களின் உங்களின் மூதாதையர்களும் கேட்டிராத விஷயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம்) எச்சரிக்கை செய்கிறேன். (எனது எச்சரிக்கையின்படி அவர்களிடம் கவனமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள் உங்களை வழி கெடுத்துவிட முடியாது. உங்களைக் குழபத்தில் ஆழ்த்தவும் முடியாது." (முஸ்லிம், மிஷ்காத் 28)

"கடைசி காலத்தில் ஒரு கூட்டம் வரும். அவர்கள் குறைந்த வயதை உடையவர்களாகவும் (ஆற்றல் அனுபவம் இல்லாதவர்களாகவும்) அறிவுத்தெளிவு அற்றவர்களாகவும் இருப்பார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (பொன்மொழியான) ஹதீஸிலிருந்தே (எடுத்துக் காட்டி) பேசுவார்கள். அவர்களின் ஈமான் அவர்களின் தொண்டைகளைத் தாண்டாது. வேட்டை பிராணியை விட்டும் அம்பு, குறி தவறி வெளியேறி விடுவது போன்று இஸ்லாத்தை விட்டும் இவர்கள் வெளியேறி விடுவார்கள். அவர்களை எங்கே சந்தித்தாலும் கொலை செய்துவிடுங்கள். ஏனெனில் அவர்களைச் கொலை செய்தவருக்கு நிச்சயமாக கியாம நாளையில் நன்மை உண்டு." (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 3611 கிதாபு பலாஇலில் குர்ஆன், முஸ்லிம் பாகம் 1 பக்கம் 342 கிதாபுஸ் ஸகாத்)

"முற்காலத்தில் வாழ்ந்த நல்லோர்களும் அதை அடுத்து வந்த நல்லோர்களும் போய் விடுவர். பேரீச்சம் பழச் சக்கையைப் போன்ற அல்லது தொலிக் கோதுமையின் சருகுகளைப் போன்றவர்கள்தான் எஞ்சி இருப்பர். அல்லாஹ் அவர்களை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி பிற்காலத்தில் பிறக்கும் புல்லோர்களைப் பற்றி எச்சரித்துள்ளார்கள். (புகாரி ஷரீப் பாகம் 2 பக்கம் 952 கிதாபுர் ரிகாக் மிஷ்காத் 458)

தீயோரின் தலைவன் துல் குவைஸிரா

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடையே (போரிலிருந்து கைப்பற்றப்பட்ட) கனீமத் பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தனர். அப்போது தமீமுடைய வம்சத்தை சார்ந்த துல் குவைஸிரா என்பவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் ரஸூலே! நீதமாக பங்கீடு செய்யுங்கள் என்று சொல்ல, அது கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீ ஒழிந்து போ" என்று சாபமிட்டவர்களாக, "நான் நீதமாக நடக்காவிட்டால் வேறுயார்தான் நீதமாக நடப்பார்கள்" என்றார்கள். அப்போது ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனைக் கொல்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி கோர, அதற்க்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள் : "அவனை விட்டு விடுங்கள். நிச்சயமாக அவனுக்குச் சில தோழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனுடைய தொழுகையை அல்லது நோன்பை உங்களில் ஒருவருடைய தொழுகைக்கும் நோன்புக்கும் ஒப்பு நோக்கிப் பார்ப்பீர்களேயாயின் உங்களுடைய அமல்களை மிகமிக அற்பமான ஒன்றாகக் கருதுவீர்கள். ஆனால் அவர்கள் வேட்டைப் பிராணியிலிருந்து குறி தவறி பாய்ந்து செல்லும் அம்பைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிப் போய்விடுவார்கள் எனக்கூறியதாக ஹழ்ரத் அபூ ஸஈதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் ஷரீப் பாகம் 1 பக்கம் 340 கிதாபுஸ் ஸகாத். இக்மால் பாகம் 3 பக்கம் 610. புகாரி ஷரீப் பாகம் 4 பக்கம் 196. மிஷ்காத் பக்கம் 534 பாபுன் பில்முஃஜிஸாத்தி)

குழப்பம் குடிகொண்ட நாளில் எப்படி நடந்து கொள்வது

எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான விதர்ப்பங்களைக் காணுவீர். அந்நேரத்தில் என் சுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிகாட்டிகளான எனது கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத் பாகம் 4 பக்கம் 201 கிதாபுஸ் ஸுன்னஹ்)

குழப்பத்தின் உறைவிடம் நஜ்தாகும்

"யாஅல்லாஹ்! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் பரக்கத்துச் செய்வாயாக" என ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தனர். அப்போது அங்கிருந்த தோழர்களில் ஒருவர் எங்களின் நஜ்துக்கும் (அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்) என்று சொல்ல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஷாமுக்கும் யமனுக்கும் பிரார்த்திக்க, அவர் மீண்டும் எங்களின் நஜ்துக்கும் என்று சொல்ல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்றாம் முறையாக மறுபடியும் ஷாமுக்கும் யமனுக்கும் பிரார்த்திக்க, அவர் மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களின் நஜ்துக்கும் என்று சொல்ல, அது கேட்ட நபி அவர்கள், அங்கிருந்து தான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஷைத்தானுடைய கொம்பும் உதயமாகும் என்று சொன்னார்கள். (புகாரி, திர்மிதி, மிஷ்காத் பக்கம் 582 பாபு திக்ரில் யமனி)

புனித தீனுல் இஸ்லாத்தை குழப்பிக் கொண்டிருக்கும் வாஹ்ஹாபிய கூட்டத்தின் தலைவர்கள் நஜ்தைச் சாந்தவர்களாகவும் என்பது இவ்விடத்தில் சிந்திக்கத் தக்கதாகும். எல்லாம் வல்ல ரஹ்மான் நாம் யாவரையும் தீயோர்களின் தொடர்பை விட்டும் காப்பாற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களது கலீபாக்களைப் பின்பற்றி நடக்க அருள் புரிவானாக, ஆமீன்.

குறிப்பு : ஸவூதி அரேபியாவின் இன்றைய தலை நகரான ரியாத் தான் அன்றைய நஜ்தாகும்.


دُمْ دَوَامَ الدَهْرِ دَائِمَ الْحُضُوْرِ وَالشُّهُوْدِ
دُمْتَ فِيْ جَنَّاتِ وَصْلٍ حَالَة الْاَبْدَالِ دَالْ
தும் தவாமத் தஹ்ரி தாயிமல் ஹுழூரி வஷ்ஷுஹூத்
தும்த ஃபீ ஜன்னாத்தி வஸ்லின் ஹாலத்தல் அப்தாலி தால்

பொருள் : காலம் முழுவதும் ஹுழூரிலும், ஷுஹூதிலும் தரிப்பட்டவனாக நிலைத்திரு. (அப்படி இருந்தாயானால்) வஸ்லு (இறைவனுடன் ஒன்றித்து விடுதல்) என்ற நந்தவனத்தில் தரிப்பாடாகி விடுவாய். நீயுமோ அப்தால்களின் நிலையை அறிவிக்கக் கூடியவனாக இருக்கிற நிலைமையில்.

கருத்து : ஆயுள் முழுவதும் அல்லாஹ்வின் நினைவிலேயே லயித்திருத்தல் சுவன சுகத்திற்கு சமமானது என்றும் அப்படி இருப்பது அப்தால்களின் படித்தரம் என்று விளங்குக.

விளக்கம் : என் அன்புச் சகோதரா! நிஷ்டையிலும் நிரந்தர வணக்கத்திலும் நேமமாக இருந்து வா! ஹழூர், ஷுஹூது என்பதன் எதார்த்தமான விளக்கங்களை உன் குருநாதரிடம் கேட்டறிந்து அதன்படி கடைப்பிடித்து வந்தாயானால் "வஸ்லு" என்று சொல்லப்படுகின்ற இறைவனுடன் ஒன்றித்து விடுதல் இறைவனுடன் சேர்ந்து விடுதல், என்ற சுவர்க்கப் பூங்காவனத்தில் ஆகிவிடுவாய். இப்படி இருப்பது சாதரணமாக எல்லோருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியமல்ல. அல்லாஹ்வின் பிரத்தியேக அடியார்களான அப்தால்களின் நிலையாகும்.

குறிப்பு : அப்தால்கள் என்பது ஒரே நபர் பல இடங்களில் தோற்றம் எடுக்கும் வல்லமை வழங்கப்பட்டவர்களைக் குறிக்கும் சொல்லாகும்.

அப்தால்களைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

"அப்தால்கள் என்ற இறை நெருக்கம் பெற்ற நல்லடியார்கள் ஷாம்(சிரியா) நாட்டில் இருப்பார்கள். அவர்கள் 40 நபர்களாகும். அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு பகரத்தில் வேறொருவரை இறைவன் நியமிப்பான். அவர்கள் மூலம் மழை பொழியச் செய்யப்படும். மேலும் அவர்கள் மூலம் விரோதிகளிடத்தில் வெற்றி அடையப்படும். மேலும் அவர்கள் மூலம் சிரியா நாட்டவர்களை விட்டும் வேதனையைத் திருப்பப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மிஷ்காத் 583)

அப்தால்கள் சிரியாவிலும் நுஜபாக்கள் எகிப்திலும் அஸாயிபுகள் (துறவிகள்) ஈராக்கிலும் இருப்பார்கள். (முக்னில் முஹ்தாஜ் பாகம் 1 பக்கம் 11, மிஷ்காத் 471 பாபு அஷ்ராத்தில் ஸாஆ)

அப்தால்கள் என்றால் இறை நேசர்களில் ஒரு பிரிவினராகும். அவர்கள் மூலமே இப்பூவுலகை இறைவன் நிலை நிறுத்தாத்திக் கொண்டிருக்கிறான். அவர்கள் மொத்தம் 70 நபர்களாகும். 40 பேர் சிரியாவிலும் மீதம் 30 பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள். (மிஷ்காத் பாகம் 10 பக்கம் 176 பாபு அஸ்ராத்திஸ் ஸாஅத்தி)

குத்பு

குத்பு என்பவர் இறைவனின் விஷேசப் பார்வைக்கு உரித்தானவராக இருப்பார். இறைவன் இவ்வகிலத்தாருக்கு அருள்கின்ற பாக்கியங்களை அவர் மூலமே அருளச் செய்கிறான். அவர் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையே தொடர்பாளராக இருப்பார். (மிர்காத் பாகம் 10 பக்கம் 178)

அவ்தாதுகள்

அவ்தாதுகள் நான்கு நபர்களாகும். இவர்கள் இவ்வகிலத்தின் நான்கு திசையிலும் இருப்பார்கள். அரசருக்குக் கீழ் அமைச்சர்கள் செயல்படுவதைப் போல் இந் நால்வரும் கௌஸுக்குக்கீழ் இருந்து செயல் படுவார்கள். (மிர்காத் பாகம் 10 பக்கம் 178)

அவ்தாதுகளில் ஒருவர் கிழக்குப் பகுதியை பாதுகாப்பார். அவரை அப்துல் ஹய் என்று அழைக்கப்படும். மற்றவர் மேற்கு பகுதியைப் பாதுகாப்பார். அவருக்கு அப்துல் அலீம் என்று சொல்லப்படும். இன்னொருவர் வட திசையைப் பாதுகாப்பார். அவருக்கு அப்துல் முரீத் என்று கூறப்படும். வேறொருவர் தென் திசையைப் பாதுகாப்பார். அவருக்கு அப்துல் காதிர் என்று சொல்லப்படும். (ரூஹுல் பயான் பாகம் 10 பக்கம் 294)

துஆ : யாஅல்லாஹ்! உன் பிரசத்தி பெற்ற அடியார்களான அப்தால்களுக்கு உன்நினைவு என்ற நந்தவனத்தில் லயித்திருந்து தியானிக்கும் பேற்றை வழங்கியது போன்று எங்கள் அனைவருக்கும் தந்தருள்புரிவாயாக! ஆமீன்!

யாஅல்லாஹ்! உன்னை வழுத்தி வழிபடுவதற்கான வாய்ப்பையும் வசதியையும் எங்களுக்கு நீயே அமைத்துத் தருமாறு நாங்கள் உன்னிடமே வேண்டுகிறோம். எங்கள் வேண்டுதலை ஏற்றருள் புரிவாயாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!


ذَرْعِيَالًا ذالْهَوٰى مَعَ الْاَحِبَّا بِالنَّوٰى
ذُدْعَنِ الْقَلْبِ الْهَوٰى وَاتْرُكْ مِنَ الْاَنْذَالِ ذَالْ
தர் யியாலன் தல்ஹவா ம ஃஅல் அஹிப்ப பின்னவா
துத் ஃஅனில் கல்பில் ஹவா வத்ருக் மினல் அன்தாலி தால்

பொருள் : (இறை) நேசர்களுடன் அன்பு கொண்டவனே! (மனதளவில்) இடம்பெயர்த்தல் (பிரிதல்) மூலம் உன் குடும்பத்தாரை விட்டு விடு. உள்ளத்தை விட்டும் மனோ இச்சையை தடுத்து விடு. மட்டமானவர்களில் நின்றும் முந்தானையை விட்டு விடு.

விளக்கம் : இவ்வுலக மாயையில் சிக்கித்தவிக்கும் என்அருமை மகனே! திரும்பவும் உனக்கு ஒன்று சொல்கிறேன். உன் குடும்பத்தாரையும் கூட்டளிமார்களையும் விட்டு (மனதளவில்) இடம் பெயர்ந்து விடு. மேலும் போலி ஷைகுமார்களிடமிருந்து பைஅத் எடுப்பதை தவிர்த்துக் கொண்டு நல்ல ஷைகுமார்களின் திருச்சன்னிதியில் அடைக்கலம் புகுந்தவனாய் இருந்து வருவாயாக.

காமிலான ஷைகின் இலட்சணங்கள்

1. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடைகின்ற ஸில்ஸிலாவை(ஞான குருமார்கள் சங்கிலித் தொடரை)க் கொண்ட நல்ல ஒரு ஷைகிடம் ஞான தீட்சை பெற்று ஞானத்திலும் அறிவிலும் சம்பூரணத்தன்மையிலும் மற்றவர்களுக்கு அருள் பாலிக்கின்ற விசயத்திலும் நல்ல பக்குவம் அடைந்திருப்பதுடன் தான் தீட்சை வழங்குவதற்கு இஜாஸாவும்(அனுமதி) பெற்றிருப்பவராக இருப்பார்.

2. மார்க்க சட்டக் கலையிலும் கொள்கையிலும் சித்தாந்தத்திலும் ஞானக் கலையிலும் (ஆழ்ந்த அறிவு) இல்முள்ளவராக இருப்பதுடன் அதன்படி அமல் செய்கின்றவராயும் இருப்பார். அவ்வாறு இல்லையெனில் மனிதர்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். (அந்த மடையர்களான தலைவர்கள்) தானும் வழி கேட்டு மற்றவர்களையும் வழிகெடுத்துவிடுவார்கள் என்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு இலக்காக நேரிடும்.

3. முரீதுகளின் மூலம் ஏதேனும் பொருட்களையோ பணம் காசுகளையோ கிஞ்சிற்றும் எதிர்ப்பார்க்காமல் அல்லாஹ்வுக்காக கடமையாற்றுபவராக இருப்பதுடன் முரீதுப்பிள்ளைகள் மனமுவந்து தூய்மையான எண்ணத்துடன் ஏதேனும் ஹதியாக்கள் தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்பவராகவும் இருப்பார்.

4. ஏதேனும் சருகுதல்கள் ஏற்பட்டு விடின் உடனடியாக தவ்பா செய்து மீண்டு விடுவார்கள். (அத்தஸவ்வுப் பக்கம் 90)

5. முரீது பிள்ளைகள் ஒப்புக் கொள்வதின் மீது பேராசை கொள்ளாமல் ஞானப்பாட்டையின் நுட்பத்தையும் முக்கியத்துவத்தையும் கடின முறையைக் கையாளாமல் அவர்களுக்கு இதமாக போதிப்பவராகவும் இருப்பார்.

6. தமது முரீதுபிள்ளை தன்னல்லாத மற்ற ஞான குருமார்களை விடுத்து தன்னை மட்டுமே பற்றிப்பிடிப்பவராக இருக்கிறாரா? என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உண்மையானவராகவும் அதில் ஆசை கொண்டவராகவும் மனத்தூய்மை உள்ளவராகவும் இருப்பதாகப் பெற்றுக் கொண்டால் அவரை மனமுவந்து ஏற்று ஒரு எஜமான் தன் அடிமையை எப்படிக் கவனித்துக் கொள்வாரோ அது போன்று கவனித்து கொள்வதுடன் தனது சொந்த மகனை வளர்ப்பது போன்று வளர்த்து வருவதுடன் ஒழுக்க முறைகளையும் கற்பிப்பவராக இருப்பார்.

7. முரீதுக்கு ஏற்படுகின்ற சிறு குற்றங்களைப் பெரிது படுத்தாமல் இருப்பார். மறதியாகவோ அல்லது பொடு போக்காகவோ ஏற்பட்டுவிட்ட தவறுகளை உடனடியாக பிடித்துவிடாமல் சற்று விட்டுப் பிடிப்பவராக இருப்பார். ஆனால் தாம் ஏவிய கட்டளைக்கு மாறுபடுதலின் பால் சேர்த்து வைக்கின்ற வகையிலோ அல்லது தமது சொல் செயல்களின் மீது குறுக்கீடு தெரிவிப்பது அளவில் சேர்த்து வைக்கின்ற வகையிலோ முரீதின் செயல் அமைந்திருக்குமாயின் உடனடியாக அவனைக் கண்டிப்புடன் எச்சரிக்கை செய்வார். அந்த செயலிலிருந்து நீங்கி பிழை பொறுக்கக் தேடி அதற்காக கவலையும் கொண்டால் திரும்ப அது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனையிடுபவராக இருப்பார். (ரூஹுல் பயான் பாகம் 5 பக்கம் 278)

8. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்றாடம் இரவு நேரங்களில் தனித்திருந்து தியானத்தில் ஈடுபடுவது போல ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜுத் மற்றும் இறைவணக்கங்களை நிறைவேற்றி வருவார்.

9. தன்முரீதுகளின் நிலைமைக்குத் தக்கவாறு தாம் மிகவும் கீழே இறங்கி அவர்களுடன் நற்குணத்தின் நடந்து கொள்வதுடன் அவர்களுடன் அறிவுக்குத் தகுந்தவாறு பேசுவார்.

10. முரீதிடம் ஒரு வெறுப்பான காரியத்தையோ அல்லது அவரின் செயல்களில் தற்பெருமை இருப்பதாகவோ அறிந்தால் அதை அப்படியே பலருக்கு மத்தியில் போட்டு உடைத்து அவர் மனதை புண்படுத்தி விடாமல் பல முரீதுகள் ஒன்று கூடும் சந்தர்ப்பம் பார்த்து பொதுவாக சுட்டிக்காட்டி அவர் திருந்துவதுடன் மற்ற முரீதுகள் பயன் பெறும் வகையில் எடுத்துக் கூறுவார்.

11. முரீதுகளின் இரகசியங்கள் பாதுகாத்து வைப்பார். (அல்அவாரிப் பக்கம் 273)

12. சம்பூரணமான ஷைகு என்பவர் பிரார்த்தைனையின் பலனாக தமது முரீதை ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலையின்பால் திருப்புகின்ற தகைமையும் ஒரு தரத்திலிருந்து வேறொரு தரத்தின்பால் உயர்த்துகின்ற தகுதியும் பெற்ற வணக்கசாலியான ஆலிமாவார் (மார்க்க அறிஞராவார்). (அத்தஸவ்வுப் பக்கம் 90)

13. தமது முரீதுபிள்ளை தமது செய்கைகளில் குறைகாணும் வகையில் குறிக்கீடுகள் தெரிவித்தாலோ அல்லது பிரிவை ஏற்படுத்தி வைக்கின்ற காரியங்களில் ஈடுபட்டாலோ உடனடியாக தம்மை விட்டும் அவரைப் பிரித்துவிடாமல் ஓரிரு முறைகள் மன்னிப்பு வழங்குவார். மூன்றாவது முறையாக செய்தால் அவரைப் பிரித்து விடுவார். அப்படி பிரியாவிடை கொடுக்கும் போது தான் செய்ததற்கான அந்தரங்கக் காரணத்தைக் கூறி அவருக்குத் தேவையான உபதேசங்களையும் செய்து அனுப்பி வைப்பார். (ரூஹுல் பான் பாகம் 5 பக்கம் 283)

துஆ :

ஐயோ எனைப்போல மாபெரும் பாவி இவ்
வகிலத்தில் எங்குமிலையே
அநியாயம் அநியாயம் என் பெரும் பாதகம்
யார் பால் எடுத்து ஓதுவேன்
மையான கண்ணியர் வலைக்குள்ளகப்பட்ட (மையான கண்ணியர் - கண்ணுக்கு கருப்பு மை தீட்டப்பட்ட மாதர்)
மா பாவி தீபாவியான்
மஹ்பூபு ஸுப்ஹானியான உமை நாடாத
மடமை குடி கொண்ட பாவி
பொய்யான வாழ்வதனை மெய்யாக நம்பி உன்
பொன்னடி மறந்த பாவி
பொல்லார்கள் நேசமேயல்லாது நல்லோர்
புறக்கணித்திட்ட பாவி
நையுமோர் பொய்யுலகனாகியே உமதடிமை (நையுமோர் - நிலையற்று அழிந்து போகின்ற)
நாயினுங் கடையாவனோ (நாயினுங் கடையாவனோ - நாயை விட கேடு உடயவனானேனோ)
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குருநாதர்
முஹ்யித்தீனே!

யாஅல்லாஹ்! ஷைகுனா குத்புனா மஸ்தான் ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த முனாஜாத்தின் ஹுர்மத்தால் எங்களை இவ்வுலக இச்சையிலிருந்து காப்பாற்றி எங்கள் ஷைகுமார்களைப் பற்றிய அன்பு, பாசம், பயம், சங்கை, பணிவு, வழிபாடு ஆகியவைகளால் எங்கள் இதயங்களை நிரப்பியருள்வாயாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

இறைவா! உனக்கு மாறுசெய்து இழிவடையும் தன்மையை விட்டும் உனக்கு கட்டுப்பட்டு கண்ணியமாக இருக்கும் தன்மையளவில் எங்களைத் திருப்புவாயாக! ஆமீன்!

குறிப்பு : "தர் யியாலன் தல்ஹவா மஃஅல் அஹிப்ப" என்பதற்கு (உலக) மாயை உடையவனே (மனதளவில்) பிரிவது கொண்டு குடும்பத்தாரையும் கூட்டளிமாரையும் விட்டுவிடு என்றும் பொருள் கொள்ளலாம்.

கல்வத் (தனிமை தவம்)

நமது ஷைகுனா அவர்கள் இந்தக் கவியில் கல்வத்தை மேற்கொள்ளுமாறு குறிப்பிடுகிறார்கள். கல்வத் என்பது இறைவனுடைய நினைவைத் தவிர்த்து மற்ற எந்த வஸ்துவின் நினைப்பிலும் நம் இதயம் சென்றுவிடாமல் அதைப் பக்குவப்படுத்துவதற்கு நம்முடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து சிறிது காலம் தனி இடத்தில் ஒதுங்கி இருந்து இறை தியானிப்பில் ஈடுபதுவதர்க்கு கல்வத் எனப்படும். கல்வத் என்பது இறைவன் விஷேசமாக அருளுகின்ற வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில் அவன் யாரை கல்வத்துக்கு தெரிவுசெய்திருக்கிறானோ அவர்கள்தான் கல்வத்தை அனுஷ்டிக்க முடியுமே தவிர எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல.

கல்வத் பலவிதம்

ஒருவரை கல்வத்தில் இருத்த அல்லாஹ் நாடிவிட்டால் அவரை எந்த வகையிலாவது கல்வத்தை மேற் கொள்ளச் செய்கிறான். சிலருக்கு மலைப் பொதும்பில் கல்வத் இருக்க வழிவகை செய்து கொடுக்கிறான். சிலருக்கு சிறையில் இருந்தவாறே கல்வத்தை மேற் கொள்ளச் செய்கிறான். சிலரை காட்டில் இருந்தும் சிலரை வீட்டிலிருந்தும் கல்வத்தை அனுஷ்டிக்க வைக்கிறான். சிலரை கந்தலாடையோடும் பறட்டைத் தலையுடனும் ஒரு பிச்சைக்காரன் போன்று அலையவைத்து அவருடன் மனிதர்கள் ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறான். இவ்வுலகில் உதித்த உத்தம சீலர்களான அன்பியாக்கள் அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் கல்வத்தை கடைபிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் வரலாறுகள் காட்டும் உண்மையாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கல்வத்

நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தாங்களுக்கு நுபுவ்வத் கிடைக்கும் முன்பு கல்வத்தை மேற்கொண்டு மக்காவுக்கு பக்கத்திலுள்ள ஹிராக் குகையில் மனித சஞ்சாரங்களை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி, யாரும் அறியாத வண்ணம் தன்னந் தனியே இருந்து தவம் புரிந்து வந்த போதுதான் வானவர்கோன் ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வஹி கொண்டு வந்தார்கள் என்ற நீண்ட செய்தியை (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 3, மிஷ்காத் 521 பாபுல் மப்அத்தி) விவரமாக எடுத்துக் கூறுகிறது. நம்பி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலைப் பொதும்பில் தனிமைகாத்தது போன்றே ஏனைய நபிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கல்வத்தை மேற் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஏனைய நபிமார்களின் கல்வத்

நபிமார்கள் அனைவரும் மேற் கொண்ட கல்வத்தின் குறிக்கோளும் நோக்கமும் ஒன்றுபட்டிருந்தாலும் கல்வத்தை அனுஷ்டித்த விதமும் அமைப்பும் நாம் ஏற்கனவே குறிபிட்டது போன்று வெவ்வேறானதாகவே இருந்துள்ளது. அல்லாஹ் யாரை எந்த வகையில் கல்வத்தை மேற் கொள்ள வேண்டும் என்று விரும்பினானோ அந்த வகையில் அவர்கள் கல்வத் இருக்க வழி வகை செய்கிறான். யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களை மீன் வயிற்றில் கல்வத் இருக்க வைத்தான். யூசுப் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களை சிறையில் தனிமை காக்க வைத்தான். மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் வேறு சில நபிமார்களையும் ஆடுமேய்த்தல் என்ற பெயரில் காடுகளில் கல்வத் இருக்க வழி வகை செய்து கொடுத்துள்ளான். ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களை தன்னந் தனியே நெடுந் தரையில் நடந்த வண்ணமே கல்வத்தை மேற் கொள்ளுமாறு செய்துள்ளான். இப்படி ஒவ்வொரு நபியையும் அவன் விரும்பிய வகையில் தனிமைக்காக வைத்து தனது ஞானத்தையும் வேதத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.

அவ்லியாக்களின் கல்வத்

அது போன்றே ஆன்றோர்களான அவ்லியாக்களில் உயர் தரத்தை அடைந்தவர்களான குதுபுமார்களும் கண்டிப்பான முறையில் கல்வத்தை கடைப்பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் காடு வனாந்தரங்களிலும் குகைகளிலும் வேறு சிலர் தாம் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இருந்தும் கூட தனிமை காத்து வந்துள்ளார்கள். மெய் நிலை கண்ட தவஞானி நமது குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு காடு வனாந்தரங்களில் கடுந்தவம் புரிந்தவர்களாய் கல்வத்தை மேற்கொண்டுள்ளார்கள். நாகூர் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருச்சி தப்லே ஆலம் நத்ஹர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித தர்கா ஷரீபிலே கல்வத் இருந்துள்ளார்கள். கீழக்கரை கண்டெடுத்த தவ மாமுத்தான சற்குரு கல்வத் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் நினைவால் உந்தப்பட்டவர்களாய் காட்டிற்குச் சென்று கல்வத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் தன் பாட்டனார் ஷைகுனா தைக்கா ஸாஹிப் ரலியல்லாஹு அவர்களின் புனித மஸார் ஷரீபில் நின்று அவர்களிடம் உத்தரவு கேட்டார்கள். அந் நேரத்தில் ஷைகுனா ஸதகத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திடீரென காட்சி தந்து மகனே உனக்கு வீடே காடாகும், ஆகவே வீட்டிலேயே உன் தனிமைத் தவத்தை மேற் கொள்வாயாக என்று கூறினார்கள். அதன்படி ஷைகுனா கல்வத் நாயகம் ரலியல்லாஹு கீழக்கரை மேலத் தெருவில் அமைந்துள்ள தனது புனித கல்வத் தைக்காவில் 33 ஆண்டுகள் தனிமை பூண்டு கல்வத் இருந்தார்கள் என்பது பிரசித்தி பெற்ற செய்தியாகும்.

மேலும் அவர்கள் தாங்களின் முரீதுகளுக்கு சொத்தாக விட்டுச் சென்ற முத்தான 10 விர்துகளும் அவர்களுடைய கல்வத்தின் போது அருளப்பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். தமது வாழ்வின் ஒரு பகுதியை கல்வத்தில் கழித்தல் என்று இல்லாமல் கல்வத்திலேயே தமது வாழ்வாக கொண்டு இறுதிவரை கல்வத்திலேயே இருந்து விட்டமையால் கல்வத் நாயகம் என்று மக்களால் போற்றப்படுகிறார்கள்.

அவர்களின் கலீபாவான கம்பம் ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் 42 ஆண்டு காலங்கள் கல்வத்தை மேற் கொண்டார்கள். அவர்கள் கல்வத்தில் ஈடுபடும் போது அவர்களின் மகனார் ஷைகுனா அம்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு வயது பாலகராகும்.

ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்வத்தில் நுழைந்து விட்ட ஒரு சில தினங்களிலே கடுமையான காற்றுடன் பயங்கர இடியும் இடித்து சிறிது நேரத்தில் மின்னலுடன் கூடிய பலத்த மழையும் கொட்ட ஆரம்பித்தது. அந் நேரத்தில் தனது இரண்டு வயது மகனின் நினைவு அவர்களை வாட்டி எடுத்தது. அப்போது அவர்களின் திரு வாயானது கீழ் வரும் கவியை உதிர்த்தது :

சாட்டு சாட்டென்றெனை
பன்முறையாய் உரைத்த கோவே
நோக்கு நோக்கென்றெனை
நொம்பலம் படுத்துவதேன்
நான் நோக்கிடில் நடப்பது ஒன்றுமில்லை
நீ நோக்கிடும் நிறைந்திடும் செல்வம்

இந்தக் கவியின் சுருக்கம் என்னவென்றால் இறைவா உன்னிடமே தவக்குல் வைக்க வேண்டும் என்று குர்ஆன் ஷரீபில் பல இடங்களில் நீ கூறியிருக்கிறாய். அதன்படி நானும் உன் மீது பாரம் சாட்டி விட்டு கல்வத்தில் நுழைந்துவிட்டேன். இப்போது என் மகனின் கவலையைத் தந்து எனது இதயத்தை அவர்பால் நோக்கச் செய்கிறாய். நான் சென்று என் மகனைக் கவனிப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது? ஆகவே நீயே அவரைக் கவனித்துக் கொள்வாயாக என்பதாகும். இந்தக் கவியைப் படித்த மாத்திரத்திலேயே உடனடியாக மழையும் நின்று விட்டது. மகனைப்பற்றிய கவலையும் அவர்களின் மனதைவிட்டும் அகன்றுவிட்டது. அது போன்றே ஷைகுனா அம்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கல்வத்தை மேற் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் கல்வத் இருந்த அமைப்பு எப்படி இருந்ததென்றால் தனிமையைக் கடைப்பிடி, சமூகத்தை விட்டும் உன் பெயரை அழித்துக்கொள், மரணம் அண்மிக்கின்ற வரை சுவற்றை முன்னோக்கிய வண்ணம் இரு என்று அபுல் அப்பாஸ் என்ற ஞான மகான் அவர்கள் கூறுகின்ற கூற்றுக்கு நேர்பட்டதாகவே இருந்தது. (ரிஸாலதுல் குஷைரியா பக்கம் 59) ஏனெனில் ஷைகுனா அவர்கள் தொழுகை, அவராது, குர்ஆன், தஸ்பீஹ் போன்றவைகளை ஓதிய நேரம் போக மீதி உள்ள நேரங்களில் தனக்கு எதிரில் உள்ள சுவற்றைப் பார்த்து சிந்தித்த வண்ணமே இருப்பார்கள்.

ஆரிபு என்ற ஆத்மா ஞானிக்கு இலக்கணம் என்னவென்றால் அவர் காயினாகவும் பாயினாகவும் இருப்பதாகும். (ரிஸாலதுல் குஷைரியா பக்கம் 57) அதாவது மக்களுடன் சேர்ந்து இருந்தாலும் மனதளவில் அவர்களை விட்டு நீங்கிய வண்ணமே இருப்பார்கள் என்பதாகும். அது போன்றே நமது ஷைகுனா அவர்கள் மனிதர்களுடன் நல்ல முறையில் கலந்து உறவாடினாலும் அவர்களுடைய கல்பு ஹக்கின் நினைவிலிருந்து நீங்காமல் இருக்கும்.

யாசகக் கோலத்தில் இறை நேசர்கள்

நாம் ஏற்கனவே குறிபிட்டது போன்று சில மகான்கள் யாசக கோலத்தில் இருந்து கொண்டும் மனிதர்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட யாசக வேஷம் பூண்டு வந்துள்ளவர்களை பெரியவர்களா? அல்லது உண்மையிலேயே யாசகம் எடுக்கும் யாசகர்கள்தானா? என்று நம் போன்ற சாமான்ய மனிதர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. எனவேதான் நம் வீட்டிற்கு யாசகம் கேட்டு வருபவர்களை உதாசீனம் செய்துவிடாமல் ஏதேனும் இருந்தால் கொடுக்கவேண்டும், இல்லையெனில் இனிய வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லித்தந்து இருக்கிறார்கள். ஏனெனில் நம் வீட்டிற்கு வந்த மகான்களை மகான்கள் என்று அறியாமல் நாம் அவர்களை உதாசீனம் செய்து அதனால் அப்புனிதர்கள் மனவேதனை அடைந்து விடுவார்களானால் அது நமது இம்மை மறுமை வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெரியார்களின் சாபத்திற்கு இலக்கான எந்தக் குடும்பமும் உருப்பட்டதில்லை. பல்லாக்கு வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பகைத்துக் கொண்டு அவர்களால் நேசமறுவான் நாசமுறுவான் என்ற சாபத்திற்கு இலக்கானவர் இறுதிவரை இன்னல்பட்டே இறந்துபோனார்.

ஷைகுனா மஸ்தான் ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உறவுக்காரர்களில் ஒருவர் அவர்களின் வெளித்தோற்றத்தைப் பார்த்து விட்டு அவர்களைப் பைத்தியம் என்று எண்ணியதுடன் அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் சொத்து நமக்கு சேர்ந்து விடுமே என்று ஆசைப்பட்டு அரைத்துண்டு அப்பத்தில் விஷத்தைக் கலந்து அவர்களிடம் உண்ணக் கொடுத்தார். அதைக் கையில் வாங்கிய மஸ்தான் ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஓட்டப்பம்(பாதி அப்பம்) மோட்டைச்சுடும்; தன்வினை தன்னைச் சுடும்" என்று கூறியவர்களாய் கோபக் கனலுடன் தந்தவரின் வீட்டை நோக்கி எறிந்தார்கள். உடனே வீடு தீப்பற்றி எரிந்து சாம்பல் கறையாகி விட்டது. இது போன்ற மகான்களின் சாபத்திற்கு ஆளாகி விடாமல் இருக்க வேண்டுமென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

"பரட்டைத் தலையோடும் புழுதி படிந்த மேனியோடும் யாசகம் கேட்டு வாசலில் நின்றால் உடனடியாக விரட்டப்படும் அளவிற்கு அருவருக்கத்தகுந்த வகையிலும் தம்மை அமைத்துக் கொண்டு எத்தனையோ நன் மக்கள் இவ்வுலகில் நடமாடி வருகிறார்கள். அவர்கள் வாய் திறந்து ஏதேனும் வாக்கு சொல்லி விட்டார்களானால் உடனே பலித்துவிடும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 329 கிதாபுல் பிர்ரிவஸ்ஸிலத்தி, மிஷ்காத் 446 பாபு பழ்லில் புகராஇ) மேலும் "நிச்சயமாக அல்லாஹு தஆலா மிக எளிமையாகவும் இறையச்சம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்ற நல்லோர்களை நேசிக்கிறான். அவர்கள் ஒரு சபையில் சமூகமளிக்காவிடின் தேடப்படமாட்டர்கள். சமூகமளித்தால் முக்கியத்துவம் கொடுத்து அழைக்கப்பட மாட்டார்கள். மேலும் சமீபமாக்கவும் படமாட்டார்கள். ஆனால் அவர்களின் இதயங்கள் நேர்வழியின் ஒளிவிளக்குகளாகும். இருளும் புழுதியும் படிந்தவர்களிலிருந்து வெளியேறுவார்கள்" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (மிஷ்காத் பக்கம் 455 பாபுர் ரியாஇ வஸ்ஸும்அத்தி)

ஆகவே இது போன்ற மகான்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். நமது பார்வையில் யாசகர்களைப் போன்று தோற்றமளித்தாலும் அந்தரங்கத்தில் நம்மை விட்டும் அல்லாஹ்வின் நினைவில் ஒன்றித்து (கல்வத்) இருப்பவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இதுவரை கூறப்பட்ட விளக்கங்களின் மூலம் கல்வத் (தனிமை காத்தல்) என்பது இறையருள் பெற்றவர்களுக்கு மாத்திரம் சித்தியாகும் என்றும் கல்வத்தை மேற்கொண்டிருப்பவர்கள் இறைவனின் நினைவிலேயே இருந்து வருவதால் அவர்களின் வாழ்வும் வாக்கும் அற்புதமானதாகவும் அபாரனமானதாகவும் இருக்கும் என்று அறிந்தோம். "தூய்மையான எண்ணம் ஏற்படுவதற்கு தனிமை காத்தல் என்பது மிகச் சிறந்த மூலிகையாகும்" என்று துன்னூனுல் மிஸ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (குஷைரியா பக்கம் 58) மேலும் "எவர் 40 நாட்கள் தனிமை காத்து வருகிறாரோ அவரில் இதயத்திலிருந்து அவரின் நாவின் மீது ஞானத்தின் ஊற்றுக்கண்கள் வெளியாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அல் ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 8361)

எல்லாம் வல்ல நாயன் நம் யாவருக்கும் தனிமையில் அகமியத்தை விளங்கச் செய்து தனிமையில் இனிமை கண்ட நல்லோர்களுடன் சேர்த்தருள் புரிவானாக. ஆமீன்!


رُبَّ رَبٍّ رَبَّهُ لَمْ يَعْرِفَنْ وَلَمْ يُرَبْ
رَبِيْبَهُ لَكِنْ اَضَلَّ الْقَوْمَ بِالْاٰرَاءِ رَاءْ
றுப்ப றப்பின் றப்பஹு லம் யஃறிஃபன் வலம் யுறப்
றபீபஹு லாகின் அழல்லல் கவ்ம பில் ஆறாயி றாஃ(ء)

பொருள் : எத்தனையோ வளர்ப்புத் தந்தைகள் (ஷைகுமார்கள்) தன் நாயனை திட்டமாக (அறியவேண்டிய விதத்தில்) அறியவில்லை. மேலும் தமது (முரீத்) பிள்ளைகளை (முறைப்படி) வளர்ப்பதுமில்லை. என்றாலும் (சிறு குழந்தையின் வாயிலிருந்து வடிந்தோடுகின்ற) வர்ணியைபோன்ற (ஷரீஅத்துக்குப் புறம்பான) சுய சிந்தனைகளால் சமுதாயத்தை சீர் கெடுக்கின்றனர்.

விளக்கம் : எத்தனையோ ஆசான்கள் தன் றப்பை அறியாமல் இருப்பதுடன் தமது மாணாக்கரை முறைப்படி தர்பியத் செய்து நேரிய போதனைகளை போதிப்பதுமில்லை. சீரிய கல்விகளை கற்பிப்பதுமில்லை. மாறாக தன்னிச்சையாக தனுக்குப்பட்ட கருத்துகளை கூறி மக்களை வழி கெடுக்கின்றனர்.

துஆ : யாஅல்லாஹ்! சங்கைக்குரிய எங்களின் இமாம்களான நாதாக்களின் மேலான வாக்குகளை உதறித்தள்ளி விட்டு தன்னிச்சையாக விளக்கங்களை உண்டு பண்ணிக் கொண்டு குழப்பம் பண்ணி வரும் குதர்க்கக் கும்பல்களை விட்டும் எங்களைக் காப்பாற்றி எங்கள் மத்ஹப்களின் தலைவர்களாக திகழும் நற்பெரும் இமாம்களான

ஹனபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு

ஹிஜ்ரீ 80ல் பிறந்து 70 ஆண்டுகாலங்கள் வாழ்ந்து ஹிஜ்ரீ 150ல் மறைந்து பகுதாதில் நல்லடக்கமாகியுள்ளவர்களும் மரத்தாலான ஒரு சாதாரண தூணை அது தங்கத்தால் ஆன தூண்தான் என்று ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுமளவு தீட்சண்ய நிபுணத்துவம் நிறையப் பெற்றவர்கள் என்றும் பிக்ஹு என்ற மார்க்க சட்டக் கலைக்கு மூல கர்த்தாவானவர்கள் என்று இமாமுனா ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் போற்றப்பட்டவர்களும் மிகப் பெரும் செல்வச் சீமானாக இருந்தும் அனைத்தையும் உதறித்தள்ளி விட்டு இஷாவுக்கு செய்த ஒளுவை வைத்து சுப்ஹுத் தொழுகையை 40 ஆண்டுகாலங்கள் நிறைவேற்றி வந்தவர்களும் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் ஆன்மார்ந்த அன்பர்களாகிய ஸஹாபா பெருமக்கள் வாழ்ந்து வந்த பொற்காலத்தில் வாழும் பாக்கியம் பெற்றவர்களும் குர்ஆன் ஹதீஸ் இஜ்மாஃ ஆகியவைகளின் மூலம் கியாஸ் ஆய்வு செய்து பல்லாயிரக்கணக்கான மார்க்கச் சட்டங்களை இவ்வுலகுக்கு வகுத்து தந்த நார் பெரும் மேதைகாளான இமாம்களில் முதன்மைக்குரியவர்களும் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள்.

மாலிக் இமாம் ரலியல்லாஹு அன்ஹு

ஹிஜ்ரீ 93ல் பிறந்து 86 ஆண்டுகாலம் வாழ்ந்து 179ல் மறைந்து புனித (ஜன்னத்துல்பகீஇல்) நல்லடக்கமாகியுள்ளவர்களும் புனித மாமதீனா நகரின் மஸ்ஜிதுன் நபவியில் பன்னெடுங்காலம் பிக்ஹு ஹதீஸ் போன்ற கலைகளில் பாடம் போதித்து "ஷைகுல் உலமா" (அறிஞர்களின் ஆசான்) என்றும் "உஸ்தாதுல் அ'இமாமத்" (இமாம்களின் ஆசிரியர்) என்றும் போற்றப்பெற்றவர்களும் "அஸ்ஸிஹாஹுச் சித்து" என்ற பிரசித்தி பெற்ற ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான முஹத்திஸ்களில் சிலரால் கருதப்படுகின்ற "முஅத்தா" என்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழித் தொகுப்பை இவ்வுலகுக்கு தொகுத்துத் தந்தவர்களும், "இமாமுல் மதீனா" (புனித மதீனா நகரின் பெருந்தலைவர்) என்று மக்களால் கௌரவிக்கப்பட்டவர்களாக இருந்தும் புனித மதீனா மாநகரின் பெருமையைக் கருதி அதன் சுற்று வட்டாரத்திற்குள் எந்தப் பகுதியிலும் பாதணிகள் அணிந்தோ, சிறு நீர் கழித்தோ அல்லது வாகனித்தோ இல்லாமல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதத்தையும் கண்ணியத்தையும் தம் வாழ்விலும் வாக்கிலும் கடைசி வரை காத்து நின்றார்கள்.

ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு

ஹிஜ்ரீ 150ல் பிறந்து 54 ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரீ 204ல் மறைந்து மிஸ்ரு மாநகரில் நல்லடக்கமாகியுள்ளவர்களும் தம்மை கடுமையான ஏழ்மையிலும் வறுமையும் வாட்டிய போதும் மூலநோய் (Piles) ஒரு பக்கத் தலைவலி போன்ற 9 வகையான பயங்கர நோய்கள் தம் உடலை வருத்திய போதும் அவைகளைப் பற்றி கிஞ்சித்தும் கருதாமல் தம் உடலையும் உயிரையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்து பல வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பதுடன் ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆன் ஷரீப் ஓதி முடிக்கும் பழக்கத்தை கொண்டவர்களாகவும் தம் வாழ்வை மார்கத்திற்காக அர்ப்பணம் செய்து "கிதாபுல் உம்மு" போன்ற மிகப் பெரும் சட்ட நூல்களை இயற்றித் தந்தவர்களும் தாய் வழ்யிலும் தந்தை வழியிலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித மிகு பரம்பரையான குறைஷி குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்து மாலிக் இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்கும் தகைமையைக் கொண்டவர்களாகவும் ஹன்பலி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கற்பிக்கும் பெருமையைப் பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

ஹம்பலி இமாம் ரலியல்லாஹு அன்ஹு

ஹிஜ்ரீ 164ல் பிறந்து 77 ஆண்டு காலம் வாழ்ந்து ஹிஜ்ரீ 241ல் மறைந்து பகுதாதில் நல்லடக்கமாகியுள்ளவர்களும் சுகமாக இருப்பதற்கு வசதி வாய்ப்புகள் வாய்க்கப் பெற்றும் காய்ந்த ரொட்டியைத் தண்ணீரில் துவைத்து உப்பைத் தொட்டு உண்ணும் பழக்கத்தை கொண்டவர்களாகவும் சில நேரங்களில் மூன்று நாட்கள் தொடர் நோன்பு வைத்து பேரீத்தம் பழத்திலும் கூழிலும் நோன்பு திறப்பவர்களாகவும், நாளொன்றுக்கு 300 ரக்அத் தொழுது இரவு பகல் ஒவ்வொன்றிலும் குர்ஆன் ஷரீப் ஓதி ஹத்மு செய்வதை தமது விர்தாக (அன்றாட ஓதலாக ஆக்கி) கொண்டவர்களாகவும் தமது சொந்த ஊராகிய பகுதாத் மாநகரத்திலிருந்து கால் நடையாக மூன்று முறையும், வாகநித்து இரு முறையும் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவர்களாகவும் குர்ஆன் ஷரீப் படைக்கப்பட்டதா? படைக்கப்படாததா? என்ற சர்ச்சை எழுந்த சமயத்தில் குர்ஆன் படைக்கப்பட்டது தான் என்று சொல்லுமாறு சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து வம்பித்த போதும் "ஓசையோ எழுத்தோ இல்லாத அல்லாஹுத் தஆலாவுடைய அஸல்லியான கலாமாகிய குர்ஆன் ஷரீப் படைக்கப்படாததுதான்" என்று கூறியதற்காக 29 முறை சாட்டையால் அடித்து வதைக்கப்பட்டு தமது பொன் மேனியின் பல இடங்களில் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டு இன்ன பிற துன்பங்களால் இம்சிக்கப்பட்டு இறைவனடி சேர்ந்தவர்களும் தமது ஜனாஸாவை இலட்சோப இலட்ச மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக நல்லடக்கம் செய்யும் வேளையில் இருபதாயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்களும் பேணுதல் உள்ளவர்களால் பின்பற்றப்படுபவர்கள் என்றும் மார்க்க சட்ட ஞானத்தில் பூரணத்துவம் பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டார்கள்.

இந்நாற்பெரும் இமாம்களுக்கு அடிபணிந்தவர்களாகவும், மேலும் எங்களின் தரீக்கா அதிபதிகளான எங்களின் ஷைகுமார்களுக்கு வழிபட்டவர்களாகவும் ஆக்கி அருள்புரிவாயாக. ஆமீன்.


زُرْضَرِيْحَ الْمُصْطَفٰى و زِدْ اِقَامَةً بِهِ
زُرْتَ حَامِيْمْ زَاوِيًا عَنْ قَلْبِكَ الزِّلْزَالِ زَالْ
ஸு(زُ)ர் ழரீஹல் முஸ்தஃபா வஸி(زِ)த் இகாமத்தம் பிஹி
ஸு(زُ)ர்த ஹாமீம் ஸா(زَا)வியன் ஃஅன் கல்பிக்கஸி(زَ) ல்ஸா(زا)லி ஸா(زَا)ல்

பொருள் : (இதயத்தில் ஏற்படும் கெட்ட) ஊசலாட்டங்களை உன் கல்பை விட்டும் நீக்கியவனாய் முஸ்தஃபா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய (புனித) ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய். மேலும் அவ்விடத்தில் தங்கியிருப்பதை அதிகமாக்கிக் கொள். (அப்படிச் செய்தால்) ஹாமீம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (ஹயாத்திலேயே) ஸியாரத் செய்தவனாகி விட்டாய். (அந்த கெட்ட ஊசலாட்டங்கள் ஸியாரத்தின் பரக்கத்தால் நாளடைவில்) நீங்கி விடும்.

விளக்கம் : என் அன்பான சிஷ்யனே! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய்து மேலான அத்திருசன்னிதியில் அதிகமதிகம் தங்கியிருந்து உன் இதயத்தில் ஏற்படும் சோர்வையும் சடவையும் நீக்கி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பேரன்புக் காதலை உன் உள்ளத்தில் திளைக்கச் செய்வாயானால் நிச்சயம் உன் இதயக் கறைகள் நீக்கப்பட்டு விடும். உன் இதயத் திரைகளும் அகற்றப்பற்று விடும். பிறகு நானிலத்தரசர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிதரிசனமாக உன் விழிப்பிலேயே கண்டு கொள்ளும் பாக்கியம் பெற்று விடுவாய்.

துஆ : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள், "என் மௌத்திற்குப்பிறகு எவர் என் ரவ்ழா ஷரீபை தரிசிக்கிறாரோ அவர் என்னை ஜீவியத்திலே சந்தித்தவரைப் போன்று ஆவார்" என்று திருவாய்மலர்ந்தருளியுள்ளீர்கள். (மிஷ்காத் 241 பாபு ஹரமில் மதீனா). எனவே, தாங்களை அதிகமதிகம் ஸியாரத் செய்து தாங்களின் பொன் முகத்தை கனவிலும் நினைவிலும் கண்டு தரிசிக்க அருள் புரிவீர்களாக! ஆமீன்!

ஸியாரத் பற்றி சிறு குறிப்பு

எனது அன்பிற்கினிய தீனுடைய சகோதரர்களே! இந்தக் கண்ணியில் நமது ஷைகுனா குத்துபுஸ் ஜமான் உமர் ஒலியுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய்து அவ்விடத்திலேயே தங்கியிருப்பதை அதிகப்படுத்திக் கொண்டால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறுகின்றார்கள். இதற்கு ஆதாரமாக மேற்கூறிய ஹதீஸை உற்று நோக்குவதே போதுமானதாகும். மேலும், "எவர் என் கப்ரை தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது" (தாரகுத்னி பாகம் 2 பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும் "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ அவர் நாளை மறுமையில் என் அயலில் இருப்பார்" (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சில பெரியார்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கமா நகரம் செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம் மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின் வரலாறுகளில் காணமுடிகிறது.

"எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஸியாரத்தின் முறைகளும் பலன்களும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை ஸியாரத் செய்வதால் ஏற்படும் பலன்களை குறிப்பிட்டிருப்பது போன்றே பொது கப்ரிஸ்தானங்களுக்குச் சென்று தாங்கள் ஸியாரத் செய்து காட்டி அதன் முறைகளையும் விபரித்ததுடன் அதனால் ஏற்படும் பலாபலன்கள்களையும் நமக்கு எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

"ஸியாரத்திற்குச் சென்றால், முஃமீன் முஸ்லிம்களில் நின்றும் வீட்டையுடையவர்களே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களாக இருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்வின் சுகத்தைக் கேட்கிறோம் என்று கூற வேண்டும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபா பெருமக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 154)

1. "எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)

2. "கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)

3. "இவ்வுலகில் அதிகமான செல்வங்களைத் திரட்டி சுக போகமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் உங்களை வீணான விஷயங்களில் ஆழ்த்திவிட்டது. (அது எதுவரை என்றால்) நீங்கள் கப்ருகளை ஸியாரத் செய்கின்ற வரை" (அல்குர்ஆன் 102:1,2) என்று வான் மறை குர்ஆன் ஷரீப் கூறுகிறது.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறப்பட்ட குர்ஆன் ஆயத்தையும் ஹதீஸ்களையும் நன்றாக உற்று நோக்குங்கள். உலகப் பற்று நீங்கி இதயம் ஒளிமயமாவதற்கு சிறந்த சஞ்சீவிதான் ஸியாரத் என்பதை உணர்வீர்கள். உலகப் பற்று என்றால் என்ன வென்று யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் இவ்வுலகப்பற்று என்பது மரணத்தையும் மறுமை வாழ்வையும் மறந்து விட்டு இவ்வுலகையே சதமாக நம்பி இம்மை இன்பத்திலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தலாகும் என்று எல்லோருக்கும் நன்றாக விளங்கும். இந்த உலகப் பற்று ஒருவனிடம் குடி கொண்டுவிட்டால் நீதி நேர்மை என்றெல்லாம் பார்க்காமல் இவ்வுலக வாழ்வில் இன்பமாக வாழ்வதற்காக பட்டம் பதவியுடன் பவனி வருவதற்காக செல்வமும் செல்வாக்கும் கிட்டுவதற்காக பஞ்சமா பாதகங்களைக்கூட சர்வ சாதாரணமாக செய்யத்துணிந்து விடுகிறான்.

நமது பெரியவர்கள் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று உலகப்பற்றுக்கு சுருக்கமாக உதாரணம் கூறுவதைப் பார்த்திருப்போம். மனிதனின் வாழ்வை சிந்தித்துப் பார்க்கையில்தான் அதன் பேருண்மையை விளங்க முடியாது. ஏனெனில் மேற்படி மூன்றையும் அடைவதற்காக ஹலால் ஹராம் என்று பாராமல் இறை அச்சம் இன்றி எதையும் செய்ய எத்தனித்து விடுகிறான். எனவேதான், "இவ்வுலகப் பற்று அனைத்து விதமான தவறுகளுக்கும் காரணமாக இருக்கிறது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள். (பைஹகீ ஸாதுத் தாலிபீன் பக்கம் 22). வேறொரு அறிவிப்பில் ஈஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறியதாக வந்துள்ளது. (லுக்கதுத்துரர் பக்கம் 83)

அப்படிப்பட்ட உலகப் பற்று என்ற வியாதி ஸியாரத்தின் மூலம் எப்படி நீங்கும் என்று சந்தேகப்படுகிறீர்களா? சந்தேகப்படத் தேவையில்லை. யாரிடமும் கேட்க அவசியமுமில்லை. நீங்கேளே நேரடியாக மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்து அனுபவித்துப் பாருங்கள். ஸலாம் சொல்லுவதடன் மட்டும் நிறுத்திக்கொள்ளும் ஸியாரத்தாக இல்லாமல் சிந்தனைக் கண் கொண்டு ஸியாரத் செய்யுங்கள். சித்தம் தெளிவீர்கள். நேற்று நம்முடன் இருந்தவர் டாம் டீம் என்று இவ்வுலக வாழ்வை கழித்தவர் இதோ ஆறடி நிலத்துக்குள் அடங்கிக் கிடக்கிறாரே, நம்முடைய கதியும் ஒரு நாளைக்கு இப்படித்தானே ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். சன்னம் சன்னமாக உலகப் பற்று மனதை விட்டு நீங்குவதை நீங்களே தெளிவாக உணர்ந்து கொள்வீர்கள். நாதாக்கள் புனித தர்ஹா ஷரீபுக்குச் சென்று ஸியாரத் செய்யுங்கள். அவர்களின் சன்னிதியில் நடைப்பெறும் கணக்கில் அடங்காத கராமத்துக்களையும் அதிசயங்களையும் கண்ணுற்றுப் பாருங்கள். மரணத்திற்குப் பின்னும் அம்மகான்களுக்கு வல்லோன் வழங்கி இருக்கும் வல்லமையைக் கண்டு அதிசயப் படுவீர்கள். அவர்கள் தங்களின் இப்பூவுலக வாழ்வை எப்படியெல்லாம் வணக்க வழிபாட்டிலும் மார்க்க சேவையிலும் கழித்துள்ளார்கள் என்ற விவரங்களை அவர்களின் வரலாறுகள் என்ற வெட்ட வெளியில் உங்களின் சிந்தனைக் குதிரைகளை செலுத்திப்பாருங்கள். அவர்களின் தக்வாவும் நேர்மையும் தன்னலம் கருதா சேவையும் பரிணமிப்பதை கண்டு கொள்வீர்கள். சும்மா படிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவைகளைப் படிப்பினையாக எடுத்து படிப்படியாக செயலாக்கம் பண்ணிப்பாருங்கள். நாளடைவில் இறை நெருக்கம் பெற்ற நல்லடியாராக இறை அன்பிற்கு பாத்திரமான அல்லாஹ்வின் நேசராக ஆக அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான். ஆமீன்.

ஸியாரத் செய்வது இவ்வுலகப் பற்று என்ற மாசு நம் மனதிலிருந்து நீங்கி மாண்பாளர்களின் பட்டியலில் சேருவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதால் தான் ஆன்மீக பாதையில் வழிநடத்தும் சங்கைக்குரிய ஷைகுமார்கள் தங்களின் சிஷ்யர்களுக்கு ஸியாரத் செய்து வருமாறு உபதேசிப்பதுடன் அதில் அதிகப்படியான ஆர்வமூட்டுகிரார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸியாரத் செய்துள்ளார்கள்

1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉவுக்குச் சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று ஹதீத் ஷரீபில் (முஸ்லிம் ஷரீப் பாகம் 1 பக்கம் 313, மிஷ்காத் 154) இடம் பெற்றிருக்கிறது.

2.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத் செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபா பெருமக்களும் கண்ணீர் சொறிந்தார்கள். (முஸ்லிம் ஷரீப், மிஷ்காத் 154)

3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உஸ்மான் பின் அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள். (தபரானி பாகம் 3 பக்கம் 241 கிதாபுல் ஜனாஇஸ்)

பெண்கள் கப்ரு ஸியாரத்துச் செய்யலாமா?

ஸியாரத் செய்வதால் உலகப்பற்று ஒடுங்கி மறுமையின் நினைவு மேலோங்கும் என்றும் பெற்றோர்களை ஸியாரத் செய்வதால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்ல பிள்ளை என்ற பெயர் கிடைக்கும் என்றும் சுற்றத்தார்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் பிரார்த்தனைக்கு ஆளாகலாம் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கும் என்றும் சுவனபதியில் அவர்களின் பக்கத்தில் குடியிருக்கும் வாய்ப்பு அமையும் என்றெல்லாம் கூறி ஸியாரத்தின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பாக்கியம் அனைத்தும் ஆண்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் பெண்களாக இருந்தால் கிடைக்காது என்று வாசகமாகவோ சூசகமாகவோ சாடையாகவோ சைக்கினையாகவோ கூறியதாக எந்த ஹதீஸிலும் இடம் பெறவில்லை.

ஆகவே பெண்களும் ஸியாரத் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பெற மிகவும் அருகதை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் ஸியாரத் செய்வது முற்றிலும் தடையானது என்று இருக்குமானால் உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸியாரத்திற்கு சென்றிருக்கமாட்டார்கள். அது போன்றே அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சென்றிருக்கமாட்டார்கள். ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன சொல்ல வேண்டும் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட பொழுது ஆண்கள் மட்டும் தான் போக வேண்டும், பெண்கள் போகக் கூடாது என்று கூறித் தடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாக ஹதீஸில் இல்லை. மாறாக ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள் (அஹ்மத், மிஷ்காத் பக்கம் 154) என்றும் மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் தன் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவுக்குச் சென்று ஸியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 5079, மிஷ்காத் பக்கம் 149) என்றும் ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன ஓத வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஸியாரத்திற்கு முழு அனுமதி வழங்கி இருப்பதாகவும் (முஸ்லிம், மிஷ்காத் 154), அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததாகவும் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 572, முஸ்தத்ரக் பாகம் 1 பக்கம் 377) ஹதீஸ்கள் வந்துள்ளன.

பெண்கள் பொறுமை குறைந்தவர்களாகவும் கடும் மனக்கலக்கம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் தான் பெண்கள் ஸியாரத் செய்வது மக்ரூஹ் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள் என்று மிஷ்காத்(பக்கம் 154 பாபுஸ் ஸியாரத்)தில் குறிபிடப்பட்டுள்ளது.

பெண்கள் ஸியாரத்துச் செய்யும் முறை

உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீப் சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஃபர்தா அணியாமலேயே ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அதில் அடக்கம் செய்யப்பட்ட போது ஃபர்தா அணிந்தே (தன்னை முழுமையாக மறைத்தவர்களாக) ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் 154)

ஸியாரத் செய்யும் போது கப்ரை முன்னோக்க வேண்டும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்போது தாங்களின் திரு முகத்தைக் கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள். (மிஷ்காத் பாகம் 2 பக்கம் 407 பாபு ஸியாரத்தில் குபூர்)

கப்ரு ஸியாரத்திற்கு சென்றால் யாஸீன் ஓத வேண்டும்

"எவராவது கப்ரு ஸ்தானங்களுக்குச் சென்று ஸூரத் யாசீன் ஓதினால் கப்ராளிகளைத் தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிர்காத் பாகம் 4 பக்கம் 382)

ஈஸால் ஸவாப் குறித்து ஹன்பலி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு

கப்ருகளுக்குச் சென்றால் பாத்திஹா ஸூராவையும் முஅவ்விததைனியையும் கு ஹுவல்லாஹு அஹதையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிக்குச் சேர்த்து வையுங்கள். கண்டிப்பாக அது அவர்களை சென்றடையும் என்று அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அஹ்மதுல் மரூஸி அவர்கள் அறிவிக்கிறார்கள். (மிர்காத் பாகம் 2 பக்கம் 381, இஆனா பாகம் 2 பஸ்லுன் பிஸ் ஸலாத்தி அலல்மய்யித்தி)

பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய நன்மைகள்

ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "யாரசூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்றோர்கள் மரணித்த பின்பு அவர்களுக்காக பிள்ளைகளாகிய நாங்கள் செய்யவேண்டிய நன்மைகள் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம், இருக்கிறது. அவர்களுக்காக தொழுது நன்மை சேர்த்தல், அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுதல், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், அவர்களின் சுற்றத்தினர்களுடன் சேர்ந்து நடந்துகொள்ளுதல், அவர்களின் தோழர்களுக்கு சங்கை செய்தல்" என்று கூறினார்கள். (அபூதாவூது, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலா)

கப்ருகளை உதாசீனம் செய்யாதீர்கள்

1. "கப்ருகள் மீது உட்காராதீர்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312)

2. "உங்களில் ஒருவர் நெருப்பு கங்கின் மீது அமர்ந்து உடையும் உடலும் கரிந்து போவது ஒரு கப்ரின் மீது அமர்வதை விட சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312 கிதாபுல் ஜனாஇஸ்)

3. நான் ஒரு கப்ரின் மீது சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அப்போது, "இந்த கப்ருடையவருக்கு நோவினை கொடுக்காதே" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத் பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி)

4. ஒரு மனிதன் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித கப்ரின் மீது அசிங்கப் படுத்திவிட்டான். உடனே பைத்தியம் பிடித்து நாய் ஊளையிடுவது போன்று ஊளையிட்டுக் கொண்டிருந்தான். சில தினங்களில் இறந்து விட்ட அவனின் கப்ரிலிருந்தும் ஊளைச் சத்தம் கேட்கப்பட்டது. (நூருல் அப்ஸார் பக்கம் 134)

கப்ரு பிரகாசித்தது

"நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது அவருடைய மண்ணறையின் மேல் ஒளியைப் பார்க்கப்படக்கூடியதாகவே இருக்கிறது என்று நாங்கள் பேசுபவர்களாக ஆகியிருந்தோம்" என்று உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் பாகம் 2 பக்கம் 16 கிதாபுல் ஜிஹாத்)

மரணித்தவர்கள் பற்றி வாஹ்ஹாபிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மற்றவர்களையும் ஸியாரத் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஊட்டுகின்ற ஹதீஸ்கள் அனேகம் இருந்தும் கூட நம்மில் சில (குதர்க்கக்) கொள்கையுடையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வபாத்தாகி அடக்கப்பட்டு சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயிருப்பார்களே, அப்படியிருக்கையில் அவர்களை நாம் ஸியாரத் செய்வதும் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதும் ஸலாம் கூறுவதும் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று சந்தேகம் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளும் மக்கள் பிற்காலத்தில் வாருவார்கள் என்பதை உணர்ந்த ஸஹாபா பெருமக்கள் நமது சார்பிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த ஐயப்பாட்டை எடுத்து வைத்து அதற்குரிய விளக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார்கள் என்பதை கீழ் வரும் நபி மொழிக் கருத்தின் மூலம் அறியலாம்.

மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்

1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, தாரமி, பைஹகீ, மிஷ்காத் பாகம் 120 பாபுல் ஜும்ஆ)

2. "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 3089)

3. "நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்)

4. "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268)

இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள். (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94 அத்தஅம்முல் 251)

மேலும் நபிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு மிஃராஜ் இரவில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களையும் சந்தித்தும் அவர்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்ததும் போதுமான ஆதாரமாகும்.

நபிமார்களின் உடலை மண் அரிக்காது

1. பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில் எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது. (அல்குர்ஆன் 34:14)

2. நிச்சயமாக நபிமார்கள் மேனிகளை மண் தின்னாது. சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது. (அல்கஸாஇஸூல் குப்ரா பாகம் 2 பக்கம் 280)

3. ஹழ்ரத் உஜைர் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 2:259)

4. ஹழ்ரத் யூனுஸ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மீன்விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 37:142,143,144)

5. அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் துஸ்தர் கோட்டை பிடிபட்டது. அங்கு ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஹழ்ரத் தானியால் அலைஹிஸ் ஸலாம் அவர்களது திரேகம் அழியாமல் வைக்கப்பெற்றிருந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத்திரேகத்தில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம் உள்ளதாயிருந்ததுடன் அந்தச் சங்கையான சடலம் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமுமின்றி அப்படியே இருந்தது. (அல்பிதாயா வன்னிஹாயா பாகாம் 2 பக்கம் 41)

ஷுஹதாக்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள்

அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது.

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)

மரணத்திற்குப் பிறகும் இறை நேசர்கள் உயிருடன் இருக்கிறார்கள்

இஸ்லாத்தின் வைரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாட்களால் வெட்டப்பட்ட ஷஹீதுகள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போலவே தன் மனதுடன் போரிட்டு அதைவெட்டி வீழ்த்தி, "மரணத்திற்கு முன்பே மரணமாகிக் கொள்ளுங்கள்." (ஹத்யா ஷரீப் பக்கம் 38) மற்றும், "மரணத்திற்கு முன்பே தவ்பாச் செய்து கொள்ளுங்கள்." (இப்னு மாஜா 1081) என்ற நாயக வாக்குகளை மெய்ப்பித்து தம்மை இறைவனில் அழித்துக் கொண்ட அவ்லியாக்களும் கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், "ஒருவனுக்கு அவன் நப்ஸுதான் பெரிய விரோதி" (நபஸுர் ரஹ்மான் பக்கம் 208) என்றும், "(அந்த) நப்ஸுடன் போராடுபவன்தான் உண்மையான வீரன்" (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 9178, மிஷ்காத் பக்கம் 15) என்றும் கூறியதுடன் இதையே "ஜிஹாதுல் அக்பர் (பெரிய யுத்தம்)" என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். (இஹ்யாஃ பாகம் 3 பக்கம் 7,66)

போர் புரிந்து விட்டு யுத்த களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஸஹாபாக்களைப் பார்த்து, "உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உண்டாகட்டும், சிறிய போரிலிருந்து பெரிய போரின் பால் வந்து விட்டீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெரிய போர் என்றால் என்ன?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "மனதுடன் போரிடுவது தான் பெரிய போர்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் கூறினார்கள்.

காபிர்களுடன் வாளேந்திப் போரிடுதல் என்ற சிறிய போரில் மரணித்து ஷஹீதானவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதுடன் போராடுதல் என்ற பெரியபோரில் ஷஹீதானவர்களான இறை நேசச் செம்மல்கள் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இறந்தும் இறக்காதவர்

"தன் ஆண்டவனை தியானிப்பவருக்கு தியானிக்காமல் இருப்பவருக்கும் உதாரணமாகிறது உயிரோடு இருப்பவரையும் இறந்தவரையும் போலாகும்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 6023)

இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள்

ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் ஸூரத்து முல்க் (தபாரக்கல்லதீ) ஒதிகொண்டிருக்கும் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது ஸூரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பாற்றக்கூடியது என்று கூறினார்கள். (திர்மிதீ, மிஷ்காத் பக்கம் 187)

இறந்தவர்கள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது ஏழு வானங்களில் உள்ள நபிமார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்தினார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 91 பாபுல் இஸ்ரா, மிஷ்காத் 527)

இறந்தவர்கள் விவாதிக்கிறார்கள்

இறைவன் வகுத்த விதி சம்பந்தமாக ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் விவாதித்து இறுதியாக ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி பாகம் 1 பக்கம் 484 மிஷ்காத் 19)

இறந்தவர்கள் நம் செயல்களைப் பார்க்கிறார்கள்

முஃமீன்களே அமல் செய்யுங்கள். ஏனெனில் உங்களுடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் முஃமீன்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். (அல்குர்ஆன் ஸூரத் தவ்பா:106)

உயிரோடு இருப்பவர்களின் செயல்களை இறந்தவர்களிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. (இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 387)

இறந்தவர்கள் செவியேற்கிறார்கள்

1. பத்ரு யுத்தத்தில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி, "எங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நாங்கள் உண்மையாகக் பெற்றுக் கொண்டோம். உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்ட போது அங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனிருந்த உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணமடைந்தோர் எங்ஙனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள்?" என்று வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன். நீங்கள் நான் சொல்பவைகளை அவர்களை விட மிக நன்றாக கேட்பவர்களாக இல்லை" என்று விடையளித்தார்கள். (புகாரி பாகம் 2 பக்கம் 566, மிஷ்காத் பக்கம் 345 பாபு ஹுக்மில் உஸராஇ)

2. பயங்கரமான இடிசப்தத்தால் இறந்து போன நபர்களிடம் ஸாலிஹ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பேசினார்கள். (அஃராப் 78,79)

3. ஒரு மய்யித் தம்மை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்பவர்களின் செருப்போசைகளைக் கூட கேட்கிறது. (புகாரி பாகம் 1 பக்கம் 183, முஸ்லிம் பாகம் 2 பக்கம் 372, மிஷ்காத் பக்கம் 24 பாபு இஸ்பாத்தி அதாபில்கப்ரி)

4. அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய இறுதிக் கட்டத்தில் கீழ் வருமாறு வஸிய்யத் செய்தார்கள். என்னை அடக்கம் செய்து என் மீது மண்ணைப் போட்டுவிட்டால் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியை பங்கு போடுவதற்குரிய நேரத்தின் அளவுக்கு என் கப்ருக்குப் பக்கத்தில் நில்லுங்கள். ஏனெனில் நான் உங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவேன். மேலும் எனது நாயனுடைய தூதுவர்களிடத்தில் பதிலளிக்க வேண்டியவைகளையும் அறிந்து கொள்வேன். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 76 கிதாபுல் ஈமான்)

குறிப்பு : இந்த ஹதீஸ் இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதுடன் கப்ரைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதை இறந்தவர்கள் செவி மெடுக்கிறார்கள் என்பதையும் அறிவிக்கிறது. (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 76)

மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்

இறந்தவர்களுக்கு நல்ல முறையில் கபான் உடுத்தாட்டுங்கள். ஏனெனில் அவர்களுடைய கப்ருகளில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். (திர்மிதி, இப்னு மாஜா)

மரணித்தவர்களால் நமக்குப் பயனிருக்கிறதா?

1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது அல்லாஹ்வினால் நமக்குக் கடமையாக்கப்பட்ட ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக இலகுவாக்கி இறைவன் சுருக்கி வசதியாக்கித் தருவதற்கு வழிவகை செய்தவர்கள் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள்தான் என்று ஹதீஸ் வந்திருக்கிறது.

2. அதே மிஃராஜ் இரவில் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நமக்கு ஸலாம் சொல்லிவிட்டதுடன், "சுவர்க்கம் என்பது மணமான மண்ணும் இதமான நீர் சுனைகள் நிறைந்த நிலப்பரப்பாகும். நாம் ஓதுகின்ற சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்ற திக்ருகள்தான் நாளை மறுமையில் சுவனத்தின் சோலைகளாக ஆகி நமக்குப் பயன் அளிக்கும்" என்று கூறி அனுப்பினார்கள். (திர்மிதி, மிஷ்காத் 202 பாபு தவாபித் தஸ்பீஹி)

3. புனித பள்ளிவாசல்களில் ஒன்றான பைத்துல் முக்கத்தஸ் பள்ளி வாசலின் கட்டுமானப் பணியை ஸுலைமான் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கவனித்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. அதன் பின்பும் ஒரு ஊன்று கோளின் பொறுப்பிலே நீண்ட காலம் வரை நிறுத்தாட்டி வைத்து அந்த பள்ளியின் வேலையை இறைவன் பூர்த்தி செய்தான். கரையான் அரித்த அந்த ஊன்று கோல் நொடித்துப் போன போது அதன் பொறுப்பில் இருந்த ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கீழே சாய்ந்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் மரணமாகி நீண்ட காலம் ஆயிற்று என்ற விஷயம் தெரிய வந்தது. (அல்குர்ஆன் 34:14)

4. நிச்சயமாக உங்களுடைய அமல்களை (செயல்களை) மரணித்து விட்ட உங்களின் உறவினர்களிடத்திலும் சொந்தக்காரர்களிடத்திலும் (அவர்களின் கப்ருகளில்) எடுத்துக் காண்பிக்கப் படுகிறது. நல்ல அமல்களாக இருந்தால் அதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். தீய செயல்களாக இருந்தால் இறைவா! உனக்கு கட்டுப்பட்டு நல்லமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை அவர்களின் இதயங்களில் உதிப்பாக்கி வைப்பாயாக என்று பிரார்த்திக்கிறார்கள் என்று (அபுதாவூது, அஹ்மது, இப்னு கதீர் பாகம் 2 பக்கம் 387) ஹதீஸில் வந்துள்ளது.

5. ஸெய்யிதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்து விட்டு மக்கள் அனைவரும் திரும்பி விட்டனர். ஆனால் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மாத்திரம் கப்ரில் கேள்வி கேட்கும் மலக்குகளுக்கும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மத்தியில் நடக்கும் சம்பாசணையை செவியேற்பதற்காக கப்ருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். கப்ருக்குள் வந்த இரு மலக்குகளையும் பார்த்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "மலக்குகளே! உங்களிருவரையும் இந்தப் பயங்கரமான கோலத்தில் கண்டபோது பெருமானாரின் பிரதிநிதியான எனக்கே பயம் உண்டாகிவிட்டது. அப்படியானால் சாதாரண முஃமீன்களின் நிலை என்னவாகும். ஆகவே இனிமேல் எந்த முஃமினிடத்திலும் இது போன்ற பயங்கரமான தோற்றத்துடன் வராதீர்கள்" என்றார்கள். இவ்விரு மலக்குகளும், "பெருமானாரின் பிரதிநிதி அவர்களே! உங்களுக்கு நாங்கள் அடிபணிந்தோம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வுலகில் வாழும் போதும் மரணித்த பின்பும் மனிதர்களுக்கு பயனளிப்பவர்களாகவே இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். (நூருல் ழலாம் பக்கம் 18)

எல்லாம் வல்ல ரஹ்மான் ஸியாரத்தின் மூலம் மனத் தெளிவையும் பற்றற்ற நிலையும் அடைந்த நல்லோர்களுடன் நாம் யாவரையும் சேர்த்தருள் புரிவானாக. ஆமீன்!


سَلْ سَبِيْلاً سَارَفِيْهِ سَيِّدُ السَّادَاتِ سِرْ
سَلْسَبِيْلاً تُسْقَ فِي الْحَالَاتِ كَاسَّلْسَال سَالْ
சல் சபீலன் சார ஃபீஹீ செய்யிதுஸ் சாதாத்தி சிர்
சல்சபீலன் துச்க ஃபில் ஹாலதி கச்சல் சாலி சால்

பொருள் : தலைவர்களுக்கெல்லாம் தலைவர் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதில் நடந்தார்களோ அந்தப் பாதையை (மார்க்க அறிஞர்களிடம்) கேட்டறிந்து (அதன்படி) நடப்பாயாக! (அப்படி செய்து வந்தாயானால் தொண்டையில் இதமாக) ஒடுகி(இறங்குகி)ன்ற குளிர்ச்சியையும் இன்பமும் நிறைந்த பானத்தை போன்றுள்ள (ஒரு வித) சுவர்க்க குடிப்பை (உனது) எல்லா நிலைகளிலும் புகட்டப்படுவாய்.

கருத்து : என் அன்பான சிஷ்யனே! தலைவருக்கெல்லாம் தலைவர் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்த வழி முறைகளை நன்றாகத் கேட்டறிந்து அதன்படி முறையாக உள்ளச்சப்பாட்டுடன் ஒழுகி வருவாயாக! அப்படி ஒழுங்காகக் கடைபிடித்து மார்க்கத்தைப் பேணி வந்தாயானால் மார்க்கம் பேணுவது மதுரமான பானத்தை அருந்துவது போன்றாகி விடும். அதன் இன்பத்தை மனப்பூர்வமாக அனுபவித்து விட்டதால் இனி எந்த நிலையிலும் மார்க்கம் என்ற இனிய பானத்தை பருகாமல் உன்னால் இருக்க முடியாது. ஆகவே அதை அடிக்கடி புகட்டப்பட்டுக்கொண்டே இருப்பாய்.

விளக்கம் : தொழுகை நோன்பு போன்ற ஷரீஅத்தின் சட்டங்களை செவ்வனே செய்து வந்தால் நாளடைவில் அவைகள் நமக்கு இதமான உணவாகவும் மதுரமான பானமாகவும் இதயத்திற்கு இலேசு தரக்கூடியதாகவும் கண்ணுக்குக் குளிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்து விடுவதுடன் மற்ற கெட்ட செயல்களை செய்ய விடாமல் தடுத்துவிடும். இதற்க்குச் சான்றாக பின் வரும் ஆதாரங்கள் அமைந்திருப்பதை உய்த்துணரலாம்.

1. (அல்குர்ஆன் ஸூரத் பகரா:45) நிச்சயமாக அதுவா(தொழுகையா)கிறது உள்ளச்ச்சப்பாட்டுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகவும் பாரகமாக இருக்கும். (அதாவது உள்ளச்சம் உள்ளவருக்கு இன்பமாக இருக்கும்.)

2. "என் கண் குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டிருக்கிறது." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத் பாகம் 3 பக்கம் 128, மிஷ்காத் பக்கம் 449 பாபு பழ்லில் புகராஇ, ஹாகிம் ஹதீஸ் எண் 2676 கிதாபுன் நிக்காஹ்)

3. ஐங்காலத் தொழுகைகளையும் நீங்கள் திருப்தி (மகிழ்ச்சி) அடைவதற்காக நிறைவேற்றுவீர்கலாக. (அல்குர்ஆன் 20:130ன் கருத்துச்சுருக்கம்)

4. "(தொடராக பலநாட்கள் நோன்பு வைப்பதால் எனக்கு எவ்வித பாத்திப்புமில்லை. மாறாக மனதிற்கு மகிழ்வாகவே இருக்கிறது. ஏனெனில்) உங்களில் என் போன்று யார் இருக்க முடியும்? என் இறைவன் எனக்கு உணவு தருகிறான். (மேலும் எனக்குத் தண்ணீரும் புகட்டுகிறான்.)" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி பாகம் 1 பக்கம் 263,264 கிதாபுஸ் ஸவ்ம், மிஸ்காத் பக்கம் 175)

5. நிச்சயமாக (மனத்தூய்மையான) தொழுகையாகிறது, மானக்கேடானவைகளையும் வெறுக்கத்தகுந்தவைகளையும் விட்டு தடுத்து விடுகிறது. (அல்குர்ஆன் 29:45)

குறிப்பு : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளரிக்காயை எப்படிச் சாப்பிட்டார்கள் என்ற விவரம் தம்மிடம் தரப்படவில்லை என்ற காரணத்தால் அஹ்மதிப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை உண்ணாமலேயே இருந்து விட்டார்கள். (குர்ரதுல் அலிஃப் பக்கம் 11)

துஆ : இறைவா! என் கண் குளிர்ச்சி தொழுகையில் தான் இருக்கிறது என ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பியது போன்று தொழுகையை எங்களின் கண் குளிர்ச்சியாகவும் மார்க்கத்தைப் பேணி நடப்பதை இதமான பானமாகவும் ஆக்கியருள்வாயாக! ஆமீன்!

குறிப்பு : இந்தக்கண்ணியில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிஸ்களைக் குறிக்கின்ற ஸாதாத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதால் கீழே அவர்கள் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஸாதாத்துமார்களின் சிறப்பு

ஸாதாத்துமார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த இரத்தத்திலிருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களைப்பற்றிய மரியாதையைக் குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே ஸாதாத்துமார்களைப்பற்றிய மாண்புகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நாம் யாவருக்கும் கடமையாகும்.

வார்த்தை விளக்கம்

ஸாதாத் என்பது ஸாதத் என்பதின் பன்மையாகும். ஸாதத் என்பது ஸெய்யித் என்பதின் பன்மையாகும் (குர்ரதுல் அலிஃப் பக்கம் 17). இந்தக் கருத்தின் படி ஸாதாத் என்ற வார்த்தை ஸெய்யித் என்ற வார்தையுடைய பன்மையின் பன்மையாகும்.

பொருள் விளக்கம்

ஸெய்யித் என்ற வார்த்தைக்கு அகராதியில் நாயகன், தலைவன், எஜமான், பிரபு, சிறந்தவர், அதிகாரி, பணிவிடை செய்யப்படுபவர், முதன்மைக்குரியோர், ஒரு பெரும் சமுதாயத்திற்குப் பொறுப்பானவர், மற்றவர்களால் பின்பற்றக் கடமைப்பட்டவர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. ஆகவே அதன் பன்மையான ஸாதாத் என்ற வார்த்தைக்கும் மேற்கூறப்பட்ட அனைத்துப் பொருள்களும் சொல்லமுடியும்.

ஸாதாத்துமார்கள் என்றால் யாரைக் குறிக்கும்?

1. ஸெய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக் கூறப்படும். அஸ்ஸெய்யிதானி என்பது அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைச் செல்வர்களான ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களைக் குறிக்கும் என்று உலகப் பிரசத்திப் பெற்ற அரபு அகராதியான அல்முன்ஜித், அல்முஃஜமுல் வஸீத் ஆகிய கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது.

பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே ஸாதாத்துகள் ஆவார் என்று ஷைகுனா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்களின் ஹத்யா ஷரீபின் 302ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

2. என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்க வில்லை என்ற வசனம் இறங்கியபோது, "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நங்கள் அன்பு வைக்க கடமைப்பட்ட உங்களின் சுற்றத்தினர் யார்?" என்று ஸஹாபா பெருமக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அலீ (ரலியல்லாஹு அன்ஹு), பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா), ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)" என்று பதிலளித்தார்கள்.

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் அலீ ரலியல்லாஹு அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா, ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இருந்தனர். அவ்விருவரையும் தன் தொடையில் வைத்துக் கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, "நபியின் குடும்பத்தார்களே! உங்களை இறைவன் பரிசுத்தப்படுத்திவிட்டான்" என்ற ஆயத்தை ஓதினார்கள். பிறகு, "இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லு பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். வேறொரு அறிவிப்பில், "இறைவா! இவர்கள் முஹம்மதின் குடும்பத்தர்களாகும். ஆகவே இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் மீதும் அவரின் குடும்பத்தார் மீதும் உன் பரக்கத்தையும் கருணையையும் சொரிந்ததைப்போல இவர்கள் மீதும் சொரிந்தருள்வாயாக!" என்று பிரார்தித்ததாக வந்துள்ளது.

மேற்படி போர்வைக்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நுழைந்து கொள்ள முயன்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைய விடாமல் தடுத்து விட்டதுடன், "நிச்சயமாக நீங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும்" என்று கூறியதாக வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும். (நூருல் அப்ஸார் 123)

அண்ணலின் உடல் அமைப்பைக் கொண்ட அருமைப் பேரர்கள்

"ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள்" என்று அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி, மிஷ்காத் பக்கம் 571 பாபுல் மனாகிப்)

பல பெயர்கள்

சங்கை மிகு ஸாதாத்து மார்களை இலங்கையிலும் தமிழகத்திலும் ஸாதாத்மார்கள் என்று குறிப்பிடுவது போல மௌலானாமார்கள் , அஹ்லுபைத்துகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. அஹ்ரார்கள், அவ்லாதுர்ரஸூல்கள், கராபத்துர் ரஸூல்கள் என்றும் சில பெரிய மனிதர்கள் கூறுகிறார்கள். கேரளாவைச் சார்ந்தவர்கள் தங்கள்மார்கள் என்று அழைக்கின்றார்கள். அரபு நாட்டைச் சார்ந்தவர்கள் அஷ்ராப் என்றும் குறைஷிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பகுதியினரும் ஒவ்வொரு பெயரில் குறிப்பிடுவது சில அடிப்படைக் காரணங்களை வைத்தேயாகும்.
அதைக் கீழே காண்போம்.

மௌலானாமார்கள்

மௌலானா என்ற வார்த்தை இருபத்தி இரண்டு பொருள்களை உள்ளடக்கியுள்ளது. அவைகளில் எங்களின் தலைவர், எங்களின் உதவியாளர், எங்களை உரிமையிட்ட எஜமான், எங்களின் பாதுகாவலர் போன்ற பொருள்கள் குறிப்பிடத்தக்கவையாகவும்.

அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவின் வாயிற் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள், "யார் என்னைத் தெரிந்து கொண்டாரோ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும். என்னைத் தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் அஹ்லு பைத்துக்களுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலைப் போன்றதாகும். எவர் அதில் ஏறிக் கொண்டாரோ அவர் ஜெயம் பெறுவார். யார் அதில் ஏறிக் கொள்ளவில்லையோ அவர் நாசமாவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன்." (மிஷ்காத் 573 , ஹாகிம் பாகம் 2 பக்கம் 343 தப்ஸீர் ஸூரத் ஹூத்)

நட்சத்திரங்கள் விண்ணிலுள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லு பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆகவே எனது அஹ்லு பைத்துகள் போய் விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய் விடுவர்." என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் . (அறிவிப்பாளர் : அலி ரலியல்லாஹு அன்ஹு; ஆதாரம் : அஹ்மத், மிஷ்காத் பக்கம் 573)

நூஹ் நபியின் கப்பல்

இப்போது கூறப்பட்ட இரு ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸாதாத்மார்களை நூஹ் நபியின் கப்பலுக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். நூஹ் நபியின் கப்பல் நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரள்யத்தின் போது எல்லோரும் வெள்ளத்தால் அழிந்துவிட்ட நேரத்தில் நூஹ் நபியையும் அவர்களை விசுவாசித்த சுமார் 80 நபர்களையும் மாத்திரம் பிரளயத்திலிருந்து காப்பாற்றி அந்த 80 நபர்கள் மூலம் இரண்டாவது மனித சஞ்சாரம் உற்பத்தியாவதற்குக் காரணமாக இருந்தது. இதனால் தான் நூஹ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களை இரண்டாவது ஆதம் (ஆதமுஸ்ஸானி) என்று அழைக்கப்படுவதாக தப்ஸீர் ஸாவியில் (பாகம் 1 பக்கம் 223) குறிப்பிடப்பட்டுள்ளது. தன்மீது ஏறிக் கொண்டவர்களைக் காப்பாற்றி ஈருலகிலும் நிம்மதியாக வாழச் செய்த அந்தக் கப்பலைப் போன்றவர்கள் என்று கூறப்பட்டதன் மூலம் சங்கை மிகு ஸாதாத்துமார்களும் தம்மைத் தொற்றிக் கொண்டவர்களை எல்லா வகை இன்னல்களிலிருந்தும் காப்பாற்றக் கூடியவர்கள் என்ற பொருளில் மௌலானாமார்கள் என்று அழைக்கிறோம்.

முன் சொன்ன இரண்டாவது ஹதீஸில் ஸாதாத்துமார்களை விண்ணில் பிரகாசிக்கும் விண்மீன்களுக்கு ஒப்பிட்டதுடன் அவர்கள் இவ்வுலகில் இல்லை எனில் இவ்வுலகமே இல்லாமல் ஆகிவிடும் என்றும் வந்திருப்பதால் ஸாதாத்துமார்கள் இவ்வுலகத்திலுள்ளோருக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று விளங்க முடிகிறது. எனவேதான் அவர்களை மௌலானாமார்கள் (எங்களின் பாதுகாவலர்கள்) என்று அழைக்கிறோம்.

அந்தக் கப்பலில் ஏறிக் கொண்டவர்கள் (முழு) வெற்றி அடைந்தான் என்ற வாசகத்தின் மூலம் ஸாதாத்மார்களின் நெருக்கத்தால் நரகத்தை விட்டும் ஜெயம் பெற முடியும் என்று அறிய முடிகிறது. ஒரு அடிமையை சுதந்திரனாமவனாக ஆக்கியவர் அந்த அடிமையின் எஜமானாக ஆகிறார் என்று கூறும் போது நம்மை நரகிலிருந்து விடுதலை செய்து சுவனத்தில் சுதந்திரமாக இருக்க வழிவகை செய்தவர்களான ஸாதாத்துமார்களை நமது எஜமானர்கள் என்று கூறலாம் அல்லவா? எனவே தான் மௌலானாமார்கள் (எங்களின் எஜமானர்கள்) என்று அழைக்கிறோம்.

அஹ்ரார்கள்

அஹ்ரார்கள் என்பதற்கு சுதந்திரமானவர்கள் என்பது அகராதிப் பொருள். அதாவது நரகத்தில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்கள் என்பதாகும். அவர்கள் நரகில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு இரு காரணங்களைக் குறிப்பிடலாம்.

1. இவ்வுலகிலேயே இறைவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக இருப்பது.

2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதம் மிகுந்த சதைத் துண்டிலிருந்து உற்பத்தியானவர்களாக இருப்பது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களை சகல அசுத்தங்களிலிருந்தும் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி விட்டதாக வல்ல ரஹ்மான் வான் மறையில் குறிபிட்டுக்காட்டுகிறான். (அஹ்ஸாப் 33). இறைவனால் இவ்வுலகிலேயே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் எங்ஙனம் நரகம் புக முடியும்?. மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட உதிரத்தை அருந்தியவரைப் பார்த்து நரகம் தீண்டாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கையில் (பத்ஹுல் பாரி புகாரி ஹதீஸ் 4070க்குரிய விளக்கவுரை) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சதைத் துண்டாக இருக்கின்ற பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா (புகாரி ஹதீஸ் எண் 3714-3767) அவர்களையும் அவர்களின் சதைத்துண்டுகளான ஸாதாத்த்துமார்களையும் நரகம் எப்படித் தீண்ட முடியும்?

ஏனைய பெயர்கள்

அவ்லாதுர்ரஸூல் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிள்ளைகள் என்றும் கராபத்துர்ரஸூல் என்றால் நபியவர்களின் சுற்றத்தினர்கள் என்றும் அஹ்லுபைத் என்றால் நபியவர்களின் குடும்பத்தினர்கள் என்றும் தங்கள்மார் என்றால் கண்ணியத்திற்குரியவர்கள் என்றும் குறைஷிகள் என்றால் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அஷ்ராப்கள் என்றால் சிறப்புக்குரியவர்கள் என்றும் பொருளாகும். எனவே ஸாதாத்துமார்களை மேற்கூறிய பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறது.

ஸாதாத்துமார்களை நேசிப்பது ஈமானில் ஒரு பகுதி

1. மேலும் முஃமின்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்தி வைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது சுற்றத்தார்களாகிய அஹ்லு பைத்துக்களிடம் அன்பொழுக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் koorungal. (அல்குர்ஆன் ஷூரா:23)

2. எவன் கை வசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன். எவர் அஹ்லு பைத்துக்களாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும் அவன் ரஸூலுக்காகவும் பிரியம் வைக்கவில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது. (திர்மிதி, மிஷ்காத் 570)

3. அல்லாஹ்வின் அன்பைப் பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள் எனது அன்பைப் பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள். (திர்மிதி, மிஷ்காத் 573)

4. எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். அஹ்லுபைத்துக்களே நம்மை எவராவது கோபப்படுத்தி விட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைந்து விடுவான். (முஸ்தத்ரக் 3-150)

5. உங்களில் குழைந்தைகளுக்கு மூன்று விஷயங்களில் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீப் ஓதி வருதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (தைலமீ - நூருல் யகீன்)

ஸாதாத்துமார்களின் மகத்துவம் குறித்து வந்துள்ள ஹதீஸ்களில் சில

1. பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, மிஷ்காத் 568 ,571 பாபு மனாகிபி அஹ்லில் பைத்தி)

2. "ஸெய்யிதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, மிஷ்காத் பக்கம் 570 பாபு மனாகிபி அஹ்லில் பைத்தி)

3. "மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுபைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம், மிஷ்காத் 567)

4. "என் மறைவுக்குப் பிறகு என் குடும்பத்தாருக்கு நல்லவரே உங்களில் நல்லவர்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மஜ்மஉஸ் ஸவாயித் 9-174)

இப்போது கூறப்பட்ட இறைவசனமும் நபி மொழிகளும் ஸாதாத்துமார்களிடம் அன்பாக நடந்து கொண்டால்தான் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும் என்றும் அவர்களைப் பற்றிப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் அதாவது அவர்களின் சொல் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்கவேண்டும் என்றும் உணர்த்துகிறது. எனவேதான், (ஆதாத்துஸ் ஸாதாத் ஸாதாதுல் ஆதாத்) ஸாதாத்துமார்களின் நடைமுறைகள் நமது நடைமுறைகளுக்கு முன்மாதிரிகள் என்று என்று நமது மூதாதையர்கள் கூறியுள்ளனர். (முக்தஸருல்மஆனி பக்கம் 45, அந்நபாயிஸ் பக்கம் 81)

வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சத்தின் வளமார் விஷேசம்...

இவ்வுலகில் உதித்த வலிமார்களில் பெரும் பான்மையானவர்கள் அஹ்லுபைத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது இந்த வம்சத்தின் பெருமைக்கு ஒரு சிறப்பான எடுத்துக் காட்டாகும். இலட்சக்கணக்கான இதயங்களில் ஈமானிய தீபத்தை ஏற்றி நானிலம் போற்றும் நாதாக்களாக திகழ்கின்ற கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ஷாதுலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, நாகூர் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு போன்ற குத்புமார்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த மகான்களும் இப்புனிதம் நிறைந்த பாரம்பரியத்தில் பூத்த பெருமைக்குரிய புஷ்பங்களாகும்.

ஸாதாத்துமார்களின் சேவை

ஹிஜ்ரீ 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அவர்களின் பேரப்பிள்ளைகளான அஹ்லு பைத்துகள் பஸராவிலிருந்து இடம் பெயர்ந்து உலகின் நாலா பகுதிக்கும் சென்று தீன் பணி புரிந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் வியாபார நோக்கோடும் இப்பாரின் பல பாகங்களுக்கும் சென்று அதனூடே தீன் பணியை நிலை நாட்டியுள்ளார்கள். கவாரிஜ்கள் போன்ற (கொள்கைக் கெட்ட விஷமி) கூட்டத்தாருடன் போராடி இஸ்லாமிய நேரிய கொள்கையான அஹ்லு சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலை நாட்ட கடும் பாடுபட்டுள்ளார்கள். மேலும் நீதியை நேர்மையை நிலை நாட்டுவதற்காகவும் தங்களின் உயிர்களை அர்பணித்துள்ளார்கள். இதற்கு கர்பலா நிகழ்ச்சியொன்றே போதுமான ஆதாரமாகும். தாங்களின் பாட்டனாரால் நாட்டப்பட்ட இஸ்லாம் என்ற விருட்சத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வரும் விஷயத்தில் பேரர்களான அஹ்லு பைத்துகள் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள். தற்போதும் இருந்து வருகிறார்கள்.

தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார் மீது ஸலவாத் சொல்லா விட்டால்...

"நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நாங்கள் எண்களின் தொழுகையில் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லும்போது நாங்கள் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும்?" என்று ஸஹாபா பெருமக்கள் கேட்டபோது தனது குடும்பத்தாரின் மீதும் ஸலவாத்துச் சொல்ல வேண்டுமென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள் என்றும் (முஸ்லிம் ஷரீப் 405வது ஹதீஸுக்குரிய விளக்கவுரை) ஒருவர் நிரப்பமான கூலியைப் பெற வேண்டும் என்று விரும்பினால் அவர், "இறைவா! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் முஃமீன்களின் தாய்மார்களான அவர்களின் மனைவிமார்கள் மீதும் அவர்களின் பிச்சளங்களின் மீதும் அவர்களின் அஹ்லு பைத்துகள் மீதும் ஸலவாத்துச் சொல்வாயாக" என்று கேட்க வேண்டும். (அபூதாவூது, மிஸ்காத் பக்கம் 87)

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்களின் குடும்பத்தாரில் கவனித்துக் கொள்ளுங்கள் (புகாரி ஹதீஸ் எண் 3173) என்றும் ஹதீஸ்கள் வந்துள்ளதால் பெருமானாரின் மீது தொழுகையில் ஸலவாத்துச் சொல்லும் பொது அவர்களின் குடும்பத்தாரின் மீதும் ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்று ஏவப்பட்டுள்ளோம். இந்தக்கருத்தை சுட்டிக்காட்டும் விதமாக, "ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அஹ்லுபைத்துக்களே! உங்களை நேசிப்பதை ஒவ்வொரு முஃமினுக்கும் இறைவன் கடமையாக்கி இருக்கிறான் என்று இறைவசனம் இறங்கியிருப்பதும் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லாவிட்டால் தொழுகையே இல்லை என்று மார்கத்தில் சொல்லப்பட்டிருப்பதும் தாங்களின் உயர்வுக்கு போதுமான ஆதாரமாகும்" என்று சட்ட மாமேதை இமாம் ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்கள். (இஆனா பாகம் 1 பஸ்லுன் ஃபீ ஸிஃபத்திஸ்ஸலாத்தி)

மன்னருக்கு இல்லாத மரியாதை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிசுக்கு உண்டு

ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் என்ற மன்னர் ஹஜ் செய்வதற்காக வந்திருந்த சமயம் புனித கஃபாவை தவாப் செய்து விட்டு ஹஜருல் அஸ்வத் என்ற புனித கல்லை முத்தம் கொடுப்பதற்காக ஆயத்தமானார். மக்கள் நெருக்கடியால் அவர் ஹஜருல் அஸ்வதிற்குப் பக்கத்தில் போக முடியவில்லை. எவ்வளவோ முந்தியடித்துப் பார்த்தும் நெருங்க முடியாமலாகி விட்டது. சிறிது நேரத்தில் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அலீ ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தவாபுசெய்து விட்டு ஹஜருல் அஸ்வதை முத்தம் கொடுப்பதற்காக ஆயத்தமானார்கள். உடனே மக்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டு அவர்களுக்கு வழி கொடுத்து விட்டார்கள். அவர்களும் எவ்வித நெரிசலும் இல்லாமல் நிம்மதியாக ஹஜருல் அஸ்வதை முத்தம் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள். (தபகாதுஸ் ஸாபிஇய்யா பாகம் 1 பக்கம் 291, நூருல் அப்ஸார் 155). இந்த நிகழ்ச்சியின் மூலம் ஸஹாபாக்களும் தாபியீன்களும் புனித கஃபாவை வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட சங்கை மிகு ஸாதாத்துகளை மிகமிக கௌரவித்துள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.

அஹ்லுபைத்துகள்தான் சிறந்த வஸீலாவாகும்

"பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தக் குடும்பத்தினர்தான் நான் இறைவனை சென்றடைவதற்குரிய துணை சாதனமாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொருட்டால் மறுமை நாளையில் எனது பட்டோலை வலது கரத்தில் கிடைக்க வேண்டுமென்று ஆதரவு வைக்கிறேன்" என்று இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நபஸுர் ரஹ்மான் பக்கம் 91)

குர்ஆன் ஷரீபையும் ஹதீஸ்களையும் நன்றாக ஆய்ந்து தெளிந்த இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கு மறுமையில் வெற்றி கிடைப்பதற்கு தமது வணக்கத்தையோ தாம் இஸ்லாத்திற்குச் செய்த அரும் பெரும் சேவைகளையோ உதவிச்சாதனம் என்று கூறவில்லை. மாறாக ஸாதாத்துமார்கள்தான் எனக்கு உதவிச்சாதனம் என்று கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் வணக்கங்களை வாஸீலாவாக்குவதை விட ஸாதாத்துமார்களை வாஸீலாவாக்குவது மிக்க மேலானது என்று உணர முடிகிறது.

நமக்கு நமது சுற்றம் பெரிதா? அல்லது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுற்றம் பெரிதா?

"என் ஆத்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். நபியவர்களின் சுற்றத்தார்களை நான் சேர்ந்திருப்பது எனது சுற்றத்தார்களை விட எனக்கு மிகவும் உகப்புக்குரியதாகும்." என்று ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதுனா அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள். (புகாரி ஹதீஸ் எண் 3712)

ஸெய்யிதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்விலிருந்து

கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். ஒரு நாள் மதீனாவில் தெரு ஒன்றில் வாலிபர்களான ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கலீபாவின் மகனான ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சில நண்பர்களும் உரையாடிக் கொண்டிருந்தனர். பேச்சுக்களிடையே ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவக்றல் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து "உம்முடைய தகப்பனார் கலீபாவாக இருந்துவிட்டால் என்ன? அவர் எனது பாட்டனாரின் அடிமை தானே" என்று இடித்துக் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெட்கம் வந்துவிட்டது. மன வேதனையோடு வீட்டுக்குச் சென்றார்கள். மகன் முகவாட்டமாக வருவதைக் கண்ட கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மகனிடம் கேட்டு விபரத்தைப் புரிந்துக் கொண்டார்கள். ஆவேசம் வந்தவர்களைப் போல் மகனின் கையைப் பற்றிக் கொண்டு ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து உடனடியாக ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைத் தனது மற்றொரு கையால் பற்றிக் கொண்டு, "எனது மகனிடம் சற்று முன்னர் தாங்கள் கூறிய அதே வாசகத்தை மீண்டும் ஒரு முறை கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். இளவல் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு திகைத்துப் போய், கலீபாவை தரக் குறைவாக, அதுவும் தம் பாட்டனாரின் அடிமையென்று கூறியது தவறல்லவா? என்ற மனக்குறையுடன் பதில் கூறாமல் அமைதியாக நின்றார்கள். அப்போது கலீபா அவர்கள் வாலிபர்கள் இருவரின் கரங்களையும் பற்றியவர்களாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழா ஷரீபின் முன் வந்து சேர்ந்தார்கள். அது சமயம் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. தேம்பித் தேம்பி அழுத வண்ணம், "யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னைத் தாங்களுடைய அடிமை என்று தங்களுடைய அருமைப் பேரர் தமது வாயால் கூறிவிட்டார். இதோ அவரும் சாட்சியாக உடன் நிற்கிறார்கள். தாங்கள் அதை ஏற்றுக் கொள்வீராகளாக! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்தவனாவேன்!". இவ்வாறு நெடு நேரம் கூறிக்கொண்டே தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார்கள். (ஹத்யா ஷரீப் பக்கம் 298)

அஹ்லுபைத்துகளை கௌரவித்தவரை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌரவிக்கிறார்கள்

ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆத்ம பக்குவம் அடையுமுன் மிகப் பெரிய மல்யுத்த வீரராக இருந்தார்கள். அவர்களைத் தோற்கடிப்பதற்கு எவராலும் முடியாது என்ற அளவுக்குத் திறமை பெற்றிருந்த காரணத்தால் அரசாங்க மல்யுத்த வீரர் என்று அக்கால அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப் பெரிய அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தார்கள். இப்படி இருக்கையில் அகில உலக மல்யுத்தாவ் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வென்று விட்டால் வென்றவருக்கு மிகப் பெரிய சன்மானங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி போட்டியில் கலந்து கொள்வதற்காக அகில உலகத்திலிருந்து வீரர்கள் வந்திருந்தார்கள். போட்டியும் மிகப் கோலாகலமாக ஆரம்பமானது. போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனர். இறுதியாக ஒருவர் ஓடி வந்து நானும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனால் அவரைப் பார்த்தவுடன் அங்கு குழுமியிருந்த மக்கள் வெள்ளம் கை கொட்டி சிரிக்க ஆரம்பித்தது. மிகவும் மெலிந்தும் நலிந்தும் காணப்படுகின்ற இந்த மனிதர் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறாரே என்று சிரிக்கப்பட்ட ஏளனச் சிரிப்புத்தான் அது. போட்டி ஆரம்பமானது. ஆனால் போட்டியின் முடிவு எல்லோரும் எதிர்பார்த்ததற்கு நேர்மாற்றமாக அமைந்தது. வழமையாக வெல்லக் கூடிய ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெல்லவில்லை. மாறாக அந்த நலிந்த மனிதர்தான் வென்றார்.

காரணம் என்னவெனில் போட்டி ஆரம்பிக்கும் வேலையில் அந்த மெலிந்த மனிதர் ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காதில், "நான் பெருமானாரின் பரம்பரையைச் சேர்ந்த ஸெய்யித் ஆவேன். தற்போதைய சூழ் நிலையில் கடுமையான வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறேன். போட்டியில் வென்றுவிட்டால் அரச சன்மானத்தைப் பெற்று அதன் மூலம் என் துயரத்தைத் துடைத்துக் கொள்ளலாமே என்று ஆதரவு வைத்து இங்கு வந்திருக்கிறேன்" என்று கூறினார். இதைச் செவிமடுத்த ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரின் வழித்தோன்றலை கண்ணியம் செய்வதற்காகவே தாம் தோற்று விட்டது போல பாசாங்கு செய்து அந்த ஸெய்யிதை வெற்றி பெற வைத்தார்கள். அரசால் வழங்கப்படும் அந்த சன்மானத்தைப் பெற்று மிக்க மகிழ்ச்சி அடைந்த அந்த ஸெய்யித் அவர்கள் ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு துஆ செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். அன்று இரவு ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவருடைய கனவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, "ஜுனைதே! எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரியாதை செய்த காரணத்தினால் நீர் சீக்கிரம் எம்முடன் சேர்ந்துவிடுவீர்." எட்ன்று திருவாய் மலர்ந்தருளினார்கள். அன்று காலை நித்திரையில் இருந்து எழுந்த ஜுனைதுல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்முடைய எல்லா ராஜ மரியாதைகளையும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அன்று முதல் துறவத்தை மேற்கொண்டு மிகப் பெரிய ஞானியாக விளங்கினார்கள் என்று அவர்களின் வரலாறு கூறுகிறது.

ஸாதாத்துமார்களைப் பற்றி வாஹ்ஹாபிகள்

ஸாதாத்துமார்கள் என்று இப்போது யாரும் கிடையாது. எல்லோரும் கர்பலாவிலேயே ஷஹீதாகி விட்டார்கள். ஆகவே ஸாதாத்துமார்களுக்கு கண்ணியம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இன்றைய வாஹ்ஹாபிகள் கூறுகிறார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வரலாற்றுத் தெளிவின்மையும் ஒரு முக்கியமான காரணமாகும். ஏனெனில் அஹ்லுபைத்துக்கள் அனைவருமே கர்பலா போர்களத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்று சில சரித்திர ஆசிரியர்கள் மிகைப்புக்காகக் கூறுவதை எதார்த்தமானென்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

உண்மை நிலை என்னவென்றால் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அலீ ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாக்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க கர்பலாப் போர் நடந்த நேரத்தில் கடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால் போரில் கலந்து கொள்ளவே இல்லை என்பது சரித்திரம் தரும் உண்மையாகும். மேலும் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிள்ளைகள் 15 பேரில், உம்மு வலத் என்ற அவர்களின் மனைவிக்குப் பிறந்த அப்துல்லாஹ், காஸிம், உமர் என்ற மூவர் மாத்திரமே ஷஹீதாக்கப்பட்டார்கள். ஆண்மக்கள் 8 பேரில் மேற்கூறப்பட்ட மூவர் நீங்கலாக, உம்மு பிஷ்ர் என்ற மனைவிக்குப் பிறந்த ஸைத், ஹல்வா என்ற மனைவிக்குப் பிறந்த ஹஸன் அல்முதன்னா, உம்மு வலத் என்ற மனைவிக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான், உம்மு இஸ்ஹாக் என்ற மனைவிக்குப் பிறந்த ஹுஸைனுல் அஷ்ரம், தல்ஹா ஆகிய ஐவரும் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெண் மக்களான உம்முல் ஹஸன், உம்முல் ஹுஸைன், பாத்திமா பின்து உம்மி இஸ்ஹாக், உம்மு அப்தில்லாஹ், பாத்திமா, உம்மா ஸல்மா, ருகையா ஆகிய ஏழ்வரும் இன்னும் சில அஹ்லு பைத்துக்களும் ஷஹீதாக்கப்பட வில்லை.

மாறாக கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்கள். மேற்கூறப்பட்ட ஆண்மக்களில் ஐவரில் ஸைது, ஹசன் அல்முதன்னா ஆகிய இருவருக்கும் உரிய பிச்சளங்கள் பிரபல்யமாகும். (நூருல் அப்ஸார் பக்கம் 137)

ஸெய்யிதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழிதோன்றல்கள்

1. அஸ்ஸெய்யித் அலீ ரலியல்லாஹு அன்ஹு
2. அஸ்ஸெய்யித் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு
3. அஸ்ஸெய்யித் ஹஸன் அல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு
4. அஸ்ஸெய்யித் அப்துல்லாஹில் மஹ்ழு ரலியல்லாஹு அன்ஹு
5. அஸ்ஸெய்யித் மூஸா அல் ஜவ்னி ரலியல்லாஹு அன்ஹு
6. அஸ்ஸெய்யித் அப்துல்லாஹி த் தானி ரலியல்லாஹு அன்ஹு
7. அஸ்ஸெய்யித் மூஸா ஸானி ரலியல்லாஹு அன்ஹு
8. அஸ்ஸெய்யித் தாவூது ரலியல்லாஹு அன்ஹு
9. அஸ்ஸெய்யித் முஹம்மத் ஸாஹித் ரலியல்லாஹு அன்ஹு
10. அஸ்ஸெய்யித் யஹ்யஸ் ஸாஹித் ரலியல்லாஹு அன்ஹு
11. அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் ஹந்தகூஸ் ரலியல்லாஹு அன்ஹு
12. அஸ்ஸெய்யித் அபூ ஸாலிஹ் மூஸா ஜங்கி தோஸ்த்ரலியல்லாஹு அன்ஹு
13. அஸ்ஸெய்யித் ஷைகுனா குத்புல் அக்தாப் கௌதுல் அஃழம் முஹியித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
14. அஸ்ஸெய்யித் அப்துர் ரஸ்ஸாக் ரலியல்லாஹு அன்ஹு
15. அஸ்ஸெய்யித் இமாமுத்தீன் ஸாலிஹ் நஸ்ர் ரலியல்லாஹு அன்ஹு
16. அஸ்ஸெய்யித் அபூ நஸ்ர் முஹியித்தீன் ரலியல்லாஹு அன்ஹு
17. அஸ்ஸெய்யித் முஹம்மது லுஹூர் அஹ்மத் ரலியல்லாஹு அன்ஹு
18. அஸ்ஸெய்யித் ஹஸனுல் பகுததி ரலியல்லாஹு அன்ஹு
19. அஸ்ஸெய்யித் முஹம்மதுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு
20. அஸ்ஸெய்யித் அலீ ரலியல்லாஹு அன்ஹு
21. அஸ்ஸெய்யித் மூஸா ரலியல்லாஹு அன்ஹு
22. அஸ்ஸெய்யித் ஹஸன் குத்ஸி ரலியல்லாஹு அன்ஹு
23. அஸ்ஸெய்யித் ஷாகுல் ஹமீதுந் நாஹூரி கஞ்ஜ ஸவாஇ காதிர் வலி ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு
(இன்னும் தொடர்ந்து செல்கிறது) (மவாஹிபுல் மஜீத் பக்கம் 24)

ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றல்கள்

உலகப்பிரசத்தி பெற்ற அரபி அகராதியான முன்ஜிதில், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாரிசுகளைப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதுடன் அவர்களில் ஒவ்வொருவருடைய வழித்தோன்றலுக்கும் உரிய பெயர்களையும் அதில் கூறப்பட்டுள்ளது.

1. ஸெய்யிதுனா அலீ ரலியல்லாஹு அன்ஹு
2. அவர்கள் மகனார் ஸைய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
3. அவர்கள் மகன் அலீ ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு
4. அவர்கள் மகன் முஹம்மதுல் பாகிர் ரலியல்லாஹு அன்ஹு
5. அவர்கள் மகன் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு
6. அவர்கள் மகன் மூஸல் காழிம் ரலியல்லாஹு அன்ஹு
7. அவர்கள் மகன் அலீ ரிழா ரலியல்லாஹு அன்ஹு
8. அவர்கள் மகன் முஹம்மத் ஜவாத் ரலியல்லாஹு அன்ஹு
9. அவர்கள் மகன் அலி ஹாதி ரலியல்லாஹு அன்ஹு
10. அவர்கள் மகன் ஹஸன் அஸ்கரி ரலியல்லாஹு அன்ஹு
11. அவர்கள் மகன் முஹம்மத் மகதி ரலியல்லாஹு அன்ஹு
(இன்னும் தொடர்கிறது)

அஹ்லுபைத்துக்கள் அனைவரும் ஹிஜ்ரீ 61ல் நடை பெற்ற கர்பலாவில் ஷஹீதாகி இருந்தார்களானால் இந்தப்பாரம்பரிய பட்டியல் எப்படி வந்திருக்க முடியும்? மேலும் அலீ ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 33ல் ஷஃபான் மாதம் 5ம் நாள் வியாழக்கிழமை மதீனாவில் பிறந்தார்கள். (அதாவது அவர்களின் பாட்டனாரும் நான்காவது கலீபாவுமான ஸைய்யிதுனா அலீ ரலியல்லாஹு அன்ஹு வபாத்தாக ஈரான்டுக்க்களுக்கு முன்பே பிறந்து விட்டார்கள்.) 57 ஆண்டுகள் வாழ்ந்து 11 ஆண் மக்களையும் 4 பெண் மக்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து ஹிஜ்ரீ 94ல் முஹர்ரம் 12ம் நாள் இவ்வுலகைவிட்டும் மறைந்து ஜன்னத்துல் பகீஇல் தனது பெரிய தகப்பனார் இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது (நூருல் அப்ஸார் பக்கம் 155) சிந்தனைக்குரியதாகும். மேலும் இன்று உலகமெங்கும் பரவி இருக்கின்ற ஹுஸைனி ஸாதாத்துமார்கள் அனைவரும் அலீ ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் உண்டான பிச்சளங்களாகும். எனவே தான் அவர்களுக்கு அபுல் ஹுஸைனிய்யீன் (ஹுஸைனி ஸாதாத்துமார்களின் தந்தை) என்று பெயர் வந்தது என்று தபாகாதுஷ் ஷஃரானி பாகம் 1 பக்கம் 26,31ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அஹ்லுபைத்துக்கள் அனைவரும் கர்பலாக்களத்திலே ஷஹீதாகி இருந்தால் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கொள்ளுப் பேரன் (பேரனின் மகன்) என்று எப்படி ஆகி இருக்க முடியும்? மேலும் அவர்கள் ஹிஜ்ரீ 80ல் பிறந்து 150ல் மறைந்த இமாம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஞானாசிரியராக திகழ்ந்தார்கள் என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையையும் எப்படி வந்திருக்க முடியும்? (தபகாத் பாகம் 1 பக்கம் 32) மேலும் ஸாதாத்துமார்கள் எவரும் இப்போது இல்லை என்று வைத்துக் கொண்டால் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுபைத்துகள் இப்புவியிலுள்லோருக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள், எனது குடும்பம் போய் விட்டால் இந்தப் புவியும் அதிலுள்லோரும் அழிந்து போய்விடுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற்றின் படி (மிஷ்காத் 573) இப்புவி எப்போதோ அழிந்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்குக் குர்ஆனையும் என் குடும்பத்தினரையும் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப்பிடித்து நடக்கின்றவரை வழி தவறமாட்டீர்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீசும் பொய் என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நஊதுபில்லாஹ்.

கியாமத்து நாள் வரை தொடர்ந்து வரும் சந்ததியினர்

"கியாமத் அண்மிக்கின்ற நேரத்தில் என் குடும்பத்தை சார்ந்த ஒருவர் நீதத்தை நிலை நாட்டி நேர்மையான ஆட்சி நடத்துவார்" (மிஷ்காத் 470) என்றும் "மஹ்தி (அலைஹிஸ் ஸலாம்) என் பிச்சளத்தைச் சார்ந்தவர், பாத்திமாவின் பிள்ளைகளிலிருந்து உதிப்பவர்" (மிஷ்காத் 470) என்றும் "உங்களுக்கு நான் இரண்டு கலீபாக்களை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹ்வின் திரு வேதம். அது வானத்திற்கும் பூமிக்குமிடையே நன்கு தொடர்புடையதாயிருக்கும். அடுத்து என்னுடைய வழித் தோன்றல்களான அஹ்லுபைத்துக்கள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்துவிடாது." (அஹ்மத் 5-182) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள் கியாமத் நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

பரிசுத்தமான பாரம்பரியம்

இவ்வுலகில் வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் எவரும் தமது பரம்பரைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து தமது பாரம்பரியப் பட்டியலைப் பாதுகாத்து வைத்திருப்பதில்லை. ஆகவே சிலருக்கு தன தந்தையின் தந்தையுடைய தந்தையின் பெயரே தெரியாது. ஆனால் இவ்வுலகில் பல திக்கிலும் பரவி இருக்கின்ற ஸாதாத்மார்கள் ஒவ்வொருவரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் தாம் வரையுள்ள பாரம்பரியப்பட்டியலை ஆதாரத்துடன் அழகுற கூறுவதைக் காண முடியும். இதுவும் ஸாதாத்மார்கள் இவ்வுலகில் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கும் இடையில் எவ்வித கலப்படமுமின்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தமான உதிரத்தில் உதித்துக்கொண்டு இருப்பவர்கள் என்பதற்கும் நல்ல சான்றாகும்.

அன்பில் திளைத்திருப்போம்

"நபியின் குடும்பத்தார்களே! உங்கள் மீது நான் அன்பு வைப்பதால் சிலர் என்னைப் பாவி என்கின்றனர். வேறு சிலர் காபிர் என்றும் கூட சொல்கின்றனர். ஆனால் எனக்கோ உங்களைத் தவிர வேறெவரும் உற்ற நண்பர்களும் இல்லை. (உங்களில்) சத்திய பாதையைத் தவிர வேறெந்தப் பாதையும் இல்லை" என்று குமைத் என்ற பெரியார் தனது கவிதையில் குறிப்பிடுகிறார்கள். (லுக்கத்துரர் பக்கம் 102) மேலும் அஹ்லு பைத்துகள் பற்றியும் அவர்களின் மகத்துவம் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் நூருல் அப்ஸார் போன்ற கிரந்தங்களில் வந்துள்ளன. ஆகவே நாம் யாவரும் ஸாதாத்துமார்களின் மகத்துவத்தை அறிந்து அவர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வோமாக! அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!


شِلْ شَرِيْعَةً وَلاَتَفْشَلْ اِذِ الشَّرِيْعَةُ
شِرْعَةُ الشَّفِيْعِ عَنْ فُؤَادِكَ الْاَفْشَالِ شَالْ
ஷில் ஷரீஃஅத்தன் வலா தஃப்ஷல் இதிஷ் ஷரீஃஅத்து
ஷிர்ஃஅத்துஷ் ஷஃபீயி ஃஅன் ஃபுஆதிகல் அஃப் ஷாலி ஷால்

பொருள் : (ஷரீஅத்தில் சொல்லப்பட்டுள்ள ஏவல் விளக்கல்களைப் பேணி நடப்பதன் மூலம்) ஷரீஅத்(என்ற கட்டிடத்)தை உயர்த்து. மேலும் (சோர்வு) சடைவு அடைந்து விடாதே. ஏனெனில் இந்த மார்க்கமாகிறது பாவிகளுக்கும் பரிந்துரையாளரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கமாகும். (எனவே மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க அனுஷ்டானங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய பயனையும் பலாபலன்களையும் எடுத்துக்கூறி ஆர்வத்துடிப்பை ஏற்படுத்தி) உன் உள்ளத்தை விட்டும் சோர்வை நீக்கிவிட்டார்கள்.

விளக்கம் : என் அன்பு மகனே! திரும்பவும் உனக்கு சொல்கிறேன். நீ ஷரீஅத்தை பேணி நடந்து வா! எக்காரணத்தை முன்னிட்டும் எந்நிலையிலும் எந்நேரத்திலும் ஷரஜ விட்டுவிடாதே. இந்த மார்க்கம் யாருடைய மார்க்கம் என்று நினைக்கிறாய்? பாவிகளின் பரிந்துரைப்பாளர் (ஷபீயில் முத்னிபீன்) முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளிய மார்க்கம். எனவே எந்நேரத்திலும் சுறுசுறுப்புடன் மார்க்கத்த எடுத்து நடத்தி வா. உன் இதயத்தில் ஏற்படும் சோர்வையும் சடைவையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நீக்கி விடுவார்கள்.

துஆ : யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "ஒருவரின் அவாவும் ஆர்வமும் நான் கொண்டு வந்த மார்கத்தை பின்பற்றக்கூடியதாக அமைகின்ற வரை அவன் பூரண முஃமீனாக முடியாது" என்று கூறியிருக்கிறீர்கள். (மிஷ்காத் பக்கம் 30) யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நாங்களோ மார்கத்தை எடுத்து நடத்துவதில் அசட்டையாகவும் கவனக்குறைவாகவும் இருக்கின்ற பின் தங்கிய ஸமானில் வாழ்ந்து வருகிறோம். ஆகவே யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எங்களின் அவாவையும் ஆர்வத்தையும் ஷரஜப் பின்பற்றி நடக்கக் கூடியதாக ஆக்கி எங்கள் இதயத்தில் ஏற்படுகின்ற சடைவையும் சோர்வையும் போக்கி சுகத்தையும் சுறுசுறுப்பையும் தந்தருள் புரிவீராக! ஆமீன்!

குறிப்பு :

1. "ஷில் ஷரீஅத்" என்பதற்கு ஷரீஅத்(என்ற கப்பலி)ல் ஏறிக் கொள் என்ற அர்த்தமும் இருக்கிறது.

2. மார்க்க அனுஷ்டாங்களுக்குரிய மாண்புகளைக் கூறி மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தி சோர்வை நீக்கினார் என்ற சொற்றொடருக்கு கீழ் வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைவதைக் காணலாம்.

"நிச்சயாமாக நான் உங்களை வெண்மையான (மனமுவந்து பின் பற்றுவதற்கு எளிதான புத்தி பூர்வமான தெளிவான) மார்கத்தின் மீது விட்டு வைத்திருக்கிறேன்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா ஹதீஸ் எண் 43)


صُمْ عَنِ الدُّنْيَا وَضَرَّ تِهَا وَلاَتُفْطِرْ اِذَا
صُمْتَ اِلاَّ حَضْرَةَ الرَّحْمٰنِ بِالْوِصَالِ صَالْ
ஸும் ஃஅனித் துன்யா வழர்ரதிஹா வலா துஃப்திர் இதா
ஸும்த இல்லா ஹழ்ரதர் ரஹ்மானி பில்விஸாலி ஸால்

பொருள் : துன்யாவும் அதன் சக்களத்தியை(ஆகிறத்தை)யும் விட்டு நோன்பு வைத்துவிடு. (அப்படி) நோன்பு வைத்து விட்டாயானால் விஸாலின் (இறை ஒன்றிப்பின்) மூலம் (உன் இதயத்தில்) குதித்து வரும் ரஹ்மானின் திருச்சன்னிதானத்திலேயே தவிர நோன்பைத் திறந்து விடாதே!

கருத்து : இவ்வுலக இன்பங்களையும் மறுமைப் பேறுகளையும் முற்றிலும் மறந்து விட்டு இறைவனின் திருச் சமூகத்தையே நோக்கமாகக் கொள்வாயாக.

விளக்கம் : இவ்வுலகைத் தேடுபவன் ஒரு பெண்ணாக இருக்கிறான். மறுவுலகைத் தேடுபவன்தான் உண்மையான ஆண்மை உள்ளவனாக இருக்கிறான் என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்தியம்பி இருக்கிறார்கள். (குர்ரதுல் அலிஃப் பக்கம் 9) ஆகவே என் அன்பான சிஷ்யனே! இவ்வுலகப் பொருள்களானாலும் மறுமைப் பேறுகளானாலும் அனைத்தையும் விட்டு உன் உள்ளத்தை மறக்கச் செய்து விடு. உன்னையும் அழித்தொழித்து அல்லாஹ்வில் முற்றிலும் ஃபனாவாக்கி அனைத்தையும் அல்லாஹ்வின் மழ்ஹர் என்று கண்டு களிப்பாயாக.

விஸால் என்பது மனிதன் இறைவனுடன் சேர்ந்து விடுதல் என்ற பொருளல்ல. மாறாக இறைவனை இவ்வுலகில் இதயக் கண்ணாலும் மறு உலகில் மண்டைக்கன்னாலும் கண்டுகளிப்பதாகும். (ஸுப்ததுல் அப்ஸார் பக்கம் 127)

துஆ : "இறைவா! நீ இன்றி நான் இல்லை. ஏனெனில் நீயே என்னில் எப்போதும் இருந்து வருகிறாய். அப்படியானால் நான் எங்கே இருக்கிறேன்" என்று கேள்வி கேட்பதன் மூலம் ஏகத்துவத்தின் எதார்த்தத்தை நமது ஷைகுனா குதுபஸ் ஸமான் உமர் வலியுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமக்கு எடுத்துக் கூறுகிறார்கள்.

கல்குக்கு செயல் இல்லை என்று கண்டோர்
ஹக்காக பவ்ஸ் பெற்றார்.
கல்குக்கு ஹயாத்தில்லை என்று கண்டோர்
ஹக்கு பால் கமாலை பொதிந்தார்.
கல்கு, தான் இல்லை என்று கண்டோர்
ஹக்கிடம் வாசிலானார்
காமில் ஒலியுல்லாஹ் என்றறிக

என்று ஷைகுனா உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவான கீர்த்திமிகு கீழக்கரையைச் சேர்ந்த நமது ஷைகுனா தைக்க ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள். (மேற்கூறிய கவியில் கூறப்பட்ட அரபுச் சொற்களின் விளக்கம் : கல்கு - படைக்கப்பட்ட பொருட்கள்; பவ்ஸ் - வெற்றி; கமால் - சம்பூரணம்; வாசிலானார் - சேர்ந்துவிட்டார்)

அவர்களின் பிரத்தியேக சிஷ்யரான ஷைகுனா மஸ்தான் ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாகி
ஒன்றாகி இரண்டாகி உள்ளாகி வெளியாகி
ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகி
கானாகி மலையாகி வளை கடலுமாகி மலை
கானக விளங்குமாகி கங்குல் பகலாகி மதியாக
ரவியாகி வெளி கண்ட பொருளெவையுமாகி நானாகி நீயாகி
அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி நாடுமொளி
புரிய அடியேனும் உமை நம்பினேன் நன்மை செய்தாளுதற்கே
வானொரு மடி பணிதலுள்ள நீர் பின் தொடர
வல்லளிரஸூல் வருகவே
வளரு மரு நிறை குணங் குடி வாழுமென்னிரு கண்மணியே
முஹியித்தீனே

(பாடலில் உள்ள வார்த்தைகளின் பொருள் : ஊன் - உடல்; கானாகி - காடாகி; கங்குல் - இரவு; மதி - சந்திரன்; ரவி - சூரியன்; நாடுமொலிபுரிய - விரும்பும் ஒளி செய்ய; வானொருமடிபணிதலுள்ள - மலக்குமார்களாலும் மதிக்கத்தக்க)

என்று கூறுகிறார்கள். ஷைகுனா தைக்கா ஸாஹிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆன்மீக சிஷ்யரும் அன்பார்ந்த மருமகருமாகிய ஷைகுனா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஹக்கை ஹக்காகக் காணாத வாநாள், துக்கமா மேன்றதால் துனக்கீனீ பில் ஹால்" என்ற கவியின் மூலம் கல்கில் காலிக்கை காணுவது அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள். அன்னாரின் மகனார் ஷைகுனா கல்வத் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ

கள்ளனுமாகி கலவாங்குவான், காவல் காரனாய் தடி
ஓங்குவான்
முன் போய் நின்று குற்றமும் சாட்டுவான்
இல்லையும் என்பான் அந்த கள்ளனுமே

என்ற கவித் தொடரின் மூலம் அனைத்தும் நீயாகவே இருக்கிறாய் என்பதை எளிய நடையில் தெளிவு படுத்துகிறார்கள். ஷைகுனா கல்வத் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களே பிறிதொரு இடத்துள் பின் வருமாறு பகருகிறார்கள்.

வைய்யமதில் பல தோற்றம்
வகைவகையாய் தரிசிக்கில் நாற்றம்
சுத்த மெய்யை தரிசிக்கில் மாற்றம்
சொல்ல யாருண்டு பல் ஹுவ குல்லி

அன்னாரின் கலீபா நாயகம் முஹம்மத் ஸயீது ஜல்வத் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ, "உள்ளது ஒன்று மற்றது அன்று" என்று வஹ்தத்தைப் பற்றி மிகவும் வட்டுசுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஷைகுனா தேவரீர் அம்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஒன்றும் நீயில்லை நீயின்றி ஒன்றில்லை" என்று இரத்தினச் சுருக்கமாக கூறியிருக்கிறார்கள்.

மேலும், "எந்த பொருளையும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தேன் அனைத்து பொருள்களை விட முதலில் அல்லாஹ்வை" என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், "எந்த படைப்பையும் பார்க்கவில்லை, ஆனால் பார்த்தேன் அவற்றில் ஹக்கை" என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், "எந்த பொருளையும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தேன் அல்லாஹ்வை அனைத்து பொருள்களின் பின்னால்" என்று உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், "நான் எந்த வஸ்துவையும் பார்க்கவில்லை, ஆனால் ஒவ்வொரு பொருளிலும் அல்லாஹ்வை பார்த்தேன்" என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியுள்ளார்கள். (நூல்: தசவ்வுப் ரஹ்மானி)

யா அல்லாஹ்! உன் அன்பர்களாகிய இந்நாதாக்கள் வஹ்தத்தைப்பற்றி இவ்வாறெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அவர்களாகவே தன்னிச்சையாகச் சொல்லி விடவில்லை, உன் திருக்குர்ஆன் ஷரீபின் ஆயத்துக்களையும் உன் தூதர் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பொன் மொழிகளையும் ஆணித் தரமான ஆதாரங்களாகக் கொண்டுதான் சொல்லியுள்ளார்கள் என்பதை நீ நன்கறிவாய். ஆகவே யா அல்லாஹ்! எங்கள் ஷைகுமார்கள் ஹுர்மத்தால் வஹ்தத்துடைய எதார்த்தத்தை அறிந்து காணும் பொருளெல்லாம் கர்த்தன் மழ்ஹர் என்று பேணி ஷுஹூத் செய்யும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் ஈந்தருள் புரிவாயாக! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

குறிப்பு :

1. "பில்விஸாலி ஸால்" என்பதற்கு உன்னை பனாவாக்கி விட்ட விஸாலின் மூலம் உண்டான ரஹ்மானின் சமூகத்திலேயே தவிர நோன்பைத் திறந்து விடாதே என்றும் பொருள் உண்டு.

2. இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இஹ்யாவில் நோன்பை மூன்று படித்தரங்களாக பிரிக்கிறார்கள்.

முதலாவது பொதுவானவர்களின் நோன்பாகும். அதாவது உண்ணல் பருகல் இச்சைகளில் ஈடுபடல் ஆகியவர்களிலிருந்து தமது வயிற்றையும் அபத்தையும் பாதுகாத்துக் கொள்வதாகும்.

இரண்டாவது பிரத்தியேகமானவர்களின் நோன்பாகும். அதாவது மேற்கூறிய காரியங்களைப் பேணிக் கொள்வதுடன் ஏனைய உறுப்புகளையும் பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாகும். எனவே ஒரு கெட்ட விஷயத்தை பார்த்தாலோ கேட்டாலோ அதற்காக நடந்தாலோ அவர்களின் நோன்பு முறிந்து விடும்.

மூன்றாவது பிரத்தியேகமானவர்களிலும் பிரத்தியேகமானவர்களின் நோன்பாகும். அதாவது அல்லாஹ்வின் சிந்தனையைத் தவிர மற்ற எந்த நினைப்பும் உள்ளத்தில் வராவண்ணம் மனதை பாதுகாத்துக் கொள்வதாகும். அல்லாஹ்வைத் தவிர மற்ற எந்த நினைவு வந்தாலும் அவர்களின் நோன்பு அப்படியே முறிந்து விடும். (இஹ்யா பாகம் 1 பக்கம் 365). இந்தக் கண்ணியில் குறிப்பிட்டுள்ள நோன்பு மூன்றாவது வகை நோன்பாகும்.

3. "எவர் துன்யாவை விரும்புகிறாரோ அவர் ஆகிறத்தை சக்களத்தியாக ஆக்கிவிட்டார்" என்று ஹதீஸ் (அஹ்மத், ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 8313, மிஷ்காத் பக்கம் 441 கிதாபுர் ரிகாக்) வந்துள்ளதால் இந்த கண்ணியில் மறுவுலகத்தை துன்யாவின் சக்களத்தி என்று சொல்லப்பட்டுள்ளது.


ضَلَّ مَنْ لَمْ يَرْضَ بِالْقَضَا الْفَضَا عَلَيْهِ ضَاقْ
ضَاقَ عَيْشُ مَنْ بِعُدْمِ الذكْرِ لِلْاِفْضَالِ ضَالْ
ழல்ல மன் லம் யர்ழ பில்கழல் ஃபழா ஃஅலைஹி ழாக்
ழாக்க ஃஅய்ஷு மன் பி ஃஉத்மித் திக்ரி லில்யிஃப்ழாலி ழால்

பொருள் : (இறைவன் வகுத்த) விதியைக் கொண்டு பொருந்திக் கொள்ளாதவன் வழி கெட்டு விட்டான். (மேலும்) அவன் மீது (இப்பரந்த) பூமியே நெருக்கமா(இடுக்கமா)கிவிட்டது. இறைவன் அளித்த நிஃமத்துக்களை நினைத்துப் பார்த்து (நன்றியுடன்) நடக்காத காரணத்தால் வழி தவறியவன் வாழ்வும் இடுக்கமாகி விட்டது.

விளக்கம் : "எவர் இறைவனால் வழங்கப்படும் நிஃமத்துக்களுக்கு நன்றிக்கடன் ஆற்றி அவனால் தரப்படும் சோதனைகளை பொறுத்துக் கொண்டு இன்ன பிற மனிதர்களால் செய்யப்படும் அநீதங்களை சகித்துக் கொண்டும் அநீதம் இழைத்தோருக்காக பிழை பொறுக்கவும் தேடுவாரானால்..." என்று சொல்லி வந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று அமைதியாக இருந்து விட்டார்கள். அப்போது ஸஹாபா பெருமக்கள், "யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவருக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன?" என்று வினவினர். அதற்கு "அவர் இவ்வுலகில் நேர்வழி பெற்றவராகவும், மறுவுலகில் அச்சமற்றவராகவும் இருப்பார்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் அளித்தார்கள் என்று ஹதீஸில் வந்திருக்கிறது. (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் 8281). ஆகவே என் அன்பான சிஷ்யனே! அல்லாஹ்வால் ஏற்படும் சோதனையைக் கண்டு கலங்கி விடாமல் இருக்குமாறு உன்னை கடுமையாக எச்சரிக்கிறேன். ஏனெனில் இறை நியதியை பொருந்திக் கொள்ளாதவனும் அல்லாஹ்வால் அருளப்பட்டிருக்கும் பரோபகாரங்களை நினைத்து நினைத்து நன்றி விசுவாசமாக நடக்காதவனும் நிச்சயம் வழிகேட்டில் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்வாயாக! மேலும் அவன் வாழ்க்கையில் நிம்மதியிழந்தே காணப்படுவான் என்பதையும் தெரிந்து கொள்வாயாக!

துஆ : இறைவனே! எங்கள் இதயங்களுடன் கலந்து விடும் படியான விசுவாசத்தையும் உண்மையான உறுதியையும் நாங்கள் உன்னிடம் வேண்டுகிறோம். அப்போதுதான் நீ எங்களுக்கு எதை விதியாக்கினாயோ அதைத் தவிர வேறொன்றும் எங்களைத் தொடாது என்று அறிந்து கொள்ள முடியும். மேலும் நீ எங்களுக்கு நிர்னையித்தவைகளை பொருந்திக் கொள்ளும் பேற்றையும் தந்தருள் புரிவாயாக! ஆமீன். யா அல்லாஹ்! இந்த துஆவை எங்களின் ஆதி பிதா ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் ஓதி உன் சமூகத்தில் அழுது இறைஞ்சி இருக்கிறார்கள். ஆகவே இந்த துஆவின் பரக்கத்தால் எவ்வித இடைஞ்சல்கள் இடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும் எவ்வளவு பெரிய துன்பங்கள் துயரங்கள் மேலிட்ட போதும் கிஞ்சித்தும் சளைக்காமல் உறுதியான ஈமானோடும் இஸ்திரமான இறை நம்பிக்கையோடும் நின்று இலங்குகின்ற மனிதப் புனிதர்களான சங்கைக்குரிய எங்களின் ஷைகுமார்களுடன் எங்களையும் சேர்த்தருள்புரிவாயாக! ஆமீன்!

குறிப்பு : "லில்யிஃப்ழால்" என்ற வார்த்தையில் உள்ள அலிஃபுக்கு பதஹ்-ஸபர் வைத்து "லில்லப்ழால்" என்று வாசித்தால் ஆன்றோர்களான அன்பியாக்கள் அவ்லியாக்களை நினைத்துப்பார்க்காத காரணத்தால் வழி கெட்டவனின் வாழ்வும் கிட்டுமையாகிவிட்டது (நெருக்கடியாகி விட்டது) என்று பொருள் கொள்ள முடியும். இதற்கு ஆதாரமாக நபிமார்களின் சரிதைகளையும் வலிமார்களின் வரலாறுகளையும் அறிந்து அவர்களை நினைவுகூர வேண்டும் என்று ஆர்வமூட்டுகின்ற சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ் ஷரீப்களையும் காணுவோம்.

1. அறிவுடையோருக்கு (நபிமார்களாகிய) இவர்களின் சரித்திரங்களில் நிச்சயமாக படிப்பினைகள் இருக்கிறது. (அல்குர்ஆன் ஸூரத் யூனுஸ்:111)

2. (நபியே!) நாம் அவர்க(அஸ்ஹாபுல் கஹ்பு என்ற குகைவாசிக)ளுடைய உண்மையான சரித்திரத்தை உமக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன் ஸூரத் கஹ்பு:13)

3. இறைவா! நீ இவர்களுக்கு அருள் புரிந்திருக்கிறாயோ அப்படிப்பட்டவர்(களான அன்பியாக்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியவர்)களின் வழியில் எங்களையும் நடத்துவாயாக!. (அல்குர்ஆன் ஸூரத் ஃபாத்திஹா:6)

4. இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே அவர்களின் நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. (அல்குர்ஆன் ஸூரத் அன்ஆம்:90)

5. அவ்லியாக்களான ஆஸிப் இப்னு பர்கியா, துல்கர்னைன், பாத்துஷா, லுக்மான் அலைஹிஸ் ஸலாம், குகைவாசிகள் போன்றவர்களின் சரித்திரங்களையும், 25 நபிமார்களின் சரிதைகளையும், குர்ஆன் ஷரீபில் கூறப்பட்டிருப்பதும் ஆன்றோகளை நினைவு கூர வேண்டும் என்பதற்குப் போதுமான ஆதாரமாகும். இது போன்றே ஹதீஸ் ஷரீபிலிருந்தும் ஒரு சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.

6. "நபிமார்களை ஞாபகம் பண்ணுவது வணக்கமாகும். நல்லோர்களை ஞாபகம் பண்ணுவது பாவப்பரிகாரமாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அல்ஜாமிஉஸ் ஸகீர் பாகம் 2 பக்கம் 299)

7. "என் வழிமுறைகளையும் (எனக்குப் பின்னால் வருகின்ற) நேர் வழி பெற்ற வழிகாட்டிகளான எனது கலீபாக்களின் வழிமுறைகளையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அதன் மீது கடைவாய்ப்பர்க்களைப் போட்டுக் கடித்து(ப் பிடித்துக்) கொள்ளுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (மிஷ்காத் பக்கம் 30)


طِبْ بِطِبٍّ مِنْ طَبِيْبٍ حَاذِقٍ دَاءَالْفُؤَادْ
طَالِبًا طُوْبٰى بِطَابَ طَابَ لِلْاَبْطَالِ طَالْ
திப் திப்பின் மின் தபீபின் ஹாதிகின் தாஅல் ஃபுஆத்
தாலிபன் தூபா பிதாப தாப லில்அப்தாலி தால்

பொருள் : வீரர்களை வென்று வெற்றி வாகை சூடிய தாப் தாப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (வஸீலாவாக்கி) வைத்து மன அமைதியைத் தேடியவனாய் கைத்தேர்ந்த வைத்தியர் (காமிலான ஷைகு) மூலம் சிகிச்சை பெறுவது கொண்டு (உன்) உள நோய்க்கு மருத்துவம் செய்து கொள்வாயாக.

விளக்கம் : என் அன்பு மகனே! இதுவரை உனக்கு பலவாறான உபதேச ரத்தினங்களைச் சொரிந்திருக்கிறேன். அவைகளில் ஆணி முத்தாய் ஒன்றை வலியுறுத்தப் போகிறேன். அது என்ன தெரியுமா? ஒரு சிறந்த ஷைகிடம் சென்று உன் உள நோய்க்கு மருத்துவம் பண்ணி உன் உள்ளத்தை சுத்தி செய்துகொள். ஏனென்றால் ஒரு மனிதருக்குரிய உண்மையான வெற்றி மனதை பரிசுத்தப் படுத்துவதில் தான் இருக்கின்றது என்று ஸூரத்துஷ்ஷம்ஸில் இறைவன் கூறுகிறான். அதுவும் சாதாரணமாகக் கூறாமல் பத்திற்கும் மேற்பட்ட பிரமாணங்களை வைத்துக் கூறுகிறான். "சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக, (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக, (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக- (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக, வானத்தின் மீதும் அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக, பூமியின் மீதும் இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக, ஆத்மாவின் மீதும் அதை செம்மைப்படுத்தியவன் மீதும் சத்தியமாக, எவர் ஆத்மாவை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார். இன்னும் எவர் அதை பாவங்களைக் கொண்டு கலங்கப்படுத்தினாரோ அவர் திட்டமாக நஷ்டமடைந்துவிட்டார்." என்று அல்லாஹ் தனது குர்ஆன் ஷரீஃபிலே (ஸூரத்துஸ் ஷம்ஸ்:1-10) கூறிகிறான். மேலும் அந்த மனபக்குவம் ஒரு ஞானாசிரியர் மூலமே சித்தியாகும் என்பதை குர்ஆனில் இடம் பெற்றிருக்கின்ற மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கும் ஹிழ்ரு அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியின் (ஸூரத்துன் கஹ்பு:60-82) முதலையும் முடிவையும் சிந்தித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

மேலும் பிர்அவ்னிடம் சென்று உன் மனதைப் பரிசுத்தப்படுத்தி நீ உன் ஆண்டவன் பால் சென்றடைவதற்குரிய வழியைக் கட்டட்டுமா? என்று கேட்குமாறு மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான் என்று சூரத்துன் நாஸிஆத் 19-ம் வசனத்தில் இடம் பெறும் விஷயமும் மனத்தூய்மை பெற்று ஞான தீட்சை அடைய ஒரு ஞானாசிரியர் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

மேலும், "நிச்சயமாக மனிதனின் உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது செவ்வையாக இருந்தால் உடல் அனைத்தும் சீர் கெட்டு விடும். அறிந்து கொள் அதுதான் இதயமாகும்." (மிஷ்காத் பக்கம் 241 பாபுல் கஸ்பி வதலபில் ஹலாலி) என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உள்ளத்தைப் பக்குவப்படுத்துவதனால் ஏற்படும் பலனைக் குறித்தும் பாழ்படுத்துவதனால் ஏற்படும் விளைவைக் குறித்தும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே உன் குருநாதராகிய ஷைகு அவர்களுடைய ஸகவாசத்திலேயே இருந்து உன் உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளையும் அசூஸைகளையும் நீக்கி இவ்வுலகிலேயே இறைவனின் பாராட்டுக்களைப் பெற்று நிரந்தர மகிழ்ச்சியில் திளைத்திருப்பாதற்காக முயற்சித்தும் வந்தாயானால் "மாசற்ற கொள்கைகள் மனதினமைந் தாக்கால் ஈசனைக் கட்டுமுடம்பு" என்ற முது மொழிக்கொப்ப மாபெரும் வீரர்களையும் வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் உன் இதயம் பரிசுத்தம் அடைந்து ஒரு கண்ணாடியைப் போன்று காட்சியளிக்கத் துவங்கி விடும். கீழ் வரும் விஷயங்கள் இதற்கு ஆதாரமாக அமைவதைக் காணலாம்.

1. "மனிதர்களுடைய இதயங்கள் மீது ஷைத்தான்கள் சூழ்ந்து கொள்ளாமல் இருந்திருந்தால் வான லோக சாம்ராஜ்யங்களைப் பார்ப்பார்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இஹ்யா பாகம் 3 பக்கம் 14)

2. இறைவன் எங்கே இருக்கிறான் வானத்திலா? அல்லது பூமியிலா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முஃமினான அடியார்களின் இதயங்களில் இருக்கிறான்" என்று பதில் கூறினார்கள். (இஹ்யா பாகம் 3 பக்கம் 14)

3. பூமியோ வானமோ எனக்கு விசாலமாகவில்லை, முஃமினான நல்ல அடியானுடைய இதயம் விசாலமாக இருக்கிறது. (இஹ்யா பாகம் 3 பக்கம் 14)

4. "முஃமினுடைய இதயம் இறைவனின் அர்ஷுப் பீடம்" என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். (குர்ரத்துல் அலிஃப் பக்கம் 29)

5. நிச்சயமாக பூலோகத்தாரிலிருந்து அல்லாஹ்வுக்கு பாத்திரங்கள் இருக்கிறது. அல்லாஹ்வின் பாத்திரங்கலாகிறது அல்லாஹ்வின் ஸாலிஹான நல்லடியார்களின் உள்ளமாகும். (நபஸூர் ரஹ்மான் பக்கம் 66, இஹ்யா பாகம் 3 பக்கம் 13 அத்தக்ரீஜ்)

6. "சத்தியமிட்டுச் சொல்கிறேன். முஃமினின் அந்தஸ்தாகிறது, அல்லாஹ்விடத்தில் கஃபாவைவிடவும் வலுப்பமானதாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மாஜா ஹதீஸ் எண் 3932)

7. நிச்சயமாக காமிலான மனிதர் கஃபாவை விட மிகச் சிறந்தவராகும். அவரின் கரங்கள் ஹஜருல் அஸ்வதைவிட மிக உன்னதமாகும். (ரூஹுல் பயான் பாகம் 9 பக்கம் 23)

துஆ : இஸ்லாமிய கோட்பாடுகளை பூரணமாக கடைப்பிடித்தொழுகுவதற்காக அல்லாஹ் எவர் நெஞ்சத்தை விரிவுபடுத்தி விட்டானோ அவர் தம் இறைவனின் பேரொளியில் இருக்கிறார் (அல்குர்ஆன் ஸூரத்துஸ் ஸுமர்:22). எங்கள் இறைவா! உன் திருமறையில் நீ கூறியிருப்பது போன்று எங்கள் நெஞ்சங்களை நூரால் (ஒளியால்) நிரப்பி எங்கள் கல்புகளை கண்ணாடிகளாக்கி காட்சி தந்தருள் புரிவாயாக! ஆமீன்!

குறிப்பு : "தாப் தாப்" என்பது தவ்ராத் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயராகும்.

வஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு

இந்தக் கண்ணியில் நமது ஷைகுனா குதுபஸ் ஜமதுஸ் ஜமான் உமர் வலியுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வஸீலாவாக ஆக்குமாறு நமக்குக் கூறியிருப்பதை அறிந்தோம். வஸீலா என்பது நல்லமல்கலையோ நல்ல மனிதர்களையோ நல்ல மனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ இறைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவு வைத்தலாகும்.

நல்லமல்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரம்

மூன்று நபர்கள் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கையில் மழைப் பிடித்துக் கொண்டது. உடனே அருகிலுள்ள ஒரு மலைக் குகைக்குள் ஒதுங்கினார்கள். சிறிது நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து அவர்கள் தங்கியிருந்த குகையின் வாசலை நன்றாக அடைத்துக் கொண்டதால் வெளியேற வழியில்லாமல் திகைத்து நின்றனர். அப்போது நாம் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையில் செய்த நல்லமல்களை இறைவன் சமூகத்தில் எடுத்துக்கூறி அவைகளை வஸீலாவாக்கி துஆ செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி முதலாமவர் கூறினார் : இறைவா! எனக்கு வயோதிகமான பெற்றோர்களும் பல சிறு குழந்தைகளும் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் பாலைக் கறந்து என் பெற்றோர்களுக்கு கொடுத்த பின்புதான் குழந்தைகளுக்குக் கொடுப்பது என் வழமையாக இருந்தது. ஆனால் ஒருநாள் வீடு திரும்ப தாமதமாகி விட்டது. வீடு வந்து சேர்ந்தவுடன் அவசரஅவசரமாக பாலைக் கறந்து பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு என் பெற்றோர்களிடம் சென்றேன். ஆனால் அவர்களோ உறங்கிவிட்டார்கள். அவர்களை எழுப்பிக் கொடுத்து விடலாம் என்று பார்த்தால் அவர்களின் உறக்கம் கலைந்து விடுமே என்று எண்ணி எழுப்ப மனமில்லாமல் அபப்டியே பால் பாத்திரத்தை ஏந்திய வண்ணமே நின்று கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய பச்சிளம் குழந்தைகளோ என் காலைச்சுற்றி கொண்டு பசியின் கொடூரம் தாங்காமல் பாலைக் கேட்டுக் கூச்சலிட்டனர். அப்படியிருந்தும் என் பெற்றோர்கள் அவர்களாகவே விழித்து பாலை அருந்தட்டும். அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் பால் பாத்திரத்தை கையில் ஏந்தியவனாய் ஸுப்ஹு வரை நின்றேன். இந்த நற்காரியத்தை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ நன்கு விளங்கியிருக்கிறாய். ஆகவே அந்த நற்செயலை முன்னிலைப்படுத்தி (வஸீலாவாக்கி) வேண்டுகிறேன். என் பிரார்த்தனையை ஒப்புக் கொண்டு இந்த குகையின் வாசலை மூடிக் கொண்டிருக்கும் பாறாங்கல்லை அகற்றி வானம் தெரிகின்ற அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தித் தருவாயாக என்று பிரார்த்தித்தார். அதன்படி அல்லாஹு தஆலா அவரின் துஆவை கபூல் செய்து அந்தப் பாறாங்கல்லை அகற்றி வானத்தின் வெளிச்சம் தெரியும் அளவிற்கு கிருபை செய்தான்.

இரண்டாமவர் தனது துஆப் படலத்தை துவக்கினார். இறைவா! எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்க நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா! இந்த நற்செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ அறிந்திருந்தால் இந்த பாறாங்கல்லை இன்னும் கொஞ்சம் அகற்றித் தருவாயாக என்றார். அதன்படி இறைவன் அகற்றிக் கொடுத்தான்.

இனி மூன்றாமவர் கூறினார் : இறைவா! 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் கிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிட்னால் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா! இந்த நற் செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ விளங்கியிருந்தால் அடைப்பட்டிருக்கிற மீதிப் பகுதியையும் சம்பூரணமாக திறக்கச் செய்வாயாக என்றார். உடனே அல்லாஹு தஆலா அந்தப் பாரங்கல்லை முழுமையாக அகற்றி அவர்கள் வெளி வர உதவி செய்தான். (ம்சுலிம் ஷரீப் பாகம் 2 பக்கம் 353 கிதாபுத் திக்ரி, மிஷ்காத் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலாஹ்)

நல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்

1. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படிப்பட்டவர்கள். (இஸ்ரா 57, ரூஹுல் மஆனி பாகம் 8 பக்கம் 94)

2. "இறைவா! முஜாஹிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் பக்கம் 447, மிர்காத் பாகம் 10 பக்கம் 13)

3. பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள். அதாவது, இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆயிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும். (புகாரி பாகம் 1 பக்கம் 137, மிஷ்காத் 132)

4. "தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உணக்ளுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம் 6170, மிஷ்காத் 582)

மறைந்தவர்களை வஸீலாவாக்கலாமா?

"இறைவா! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னால் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னிப்பாத்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். (தபரானீ பாகம் 2 பக்கம் 22 கிதாபுல் ஜனாயிஸ்)

கண்ணியம் பெற்ற பொருட்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்

1. இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாவது ஒரு பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அமைதியும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூன் உடைய சந்ததியினரும் விட்டுச் சென்றதில் மீதமுல்லதும் இருக்கும். அதை மலக்குகள் சுமந்து வருவர். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது என்று கூறினார். (அல்குர்ஆன் 2:248)

மேற்படி பெட்டியினுள் இருந்த பொருட்கள்

அ. மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் ஆடைகள், பாதணிகள், ஊன்று கோல்.
ஆ. ஹாருன் நபியின் தலைப்பாகை.
இ. நபிமார்களின் இதயங்களை கழுவி சுத்தபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தட்டை.
ஈ. நபிமார்களின் உருவப்படங்கள். (தப்ஸீர் ஜலாலைன் பாகம் 1 பக்கம் 38)

இந்தப் பெட்டியை வஸீலாவாக்கி அதன் பரக்கத்தால் போரில் வெற்றியைத் தேடுவார்கள். (ரூஹுல் பயான் பாகம் 1 பக்கம் 385, தப்ஸீர் அபிஸ்ஸுஊத் பாகம் 1 பக்கம் 241)

2. "பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலமே போர்களங்கள் அனைத்திலும் வெற்றியடைந்தேன்." என்று காலித் ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ்ஸஹாபா)

திருமுடி வழங்கிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கும் வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரிக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)

குறிப்பு : தமது திருமுடிகளை ஸஹாபாக்களுக்கு மத்தியில் பங்கீடு செய்துகொடுக்குமாறு கூறியது அதைவைத்து பரகத் பெற வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

திருமுடியை கௌரவித்த ஸஹாபா பெருமக்கள்

ஸைய்யிதுனா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகும் நேரத்தில் தாம் பாதுகாத்து வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளையும், திரு நகங்களையும், தமது வாயிலும் கண்களிலும் வைத்து தம்மை நல்லடக்கம் பண்ணுமாறு வஸிய்யத் செய்தார்கள். (தாரீகுல் குலபா பக்கம் 185, தாரீகுல் ஆலமில் இஸ்லாமி பக்கம் 49)

குறிப்பு : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியை ஸஹாபிகள் எந்த அளவுக்கு கௌரவித்துள்ளார்கள் என்பதற்கு மேலதிக விவரங்கள் அறிந்துகொள்ள விரும்புவோர் புகாரி பாகம் 1 பக்கம் 29 கிதாபுல் உழுவு - பாபுல் மாவுல்லதி என்ற பாடத்தில் பாரதக் கொள்ளவும்.


ظِلَّ ظِلٍّ ظِلْتَ ظِلُّ الظِّلِّ لاَ ظِلَّ لَهُ
ظِلّاً ظَلِيْلاً ظَلَّلَ الْغَمَامُ فِي الْمَظَالِّ ظَالْ
ளில்ல ளில்லின் ளில்த ளில்லுள் ளில்லி லா ளில்ல லஹு
ளில்லன் ளலீலன் ளல்லலல் ஃக(غَ)மாமு பில்மளாலி ளால்

பொருள் : (நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒளிமயமான தங்களுடைய) எதார்த்தத்தின் (அஸலின்) நிழலாக (பிரதியாக) ஆகிவிட்டீர்கள். (அந்த) எதார்த்தத்தின் நிழலாகிறது அதற்கு அறவே (சூரிய ஒளியில்) நிழலில்லை. (தாங்களுக்கு) மேகம் குடைபிடித்து நேர்த்தியான நிழலைத் தந்தது. (தாங்களோ எங்களுக்கு நாளை மறுமையில் லிவாஉல் ஹம்து புகழ் கொடி என்ற) கண்ணியம் மிகு குடையால் நிழல் தரக்கூடியவர்களாகும்.

விளக்கம் : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "உண்மையாகாவே என்னை நன்மாராயம் சொல்வோனாக அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். என் எதார்த்தத்தை என் ரப்பைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்." (குர்ரதுல் அலிஃப் 24) என்று தாங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆகவே தாங்கள் எங்களுக்கு தங்களுடைய யதார்த்தத்தின் பிரதியைத்தான் காட்டியிருக்கிறீர்கள். மேலும் தாங்கள் இறைவனின் பிரதிபிம்பமானதால்தான் சூரிய ஒளியில் கூட தாங்களுக்கு நிழல் இல்லாமல் ஆகிவிட்டது. தாங்களுடைய நிழல் இம்மண்ணில்பட்டு அதை மற்றவர் மிதிப்பது தாங்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல என்பதால் தான் வல்ல ரஹ்மான் தாங்களுக்கு நிழலையே இல்லாமலாக்கி விட்டான். சூரிய வெப்பம் தாங்கள் மேல் படாமலிருக்க மேகமே தாங்களுக்கு குடிப் பிடித்திருக்கிறது. ஆனால் தாங்களோ எங்களுக்காக மறுமையில் லிவாஉல் ஹம்து புகழ் கொடி என்ற குடையால் நிழல் தருவீர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் கிடையாது

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் நிழலில்லை என்பதாக தக்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் நிச்சயமாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழல் நிலத்தில் விழுவதில்லை. ஏனெனில், அவர்கள் ஒளியாக இருந்தார்கள். எனவே அவர்கள் சூரிய ஒளியில் நடந்தாலும் அல்லது சந்திர ஒளியில் நடந்தாலும் அவர்களின் நிழலைக் காணமுடியாது. இது அவர்களின் விஷேச தன்மைகளில் ஒன்று என இப்னு ஸபஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (கஸாஇஸுல் குப்ரா பாகம் 1 பக்கம் 68)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் போன்ற மனிதர் அல்ல

1. "நிச்சயமாக நான் உங்களைப் போன்றவன் அல்ல" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ பாகம் 2 பக்கம் 1084 கிதாபுஸ் ஸவ்மி)

2. "நான் உங்களில் யாரைப் போன்றும் அல்ல" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், புகாரீ பாகம் 1 பக்கம் 263 கிதாபுஸ் ஸவ்மி, மிஷ்காத் பக்கம் 111)

3. நான் உங்களின் அமைப்பைப் போன்றவனல்ல" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ பாகம் 1 பக்கம் 264 கிதாபுஸ் ஸவ்மி)

4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து, "நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நாங்கள் உங்களுடைய அமைப்பைப் பெற்றவர்கள் அல்ல" என்று ஸஹாபாக்கள் கூறினார்கள். (புகாரீ பாகம் 1 பக்கம் 7 கிதாபுல் ஈமான்)

துஆ : "என் கரத்தில் லிவாஉல் ஹம்து என்ற கொடி இருக்கும். ஆதம் நபி (அலைஹிஸ் ஸலாம்) முதற்கொண்டு மற்றெல்லா நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவரும் கண்டிப்பாக என் கொடியின் கீழ் வீற்றிருப்பார். இது இறைவனால் எனக்கு வழங்கப்பட்ட வெகுமதி என்ற முறையில்தான் சொல்லிக் காட்டுகிறேனே தவிர பெருமைக்காகச் சொல்லவில்லை" என்று நாயகமே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் கூறியிருக்கிறீர்கள். (இப்னு மாஜா ஹதீஸ் எண் 4308, திர்மிதி பாகம் 5 பக்கம் 247 கிதாபுல் மனாகிப், மிஷ்காத் 513). ஆகையால் எங்களையும் தாங்களின் கொடியின் கீழ் அரவணைத்து ஆதரித்தருள்வீராக! ஆமீன்.

குறிப்பு : "ளில்லுள் ளில்லி" என்பதற்கு அகிலத்தையே அரவணைத்துக் காக்கும் அருளாளர் என்றும் பிரிதொரு பொருள் உண்டு.


عَيْنُ عَيْنٍ عَيْنُ حَقٍّ عَيْنُ اَعْيَانٍ فَمَا
عَيْنٌ تَرٰى عَبْدًا عَدِيْلَ مَنْ اِلىَ الْمَعَالِ عَالْ
ஃஅய்னு ஃஅய்னின் ஃஅய்னு ஹக்கின் ஃஅய்னு அஃயானின் ஃபமா
ஃஅய்னுன் தரா ஃஅப்தன் ஃஅதீல மன் இலல் ம ஃஆலி ஃஆல்

பொருள் : (நபியவர்கள்) சமுதாயத் தலைவராகவும் உண்மையி(மார்க்கமி)ன் சூரியனாகவும் நபிமார்களில் நேர்த்தி மிக்கவர்களகாவும் இருக்கிறார்கள். எனவே, (இப்படிப்பட்ட) உன்னதங்(மேன்மை)கள் அளவில் உயர்ந்து கொண்டிருப்பவருக்கு நிகரான எந்த அடியானையும் எந்தக்கண்ணும் பார்க்காது.

விளக்கம் : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் நபிமார்களின் நேர்த்தி மிக்கவர்களாகவும் ரஸூல்மார்களில் கீர்த்திமிக்கவர்களாகவும் எங்களை கை தந்து காப்பாற்றும் காவலராகவும் இன்னும் சொல்லப் போனால் ஹக்கு தன்னுமாகவுமல்லவா இருக்கிறீர்கள். இதற்கு தகைமையும், தகுதியும் பெற்றோங்கும் தாங்களுக்கு நிகராக வேறு எவரைக்காண முடியும்?

குறிப்பு : நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போன்ற உன்னதம் நிறைந்த மனிதரை இவ்வையகத்தில் எங்கும் காண முடியாது என்ற சொற்றொடருக்கு தோதாக சில ஹதீஸ்களைக் காணுவோம்.

1. (நபியே!) தாங்களைவிட என்னிடத்தில் சங்கையான எனக்கு மிகவும் பிரியமான எந்தப் பொருளையும் நான் படைக்கவில்லை. (குர்ரதுல் அலிஃப்)

2. "நானே! முன்னோர் பின்னோர் அனைவரிலும் அல்லாஹ்விடம் சங்கையானவனாக இருக்கிறேன்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதி, மிஷ்காத் 514)

3. நிச்சயமாக அல்லாஹு தஆலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனைத்து நபிமார்களை விடவும் மற்றும் வானுலகிலுள்ளோர் யாவரைவிடவும் சிறப்பாக்கிவிட்டான். (ஹதீஸ் : மிஷ்காத் 515)

4. "நிச்சயமாக அல்லாஹு தஆலா என்னை ஏனைய நபிமார்களைவிட சிறப்பாக்கி விட்டான். மேலும் எனது உம்மத்துக்களை ஏனைய உம்மத்துக்களைவிட சிறப்பாக்கி விட்டான்." என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ் : திர்மிதி பக்கம் 286, நிப்ராஸ்)

5. "நானே ரஸூல்மார்கள் அனைவருக்கும் தலைவராகவும் நபிமார்கள் அனைவருக்கும் முத்திரையானவராகவும் இருக்கிறேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (ஹதீஸ் : மிஷ்காத் 514)

6. "நிச்சயமாக நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவனாகவும் மிக வாய்மைக்குரியவனாகவும் மிக நல்லவனாகவும் இருக்கிறேன்" என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (மிஷ்காத் பக்கம் 226)

7. நபிமார்களில் தலைவர்கள் நூஹ் (அலைஹிஸ் ஸலாம்), இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்), மூஸா (அலைஹிஸ் ஸலாம்), ஈஸா (அலைஹிஸ் ஸலாம்), முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆகிய ஐவர்களாகும். அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த ஐவரிலும் தலைவராகும். (முஸ்தத்ரக் பாகம் 2 பக்கம் 546 கிதாபுத் தாரீக்)

8. "தங்களைவிட எழில் மிக்கவரை எந்தக் கண்ணும் அறவே பார்க்கவில்லை. தாங்களைவிட அழகானவரை எந்தப் பெண்ணும் பெற்றெடுக்கவில்லை. அனைத்து வகையான குறைகளை விட்டும் பரிசுத்தமாக்கப் பட்டவர்களாக படைக்கப்பட்டீர்கள். தங்கள் விரும்பியதைப் போல படைக்கப்பட்டவரைப் போன்று இருக்கிறீர்கள்." (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆஸ்தான கவிஞர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு)

9. மிஃராஜ் நேரத்தில் அனைத்து நபிமார்களுக்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாமாகத் தொழ வைத்ததே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களை விடவும் ரஸூல்மார்களை விடவும் சிறப்பானவர்கள் என்பதற்கு போதுமான சான்றாகும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதி நபி

அல்லாஹு தஆலா முதன் முதலில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ஆன்மாவையும் அதற்குப் பின் ஏனையோரின் ஆன்மாக்களையும் படைத்தான். அதன்பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ஆன்மாவை ஏனைய ஆத்மாக்களின்பால் ரஸூலாக அனுப்பி வைத்து ஏகத்துவத்தை போத்திக்குமாறு பணித்தான். அவர்களின் பரிசுத்த ஆன்மா வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நான் அவனால் அனுப்பி வைக்கப்பட்ட உண்மைத்தூதுவனாக இருக்கிறேன் என்று கூறியது. ஏனைய ஆத்மாக்கள் அனைத்தும் அந்த போதனையை ஏற்று ஈமான் கொண்டு விட்டன. இதைக்குறித்தே, "நான் நபிமார்கள் அனைவரிலும் படைப்பில் முந்தியவனாகவும் நபியாக அனுப்பப்பட்டதில் இருதியானவனாகவும் இருக்கிறேன்." (கஸாயிஸ் பாகம் 1 பக்கம் 3) என்றும், "ஆதம் நபிய(அலைஹிஸ் ஸலாம் அ)வர்கள் மண்ணுக்கும் தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதே நான் நபியாக இருந்தேன்." (மிஷ்காத் பாபு பழாயிளி ஸெய்யிதில் முர்ஸலீன், கஸாயிஸ் பாகம் 1 முதலாம் பாடம்) என்றும், " 'அன நபியுல் அன்பியா' நான் நபிமார்கள் யாவருக்கும் நபியாக இருக்கிறேன்" (ஷரஹ் அகீதத்துத் தஹாவி பக்கம் 48) என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொது நபி

"இவ்வுலகில் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மாத்திரமே நபியாக அனுப்பப்பட்டார்கள். நான் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுபப்பட்டுள்ளேன்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (மிஷ்காத் பக்கம் 512)

ஜின்களின் நபி

அல்லாஹ் அவர்களை மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் நபியாக அனுப்பி வைத்தான். (தாரமி நிப்ராஸ் பக்கம் 278) "நான் படைப்புக்கள் அனைத்திற்கும் ரஸூலாக அனுப்பட்டுள்ளேன்" என்ற ஹதீஸை ஆதாரமாக கொண்டும், மரங்களும், கற்களும், மிருகங்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி என்று சாட்சியம் பகர்ந்ததாக வந்துள்ள ஹதீஸ்களைக் கொண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரங்களுக்கும் செடிகொடிகளுக்கும் கல் கரடுகளுக்கும் மிருகங்களுக்கும் மலக்குகளுக்கும் நபியாக இருக்கிறார்கள் என்று ஆரிஃப்களில் சிலர் கூறுகிறார்கள். (நிப்ராஸ் பக்கம் 279)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனைத்து அறியும்

"வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ள எல்லா வஸ்துவும் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறேன் என்பதை திட்டமாக அறியாமலில்லை. மனிதர்களிலும் ஜின்களிலும் மாறுபாடு செய்பவர்களைத் தவிர" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகி 6-30 தலாயிலுன்னு புல்வத் பாபுன் ஃபீதிக்ரில் பாஈரி)

ஏனைய நபிமார்கள் ஏந்தல் நபியின் பிரதி பிம்பங்களாகும்

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து உயிருக்கும் ஆன்மா உலகில் வைத்தே நபியாக ஆகிவிட்டமையால் இவ்வுலகில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பகரங்களாக (நாயிபாக) இருந்துதான் இவ்வுலகில் செயல்பட்டு வந்தார்கள். எனவே தான் ஒவ்வொரு நபியும் தம் கூட்டத்தாரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமையைப் பற்றி பிரஸ்தாபம் செய்தனர். (நூருல் ழலாம் பக்கம் 25)

நபிமார்களே! உங்களுக்கு ஞானத்தையும் வேதத்தையும் வழங்குகிறேன். உங்களுடன் உள்ளவைகளை மெய்ப்பிக்கின்ற ஒரு ரஸூல் பின்னால் திட்டமாக வருவார்கள். (அப்படி வந்துவிட்டால்) அவர்களைக் கொண்டு ஈமான் கொள்வதுடன் (அவர்களின் வருகை பற்றி உங்களின் கூட்டடார்களிடம் பிரஸ்தாபிப்பதன் மூலம்) அவர்களுக்கு திட்டமாக உதவியும் செய்யவேண்டும் என்று நபிமார்களிடம் (ஆன்மா உலகில்வைத்து) வாக்குறுதி எடுத்ததை நபியே நீர் நினைவுகூரும். (அல்குர்ஆன் 3:81)

பனூ இஸ்ராஈல்களே நிச்சயமாக நான் எனக்கு முன்னாள் உள்ள தவ்ராத் வேதத்தை மெய்பிப்பதற்காகவும் எனக்குப் பின்னால் அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்ற ரஸூல் வருவார்கள் என்ற சுபச் செய்தி சொல்வதற்காகவும் உங்கள்பால் அனுப்பிவைக்கப்பட்ட திருத்தூதராக இருக்கிறேன் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 61:6)

கஃபா பேராலயத்தை கட்டி முடித்த கையுடன் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் அவர்களின் மகனார் இஸ்மாஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களும், எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக என்று பெருமானாரைக் குறித்து பிரார்த்தனை புரிந்தார்கள். (அல்குர்ஆன் 2:129). இதைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நான் பிறக்கும் முன்பே என்னைக் குறித்து என் தந்தை இப்ராஹீம் நபிய(அலைஹிஸ் ஸலாம் அ)வர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நான் இவ்வுலகுக்கு வரும் முன்பே என் சகோதரர் ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் என் வருகையைப் பற்றி சுபச் செய்தி சொல்லியுள்ளார்கள்." என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (கஸாஇஸூல் குப்ரா பாகம் 1 பக்கம் 4, மிஷ்காத் பக்கம் 513).

இதையே நமது ஷைகுனா ஷரபுத்தீன் பூஸிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது புர்தா ஷரீபிலே
وَ كُلُّ أىٍ أَتٍَى الرُّسُلُ الكِرَامُ بِهَا
فَإِ نَّمَا اتَّصَلَتْ مِن نُوْرِهِ بِهِمِ
இவ்வுலகில் உதித்த சங்கைக்குரிய ரஸூல்மார்கள் கொண்டு வந்த அத்தாட்சிகள் அனைத்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளியால் அவர்களுக்குக் கிடைத்தன.
فَإِنَّهُ شَمْسُ فَضْلٍ هُمْ كَوَا كِبُهَا
يُظْهِرْنَ أَنْوَارِهَا لِنَّاسِ فِي الظُّلَمِ
ஏனெனில் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் சிறப்பு என்ற சூரியனாக இருக்கிறார்கள். மற்ற நபிமார்கள் அனைவரும் சூரியனின் பிரகாசத்தைப் பெற்று இரவு நேரத்தில் மின்னுகின்ற நட்சத்திரங்களைப் போன்றவர்களாகும்.

மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றி முன்னுள்ள வேதங்கள்

நபியவர்களைப் பற்றி முன் சென்ற நபிமார்கள் பிரஸ்தாபித்தது போன்றே முன் சென்ற வேதங்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பிரஸ்தாபித்துள்ளன.

அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள், "நான் அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து தவ்ராத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ள புகழாரங்களை எனக்கு அறிவித்துத்தாருங்கள்" என்றேன். அதற்கு அவர்கள், "ஆம், சத்தியமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஷரீபில் வந்துள்ள வர்ணிப்புக்களில் சிலதைக் கொண்டு நிச்சயமாக தவ்ராத்திலும் வர்ணிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்கள்." (புகாரி பாகம் 1 பக்கம் 285 கிதாபுல் புயூவு, புகாரி பாகம் 1 பக்கம் 155 கிதாபுத் தஹஜ்ஜுத், மிஷ்காத் பக்கம் 512)

இது நீண்ட தொடரைக் கொண்ட ஹதீஸாகும். விரிவை அஞ்சி சுருக்கிவிட்டேன். விரும்பியவர்கள் குறிப்பிட்ட இடத்தை எடுத்து பார்த்துக் கொள்ளவும்.

மேலும் கீர்த்தி மிகு கீழக்கரையில் ஆன்மீக கோலோச்சும் சங்கைக்குரிய நமது ஷைகுனா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வித்ரிய்யா ஷரீபிலே பின்வருமாறு கூறுகிறார்கள்.
فَتَّوْرَاتُ وَلإِنْجِيْلُ كُلُّ بِدَرْسِهِ
تَلا وَ زَبُوْر أَنَّهُ خَيْرُ جِنْسِهِ
(மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட) தவ்ராத் வேதமும், (ஈஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட) இன்ஜீல் வேதமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய பாடத்தில் மேலும் (தாவூது நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட) ஸ(ز)பூர் வேதமும் (அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில்) தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இனத்தில் தனிச் சிறப்பு மிக்கவர்கள் என்று ஓதிக்காட்டியது. (காபியத்துல் அலிஃப்)

ஏந்தலின் நுபுவத்திற்கு எண்ணற்ற சாட்சிகள்

தவ்ராத்து, இன்ஜீளின் தெளிவான வார்த்தைகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி வேதக்காரர்கள் சொன்ன நற்செய்திகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போதும் நபியாக அனுப்பப்பட்ட போதும் குறிகாரர்கள் கூறிய செய்திகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பழங்கால கோவில்களின் எழுதப்பட்டிருப்பதும் அவர்களைப் பற்றி ஜின்கள் கூறிய அசரீரியான வாக்குகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்று மஜூஸிகளின் அணையா நெருப்புக் குண்டம் அணைந்து போனதும், கிஸ்ரா மன்னனின் மணி மண்டபம் இடிந்து விழுந்ததும், வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்ததும், வானம் பூமிக்கிடையே ஒரே ஒளிமயமான காட்சியாக இருந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக இருக்கிறார்கள் என்பதற்கு போதுமான சாட்சியாகும். (நிப்ராஸ் பக்கம் 279)

குறிப்பு : "ஃஅய்னு ஃஅய்னின்" என்பதற்கு இவ்வுலகப்பொருட்கள் தன்னாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு பொருள் உண்டு.


غَيْثُ غَيْبٍ غَوْثُ عَالَمٍ غِيَاثُ الْاَصْفِيَا
غَيْنُ قَلْبٍ غَابَ عَنْ حِبٍّ مِنَ الأَشْغَالِ غَالِ
ஃகை(غَيْ)ஸு(ثُ) ஃகை(غَيْ)பின் ஃகௌ(غَوْ)ஸு(ثُ) ஃஆலமின் ஃகி(غِ)யாஸு(ثُ)ல் அஸ்ஃபியா
ஃகை(غَيْ)னு கல்பி ஃகா(غَا)ப ஃஅன் ஹிப்பின் மினல் அஷ் ஃகா(غَا)லி ஃகா(غَا)ல்

பொருள் : (மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) மழையை வருஷிப்பவர்களாகவும் அகிலத்தை இரட்சிப்பவர்களாகவும் ஆன்றோர்களை அரவணைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கல்புக் கறைகளாகிறது எல்லா ஈடுபாடுகளையும் அழித்துவிடும் படியான (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட) அன்பின் காரணத்தால் மறைந்து விடும்.

விளக்கம் : மழையை வருஷிக்கும் வள்ளலே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நபிமார்களைக்கூட தாங்கள்தானே இரட்சிக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் இவ்வையகமே உங்களால்தானே இரட்சிக்கப்படுகிறது. தாங்களின் மீது நாங்கள் தூய்மையான அன்பு கொண்டால் எங்கள் இதயக்கறைகள் அடியோடு அழிந்துவிடுமே.

துஆ : முஃமீன்களுக்கு அவர்களுடைய உயிர்களை விடவும் ஏந்தல் நபி கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏற்றமானவர்கள். அவர்களின் மனைவிமார்கள் முஃமீன்களுக்கு தாய்மார்கள் (அல்குர்ஆன் ஸூரத் அஹ்ஸாப்:6) என்றும், ஒரு முஃமீன் தன தந்தை, பிள்ளை, சகோதர சகோதரிகள், மனைவிமார்கள், உற்றார் உறவினர்கள், சொத்துபத்துக்கள், தொழில் துறைகள், வீடு வாசல்கள் அனைத்தையும் விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்புவைக்காவிட்டால் அவன் அழிந்து நாசமாகிவிடுவான் (அல்குர்ஆன் தவ்பா:24) என்றும் இறைவன் கூறுகிறான். மேலும், "நான் முஃமீன்களுக்கு அவர்களின் உயிர்களைவிடவும் மிக ஏற்றமானவனாக இருக்கிறேன்" (இப்னு மாஜா 2415) என்றும், "நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள் பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் பரிபூரண முஃமீனாக முடியாது" (புகாரீ 14,15; முஸ்லிம் 44-69,44-70; இப்னுமாஜா 67; நஸாயீ 8-114; அஹ்மத் 3-288; மிஷ்காத் 7-12) என்றும் நாயகமே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நாங்களோ தாங்கள் மீது அன்பு வைக்க அருகதை அற்றவர்களாக இருக்கிறோம். தாங்கள் மீது பிரியம் கொள்வதற்கான வகையும் விளங்காதவர்களாக இருக்கிறோம். அப்படியே அரைகுறையாக அன்பு இருந்தாலும் அதையும் தடுத்து நிறுத்துவதற்காக எத்தனிக்கும் பித்தலாட்டக்காரர்கள் நிறைந்த பித்னாவுடைய காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆகையால் யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்களே எங்களின் இதையத்துருக்களை போக்கி தாங்கள் மீது பூரண அன்பு கொள்வதற்கான வழி வகைகளை அமைத்துத்தந்து தாங்களுடைய அன்பார்ந்த ஆஷிக்கீன்களின் அணியில் எங்களையும் சேர்த்து அருள் புரிவீர்களாக! ஆமீன்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசித்தவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனே இருப்பார்

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து, "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கியாமத்து நாள் எப்போது வரும்?" என்றார். அவரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அதற்(கியாம நாளிற்)காக என்ன தயாரிப்பு செய்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வையும் அவனின் ரஸூலை(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை)யும் அன்பு வைத்திருக்கிறேன்" என்றார். "நிச்சயமாக நீ அன்பு கொண்டோருடன் இருப்பாய்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய்மலர கூறினார்கள். "இந்த வார்த்தையைக் கேட்டு நாங்கள் அதிகம் மகிழ்வடைந்ததைப் போல வேறெந்த நேரத்திலும் மகிழ்வடையவில்லை" என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். மேலும், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலை(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை)யும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரையும் அன்பு வைக்கிறேன். அவர்கள் போன்று நான் அமல் செய்யா விடினும் சரியே" என்றும் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 332 கிதாபுல் பிர்ரி வஸ்ஸிலஹ், மிஷ்காத் பாபுல் ஹுப்பி பில்லாஹி)

அன்புக்கு உதாரணம்...

உர்வத் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமுன் ஹுதைபிய்யா உடன் படிக்கையின் போது குறைஷிகளின் தூதுவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சமூகம் தந்தார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் கொண்டிருந்த அன்பையும் கண்ணியத்தையும் கண்டு ஆச்சரியம் அடைந்தவர்களாக குறைஷிகளிடம் சென்று பின் வருமாறு விபரித்தார்கள்.

"குறைஷிக்கூட்டத்தார்களே! நான் பாரசீகம் ரோம் அபிசீனியம் போன்ற நாடுகளுக்குச் சென்று அந் நாட்டு அரசர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அவர்களின் தோழர்கள் கொடுக்கின்ற மரியாதையைப் போன்று வேறெங்கும் நான் காணவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வுலூச் செய்த நீரை முந்தி அடித்துக் கொண்டு எடுத்து அதைக் தங்கள் உடம்புகளில் பூசிக் கொள்கிறார்கள். அவர்கள் காறித் துப்பினாலோ எச்சில் உமிழ்ந்தாலோ தங்கள் கைகளில் ஏந்தி முகத்திலும் உடம்பிலும் தேய்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தலையில் இருந்து முடி உதிர்ந்தால் அதைக் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து மிகவும் மரியாதையாக வைத்துக் கொள்கிறார்கள். எதையேனும் அவர்களுக்கு உத்தரவிட்டால் அதை மிகவும் தீவிரமாக செய்து முடிக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் பேச ஆரம்பித்தால் தங்களுடைய பேச்சை நிறுத்தி விட்டு மிகவும் மரியாதையோடு தலை சாய்த்துக் கேட்கிறார்கள். மரியாதையின் பொருட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்தைக் கூர்மையாகப் பார்க்கமாட்டார்கள்." (அஷ்ஷிபா பாகம் 2 பக்கம் 48 பாபுன் பீ தஃழீமி அம்ரிஹி, பத்ஹுல் பாரி பாகம் 1 பக்கம் 426 பாபுல் புஸாகி வல் முகாதி, புகாரி பாகம் 1 பக்கம் 379 கிதாபுஷ்ஷுரூத்தி-பாபுஷ்ஷுரூத்தி பில்ஜிஹாதி)

துஆ : அல்லாஹ்வின் திருத்தூதரே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எங்கள் நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸலவாத்தும் ஸலாமும் தாங்கள் மீது நிலவட்டுமாக! நாங்கள் எவ்வித சக்தியும் யுக்தியும் இல்லாதவர்களாக இருக்கிறோம். ஆகவே எங்கள் கரம் பிடித்து காப்பாற்றி அருட்கொண்டு பார்த்து எங்களை ஆட்கொள்வீர்களாக! ஆமீன்!


فَاءَ فَيْئٌ لِلَّذِيْ فَاءَ وَفَاءَ وَعْدِ مَنْ
فَاضَ فَيْضٌ فَاتِحًا مِنْهُ لَنَا الْاَقْفَالَ فَالْ
ஃபாஅ ஃபைஉன் லில்லதீ ஃபாஅ வ ஃபாஅ வஃதிமன்
ஃபாழ ஃபைழுன் ஃபாதிஹன் மின்ஹு லனல் அக் ஃபாலி ஃபால்

பொருள் : (வேட்டையாடப்பட்ட) மான் (தன் குட்டிகளுக்கு பால் கொடுக்கச்சென்று விட்டு அது) வேட்டையாடியவனளவில் திரும்பியது. நம்முடைய (இதயப்) பூட்டுக்களை உடைக்கும் வண்ணமும் திறக்கும் நிலையிலும் எவரிடமிருந்து (நேர் வழியின்) நீரூற்று ஒலித் தொடியதோ அவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக (மான் திரும்பியது).

விளக்கம் : நபிகள் நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்களிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மான் கூட வேடனிடம் திரும்பியது. இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்ணுற்ற எத்தைனையோ மானிடர்களின் இதயப்பூட்டுக்கள் திறக்கப்பட்டு ஈமானால் ஈர்க்கப்பட்டு மனிதரில் மாணிக்கமாய் திகழ்ந்தனரே. அப்படி இருக்க தாங்களில் பேரருள் எங்களின் அகப்பூட்டைத் திறந்து எங்களின் உள இருளை நீக்காதோ?

குறிப்பு : "ஃபாஅ ஃபைஉன்" எனபதற்கு (வியாபாரத்திற்கு சென்று) திரும்பி வந்த நபியளவில் (குடைபிடித்த மேகத்தின்) நிழலும் திரும்பியது என்று பிறிதொரு விளக்கமும் இருக்கிறது. மேலும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களில் ஃபாதிஹ் (இதயப்பூட்டுக்களை திறப்பவர்) என்பதும் ஒன்றாகும்.

இதயப்பூட்டு

குர்ஆன் ஷரீபை சிந்திக்க மாட்டார்களா? அல்லது அவர்களின் மீது பூட்டு போடப்பட்டுள்ளதா (அல்குர்ஆன் 47:24) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான். காபிர்களின் இதயப்பூட்டு என்பது குப்ரு என்ற இறைநிராகரிப்பாகும். அதை உடைப்பது ஈமான் கொள்வதன் மூலமாகும். முஃமீன்களைப் பொருத்த வரை இதயப்பூட்டு என்பது பாவத்திரைகளாகும். அதை உடைப்பது திக்ரு (இறைதியானம்), குர்ஆன் ஷரீப் ஓதல் மற்றும் ஸலவாத்துக்களை அதிகமதிகம் ஓதல் போன்றவை களினாலாகும். (குர்ரத்துல் அலிஃப் பக்கம் 28)

துஆ : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "நிச்சயமாக நானே பூமியின் திறவுகோள்களை கொடுக்கப்பட்டுள்ளேன்" (புகாரி பாகம் 2 பக்கம் 951 கிதாபுர் ரிகாக்) என்றும், "நிச்சயமாக பூமியிலுள்ள பொக்கிஷங்களின் திறப்புகள் என்னிடமே உள்ளது" (மிஷ்காத் 512, புகாரி பாகம் 1 பக்கம் 508 கிதாபுல் மனாகிப்) என்றும், "நான் விரும்பினால் தங்க மலைகள் என்னிடம் விரைந்து வந்துவிடும்" (மிஷ்காத் 521) என்றும், "தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பொக்கிஷங்களையும் கொடுக்கப்பட்டுள்ளேன்." (இப்னு மாஜா 3952, மிஷ்காத் பக்கம் 512) என்றும் கூறி இருக்கிறீர்கள். ஆகவே தாங்களுடைய அளவிட முடியா பொக்கிஷப் பேழையிலிருந்து பொன்னையும் பொருளையும் ஈந்து எங்கள் இதயப் பூட்டுக்களைத்திறந்து எங்கள் இதயங்களை ஈமானாலும் யகீனாலும் நிரப்பி ஈருலக நற்பாக்கியத்தையும் தாங்களின் மேலான திருப் பொருத்தத்தையும் தந்தருள்புரிவீர்களாக! ஆமீன்!


قَافٍ قِرَا قُرْبَانِ قُرْبِ قَابَ قَوْسَيْنِ قَرَا
قَافْ وَالْقُرْأٰنِ قَوْلاً قَائِدَ الْاَثْقَالِ قَالْ
காஃபின் கிரா குர்பானி குர்பி காப கவ்சைனி கரா
காஃப் வல்குர்ஆனி கவ்லன் காஇதல் அஸ்(ث) காலி கால்

பொருள் : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காபகவ்ஸைனி யைப் போன்ற ஸ்தானத்தின் நெருக்கம் என்ற விருந்தோம்பலைப் பின்பற்றி செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காஃப் வல் குர்ஆன் என்பதை ஓதிக்காட்டினார்கள். மனிதர்களையும் ஜின்களையும் (சுவர்க்கத்திற்கு) இழுத்துச் செல்லக் கூடிய சொல்லை (கலிமாவை) சொன்னார்கள்.

விளக்கம் : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் விருந்தாளிகளை உபசரித்து அவர்களின் பசியைப் போக்கி இன்புற வைப்பதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். (ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற முதுமொழி கொப்ப) விருந்தாளிகளை வயிறாற உண்ண வைத்து மகிழ்விப்பதில் மிஃராஜிலே தாங்கள் இறைவனுடன் இருந்த இன்பத்தையல்லவா கண்டீர்கள். பிடரி நரம்பை விட மிக நெருங்கி இருக்கிறோம் என்பன போன்ற வசனங்களை உள்ளடக்கிய காஃப் ஸூராவை ஓதிக்காட்டினீர்கள். மனிதர்களையும் ஜின்களையும் நேர் வழிப்படுத்தும் மூல மந்திரமாம் கலிமா தய்யிபாவையும் எங்களுக்கு சொல்லி தந்தீர்கள்.

துஆ : யாரசூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "வயிறாற உண்ண வைப்பதுதான் தானங்களில் தலை சிறந்தது" (மிஷ்காத் 172) என்று தாங்கள் கூறியிருப்பது போன்று விருந்தாளிகளை (ஏழைகளை) உபசரித்து வயிறாற உண்ண வைப்பதில் இன்பம் அடையக்கூடியவர்களாக எங்களையும் ஆக்கியருள்புரிவீர்களாக! ஆமீன்!


كَاف هَا يَآ عَيْنُ صَادٍ قَدْكَفٰى لِمَنْ قَفَا
كَافِيًا كُلُّ الْاُمُوْرِ كَثْرَةِ الْاَشْكَالِ كَالْ
காஃப் ஹா யா ஃஅய்னு ஸாதின் கத்கஃபா லிமன் கஃபா
காஃபியன் குல்லல் உமூரி கஸ்(ثْ)ரதில் அஷ்காலி கால்
பொருள் ஒன்று : காஃப், ஹா, யா, அய்ன், ஸாத் என்ற (அல்லாஹு தஆலாவா)கிறவன் காஃபியவை (நபியை)ப் பின்பற்றக் கூடியவர்களுக்கு (அவருடைய) தோற்றங்களில் அதிகத்திற்கும் (அவர் தன் போன்ற பல வடிவம் எடுப்பதற்கும்) போதுமானவனாக இருக்கிறான். (மேலும் அனைத்து பித்னாக்களை விட்டும் அவரை) பாதுகாக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.

கருத்து : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாக பின்பற்றக்கூடிய நல்லடியாரை அல்லாஹ் தன் நேசராக ஆக்கிக் கொள்வதுடன் அவரை அப்தால்களில் ஒருவராகவும் ஆக்கிக் கொள்கிறான்.

குறிப்பு : அப்தால்கள் பற்றிய விளக்கம் தா(د)லுடைய பாடத்தில் (ஒன்பதாம் கண்ணியில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருள் இரண்டு : அல்லாஹு தஆலாவாகிறவன் எல்லா நிலைகளிலும், போதுமானவர்கலாகவும் (தன்னிலிருந்தே படைப்புக்கள் என்ற) பல தோற்றங்களை வெளியாக்கிவர்களுமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றக்கூடிய (அடிய)வனுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

விளக்கம் : யா ரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்களின் வழிமுறைகளை அடியொட்டி நடப்போர்களுடைய அனைத்துக் காரியங்களுக்கும் பொறுப்பேற்று தாங்களே போதுமாகிவிடுகிறீர்கள். எத்தைனையோ சந்தர்ப்பங்களில் மிகக் குறைவாக இருந்த உணவை தாங்களின் பொற் கரத்தின் பரக்கத்தால் நிரப்பமானதாக்கி வைத்தீர்களே!

துஆ : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நிச்சயமாக நானே இரணமளிப்பவனாகவும் உறுதியான வல்லமை உள்ளவனாகவும் இருக்கிறேன் என்று இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஓதிக்காட்டியிருக்கிறீர்கள். (மிஷ்காத் 453 பாபுத் தவக்குலி) ஆகவே தாங்களே எங்களுக்கு இரண விஸ்தீரணத்தை வழங்கி நோய், நொடி இல்லாமல் காப்பாற்றி சுகமான வாழ்வையும் சௌபாக்கியங்களையும் தந்து ஈருலக நற்பேறுகள் நிறையப் பெற்றவர்களாக ஆக்கி அருள்வீராக! ஆமீன்! ஆமீன்!

குறிப்பு :

1. பல தோற்றங்கள் வெளியாக்கிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பதற்கு, (கன்தக்) அகழி யுத்தம் நடந்த போது மிகக் குறைவாகவே இருந்த ரொட்டிகளையும் இறைச்சிகளையும் ஆயிரம் பேருக்கு அதிகமானோர் உண்ணும் அளவிற்கு அதிகமாக்கிக் கொடுத்த நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்றும் குர்ரத்துல் அலிஃப் என்ற கிதாபில் விளக்கம் எழுதப்பட்டுள்ளது.

2. காப், ஹா, யா, அய்ன், ஸாத் என்பதன் கூட்டு வார்த்தை இறைவனைக் குறிக்கும் பதம் என்று தப்ஸீர் பைழாவில் வந்துள்ளது.

3. தன்னிலிருந்தே படைப்புக்களை வெளியாக்கிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்ற சொற்றொடர் மூலம் உலகப் பொருள் அனைத்தும் உண்டாவதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அஸல் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நமது ஷைகுனா குதுபுஸ் ஜமதுஸ் ஸமான் உமர் வலியுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்த்துகிறார்கள்.

"நபியே! உம்மை அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அன்றி நாம் அனுப்பவில்லை" என்று (ஸூரத்துல் அன்பியா வசனம் 107ல்) அல்லாஹ் கூறுகிறான். மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத்தார் அனைவரும் உயர்வடைவதற்காகவும் நேரிய பாட்டையில் நடந்து நாளை மறுமையில் வெற்றி வாகை சூடுவதற்காகவும் கிரியாம் சங்களை காட்டித்தந்து சுவர்க்கம் புக காரணமாக இருக்கிறார்கள். ஆகவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்தார் உயர்வடைய அருளாக அனுப்பட்டுள்ளார்கள் என்று பெரும்பாலான முபஸ்ஸிர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்திரா விட்டால் இவ்வையகமே வந்திருக்காது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்டானதை வைத்துத்தான் இவ்வுலகமே உண்டானது. ஆகவே இவ்வுலகம் உண்டாவதற்கே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளாக இருக்கிறார்கள் என்று வேறு சிலர் விளக்கம் கூறுகிறார்கள். (ரூஹுல் பயான் பாகம் 5 பக்கம் 529, ரூஹுல் மஆனி பாகம் 9 பக்கம் 100). மேலும், இந்த கருத்திற்கு ஆதாரமாக, "நான் அல்லாஹ்வின் பேரொளியில் நின்றும் இருக்கிறேன். அனைத்துப் பொருளும் என் ஒளியிலிருந்து உண்டானவைகளாக இருக்கின்றன" என்ற ஹதீஸை (குர்ரத்துல் அலிஃப் பக்கம் 28) முன் வைக்கிறார்கள். இந்த விளக்கத்தின் படி தன்னிலிருந்தே அனைத்தையும் வெளியாக்கிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்ற சொற்றொடருக்கு மேற்படி ஆயத்து ஆதாரமாக அமைவதைக் காண முடிகிறது.


لَامَ مَنْ لاَمَ هَوٰى مَنْ لاَمَلَامَ لَهُ فَمَا
لاَمَ اِلّاَ اَنَّ فِيْ اُذْنيَّ وَقْرًا لاَ مَلاَلْ
லாம மன் லாம ஹவா மன் லா மலாம லஹு ஃபமா
லாம இல்லா அன்ன ஃபீ உத்னைய்ய வக்ரன் லா மலால்

பொருள் : எவருக்கு பழிப்பு (பங்கம் ஏற்படுத்த) இல்லையோ அவரின் காதலை (க் கண்டு) பழிப்பவன் பழித்தான். ஏனென்றால் அவன் பழிக்கவில்லை, திட்டமாக என்னிரு காதிலும் செவிட்டுத் தன்மை இருந்தே தவிர. (மேலும் அவர்களின் பழிப்பைப் கேட்டுக் கேட்டுக்) சடைவடைவதல் என்பது இல்லை.

கருத்து : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட என்னை தூற்றுபவன் தூற்றுகின்றனர். அண்ணலாரின் மீது நான் கொண்டுள்ள அளப்பரிய அன்பு என்னிரு காதுகளையும் செவிடாக்கி விட்டதால் அவர்களின் தூசநிப்புகள் என் காதில் விழ வாய்ப்பில்லை. அப்படி விழுந்தாள் அன்றோ நான் சடைவடைவதற்கு?

விளக்கம் : நபிகள் நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் மீது நான் கொண்ட எல்லையில்லாக் காதலைக் கண்டு பழிப்போர் பழிக்கின்றனர். என்றாலும், "ஒன்றின் மீது நீ வைக்கும் தூய்மையான அன்பானது மற்றதை பார்க்க முடியா வண்ணம் உன் கண்ணை குருடாக்கிவிடும்.மற்றவைகளை கேட்க இயலா வண்ணம் உன் செவியை செவிடாக்கி விடும்" (அபூ தாவூத் பாபுன் பில் ஹவா, அஹ்மத் பாகம் 6 பக்கம் 450, மிஷ்காத் பக்கம் 418 பாபுல் முபாகரா) என்று தாங்கள் சொல்லியிருப்பது போல என்னைப் பழிப்போரை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின் தூற்றல்களை செவிமடுத்தும் கேட்பதில்லை. யார் என்னை இழித்துரைத்தாலும் பழித்துரைத்தாலும் எனக்கு தாங்கள் மீது பக்திப் பரவசத்தால் மேலிட்ட பரிசுத்தக் காதலை ஒரு போதும் விடப்போவதில்லை. பழிக்கின்ற பேதைகள் தாங்களின் உயர் மாண்பையும் மகத்துவத்தையும் விளங்கி விடுவார்களானால் அவர்கள் அனைவரும் அடங்கி ஒடுங்கி விடுவர்.

குறிப்பு : "லா மலால் (சடைவில்லை)" என்பதற்கு தூற்றுபவர்களின் தூற்றல்கள் என் காதலரின் நினைவைத் தருவதால் அவர்களின் தூசணிப்புகள் எனக்கு சடைவைத் தரவில்லை, மாறாக சுகமாகவே இருக்கிறது என்றும் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது. (அன் நபாஇஸுல் இர்தழிய்யா பக்கம் 16)


مِيْمٌ وَحَامِيْمٌ وَدَالٌ مَالَ عَنْ كُلِّ الْمَقَامِ
مَقَامَ اَوْاَدْنٰى اخْتِفَا الشُّعُوْرِ لِلْكَمَالِ مَالْ
மீமுன் வஹாமீமுன் வதாலுன் மால ஃஅன் குல்லில் மகாம்
மகாம அவ்அத்னஃக்திஃபஷ் ஷுஃஊரி லில்கமாலி மால்

பொருள் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து மகாம்க(அந்தஸ்துக)ளையும் (கடந்து) அவ் அத்னா என்ற மகாமின் பால் திரும்பினார்கள். (அவ்அத்னா என்ற மகாமாகிறது, தான் என்ற) உணர்வு மறைந்து விடுதலாகும். (மேலும் அனைத்தையும் கடந்து) சம்பூரண (பகாவுடைய) நிலையின் பால் திரும்பினார்கள்.

விளக்கம் : "எந்த நபியும் என்போன்று தொந்தரவு கொடுக்கப்படவுமில்லை. எந்த நபியும் என்போன்று தெளிவடையவுமில்லை." (இப்னு மாஜா 151, மிஷ்காத் பக்கம் 448 பாபு பல்லில் புகராஇ) என்று நாயகமே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்கள் கூறி இருப்பதற்கொப்ப அனைத்து அந்தஸ்துகளையும் அடைந்து ஃபனாவின் இறுதி கட்டமான (اخْتِفَا الشُّعُوْرِ) நானினைவற்றுய்யுதல் (நான் என்ற உணர்விழந்து உய்யுதல்) என்ற மகாமையும் அடைந்து ثُمَّ دَنَا فَتَدَلَّى முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அளவில் ஒன்றித்து பிறகு மனித அமைப்பில் சாய்ந்தார்கள். (அல்குர்ஆன் 52:8) (குர்ரத்துல் அலிஃப்) என்ற ஆயத் கூறுவது போல ஹக்கோடு ஹக்காகி பிறகு "பகா"வுடைய நிலைக்குத் திரும்பினீர்கள். எனவே தாங்கள் ஹக்கியாகவும் மலக்கியாகவும் இன்ஸியாகவும் அல்லவா இருக்கிறீர்கள்.

குறிப்பு :

1. அவ் அத்னா நிலை, பகாவுடைய நிலை, இக்திபா உஷ்ஷுஊருடைய நிலை போன்றவைகளின் எதார்த்தங்களை ஆன்மீக வாதிகளிடம் அண்மித்து அறிந்து கொள்ளவேண்டியது.

2. (اخْتِفَا الشُّعُوْرِ) என்பதன் தமிழாக்கம் நானினைவற்றுய்யுதல் (நான் என்ற உணர்விழந்து உய்யுதல்) என்பதாகும் என்று சங்கைக்குரிய ஷைகு நாயகம் தேவரீர் அல் ஆரிஃபு பில்லாஹ் கம்பம் அம்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

துஆ :

மஹ்லிய்யத்தான தாத்துல் கிப்ரியாவில்
மறைந்த கன்ஸுல் மக்பியாம்
மஸ்கூத்து அன்ஹுல் கதீமுல் அமாவான
மவ்ஜூத்தெனும் ஸிர்பிலே
அஹதுய்யத்துஹதாகி வாஹிய்யத்தான ஆலம்
அர்வாஹானதில்
ஆல மிதாலாகி ஆலம் அஜ்ஸாமான ஆலம்
இன்ஸானான பின்
பஃதில்லா ஜலாலோடு ஜமாலும் பதீவுல் கமாலுமாகி
பஃது கப்லற்ற லாஹூத்து ஜபரூத்தில் பகாவான
ஹூவிய்யத்தினால்
நஹ்ஸிய்யத் அற்று உன் ஆளி நிழல் பெற்றடிமை
நானினைவுமற்றுய்வேனோ
நற்குணங் குடி கொண்ட பாதுஷாவான குரு நாதன்
முஹ்யித்தீனே!

(பாடலில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளின் விளக்கம் : மஹ்லிய்யத்தான தாத்துல் கிப்ரியா - கலப்படமற்ற தெளிவான பெருமை வாய்ந்த உள்ளமை; கன்ஸுல் மக்பியாம் - மறைந்த புதைப் பொருள்; மஸ்கூத்து அன்ஹுல் கதீமு - அதைத் தொட்டும் வாய் திறக்கக்கூடாத பூர்வீகப் பொருள் அல்லாஹு தஆலா ஆத்மாக்களைப் படைப்பதற்கு முன்னுள்ள மர்த்தபா. அதைத்தான் மர்த்தபத்துல் அமா (مرتبت العمي) என்றும் தாதுல் மஹ்ல் (دات المحض) என்றும் ஞானிகள் கூறுவர்) என்று ஷைகுனா மஸ்தான் ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முனாஜாத்து செய்து பிரார்த்தித்து இருக்கிறார்கள். யா அல்லாஹ்! இந்த முனாஜாத்தின் பரக்கத்தால் எங்களனைவருக்கும் ஃபனாவின் நிலையைத் தந்து அதன் இறுதிக் கட்டமான (اخْتِفَا الشُّعُوْرِ) நானினைவற்றுய்யுதல் என்ற நிலையையும் தந்தருள் புரிவாயாக! ஆமீன்!


نُوْنٌ حَكَتْ اَثْنَاءَ هَاثَنَاءَ مَنْ حَوَاجِبُه
نُوْنًا حَكَتْ نُوْنًا رَأٰى ذُواالنُّوْنِ مِمَّا نَالَ نَالْ
நூனுன் ஹகத் அஸ்னா அ ஹா ஸனாஅ மன் ஹவாஜிபூஹ்
நூனன் ஹகத் நூனன் றாஅ துன்னூனி மிம்மா நாலி நால்

பொருள் : எவரின் (இரு) புருவங்களும் நூன் என்ற எழுத்திற்கு ஒப்பாகி விட்டதோ அந்த நபியி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி)ன் புகழை நூன் (என்ற ஸூரா) அதன் நடுவில் சொல்லிக்காட்டியது. துன்னூன் (யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள்) மீனைப் பார்த்தார்கள். மேலும் அவர்கள் அடைந்த (சில சோதனைகளின்) காரணத்தால் (இறைவனிடமிருந்து பல அந்தஸ்துகளை) அடைந்தார்கள்.

விளக்கம் : நூன் என்ற அரபி அட்சரத்தைப் போன்று வளைந்த கூர்மையான மெல்லிய புருவத்தையுடைய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! தாங்களின் திருப் புகழ் பற்றி குர்ஆன் ஷரீப் பல இடங்களில் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நூன் என்ற ஸூரா தாங்கள் நற்குணத்தின் நாயகராக இருக்கிறீர்கள் என்பதை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது. துன்னூனாகிய யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தாம் காண வேண்டிய காட்சிகளையும் பெறவேண்டிய பாக்கியங்களையும் மீன் வயிற்றில் இருந்துதான் பெற்றார்கள். ஆனால் தாங்களோ நேரடியாக அர்ஷுல் முஅல்லாவுக்கே அழைக்கப்பட்டீர்கள். அப்படியிருந்தும், "யூனுஸ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களைவிட என்னைச் சிறப்பித்துச் சொல்லாதீர்கள்" (புகாரி கிதாபுன் பீ பத்இல் கல்க், முஸ்லிம் கிதாபுல் பழாயில் ஹதீஸ் எண் 2376,2377) என்றும், "நபிமார்களுக்கு மத்தியில் என்னை சிறப்பாக்கி விடாதீர்கள்" (புகாரி, மிஷ்காத் பக்கம் 507) என்றும் கூறி இருக்கிறீர்கள் என்றால் தாங்களுடைய பணிவின் தன்மையையும் அடக்கத்தின் அழகையும் கண்டு என்ன சொல்வது!

துஆ : யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "நிச்சயமாக தொழக் கூடியவன் தன் ஆண்டவனிடம் வசனிக்கிறான்" (மிஷ்காத் 81) என்றும், "தொழுகை முஃமீன்களின் மிஃராஜ் ஆகும்" (மிஷ்காத் பக்கம் 81 5-வது ஓரக்குறிப்பு) என்றும் தாங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆகவே யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் மீன் மூலம் மிஃராஜ் அமைந்தது போன்று எங்கள் தொழுகைகளை எங்களுக்கு மிஃராஜாக ஆக்கித் தந்தருள்புரிவீராக! ஆமீன்!

குறிப்பு :

1. இந்தக் கண்ணியில் யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களை குறிப்பிட்டிருப்பதற்குரிய காரணமாகிறது இங்கு பேசப்பட்டு வரும் நூன் என்ற எழுத்திற்கு நேர்பட்டதாக யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களைக் குறிக்கும் துன்னூன் என்ற வார்த்தையையும் மீனைக் குறிக்கும் நூன் என்ற வார்த்தையும் அமைந்திருப்பதால் இருக்கலாம். (துஹ்பதுல் அலிஃப்)

2. நூன் ஸூராவில் (وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ) நபியே நீங்கள் மிகவும் உயர்ந்த குணத்தில் இருக்கிறீர்கள் என்று வந்துள்ளதால் ஏனைய நபிமார்களும் அதே அந்தஸ்தில் தான் இருப்பார்கள் என்று ஏற்படுகின்ற எண்ணத்தை நீக்கி நபிமார்களில் எவரும் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று குணத்தின் குன்றாக பொறுமையின் சிகரமாகத் திகழவில்லை என்பதை உணர்த்துவதின் நிமித்தம் எடுத்துக்காட்டாக யூனுஸ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களைக் கூறி இருக்கலாம். (குர்ரத்துல் அலிஃப்)


وَاهًا لِسَلْمٰى سَلَّمَتْ اَحْبَابَهَا مِنَ السِّوٰى
وَاهًا لِمَنْ مِنْهَا وِلَايَةً عَلَى الْمِنْوَالِ وَالْ
வாஹன் லிசல்மா சல்லமத் அஹ்பா பஹா மினச் சிவா
வாஹன் லிமன் மின்ஹா விலாயத்தன் ஃஅலல் மின்வாலி வால்

பொருள் : மற்றவர்களிலிருந்து (பிரித்து) தன் காதலர்களை (மாத்திரம்) தனியாக்கிக் கொண்ட சல்மாவைக் குறித்து ஆச்சரியப்படுகிறேன். (அவளுடைய) போக்கின் (மார்க்கத்தின்) படி (நடந்து) அவளிடமிருந்து விலாயத்தை (நெருக்கத்தைப்) பெற்றுக் கொண்டவர்களைக் குறித்தும் ஆனந்தமடைகிறேன்.

கருத்து : ஒரு காதலி எப்படி தன் காதலனுக்கு என்று தனி இடம் வைத்திருப்பாளோ அதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன்னை நேசிப்பவர்களை விஷேசமாக கவனிப்பார்கள். அந்தக் தன்மையை அடைய வேண்டுமானால் ஷரீஅத்தை முறையாக பேணி நடக்க வேண்டும்.

விளக்கம் : இதுவரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய புகழாரங்களைப் பாடிவந்த ஷைகுனா குதுபஸ் ஜமதுஸ் ஜமான் உமர் வலியுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த பைத்தில் காத்தமுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தம் காதலியாக சித்தரித்து சம்பாஷிக்கிறார்கள்.

என் அன்பு நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உங்களைக் காதலிக்கும் பல்லாயிரம் கோடிப் பேரில் நீங்கள் விரும்பியவர்களை மட்டும் விஷேசமாக கவனிப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உங்கள் காதலர்களும் நீங்கள் விரும்புவது போன்று உங்கள் ராஜ பாட்டையில் வீறு நடை போட்டு வெற்றியடைந்து உங்கள் அன்புக்கு எங்கனம் பாத்திரமானார்கள் என்பது பற்றி அதிசயம் அடைகிறேன்.

துஆ : இறைவா! உன் திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எங்களுக்கு மிகவும் உகந்தவர்களாக ஆக்கி செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீர்மிகு ஷரீஅத்தில் செவ்வையாக நடந்தேறிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரத்தியேக காதலர்கள் கூட்டமான ஆஷிக்கீங்களின் கூட்டத்தில் எங்களனைவரையும் சேர்த்தருள் புரிவாயாக! ஆமீன்!


هَادٍ هُدَاهُ قَدْ هَدَى مَنِ اقْتَدَى سُبْلَ الْهُدٰى
هُوْدٌ شَفِيْعًا شيَّبَتْ بِفَاسْتَقِمْ مَاهَالَ هَالْ
ஹாதின் ஹுதாஹு கத் ஹதா மனிக்தத சுப்லல் ஹுதா
ஹூதுன் ஷபீஃஅன் ஷய்யபத் பி ஃபச்தகிம் மா ஹாலி ஹால்

பொருள் : (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மை நாயனளவில்) சேர்பிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய நேர்வழி (மார்க்கம்) நேரான பாதைகளைப் பின்பற்றுபவனுக்கு நேர் வழியைக் காட்டி விட்டது. ஹூத் ஸூராவாகிறது பஸ்தகிம் (என்ற ஆயத்தால் ஷபீவு (பாவிகளுக்கு பரிந்துரைக்கும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நரைக்கச் செய்து விட்டது. (அவர்களை) திடுக்கிடச் செய்தவைகள் திடுக்கிட வைத்து விட்டன.

விளக்கம் : நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தாங்களின் நேரிய நெறி முறைகள் நல் வழியை நாடுவோரை உய்விக்கச் செய்கிறது. ஹூத் என்ற ஸூராவோ "பஸ்தகிம்" (நபியே! இஸ்தீரமாக இருப்பீராக) என்ற ஆயதத்தால் தாங்களை நரைக்கச் செய்து விட்டது.

துஆ :

நபியே! இஸ்தீரமாக இருப்பீராக என்று அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவா! நீ அருட்கட்டளை விதித்திருப்பதற் கொப்ப ஈமானிலும் இபாதத்திலும் இர்பானிலும் வஹ்தத்திலும் எங்களனைவரையும் ஸ்திரப்படுத்தி வைப்பாயாக! ஆமீன்!

யா அல்லாஹ்! அஹ்லு சுன்னத் வல் ஜமாஅத்துடைய உண்மையான கோட்பாட்டின் கீழ் எங்களைவாழச் செய்து தவ்பாவோடும் ஈமானோடும் இறக்கச் செய்தருள்வாயாக! ஆமீன்!

யா அல்லாஹ்! இர்பான் (மெய்ஞானம்) என்ற பேரொளியின் மூலம் எங்கள் இதயங்களை உயிர்பிக்கச்செய்தருள்வாயாக! ஆமீன்!

எங்கள் இதயங்களை திருப்பிக்கொண்டிருப்பவனே! எங்கள் உள்ளங்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவனே! எங்களின் இதயங்களை உன் மார்கத்திலேயும் உனக்குக் கட்டுப்பட்டு வழிபாடு செய்வதிலும் உன்னை அறிந்துணர்வதில் உன் திரு தரிசனையளவில் ஆசை கொண்டிருப்பதிலும் தரிப்படுத்தி வைப்பாயாக! ஆமீன்!


لاَاِلٰه اِلَّا اللهُ لاَحَ نُوْرُ هَالِمَنْ
لاَاِلٰى غَيْرٍ يَمِيْلُ لاَعِيَالٍ لاَ اِلاَلْ
லா இலாஹ இல்லல் லாஹு லாஹ நூரு ஹாலிமன்
லா இலா ஃகை(غَيْ)ரின் யமீலு லா ஃஇயாலில் லா இலால்

பொருள் : (அல்லாஹ் அல்லாத) மற்றவரின் பக்காமோ குடும்பத்தார் கோத்திரத்தார் பக்கமோ சாயாமல் (ஈமானில் ஸ்திரமாக) இருப்பவருக்கு லாலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் பேரொளி சுடர் தந்தது.

விளக்கம் : விசுவாசிகளே உங்களின் பொருட் செல்வங்களோ பிள்ளைச் செல்வங்களோ அல்லாஹ்வின் ஞாபகத்தைவிட்டும் உங்களை வீணடித்து விட வேண்டாம் என்று குர்ஆன் ஷரீப் (ஸூரா முனாபிகூன்) எச்சரித்திருப்பது போன்று எவர் அல்லாஹ்வைத் தவிர சொந்த பந்தங்களிலும் சொத்து பத்துக்களிலும் சாயாமல் இருக்கிறாரோ அவரின் இதயத்தில் தான் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற திருக் கலிமாவின் பேரொளி சுடர் விட்டு பிரகாசிக்கும்.

துஆ :

இல்லல்லாஹுவென்றே நானிராமல் இணைபடவு
மிருந்தேனே
மெத்த நல்ல நோன்புடன் தொழுகையையும் விட்டு
நலன்களையும் மறந்தனே
தன்னை வெல்லுங் குர்ஆன் சொல்லிய தீட்சைவினவாமல்
விட்டிருந்தேனே
அதை அல்லும் பகலும் அறியாமல் என்னுள்ளே ஆபாசமாக்
குவித்தேனே
இது எல்லா மறந்திடுந்தானே சொல்லுஞ் சொல்லுஞ்
சொல்லும் லாஇலாஹ இல்லல்லாஹு வென்றொன்னை
மறந்துகொண்டிருப்பாய் என் நெஞ்சமே

என்று ஷைகுனா மஸ்தான் ஸாஹிப் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இத்திரு வசனத்தின் பரக்கத்தால் இறைவா! உன்னையன்றி மற்றவைகள் அளவில் சாயாமல் காத்து எங்கள் இதயங்களில் லாஇலாஹ இல்லல்லாஹு என்ற திருக்கலிமாவைத் துலங்கச் செய்வாயாக! ஆமீன்!

தனக்கு நிகர் தானாகவே உள்ள நித்திய ஜீவனாகிய ஆண்டவனே! நீயே எங்களை துஷ்டர்களுடைய தாக்குதலை விட்டு தற்காக்கும் போர் சட்டையாகவும் மூடத்தனமாக குதர்க்கம் செய்யும் மூர்க்கர்களான நவீனவாதிகளுடைய எதிர்புக்களைவிட்டு பாதுகாக்கும் அரணாகவும் ஆகி எங்களைக் காப்பாற்றியருள் புரிவாயாக! ஆமீன்!


يَا اِلٰهِيْ صَلِّ سَلِّمْ مَعَ تَحِيَّاتٍ عَلٰى
يَاسِيْنَ سِرِّ الذَّاتِ مَااسْتَهْتَرَ اَوْلِيَا لَيَالْ
யா இலாஹி ஸல்லி சல்லிம் மஃஅ தஹிய்யதின் ஃஅலா
யாஸீன சிர்ரித் தாத்தி மச்தஹ்தர அவ்லி யா லயால்

பொருள் : என் இறைவா! உன் நேசர்களான அவ்லியாக்கள் இராக்காலங்களில் விழித்திருந்து வணங்கும் காலமெல்லாம் உன் அருட் பிழம்பமான யாஸீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது (கணக்கில் அடங்கா) காணிக்கைகளுடன் உன் ஸலாத்து என்ற கருணையையும் ஸலாம் என்ற ஈடேற்றத்தையும் சொரிவாயாக.

குறிப்பு : "இச்தஹர" வில் உள்ள ரேயிக்கு ஷத்து வைத்து "இச்தஹர்ர" என்றும் வாசிக்க முடியும். அதன்படி இரவு நேரங்களில் இறைவனின் நினைவால் அவ்லியாக்கள் (அழுது புலம்பி) சப்தமிடும் காலமெல்லாம் உன் ஸலவாத்தைச் சொரிவாயாக என்று பொருள் வரும்.


اٰ نَاءَهَا وَالْاٰلِ وَالْاَوْلاَدِ وَالْصْحَابِ وَالْ
اَبْدَالِ وَالْاَوْتَادِ وَالْاَقْطَابِ مَالْخِتَامُ تَامْ
ஆனா அ ஹா வல்ஆலி வல்அவ்லாதி வல்அஸ்ஹாபி வல்
அப்தாலி வல்அவ்த்தாதி வல்அக்தாபி மல் ஃகிதாமு தாம்

பொருள் : மேலும் ஆல் அஸ்ஹாபுகள் பேரிலும், அவ்லாதுர் ரஸூல்கலான (ஸாதாத்துமார்கள்), அக்தாப்கள், அவ்தாதுகள் அப்தால்கள் பேரிலும் முத்திரை நிறைவுறும் காலமெல்லாம் அதனுடைய (இரவுடைய) நேரங்கள் அனைத்திலும் (உன் ஸலாத்தையும் ஸலாமையும் சொரிவாயாக! ஆமீன்)

உன் அரசு நிலைக்கும் காலமெல்லாம் உன் அறிவின் தொகைக்கு உனது ஹபீப் எங்கள் எஜமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் ஆல் தோழர் பேரில் ஸதா சாந்தியும் கருணையும் பொழிந்தருள்வாயாக. ஆமீன்.

குறிப்பு :

1. அப்தால்கள், அக்தாபுகள், அவ்தாதுகள் பற்றிய விளக்கம் தா(د)லுடைய பாடத்தில் (ஒன்பதாம் கண்ணியில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ஸாதாத்துமார்களைப் பற்றிய குறிப்பு சீ(س)னுடைய பாடத்தில் (பதிமூன்றாம் கண்ணியில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸஹாப்பாக்களின் சிறப்பு

"எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் சிறந்தவர்களாகும்." என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர அருளியுள்ளார்கள். (நஸயீ, மிஷ்காத் 554)

ஸஹாபிகள் சமுதாய பாதுகாவலர்கள்

"விண்மீன்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். (அந்த) விண்மீன்கள் போய் விட்டால் வானத்திற்கு வாக்களைக்கப்பட்டவைகள் வந்து விடும். நான் என் ஸஹாபாக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன். நான் போய் விட்டால் என் ஸஹாபாக்களிடத்தில் அவர்கள் வாக்களிக்கப்பட்ட(பிரச்சனை, போர் போன்ற)வைகள் வந்து விடும். என் அஸ்ஹாபுகள் என் சமுதாய மக்களுக்கு பாதுக்காப்பாகும். எனவே என் அஸ்ஹாபுகள் போய்விட்டால் என் சமுதாய மக்களிடத்தில் அவர்களுக்கு (நன்மைகள் நலிந்து தீமைகள் தலை தூக்கும் என்ற) வாக்களிக்கப்பட்டவைகள் வந்து விடும்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 308 கிதாபு பலாஇலிஸ் ஸஹாபா ஹதீஸ் எண் 2531, மிஷ்காத் பக்கம் 553)

ஸஹாபிகளின் கப்ருகள் நமது பேரொளிகள்

"என்னுடைய ஸஹாபாக்களில் நின்றும் ஒருவர் ஒரு பூமியில் (ஒரு இடத்தில்) வபாத் ஆகுவதில்லை; அவர்கள் அந்த பூமியை உடையோருக்கு கியாம நாளையில் பேரோளியாகவும் சுவனம் கூட்டிச் செல்பவராகவும் இருந்தே தவிர" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (திர்மிதி, மிஷ்காத் 554)

ஸஹாபாக்களின் தனித்துவம்

"என் ஸஹாபாக்களை சபிக்காதீர்கள்! ஏனெனில் நிச்சயமாக உங்களில் ஒருவர் உஹதுமலை அளவு தங்கத்தை தானம் செய்தாலும் அவர்களில் ஒருவருடைய (கோதுமையின்) ஒரு சிரங்கையளவுக்கோ அல்லது அதன் பாதி அளவுக்கோ நிகராகாது." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (புகாரி 3673, முஸ்லிம் 2541, மிஷ்காத் 6007)

ஸஹாபிகளும் தாபிஈன்களும் சுவனவாதிகள்

"என்னை பார்த்தவரையும் என்னை பார்த்தோரைப் பார்த்தவரையும் நரகம் தீண்டாது." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (திர்மிதி, மிஷ்காத் 554)

ஸஹாபிகளின் சேவை சமுதாயத்திற்குத் தேவை

"எனது உம்மத்துக்களுக்கு ஸஹாபாக்கள் உணவுக்கு உப்பைப் போன்றவர்கள். உப்பின்றி உணவு சரியாகாது." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (மிஷ்காத் 554)

நபித்தோழர்கள் நமது வழிகாட்டிகள்

எனது தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். ஆகவே அவர்களில் யாரைப் பின் பற்றினாலும் நேர்வழி அடைந்து விடுவீர்கள்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் தோழர்கள் பற்றி தவ்ராத் வேதம்

முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்பவர்களோ நிராகரிப்போர் மீது மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள், (குனிந்து) ருகூஉ செய்பவர்களாகவும் (சிரம் பணிந்து) ஸுஜூது செய்கிறவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து பேரருளையும் (அவனுடைய) பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களுடைய அடையாளம் சிரம் பணிவதன் அடையாளத்தினால் அவர்களின் முகங்களில் இருக்கும். இதுவே தவ்ராத் வேதத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும். (அல் பத்ஹ் 29)

ஸஹாபாக்கள் பற்றி இன்ஜீல் வேதம்

இன்னும் இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் முளையை வெளிபடுத்தி பின்னர் அதை பலப்படுத்துகின்றது. பின்னர் அது (தடித்து) கனமாகின்றது. பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. விவசாயிகளை ஆச்ச்சரியமடையச் செய்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணங்கள் கூறுகிறான்) அவர்களின் விசுவாசம் கொண்டு நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கிறான். (அல் பத்ஹ்)

ஸஹாபிகளைப் பின் பற்றியவன் சுவனம் செல்வான்

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (ஈமான் கொள்வதில்) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும் (அவர்களின் சொல் செயல்களாகிய நற்கருமத்தில்) பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான். அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள். அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் ஸூரா தவ்பா:100)



மூலம் : ஷைகுனா குதுபஸ் ஜமதுஸ் ஜமான் உமர் வலிய்யுல் காஹிரி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அல்லஃபல் அலிஃப் பைத்

தமிழாக்கம் : "அகமியம் பொங்கும் அல்லஃபல் அலிஃப்" ( ஆசிரியர் : மௌலவி முஹம்மது ஜவாஹிர் ஹுஸைன் ஜல்வத்தி)


ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.