Posted by : kayalislam Thursday, 15 November 2012


ஆளும் இறைவன் தூதர் நபி அன்பே வடிவாம் நாதர் நபி
நாளும் போற்றும் வேதர் நபி நன்றே செய்யும் நீதர் நபி

மக்கத்துதித்த காஸிம் நபி மதீனத் துறையும் தாஸிம் நபி
மிக்க கிளையில் ஹாஷிம் நபி மேலோன் மறையில் யாஸீன் நபி

அப்துல்லாஹ்வின் செல்வர் நபி ஆமினாவின் பாலர் நபி
அப்துல் முத்தலிப் பேரர் நபி அருமபுதாலிப் சீலர் நபி

பாலை மணலில் உழலும் நபி பாலை ஹலீமா நலமு நபி
காலைக் கதிரோன் குலவு நபி காரிருள் போக்கும் நிலவு நபி

வானோர் வாழ்த்த வந்த நபி வையகம் போற்றும் சிந்தை நபி
தீனோர் செல்வம் தந்த நபி திகழும் உலகில் சொந்த நபி

செவியில் பாங்காய் ஏறு நபி செம்மை நாவில் ஊறநபி
புவியின் ஞானப் பேறுநபி புனிதர் வாழ்வின் நூறு நபி

வல்லானிடத்தே கற்ற நபி வற்றா ஊற்றைப் பெற்ற நபி
நல்லார் அன்பை பற்று நபி நலமாம் அனைத்தும் உற்ற நபி

வெம்மை நாட்டில் பிறந்த நபி வெண்மதி அதிலும் சிறந்த நபி
செம்மை ஆட்டை கரந்த நபி செல்வ வாழ்வை துறந்த நபி

அகில் கற்பூரம் அடையு நபி அம்பர் மணமும் மிடையுநபி
முகிலை குடையாய் உடைய நபி முன்னூல் கண்ட முடிவு நபி

பாதம் தோயா வேத நபி படித்துத் தெரியா மேதை நபி
காதம் கமழும் நீதர் நபி காவல் செய்யுமனாதை நபி

ஒளிரும் கண்ணார் பெற்றி நபி ஒளியே காலும் நெற்றி நபி
மிளிரும் கரங்கள் பெற்ற நபி மேனியனைத்தும் வெற்றி நபி

அருமை சாதிக் குறைஷி நபி அல்அமீனாம் முர்ஸல் நபி
ஒருமை நாடும் வரிசை நபி ஒப்பே இல்லா குரிசில் நபி

நில்லா உலகை மிடைந்த நபி நிலையால் எண்ணம் கலைந்த நபி
இல்லும் மலையும் அலைந்த நபி ஹீராக் குகையில் உலைந்த நபி

வானவர் ஜிப்ரீல் கண்ட நபி வல்லோன் மறையை விண்ட நபி
தீனவர் குலத்தைக் கொண்ட நபி தீந்தீன் முழக்கும் அண்ட நபி

வானோர் போற்றும் நேர்த்தி நபி வஹியின் பளுவால் வேர்த்த நபி
தீனோர்க் கன்பை வார்த்த நபி திகழும் அறிவே கூர்த்த நபி

போர்த்தச் சொன்ன முஸம்மில் நபி போர்த்திக் கொண்ட முதத்திர் நபி
சீர்த்தி யுண்மை முஸத்திக் நபி சிறப்பா யோங்கு முஹம்மத் நபி

ஓரிறை யென்றே உரைத்த நபி ஓரின மென்றே விரித்த நபி
பேரிறையருளே பரித்த நபி பேதம் அனைத்தும் எரித்த நபி

வானிற் பயணம் சென்ற நபி வல்லோன் இறையைக் கண்ட நபி
தேனின் கௌதர் உண்ட நபி தெவிட்டா உரைகள் விண்ட நபி

தொழுகை நோன்பு மிகுத்த நபி தூய்தாம் ஜக்காத் பகுத்த நபி
ஒழுகும் ஹஜ்ஜு வகுத்த நபி ஒருமைப் பாட்டை புகுத்து நபி

இன்ப சித்தீக் இனித்த நபி இதமாய் உமரைப் பிணைத்த நபி
அன்பாய் உதுமான் இணைத்த நபி அறிஞர் அலியார் அணைத்த நபி

சத்திய சீலர் செறியு நபி ஸஅது ஸயீது நிறையு நபி
உத்தமர் தல்ஹா உறையு நபி உவைசுல் கர்னீ அறியு நபி

இறைவாள் காலிது வெற்றி நபி இப்னு அவ்ஃபின் பெற்றி நபி
மறையாள் ஜுபைரு பற்றி நபி மாணபூ உபைதா சுற்று நபி

பிரியா அனஸின் தொண்டு நபி பிலால் உணர்வு கொண்ட நபி
சிரியா சென்று கண்ட நபி சீரியா ஸல்மான் அண்டு நபி

அண்டை அயலார் நேய நபி அகமும் புறமும் தூய நபி
கண்டை நிகர்க்கும் காய நபி கதீஜா கொழுநர் ஆய நபி

அருமை பாத்திமுத்தின் நபி ஹஸன் ஹுஸைனார் நத்து நபி
அருமை ஆயிஷா சித்தி நபி அன்புப் பிராட்டியார் சித்த நபி

இஸ்லாம் நெறியை துலக்கு நபி இனிதாம் செயல்கள் மணக்கு நபி
முஸ்லீம் மாண்பை விளக்கு நபி முன்னோன் உயர்வை முழக்கு நபி

அன்பால் நெஞ்சை உழுத நபி அஞ்சும் ஆறும் விதைத்த நபி
பண்பாம் உரத்தைப் போட்ட நபி பயிராம் மறுமை வேட்ட நபி

இறையின் நெறியில் அழைத்த நபி இதயம் விரிய உழைத்த நபி
மறையில் மனத்தைக் குழைத்த நபி மாண்பே எங்கும் தழைத்த நபி

அடிமைத் தளையை அறுத்த நபி அரசச் செல்வம் வெறுத்தநபி
கொடிய பகையைப் பொறுத்த நபி கொள்ளும் ஆசை மறுத்த நபி

முரணும் இனத்தைப் பிணைத்த நபி மொழியாற் பிறரை இணைத்த நபி
அரணாய் விளங்கிப் பணைத்த நபி அனாதைச் சிறுவர் அணைத்த நபி

வாளுக் கஞ்சா தெழுந்த நபி வல்லோ னாய்வில் நெகிழ்ந்த நபி
ஆளும் அன்பர் கொழுந்து நபி அடியார் நெஞ்சில் அழுந்து நபி

கல்லடி பட்டு மலர்ந்த நபி சொல்லடி பட்டும் உயர்ந்த நபி
பல்லடி பட்டு பெயர்ந்த நபி நல்லடியார்கள் நயந்த நபி

பிறந்தகம் விட்டு பெயர்ந்த நபி பின்னர் தௌரில் இருந்த நபி
சிறந்தவர் அன்பை புரிந்த நபி சிலந்தி புறவு தெரிந்த நபி

யாக்கை நஞ்சைப் போக்கு நபி யத்ரிப் நகரை நோக்கு நபி
வாக்கை அளித்துக் காக்கு நபி வழியில் ஸுரக்கா நீக்கு நபி

மதீனம் கண்ட மக்க நபி மக்கள் ஏற்கும் தக்க நபி
புதினம் பலவும் மிக்க நபி புகழன் சாரி பக்க நபி

பதுருப் போரில் வென்ற நபி பணியா துஹதில் சென்ற நபி
ஹுதைபிய்யாவில் நின்ற நபி உயரிய குணத்தின் குன்று நபி

பெற்றோர் காவல் அற்ற நபி பெரியோன் துணையைப் பெற்ற நபி
மற்றோர் காணா வெற்றி நபி மக்கத் திருநகர் பற்று நபி

மறையோர் போற்றும் துங்க நபி மான்மதம் கமழும் அங்க நபி
கறையே யில்லாத் தங்க நபி களத்திற் குதித்தால் சிங்க நபி

பேணும் பணிவின் அகத்து நபி பேரெழில் கொழிக்கும் முகத்து நபி
பூணும் புன்னகை தகைத்து நபி போரில் பகையை மிகைத்த நபி

மெய்யே என்றும் விண்ட நபி மேன்மை அனைத்தும் கொண்ட நபி
மெய்யா லுழைத்தே உண்ட நபி மேலோர் வாழ்விற் கண்ட நபி

ஏக்கம் போக்கும் இறுதி நபி ஏற்ற வரக்கா சுருதி நபி
ஊக்கம் குலையா உறுதி நபி உண்மை ஞானப் பருதி நபி

ஈருலகிற்கும் சீல நபி இணையே யில்லா ஆல நபி
பாருலகதிலெக் கால நபி படைப்புக் கெல்லாம் மூல நபி

கந்தைத் துணியை தைத்த நபி கயிற்றுக் கட்டில் துய்த்த நபி
விந்தை செயல்கள் விளைத்த நபி விரியும் தொடர்கள் கிளைத்த நபி

குறையைக் காட்டி விற்ற நபி குணத்தில் சிறுமை அற்ற நபி
நெறியாய் அனைத்தும் பெற்ற நபி நீதி நேர்மை உற்ற நபி

மெய்யாய் வீசும் தென்றல் நபி மேன்மை பொழியும் கொண்டல் நபி
பொய்யே களைவீர் என்ற நபி பொன்றாப் புகழில் மன்றல் நபி

கள்ளம் கொல்லும் உதய நபி கடலிற் பெரிய இதய நபி
உள்ளம் கொள்ளும் முதிய நபி ஒரு மாசில்லா மதிய நபி

முனியும் செயல்கள் விட்ட நபி முந்நீர் உலகை கட்டு நபி
கனியும் அன்பை கொட்டு நபி கண்ணைக் கவரும் பட்டு நபி

பெரியார் மனத்தில் உள்ளு நபி பேதம் அற்ற தௌ;ளு நபி
அரியோன் கொடைகள் விள்ளு நபி அறிஞர் நெஞ்சை அள்ளு நபி

இம்மை மறுமை குகந்த நபி என்றும் உலகின் தகுந்த நபி
செம்மை வாழ்வில் புகுந்த நபி சேரும் நன்மை மிகுந்த நபி

இறையோன் புகழே இசைத்த நபி எளிய உணவே புசித்த நபி
மறையால் மனமலை அசைத்த நபி மக்களை ஒன்றாய் விசித்த நபி

வாக்கும் மனமும் ஒத்த நபி வாய்மை நிறையும் சித்த நபி
நோக்கும் போக்கும் மெத்த நபி நோவை யகற்றும் கத்தன் நபி

அழுக்கா றகற்ற நவின்ற நபி அன்பே பெருக்கப் புகன்ற நபி
இழுக்காம் இயல்புகள் அகன்ற நபி இப்னிஸ்ஹாக்கு நுவன்ற நபி

அவனிக் குயர்வு அளித்த நபி அன்பர் கண்டு களித்த நபி
அன்பை வாரி தெளித்த நபி ஆண்டவன் அருளில் குளித்த நபி

தொண்டின் சிறப்பை வளர்த்த நபி தொழிலின் மதிப்பை உயர்த்து நபி
அண்டின பேரை அணைத்த நபி அறிவுக் குயர்வு அளித்த நபி

நாவின் நலனை காக்கு நபி நலமாம் உரிமை ஊக்கு நபி
பூவில் புகழே பூக்கு நபி புனிதத் தன்மை நோக்கு நபி

வாட்டும் தீமை விட்ட நபி வாழ்வில் தெளிந்த சட்ட நபி
நாட்டின் துயர்கள் பட்ட நபி நல்லோர் இதயம் தொட்ட நபி

கடுமொழி வெகுளி தவிர்த்த நபி கனிவாய்ச் சொல்லை உதிர்த்த நபி
கெடுவழியாளர் அதிர்த்த நபி கேட்டைச் செய்தோர் விதிர்த்த நபி

இல்லால் அருமை உரைத்த நபி இல்லற உயர்வை விதித்த நபி
பொல்லா வாழ்வை வெறுத்த நபி போதின் மனமே பொழிந்த நபி

தாயின் உயர்வை போற்றும் நபி தாய் நாட்டன்பை ஏற்ற நபி
ஆயின் உலகின் ஊற்று நபி அண்டர் வாழ்த்தும் பேற்று நபி

உடையில் எளிமை தோய்ந்த நபி உலகின் நிலையை ஆய்ந்த நபி
படையின் நடுவில் பாய்ந்த நபி பசியால் வயிறே காய்ந்த நபி

ஒளியே சிந்தும் முத்து நபி இலவ்ஹு கலம் பெயர் பொறித்த நபி
அரவும் விலங்கும் உரைத்த நபி அறியா தாயிப் துரத்து நபி

விண்ணை வழங்கப் போத்த நபி வித்தகர் ஊக்கிய வேந்து நபி
கண்ணை அளித்த சாந்த நபி கருணையூறும் காந்த நபி

மனதிற் கிசைந்த போத நபி மங்காதொளிரும் வேத நபி
அனைத்துத் துறையில் நீத நபி அறுஷில் ஏறிய பாத நபி

ஓதத் தெரியா உம்மி நபி உண்மை உயர்வில் நன்மை நபி
மாதர் போற்றும் செம்மை நபி மறுமைக் கேற்ற இம்மை நபி

கண்ணிற் கருணை கொழித்த நபி கனியும் அருளே பழுத்த நபி
மண்ணில் பகையை அழித்த நபி மனத்தோ டிரவில் விழித்த நபி

வல்லோன் தூதாய் இலங்கு நபி வையகம் போற்றத் துலங்கு நபி
பொல்லா மக்கள் கலங்கு நபி புகழே பூத்துக் குலுங்கு நபி

இறையின் ஒருமை முழக்கு நபி இருமை சிறக்கும் ஒழுக்க நபி
உறையும் முறையைப் பழக்கு நபி உலகின் மேற்கு கிழக்கு நபி

வான் பயிர் ஓங்க விழையு நபி வல்லோன் அருளின் இழையு நபி
தீன் பயிர் செழிக்க மழையு நபி திருவார் நெஞ்சில் நுழையு நபி

நெஞ்சப் புண்ணை ஆற்று நபி நேர்மைத் தேனின் ஊற்று நபி
விஞ்சை நெஞ்சில் வீற்ற நபி விதவைக் கண்ணீர் மாற்று நபி

முகிலை வெல்லும் வண்மை நபி முதியோர் மதிக்கும் உண்மை நபி
திகழும் மலரின் மென்மை நபி திக்கற்றோர்க்கே அண்மை நபி

மன்னா உலகின் மன்னு நபி மதிப்பார்க் கென்றும் பொன்னு நபி
உன்னா முன்னே துன்னு நபி உயர் கவி வானில் மின்னு நபி

கண்ணில் ஒளியைச் சேர்ந்த நபி காதில் இனிமை வார்த்த நபி
மண்ணில் இருளைப் பேர்த்த நபி மனத்துள் அருளே கூர்த்த நபி

சொல்லிற் சிறந்த அருவி நபி சோகம் போக்கும் கருவி நபி
இல்லில் வாழ்ந்த துறவி நபி இலாஞ்சனை பெற்ற அறபி நபி

அரிய ஞான முரசு நபி அருமை நாட்டின் அரசு நபி
பெரிய பகைவர் உரசு நபி பெருமைக் குரிய சிரசு நபி

பொழிலாய்க் காக்கும் சார நபி போரிற் கலங்கா வீர நபி
எழிலார் கவிதை ஆர நபி எளியோர்க் கிரங்கும் ஈர நபி

அருட்கொடையாக உதித்த நபி அனைத்துலகிற் பெயர் பொறித்த நபி
பொருட்கொடை தெளிவாய் விதித்த நபி பொல்லாப் பகைவர் மதித்தநபி

அறிஞர் போற்றும் அண்ணல் நபி அனைத்தும் இனிக்கும் கன்னல் நபி
வறிஞர் வாழ்த்தும் வண்ண நபி வனப்பிற் சிறந்த எண்ண நபி

ஏற்றம் அனைத்தும் படைத்த நபி ஏழைக் கண்ணீர் துடைத்த நபி
மாற்றம் அனைத்தும் உடைத்த நபி மாந்தர்க் கருவாய்க் கிடைத்த நபி

நன்மைச் சுவனம் ஆக்கு நபி நரகை விட்டும் காக்கு நபி
புன்மைத் தீயைப் போக்கு நபி பொய்யும் புரட்டும் நீக்கு நபி

தொடரும் பழிகள் விலக்கு நபி தொட்டவையெல்லாம் துலக்கு நபி
அடரும் பகையைக் கலக்கு நபி அன்பர் நெஞ்சின் இலக்கு நபி

கொண்டார் நெஞ்சில் குளிரு நபி கூரிய இருளில் ஒளிரு நபி
விண்டார் நாவில் மிளிரு நபி விண்ணோர் வாழ்த்தம் தளிரு நபி

கலிமா அடிப்படை அமைத்த நபி கற்றூண் தொழுகை சமைத்த நபி
நலியா நோன்பு வேய்ந்த நபி நாயன் வீட்டில் தோய்ந்த நபி

சார் பொருளுடையார் வழுத்து நபி ஜக்காத் சுவரை எழுப்பு நபி
பார் திரள் ஹஜ்ஜு உரைத்த நபி பார்வான் வாயில் திறந்த நபி

வானின் வழியைக் காட்டு நபி வல்லோன் இயல்பை நாட்டு நபி
மானின் பிணையைக் கூட்டு நபி மாண்பார் ஹஸ்ஸான் பாட்டு நபி

இதயக் கொடையில் மஞ்சு நபி ஹிந்தாவுக்கும் தஞ்சா நபி
உதயக் கதிரை மிஞ்சு நபி உயர்வான் பேரர் கொஞ்சு நபி

இரு மூன்றில் தாய் இழந்த நபி இருபத்தைந்தில் மணந்த நபி
அருநாற்பதிலே நிறைந்த நபி அறுபான் மூன்றில் மறைந்த நபி

மலையும் மரமும் சூடு நபி மாவும் புள்ளும் தேடு நபி
அலையும் தேனீ பாடு நபி அலைகடல் தேடி வாடு நபி

ஊனில் எலும்பில் உறையு நபி உயிரின் உயர்வாய் உறையு நபி
தேனின் இன்பத் துறையு நபி தேற்றும் உதிரத் துறையு நபி

குதுபுல் அக்தாப் பாட்டர் நபி குதுபு ரிஃபாயி நாட்ட நபி
குதுபுல் ஹிந்து வேட்ட நபி குருஷா துலியார் தேட்ட நபி

நற்கலை ஞானியார் பணியு நபி நாகூர் நாதர் அணியு நபி
தற்கலை யப்பா தணியு நபி தன்னிக ரில்லா மணியு நபி

காதை நிறைத்துத் திகழு நபி கல்வத்து நாதர் நெகிழு நபி
மேதை ஷெய்கு மகிழு நபி மேலாம் மாலிக் புகழு நபி

ஓங்கும் நால்வர் ஆண்ட நபி ஓதும் மத்ஹப் ஈண்டு நபி
ஏங்கும் எளியர் வேண்டு நபி ஏகன் நினைவே மூண்ட நபி

மாவூர் புகாரி கோத்த நபி மாஜா மகனார் சேர்த்த நபி
தாவூத் முஸ்லீம் யாத்த நபி திர்மிதி நஸயீ காத்த நபி

கைசர் தூது விடுத்த நபி கஃபின் கவிதை மடுத்த நபி
பூஸரி புர்தா தொடுத்த நபி புhயீ உணர்வு கொடுத்த நபி

இனிதாய் ரூமி மொழியு நபி இக்பால் கவிதை பொழியு நபி
கனிதோய் ஸஅதி வழியு நபி ஹாலி ஹாபிஸ் விழியு நபி

அரிய மௌலிது தரித்த நபி அப்பா சதக்கு விரித்த நபி
உரிய சீறா பொறித்த நபி உமறுப் புலவர் குறித்த நபி

பாலைப் புலவர் பருகு நபி பைந்தமிழ் காஸிம் உருகு நபி
ஆலிம் புலவர் முருகு நபி அல்கஸ்ஸாலி மெருகு நபி

பஞ்சம் பிணிகள் ஓட்டு நபி பண்பும் பயனும் ஈட்டு நபி
தஞ்சம் அளிக்கும் வீட்டு நபி தன்னருள் கனிய ஊட்டு நபி

அருளார் நெஞ்சில் நிறையு நபி அன்புக் கடலின் துறையு நபி
இருளார் நெஞ்சில் குறையு நபி ஈமான் உள்ளில் உறையு நபி

மருளாம் வாழ்வைத் துனியு நபி மாசில் வாழ்வுக் கினிய நபி
இருளாம் குஃபிரை முனியு நபி இறுதி நாளிற் கனியு நபி

எண்ணம் இனிக்கும் இன்ப நபி எழிலே கொழிக்கும் அன்பு நபி
திண்ணம் சேர்க்கும் தெம்பு நபி தீந்தேன் சுரக்க நம்பு நபி

இறையின் வலிமார் சிரத்து நபி இழந்த கரத்தைப் பொருத்து நபி
மறையின் வல்லோன் வரத்து நபி மறையோன் கருத்தின் குருத்து நபி

மானிடர் தந்தை ஆதம் நபி மரக்கலம் ஏறும் நூஹூ நபி
மீனிடம் புகுந்த யூனுஸ் நபி மேதைகள் போற்றும் அஹ்மத் நபி

அழகிற் சிறந்த யூசுஃப் நபி அடக்கம் மிகுந்த ஐயூப் நபி
பழகிய பேரிபுறாஹீம் நபி பண்புகள் கொண்ட மஹ்மூது நபி

பிணியை ஓட்டும் ஈசா நபி பிரம்பை நாட்டும் மூஸா நபி
அணியை ஈட்டும் தாவூத் நபி அனைத்தும் காட்டும் ஹாமித் நபி

முனீபு அவ்வல் ஹஸீபு நபி முபீனு ஆகிறு ஹபீபு நபி
முனீரு பாத்தின் ஹரீஸு நபி முக்தார் லாஹிர் அஸீஸு நபி

மண்ணும் விண்ணும் எண்ணு நபி மண்ணி லெண்ணும் திண்ண நபி
கண்ணும் எண்ணும் பண்ணு நபி கண்ணி லுண்ணும் வண்ண நபி

வஞ்ச நெஞ்சை அஞ்சு நபி மஞ்சை விஞ்சுந் தஞ்ச நபி
பஞ்சு மஞ்சிக் கெஞ்சு நபி பிஞ்சு நெஞ்சைக் கொஞ்சு நபி

தங்க மெங்கும் பொங்கு நபி தங்க வங்கி தங்கு நபி
அங்க மெங்கும் தங்க நபி அங்கு மிங்கு மெங்கு நபி

அகில உலகி லிலகு நபி அகிலு மிலகி விலகு நபி
முகிலி லிலகு திலக நபி முதிய புதிய உலக நபி

விரியு முலகைப் புரியு நபி விரியும் கிரியைத் தெரியு நபி
அரியும் கிரியும் பரியு நபி அரிய சரியை யுரிய நபி

அக்கன் மாக்கன் நக்க நபி அக்கம் பக்கம் தக்க நபி
ஓக்கும் இக்கும் சொக்கு நபி உட்கும் வெட்கம் மிக்க நபி

தத்தித் தாதி துதைத்த நபி தத்தை துதித்த தூது நபி
தித்தித் தாதி ததைத்த நபி தித்தித் தோதித் துதித்த நபி

வழியும் மொழியும் விழியு நபி வழியி லிழையும் மொழியு நபி
அழியும் பழியை யொழியு நபி அழகே யொழுகி வழியு நபி

நன்னபி மன்னபி முன்னு நபி நந்நபி மென்னபி மன்னு நபி
இன்னபி பொன்னபி யென்னு நபி இதயங் குளிர உன்னு நபி

பூநபி மேநபி ஆதிநபி பாநபி மாநபி நீதி நபி
காநபி கோநபி வேத நபி கவலை போக்கும் சோதி நபி

குழவிகளின் பால் விரியு நபி குழையும் முதியோர் பிரிய நபி
அழகிய முன்மாதிரியு நபி அருமபு ஐயூப் தெரியு நபி

கன்னிப் பெண் போல் நாணு நபி கனியும் தமிழைப் பூணு நபி
மன்னிப் படியேன் காணு நபி மறையின் வடிவாய் மாணு நபி

அந்தேன் அந்நாள் புகட்டு நபி அறிஞர் உலகின் முகட்டு நபி
வந்தேன் கவலை யகற்று நபி வழியில் தடைகள் நகற்று நபி

அன்பர் துயரால் வருத்து நபி அனைத்துப் பிணிக்கும் மருந்து நபி
இன்பத் தோழர் விருந்து நபி எளியேன் அன்பை பொருந்து நபி

பொருளியல் அரசியல் தலைமை நபி போரின் களத்தும் தலைமை நபி
அருளியல் அறிவியல் தலைமை நபி அனைத்துத் துறைக்கும் தலைமை நபி

பெற்றோர் பெரியோர்க் கருளு நபி பேணும் நல்லோர் கருளு நபி
கற்றோர் படிப்போர் கருளு நபி கனியும் காட்சி கருளு நபி

மறையும் போதும் உதவு நபி மறைத்தேன் அருந்த உதவு நபி
நிறையும் மறுமைக் குதவுநபி நிலையாம் உலகுக் குதவு நபி

பிணியை நீக்க வேண்டு நபி பிழையை பொறுக்க வேண்டு நபி
அணியாம் அனைத்தும் வேண்டு நபி அப்துல் கபூரைத் தூண்டு நபி

முறையருள் மாலைக் கிரங்கு நபி மும்மணி மாலைக் கிரங்கு நபி
இறையருள் மாலைக் கிரங்கு நபி இம்மணி மாலை கிரங்கு நபி

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.