Posted by : kayalislam
Tuesday, 15 May 2012
ஹம்து - இறைத்துதி
பிஸ்மில்லா ஹிர்றஹ்மா னிர்றஹீமென் றுரைத்து
துஷ்மனைத் தூராக்கி துய்யோனை யான் புகழ்வேன்
அல்ஹம்து லில்லாஹி ஆதிக்கெல் லாம்புகழும்
குல்ஆலமடங்கலையும் குறையன்றி கோர்வை செய்தோன்
உலகு பதினாலு மோராறிலே யமைத்த
நலவான நாயகனை நாள்தோறும் யான் புகழ்வேன்
அறுஷும் குருஸும் அழகான லவ்ஹுகலம்
பறுஷும் கடல்மலையும் படைத்தோனை யான் புகழ்வேன்
வானும் மலாயிகத்தும் வரிசைசுவர்க்க மும்நரகம்
மீனும்பொழுதும் இந்தும் வெளியாக்கியை புகழ்வேன்
கண்ணன்றி காண்பவனை காதன்றி கேட்பவனை
எண்ணி லடங்கானை எப்பொழுதும் யான் புகழ்வேன்
கெர்ப்ப குவளறையில் கூர்விழியாய் செவிமூக்கு
ஒப்பான மேல்கரங்கா லுண்டாக்கியை புகழ்வேன்
அற்ப ஜலத்தாலே ஆணினனும் பெண்ணினமும்
துர்ப்பாய் படைத்தோனை துய்தாக யான் புகழ்வேன்
உயிருள்ள கல்குக்கெல்லாம் ஒன்றுபோல் தானிரணம்
கைராகத் தான் கொடுக்கும் கத்தாவை யான் புகழ்வேன்
படைத் தீங்களித்து பரிவாகப் பின்னெழுப்பி
பிடித்து யிருபதியில் புகுதுவிப்போனைப் புகழ்வேன்
ஸலவாத் - நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துதி
முன்பில்ஒளி யாயிருந்த முஹம்மதுர் றசூல் தனக்கு
பின்பு ஸலவாத்துரைப்பேன் பெரியோ னருளாலே
ஆதி பெரியோ னவர்க்காக ஆலமெல்லாம்
நீதியுடன் படைத்த நைனாரை யான் புகழ்வேன்
மயில்வேஷமாய் மரத்தில் வல்லோனுடன் துகித்த
மயிலாய் வணங்கிநின்ற மஹ்மூதை யான் புகழ்வேன்
ஏழுவான் கடந்து யிறையோன் அறுஷுதன்னில்
நீள வசனஞ்செய்த நீதியுள்ளோரைப் புகழ்வேன்
முத்தி லுதித்த முஹம்மதரை நித்தமும்யான்
மெத்தப் புகழ்வேனே விதித்தோ னருளாலே
எல்லா நபிமார்க்கும் ஏத்தமாய் வந்துதித்த
மல்லார் முஹம்மதரை மனதில் மறவேனே
ஸஹாபா - நாயகத் தோழர்கள் துதி
அப்துல்லா வெனும் அழகாம் அபூபக்கரை
அவதானமாய் புகழ்வேன் அல்லா அருளாலே
புவியில் நிகரில்லாப் புண்ணியரை எப்பொழுதும்
கவியாக யான் புகழ்வேன் கத்தா அருளாலே
ஜன்னத்து மானீரை துனியாவிலே புசித்த
மின்னத் துடையோரை மேவிப் புகழ்வேனே
ஆணினத் துக்கெல்லாம் அழகான தீன்வழியில்
பேணுதலாய் முந்தவந்த பெரியோரை யான் புகழ்வேன்
ஷைத்தான் நடுநடுங்கும் செம்மல் உமறுதனை
பைத்தாக யான் புகழ்வேன் வல்லா னருனாலே
சொல்மொழிக்கு நேராகத் துய்யகுறா னிறங்கும்
நல்உமறு கத்தாபை நாடி புகழ்வேனே
மானும் புலியும் மருவியொரு துறையில்
தானமாய் நின்றருந்தும் சங்கை உமறை புகழ்வேன்
ஹத்தால் மகனை கபுறொடுங்க வாக்கிவைத்த
கத்தாபு மகன் உமறை கருத்தில் மறவேனே
இவர்க ளிருபேரும் ஈனமில்லா மக்கள் தம்மை
நபிக்குக் கலியாணஞ் செய்த நல்லமாமன் மார்காண்
நானூ றடிமைகளை நலமா யுரிமைசெய்த
ஆன உதுமானை அகத்தில் மறவேனே
உம்முகுல்தூம் நாச்சியாரை உக்துரு கய்யதுவை
செம்மை நிகாஹ் செய்த சீமானை யான் புகழ்வேன்
வானவர்கள் நாடிநிற்கும் வரிசை உதுமானை
ஊனமற எப்பொழுதும் ஓதிப் புகழ்வேனே
குர்ஆனை குறையில்லாமல் கோர்வைசெய்த கோமானை
ஓறாமல் யான் புகழ்வேன் ஒருவனருளாலே
பாத்திமா நாச்சியாரைப் பரிவாய் நிகாஹுசெய்த
ஏத்தமுள்ள சேவகரை ஏற்றிப் புகழ்வேனே
வான ஜிப்ரயீல்தன் வரவை அறிந்திருக்கும்
ஆன அலியாரை ஆதரித்து யான் புகழ்வேன்
இவர்க ளிருபேரும் இனிய நபிமக்களை
தவனமாய்க் கொண்டிருந்த சங்கை மருமகர்காண்
சிறிய தகப்பர் சிறப்பான அப்பாஸை
கருதிப் புகழ்வேன் யான் கருனையுடையோ னருளால்
நபிக்குச் சிரியபிதா நல்லஹம்ஸா என்பவரை
கவிகட்டாய் யான் புகழ்வேன் காவலுடையோ னருளால்
படையில் புலிவீரர் பறந்துவெட்டும் ஐஃபறையும்
அடியேன் புகழ்வேன் அலிதமையர் தய்யாரை
இப்னு அப்பாஸென்பவரை இப்னு உமறுதன்னை
இப்னு மஸ்ஊதை இனிதாய் புகழ்வேனே
அபுத்தர்தா என்பவரை ஆன அபுதர்றவரை
அபூகுஹா பதையும் ஆதரித்து யான் புகழ்வேன்
அபூஹூறை றதையும் அனஸுப்னு மாலிகையும்
அபூஉமா மதையும் அன்பாய் புகழ்வேனே
ஸல்மானை உம்மாறை சங்கை ஷூஐபுதன்னை
நல்ஜாபிறை ஜூம்றதை நாடிப் புகழ்வேனே
ஹுதைபதென்னும் அவரை கிருபையாம் கதாததுவை
குத்ரீஎனு மவரைக் கொண்டாடி யான் புகழ்வேன்
அல்லா ஸலாமுரைத்த ஆறுவகை யார்கள்தம்மை
சொல்லால் புகழ்ச்சி செய்வேன் துய்யோ னருளாலே
ஸஃது ஸஈதுதன்னை தல்ஹா ஜுபைறவரை
தகுதி அப்துர்றஹ்மானை சங்கைஜற்ராஹை புகழ்வேன்
நபிக்குமகன் போல்வளர்ந்த நல்லஜைது தம்மை
செவிஜீனத் தாய்க்கேட்க செப்பிப் புகழ்வேனே
இவர்தன் மகனாரினிய உசாமத்துவை
கவனமாய் யான் புகழ்வேன் சங்கை புலியாரை
ஹஸ்ஸான் புலவர் தம்மை கனதிபிலா லென்பவரை
உஸ்ஸான வாக்காஸை யோதிப் புகழ்வேனே
யார்க ளடங்கலையும் அல்லா வருளாலே
சீராக போற்றல்செய்வேன் சிந்தைதனி லெப்போழுதும்
கோத்திரத்தார் துதி
பாத்திமா நாச்சியார் தம் பள்ளைவயிற்றில் நின்றும்
கோத்திரம்வாழப்பிறந்த ஹசன் ஹுஸைனை யான் புகழ்வேன்
கதீஜாவை ஸவ்தாவை ஹஃப்ஸாவை ஆயிஷத்தை
மதுரமுள்ள மாரிய்யத்தை வரிசைவும்மு சல்மாவை
உம்முஹபீபாவை யோசை மைமூனத்துவை
அம்மத்தென்னும் மாமிமகள் அழகான ஜைனபையும்
ஸபிய்யத்தென்னு மவரை சங்கை ஜுவைரியத்தை
ஜபுயத்தில்லா ஜைனபையும் ஜீனத்தாய் யான் புகழ்வேன்
றைஹானத் தென்பவரை யினிதாய்ப் புகழ்வேனே
றைனில்லாப்பெண்டுகளை எப்பொழுதும் யான் புகழ்வேன்
நபிதம் அவுலாதை நாட்டமாய் யான் புகழ்வேன்
பவனியுடையோர் மக்களை பாங்காய் புகழ்வேனே
ஜைனபு நாச்சியாரை சித்தி றுகையாவை
ஜீனத்தும் முகுல்தூமை செப்பமாய் யான் புகழ்வேன்
மூவர்க்கிளையார் முகமழகாம் நாச்சியாரை
நாவால் புகழ்ச்சிசெய்வேன் நல்மகளார் பாத்திமத்தை
பெண்ணினத் துக்கெல்லாம் பிரிசமுள்ள ஸெய்யிதத்தை
கண்ணின் மணியைக் கருதிப் புகழ்வேனே
மணமான பொன்னூர்க்கு வாகாய் யெழுகையிலே
கனமான கூடமெல்லாங் கண்மூடும் நாச்சியார் காண்
தாஹிரையும் தையிபையும் தகுமான காஸிமையும்
ஃபாகிரி புராஹீமைப் பாங்காய்ப் புகழ்வேனே
ஹுஸைனுடைய நல்மகனார் குணமான ஜைன் அலியை
திசையுடைய பாக்கிறையும் ஜஃபறையும் யான் புகழ்வேன்
மூஸப்னு ஜஃபரையும் முதுமை அலியாரை
ஆசான அஸ்கரியை அன்னல்ஹஸனைப் புகழ்வேன்
தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள், இமாம்கள், அவுலியாக்கள் துதி
உவைஸுல் கறனீ தம்மை யோசை பசரியரை
தவசித் தனமுடைய சங்கைக் குமைலைப் புகழ்வேன்
நுஃமானை மாலிக்கியை நுண்மை முஹம்மதரை
நிஃமான அஹ்மதையும் நெஞ்சில் மறவேனே
ஸூஃப்யானை ஷைபானை சுருதி இபுனு தீனாரை
ஸபிய்யான தாஊதை ஷாஹ்உமறை யான் புகழ்வேன்
இபுராஹீ மதுஹமையும் ஏற்றமுள்ள பல்கியையும்
தவனமாய் எப்பொழுதும் சந்தோஷமாய்ப் புகழ்வேன்
பிஸ்தாமி யென்பவரை மேலான மஃறூபை
உஸ்தாது ஸிக்த்தீதனை ஓசைபிஷறைப் புகழ்வேன்
ஹல்லாஜெனு மவரை கனதி ஜூனை தவரை
நல்ல ஷிப்லீ தனை நல்நூரியைப் புகழ்வேன்
ஸஹ்லை நக்-ஷபியை சங்கை யிபுராஹீமை
முகில்போல் ஷகீக்குதம்மை முயன்றுப் புகழ்வேனே
துன்னூன் மிஸ்ரி தம்மை துய்ய அஜமீதனை
பின்பத்ஹு மூஸிலியைப் பேணிப்புகழ்வேனே
வழிவெட்டி யாயிருந்த வள்ளல்புழைல் அய்யானை
ஒளிவுடைய ஹாத்தமையு மோதிப் புகழ்வேனே
ஹம்தானுல் கஸ்ஸாரைக் கனதி முபாறக்கிபுனை
செம்மல் புனானீ தம்மை ஷெய்குகவ்வாசைப் புகழ்வேன்
கத்தானீ யென்பவரைக் கனதி அத்தா வென்பவரை
வித்தாற வாஸித்தியை வீறாய்ப் புகழ்வேனே
ஷெய்கு புவைத்தீ தம்மை ஷெய்குமூஜூ னீ தம்மை
வாகுடைய ஹர்மலத்தை வாழ்த்திப் புகழ்வேனே
நபியுல்லா போற்றல்செய்த நயினார் ஙஜ்ஜாலீ தம்மை
புவியில் நிகரில்லாத புண்ணியரை யான் புகழ்வேன்
ஙஜ்ஜாலீ உஸ்த்தாது அப்துல் மலீக்கு தம்மை
உச்சாயமாய்ப் புகழ்வேன் ஒருவனருளாலே
ஷெய்கு ஷீராஜீதம்மை ஷெய்குபுனு ஃபவ்றக்கையும்
மேகம்போல் கப்பாலை வீறாய்ப் புகழ்வேனே
ஷெய்கு ஜூவைனிதம்மை ஷெய்குக்குஷைரி தம்மை
ஷெய்குஸ் ஊபறானீ தம்மை சீராய்ப் புகழ்வேனே
ஜீலானி வாழவந்த ஷெய்குசுல்தான் மீராவை
செயலால் புகழ்ச்சிசெய்வேன் சீமானருளாலே
ஸூஹ்றவர்தீ தம்மை துய்யஹம்மா தென்பவரை
தகுதியுள்ள ஹீத்தீதம்மை சங்கயாய் யான் புகழ்வேன்
அபூத்தாலி புல்மக்கீயை ஆன கைலவியை
இபுனு அறபிதம்மை யேற்றிப் புகழ்வேனே
தாஜூத்தி னென்பவரை சங்கை றபாயீ தம்மை
கோஜூபுனு பாறிஸையும் குஷியாய்ப் புகழ்வேனே
உதுமான் முறூலத்தையும் ஓசையுள்ள அஃறபையும்
முதுமான் அபூபக்கறை மோசமற யான் புகழ்வேன்
அதிய்யு முசபிறையும் ஆன ஹக்காரியையும்
மதிபோல் வதனுடைய வள்ளல் அஜ்ஜாஜைப் புகழ்வேன்
ஜவ்சகீ யென்பவரை ஷெய்கு அப்துர் றஹ்மானை
தவசி கழீபுல்பானை சங்கைஷூஜபைப் புகழ்வேன்
நாலு தரீக்கிலுள்ள நல்லவ்லியாக்கள் தம்மை
மாலாசை கொண்டு மகிழ்ந்து புகழ்வேனே
நாஃபீயென்னும் காரீதம்மை நல்ல அபூ அம்றுதன்னை
ஸாஃபிபுனு ஆமிரையும் சாற்றிப் புகழ்வேனே
இபுனுக்குஸை ரென்பவரை இல்முடைய ஆஸிமையும்
அவ்னுடைய ஹம்ஜத்தையும் அலிய்யுல்கிஸாவை புகழ்வேன்
ஹதீதுக் கிமாமான கருணை புஹாரிதம்மை
மதுரமுள்ள முஸ்லிமையும் பைஹக்கையும் யான் புகழ்வேன்
திருமதீ யென்னுமவரை துய்யநசாயீ தம்மை
குருவான ஹாக்கிமையும் கொண்டாடி யான் புகழ்வேன்
தாறுகுத்னி தம்மை நல்ல அபூதாவூதை
வீருடைய தைலமியை விரும்பிப் புகழ்வேனே
இமாம் றாஃபி என்பவரை யஹ்யா நவாவீ தம்மை
ஹூமாமான ஷாதலியைக் குணமாய்ப் புகழ்வேனே
ஷெய்குபுனு அல்வானை ஷெய்கு அபுல் ஙைதை
ஷெய்கு ஹழுறமயை ஜீனத்தாய் யான் புகழ்வேன்
சுல்தான் உலமாவை ஷெய்கு ஸூபுகீதம்மை
முல்த்தானில் பேரான மீறுபரீதைப் புகழ்வேன்
கறன்ஃபுல் மரமழைத்தக் கருணையுள்ள மீராவை
திறமாக யான் புகழ்வேன் திசையான ஷெய்குதம்மை
எழுவான் படுவானில் எங்கும் திசையான
அழகாம் பிறையான ஐதுறூசையும் புகழ்வேன்
ஷெய்குஇமாம் யாஃபி இயை ஷெய்குபுனு ஹஜறுதம்மை
ஷெய்குபுனு அல்லானை செப்பிப் புகழ்வேனே
முல்லா இபுராஹீமை மேலாம் குஷாஸீதம்மை
சொல்லார் புகழ்ச்சிசெய்வேன் துய்யஇபுறாஹீம் ஹாவியை
சொன்னகரில் வந்துதித்த துய்ய அப்துல்லா மகனார்
அன்னமிடும் ஹுசைன் மைந்தனழகுகலன் தரைப்புகழ்வேன்
பெரியோரிவர் புதல்வர் பேரான கான்ஷெய்கை
எரியணுகா ரிவர்பாலர் இலங்கும் சதகை புகழ்வேன்
அந்திமதி போலிவர்தன் அழகுகுமாரர் ஸூலைமான்
வந்துதித்தார் பட்டணத்தில் வாழ்வுடனே இருந்தார்
ஷெய்கு மத்பூலிதம்மை ஷெய்கு ஜக்கரிய்யாவை
ஷெய்கு அலி கவ்வாஸை சிறப்பாய் புகழ்வேனே
ஷெய்கு அப்துல்வஹ்ஹாபை ஷெய்குறமலீ தம்மை
ஷெய்கு அஃப்ளலுத்தீனைச் செப்பமாய் யான் புகழ்வேன்
வங்காளம் சீனம் மலாக்கா பர்மா அறபு
எங்கும் திசையான மதியெங்கள் பிதாவைப் புகழ்வேன்
ஷெய்கு ஸூலைமானைச் செப்பமாய் யான் புகழ்வேன்
வாகா யவர்மக்களை வாழ்த்திப் புகழ்வேனே
அலைபோலறிவுடைய அண்ணல் ஷம்ஸூத்தீனை
நிலையால் புகழ்ச்சி செய்வேன் நைனாரை எப்பொழுதும்
மலைபோல் கலையுடைய வள்ளல் அஹ்மதரை
துலையாப் புகழ்ச்சி செய்வேன் துய்ய எங்கள் உஸ்தாதை
மக்கம் மதீனமெங்கும் வாகாய்த் திசையுடைய
மிக்க ஸதக்கத்துல்லாவை மிகுதியாய் யான் புகழ்வேன்
வரிசை மிகுதியுள்ள வள்ளல் ஸதக்கத்துல்லாவை
உரிசையாய் ஸாமென்பவன் ஓதிப் புகழ்வேனே
அறிவுக் கடலான ஆனஸலா ஹூத்தீனை
திறமாய்ப் புகழ்ச்சி செய்வேன் சின்ன அகீயானவரை
அன்னங்கொடுத்தும் அழகாம் கலை கொடுத்தும்
மின்னுங்கலை யோதிவிக்கும் வீறுடையோரைப் புகழ்வேனே
ஷெய்கு அப்துல் காதிரென்னும் சின்னீனா லப்பை தம்மை
ஜாஹூடைய ஷெய்கு தன்னைச் சாற்றிப் புகழ்வேனே
கடலில் நடந்து வந்த கருணை உதுமான்லப்பை
தொடராய்ப் புகழ்ச்சி செய்வேன் துய்ய உதுமான் ஷெய்கை
காயல் நகரிலுள்ள கருணைஉல மாக்கள் தம்மை
வாயால் புகழ்ச்சி செய்வேன் வல்லானருளாலே
துன்யாவி லுண்டான துய்ய நல்ல பேர்கள் தம்மை
கனியாக யான் புகழ்வேன் கத்தாவருளாலே
இவர்கள் பறக்கத்தினால் எங்கள் நபிதமக்கு
நவமணிபோ லிம்மாலை நாடிப் புகழ்வேனே
இம்மாலைப் படிப்பவர்க்கு கிடைக்கும் பேறு
நாட்டமுடனிம்மாலை நாடி யுரைப்பவர்க்கும்
கூட்டமாய் கேட்பவர்க்கும் கோதாரி வாராது
நாளை மஹ்ஷரிலே நைனார்க் கொடிக் கீழே
சூழும் பழாயை விட்டும் துய்தாகக் கூடி நிற்பார்
மறுமைதனில் மன்றாட்டு வாகா யவர்க்கு வரும்
கறம் மிகுதி யுண்டாகும் கபுறு மணவறையில்
வரிசைமானென்று விண்ணவர்வாகா யுரைப்பார்கள்
பிரிசமாய்ப் பொன்னூர்க்கு போவான் பிறை போலே
எம்பெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தனிப்பெரும் மகிமைச் சிறப்பு
கல்கில் நிகரில்லாத கருணை நைனாருடைய
துலக்கமாம் காரியத்தைச் சொல்லுகின்றேன் கேட்டிருங்கள்
ஆதியவ்வலில் படைத்தான் அஹ்மது ரஸூலொளிவை
நீதியுடன் பின் படைத்தான் நீளறுஷு லவ்ஹுகலம்
ஆதம் வெளியாக ஐம்பது அல்ஃபாண்டுக்கு முன்
நீதமுடை யோரொளிவு மிறையோனை ஹம்து செய்யும்
சாதி வர்க்க மெல்லாம் தகுமான நன்னபிக்காய்
ஆதி பெரியோ னமைத்தான்காண் அவ்வலிலே
வானும் அறுஷும் வரிசை குறுசும் கலமும்
மீனும் பொழுதும் இந்தும் வீருடை யோர்க்காய்ப் படைத்தான்
சொர்க்கத் தலங்கார மெல்லாம் துய்ய நபிக்காக
ஹக்கான நாயகன்தான் கருணையுடனே யமைத்தான்
புதுமைக் கடலேழும் புதுமை மலையாறும்
ஹபீபு நபிக்காக ககனுடையோன் தானமைதான்
ஜிபுறயீல் மீக்காயீல் ஸூறூதும் இஸ்றாபீல்
ஸபுறு நபிக்காக தம்பிரான் தான் படைத்தான்
அறுஷுக்குறுஸில் அழகுலவ்ஹு வானேழில்
வரிசை முஹம்மதென வடிவாய் யெழுதிருக்கும்
சுவர்க்க மடங்கலிலும் துய்ய நபி நாமம்
துவர்க்கமுடை யோனருளால் துய்தாய் யெழுதி வைத்தான்
வானவர்கள் நெற்றிதனில் வள்ளல் நபிநாமம்
ஜீனத்தாகத் துலங்கி சீராக நின்றிலங்கும்
ஒளிவாய்ப் புகழ்ந்து நின்றார் ஒன்றான ராஜாவை
வெளியாக வில்லையைப் போல் மேலான ஆதம் நபி
மயில்வேஷமாய் மரத்தில் வல்லோன் றனைத்துதித்து
கைலில்லா அன்றளவும் கத்தாவைத் தான் புகழ்ந்தார்
ஒளிவினால் கிந்தீலில் ஒன்றான நாயகனை
அளவில்லா காலமெல்லாம் ஆசாரமாய்த் துதித்தார்
அற்வாஹெல்லா மிவர்தன் அழகான றூஹூ தன்னை
செரிவாக சூழ்ந்து நின்று ஜீனத்துடனே புகழும்
நூறு முஹம்மதிய்யா மகிமை
தம்பிரான் நூறால் சமைந் தெழுந்த நூறாலே
உம்பர் நபிமார்கள் உலகமெல்லா முண்டாச்சு
ஆதம் நபியை அழகாய் படைத்த பின்பு
ஆதியவ ரொளிவை யமைத்தான் அவர் நுதலில்
நெற்றி தனி லொளிவு நில்லாதிருக்கில் உம்பர்
பத்திபத்தியா யவர்க்கு பணிந்து ஸூஜூது செய்தார்
ஆதம் நபிக்குப் பின்பு அழகாய்த் துலங்கி நின்றார்
ஷீது நபியுடைய ஜீனத்துள்ள நெற்றிதனில்
அனூஷி தன்னுதலில் அழகாம் பிறை போல
மனுவெல்லாம் தாழ்ச்சி செய்து வடிவா யிலங்கி நின்றார்
கைனா னென்னு மவர்தன் ககனமதிபோல் நுதலில்
ஜனான கண்பார்க்க அம்புலி போல் நின்றுதித்தார்
வரிசை மிகுதியுள்ள மஹ்லீலின் நெற்றிதனில்
துரிதாக நின்றுதித்தார் துய்ய ஒளியாய்த் துலங்கி
பாரிதென்னு மவர்தன் வாகுடனே நெற்றிதனில்
சீராக நின்றுதித்தார் சீமான் முஹம்மதனார்
உகுனூகு நெற்றிதனில் ஒளிவு வந்த காரணத்தால்
மவுனமுள்ள பேர்க ளெல்லாம் வாகாய் யடிபணிவார்
மத்தூஸல் யெனுமவர் தன் வரிசையுள்ள நெற்றிதனில்
கதிரோனொளியாகக் கண் விழியில் நின்றுதித்தார்
நூஹுநபி னுதலின் நூறாக நின்றுதித்தார்
ஜாஹூடைய ஸாமளவில் சந்திரன் போல் நின்றுதித்தார்
அற்பகுஷ தென்பவர்பால் அஹ்மதி றஸூலொளிவு
குறியாக நின்றிலங்கி குறையாமல் நின்றது காண்
பின்பு ஜபர் தன்னுதலில் பிறையொளிபோல் நின்றிலங்கி
அன்பான ஷாலிகுதான் ஐன்நுதலின் வந்ததுகாண்
காலிஃஎன்னும் பேருடையோர் ககனமதி போல் நுதலில்
சாலி ஹாய் நின்றுதித்தார் தம்பிரான் தன்னருளால்
ஆமிரென்னு மவர்தன் அழகான நெற்றிதனில்
ஷாமிலாய் நின்றுதித்தார் தக்கோ னருளாலே
அற்உவா நெற்றிதனில் அழகான அம்புலிபோல்
கிருபை யுடையோரொளிவுக் கீர்த்தியாய் நின்றது காண்
நாஹூரென்னு மவர்தன் நல்லஜபீன் நெற்றிதனில்
ஜாஹூடையோர் தம்மொளிவு சந்திரன் போல் நின்றது காண்
தாறகு நெற்றிதனில் சங்கையுடை யோரொளிவு
நூறானச் சூரியன் போல் றூறாமல் நின்றதுகாண்
வரிசை யிபுராஹீம் நபீ வாகான நெற்றிதனில்
பரிசுபெற நின்றதுகாண் பாறமதி போலே
இஸூமாயீல் பயகாம்பர் இந்துபோல் நெற்றிதனில்
பிசகாமல் நின்றிலங்கும் பெருமான் நபி யொளிவு
உத்தென்பவர் நுதலில் ஒளிவாக நின்றிலங்கி
அதுனானென்னும் மவர்பால் ஆதித்தன் போலுத்திதார்
வள்ளல் முஅத்துடைய வாகான நெற்றிதனில்
தெள்ளிய நூறாக ஜீனத்தாய் நின்றுதித்தார்
நிஜாருடைய நெற்றிதனில் நேசமாய் நின்றிலங்கி
விசார மிகுதியுள்ள முனர்ஜபீனில் வந்துதித்தார்
இல்யாசு நெற்றிதனில் இந்து போல் நின்றிலங்கி
நல்ல முதுறகத்தை நாடிஒளி வந்தது காண்
குஸைமத்து நெற்றிதனில் கோஜா ஒளிவு நின்று
திசையான் கினானத்து பால் செப்பமாய் வந்தது காண்
நல்லநுழர் நெற்றியில் நன்றாய் யிலங்கிய பின்
மல்லார் புயத்தரசர் மாலிக்கு பால் வந்தது காண்
பிஹ்ரென்பவர் நெற்றியில் பிசகாமல் நின்றிலங்கி
பகுறுடைய காலிபு பால் பருதி யொளியாக வந்தார்
சங்கைலுவை நுதலில் சாந்தொளிபோல் நின்றிலங்கி
சங்கைக் கவுபளவில் ஜீனத்தாய் வந்தது காண்
முர்றத்தெனுமவர்தன் முகமழகாம் நெற்றிதனில்
பர்றானவ ரொளிவு வடிவாக நின்றது காண்
கிலாபு நுதலில் கெரினாலு போலிலங்கி
நிலாவாக நின்றுத்திதார் நயினார் முஹம்மதனார்
குசையென்பவர் நுதலின் ஹூஸ்னாக நின்றிலங்கி
அசையா மணியுடைய அண்ணல்பக்கல் வந்ததுகாண்
அப்துமுனா பென்னும் அவர் நுதலை விட்டேகி
அவதானமாய் ஹாஷிம் அண்ணல்பக்கல் வந்தது காண்
கனதி அப்துல் முத்தலிபின் ககன் பிறைபோல் நெற்றிதனில்
மனிதரெல்லாங் கொண்டாட வரிசையாய் நின்றுதித்தார்
அண்ணல் அப்துல்லாநெற்றியில் அழகான அம்புலிபோல்
திண்ணமுடன் நின்றுதித்தார் சுல்தான் முஹம்மதனார்
ஷாமூரு மன்னன்மகள் சங்கையுள்ள நூறைக்கண்டு
ஆமெனவே பாடுபட்டாள் அப்துல்லா மாட்டேனென்றார்
வஹபு மகள் ஆமினத்தை வல்லோ னருளாலே
உகப்பாய் நிகாஹு செய்து ஒளிவை யிறக்கிவைத்தார்
சங்கை மிகு அன்னை ஆமினா நுதலில்
ஆமினாச் சொல்லுகிறார் அஹ்மதை யுண்டானபின்பு
பூமியில் பெண்போல பெண் வருத்தம் நான்காணேன்
ஆகிலும் மாதவிடை யமைந்தபடியாலே
வாகாய்ப் புதுமைப்பட்டு வரவறியாதே யிருந்தேன்
கண் தூக்கத்தில் ஒருவர் கனதியுடன் வந்து சொன்னார்
திண்ணமுள்ள ஆண்டவரை செப்பமாய் நீ சுமந்தாய்
செப்பியபின் னானறிந்தேன் சுமந்தது பிள்ளையென
துப்பாக வந்துசொன்னார் திங்கட் கிழமையிலே
அன்பியாக்கள் சோபன வாழ்த்து
மாதம் முறைமுறையே மாதாவின் வாசலிலே
நீதி அன்பி யாக்கள்வந்து நெறியாய் கனவில் சொல்வார்
முன்மாதம் வந்தார் முறையுமுள்ள ஆதம்நபி
பின்மாதம் வந்தார் பெரிய இத்ரீசு நபி
மூன்றாம் பிறையில்வந்தார் மேலான நூஹூநபி
மீந்த பிறையில்வந்தார் வீரர் இபுறாஹீம் நபி
அஞ்சாம் பிறையில் வந்தார் ஆன இஸ்மாஈல்நபி
மஞ்சுக் குடையாகவந்த வள்ளல்நபி தாயளவில்
ஆறாம் பிறையில்வந்தார் அண்ணல் மூஸாநபிதான்
வீரான ஆமினத்தின் வீடுதலை வாசலிலே
ஏழாம் பிறையில் வந்தார் ஈனமில்லா தாவூது
ஆளான மன்னர் அஹ்மது தாயாரளவில்
எட்டாம் பிறையில் வந்தார் எங்கள் நபி தாயளவில்
துட்டர் தனையடக்கும் ஸூலைமான் நன்னபிதான்
மாதம் ஒன்பதானபின்பு மரியம்மகனார் ஈசா
காதம் மணக்கவந்தார் காவல்நபி தாயளவில்
வயிற்றில் இருக்கையிலே வாகாய்ச் சிலபுதுமை
ஆய்ந்தங் கறிந்தார் அவர்தாயா ராமினத்து
பெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மங்கள ஜனனம்
ஆனைவருஷம் அஹ்மதி றஸூல் பிறந்தார்
ஈனமில்லா மக்கமெனும் இனியநகரில் பிறந்தார்
ஸஃபாவும் மர்வாவும் சங்கை அறபாமலையும்
ஷிபாயென்ற ஸம்ஸமுள்ள சிறப்பான நன்நகர்காண்
ஹறமும் கஃபாவும் கனதியுள்ள மாளிகையும்
கறமிகுதி யுள்ள தனத்தோர்கள் ஊரிதுகாண்
றபீயுல் அவ்வல் மாதம் இரு நான்கு தாமினுலே
ஹபீபிறஸூல் பிறந்தார் ககனபிறை போலே
ரண்டிலென்றும் நாலிலென்றும் நல்ல பனிரண்டிலென்றும்
வென்றியுள்ள பத்திலென்றும் வீருடையோர் செப்பினர்கள்
திங்கள்கிழமை ஸூபுஹூவக்த்தில் நபியிறசூல்
தங்க நிறமாக சங்கையுடனே பிறந்தார்
நபி பிறந்த நாளையிலே நால்மூன்று அல்ஃபுவெண்ணி
புவியில் வெளியாக்கிவித்தான் ஃபுர்கான் யிறக்கினவன்
வானும் புவிஏழும் வாகா யொளிவாக
ஜீனத்தாய் நின்றதுகாண் சுல்தான் பிறந்த அன்று
ஷாமு பதியிலுள்ள சங்கையுள்ள மாளிகையை
ஆமினத்து நாச்சியார்தான் அவ்வொளியால் கண்டனர்காண்
கிஸ்ராவெனும் மலுக்கு கோட்டைகள் கொம்மையெல்லாம்
கஸ்றாக துண்டுதுண்டாய் கீறி விழுந்ததுகாண்
பாரிஸென்னும் ஊரில் பார நெருப்பணையும்
நேரிசாய் நூந்ததுகாண் நைனார் பிறந்த அன்று
ஸாவதெனு மூரில் சங்கையுள்ள கங்கை கசம்
மாதற்றி போச்சுதுகாண் வள்ளல் பிறந்த அன்று
வத்தி வரண்டிருந்த வாதீஸமா வதுதான்
தத்திவெள்ளம் வந்ததுகாண் சங்கை பிறந்த அன்று
சாஸ்திர காரருட சங்கையுள்ள கோபுரங்கள்
ஏத்தமுடை யோர்பிறக்க இடிந்து விழுந்தது காண்
நஸ்றானி மாமரங்கள் நைனார்ப் பிறந்த அன்று
கஸ்ரா முறிந்ததுகாண் கத்தா வருளாலே
அஸ்னாமு புத்துகான்கள் அண்ணல் பிறந்த அன்று
அசைந்து தலைகீழாய் யடித்து விழுந்ததுகாண்
ஷைத்தான் ககனிழந்தான் சுல்தான் பிறந்த அன்று
பயித்தியங் கொண்டவன்போல் பதறிதிகைத்திருந்தான்
இபுலீஸெனும் ஷைத்தான் இனிப்பான சேவுகர்க்கு
கவலுவான் நீங்கள் சென்று காரியமேதுச் சொல்லுங்கள்
எங்கும் திரிந்தவர்கள் ஏகிவந்தார் மக்கம்தனில்
அங்கே ஒரொளிவு ஆமினார் வீட்டில்கண்டான்
அப்போ தவர்கள்வந்து அஜாஜீலுடன் வுரைப்பார்
செப்பமாய் சென்றுவந்தோம் ஜெகத்திலொன்றும் கண்டோமில்லை
மக்கமெனும் நகரில் வாகாய் யோரொளிவு
தொக்கமாய் நிற்குதுகாண் தூண்போலே வானளவும்
இந்த விசளம்தன்னை இபுலீசு கேட்டளவில்
நொந்தங் கழுதவனும் நோக்காடு பட்டிருந்தான்
ஒப்பாரியாய்வீழ்ந்து உச்சந்தலையில் மண்ணை
வெப்பமாய் போட்டறைந்து விம்மிவிழுந்தான் தரையில்
கெட்டோ மழிந்தோமே குறைமிகுதி பட்டோமே
எட்டுத் திசையுங்கேட்க இபுலீசு அழுதிருந்தான்
நட்சத்திரங்கள் நபிபிறந்த நாளையிலே
உச்சத்தி லிருந்து உதிர்ந்து விழுந்ததுகாண்
ஜிப்ரயீல் மீக்காயீல் துய்ய மலாயிக்குகள்
ஸபுறான நன்னபியை சங்கையுடன் சூழ்ந்துநின்றார்
ஷைத்தான்கள் வாராமல் தீங்கர்கண்கள் தையாமல்
பைத்தான வீடுதனில் வளைந்தவர்கள் நின்றார்கள்
எட்டு சுவர்க்கத்திலும் ஏழுதட்டு வானத்திலும்
பட்டுத்துயிலில்வைத்து பாங்காக சுற்றினார்கள்
சுற்றி முழிக்குமுதல் துய்யநபி தாயளவில்
பத்தி பத்தியாகவந்து பாங்காக விட்டனர்கள்
சுவர்க்கத்து வல்லிகளும் துய்யபின்து இம்றானும்
துவர்க்கத்து ஆஸியத்தும் சோமம்போல் வந்தனர்கள்
மார்க்கம் செய்து மையெழுதி வாகா யபமறைத்து
பார்க்க ஸூஜூது பருதியொளி போலுதித்தார்
தொப்புள் அழகாய் அறுத்துத் துய்யமணமான எண்ணெய்
தப்பிதலை மேனியெல்லாம் சந்திரன்போல் வந்துதித்தார்
காரிருள்போல் முடியும் ககன்பிறைபோல் முகமும்
நேரான புருவமுள்ள நீள்நுதலுமாய்ப் பிறந்தார்
வெள்ளி மடல்போல் காதும் விழிமாணிக்கம்போலும்
வள்ளி கிளிமூக்கும் வார்ந்த கனன்மாய்ப் பிறந்தார்
மோதிரம்போல் வாயும் முருவல் முத்துபோல் ஒளியாய்
நீதமுள்ள பொற்கெண்டிபோல் நீள் கழுத்துமாய் பிறந்தார்
திண்ணமுள்ள தோள் புயமும் சிறப்பான மார் அழகும்
மண்ணில் நிகரில்லா முஹம்மதிர் றஸூல் பிறந்தார்
எல்லா அழகும் இவர் அழகில் பாதியென
நல்ல உலமாக்கள் நவின்றங் குரைத்தனர்காண்
மனுவால் இவர் வஸூபு வர்ணிக்கக் கூடாது
ஸனுவாய் உலகுக்கெல்லாம் சங்கயாய் வந்தனர் காண்
ஷாஊஸெனும் சோபனம் தரையில் தொனியாய் முழங்கும்
தாஊஸெனும் மிறஸூல் தரையில் பிறந்தாரெனவே
மேலோர் பிறந்த அன்று விண்ணவரும் மண்ணவரும்
மாலாசை கொண்டு மகிழ்ந்து புகழ்ந்தனர்கள்
அறுஷும் குறுஷும் அழகான லவ்ஹுகலம்
பறுஷூம் கடல்மலையும் பாரநபியைப் புகழும்
கானகத்தி லுண்டான கரடிபுலி பீல்கடுவாய்
மானும் மறைமுயலும் வள்ளல் நபியைப் புகழும்
அன்னமும் தாறாவும் ஆனகிளி நன்கனமும்
மன்னர் பிறந்தாரெனவே வனத்தில் வண்ணமாய் கூவும்
மயிலும் குயிலும் வனத்தில் புறாயினமும்
மயலாசை கொண்டு மகிழ்ந்து தினங்கூவும்
ஜன்னத்தடங்கலையும் திறந்தங் கலங்கரிக்க
மின்னத்துடைய அல்லா விடுத்தான் மலாயிகத்தை
நரகமெல்லாம் பூட்டுண்டது நைனார் பிறந்த அன்று
உறமிகுதி யுள்ளவன் தன் உத்தார பரிமானான்
வல்லபெரியவனும் வாகாய்த் திரைநீக்கி
நல்லார் பிறந்த அன்று நலவாகத் தோத்தல் செய்தான்
வானவரும் ஹூருல்ஈனும் வஹ்ஷூம் இறைப்பக்கலில்
தானமாய்க் கேட்டனர்கள் சங்கையரசை வளர்க்க
அப்போதிறைவன் அமர்த்தி செப்பினான் அமதீ
செப்பமுடன் வளர்ப்பாள் துய்ய ஹலீமா வெண்பவள்
ஸஃதுக் கிளையிலுள்ள சங்கை ஹலீமா முலையை
மகுண முடையோர் குடித்தவரலா ரினைகேளாய்
பஞ்சம் பிடித்ததினால் பரிவாய் புருஷருடன்
அஞ்செட்டு நாரியர்கள் ஆனமக்கம் தேடி வந்தார்
மக்கமெனும் நகரில் வாழ்வுடையோர் தங்களுட
மக்கள் தனை யெடுத்தார் வாகாம் முலைகொடுக்க
வரிசை ஹலீமாவும் வாழும் கணவனுமாய்
பரிசுபெற பிந்தினர்கள் பாரப்பசியால் மெலிந்து
பிந்திவந்து கேட்டார்கள் பேரர் அப்துல் முத்தலிபை
சந்திரன்போல் முகத்தார் சங்கையுடனே யுரைத்தார்
தகப்பர் மவுத்தான சங்கையுள்ள பிள்ளையர்க்கு
உகப்பாய் முலைகொடுத்தால் உதவிமிக உண்டாகும்
ஹலீமாவும் மாப்பிள்ளையும் கனகநபி யைத்தேடி
பிலமாக வந்தனர்கள் பிள்ளைதனைப் பார்க்கவென்று
பார்த்துத் திகைத்தார்கள் பருதியோ இந்தொளிவோ
ஏற்றிப்புகழ்ந்தார்கள் இவரழகைக் கண்டபின்பு
கண்டு களிகூர்ந்து கருத்தாய் முலைகொடுத்து
வென்றியுடை யோரைக்கொண்டு வீராய் நடந்தனர்கள்
எல்லாருக்கு முன்பாக ஏகும் அவர்களுந்தான்
சொல்வார்கள் தோழியர்கள் சொல்லாய் இதேதெனவே
அப்போழ் ஹலீமா அவர்களுடனே யுரைப்பார்
மெய்ப்பான பிள்ளையினால் மிகுதி புதுமைகொண்டோம்
ஸஃதுக் கிளையிலுள்ள சங்கை ஹலீமாமுலையை
மகுணமுடைய முஹம்மதுர் ரஸூல் குடித்தார்
வாகாய் அவர்முலையை வள்ளல் குடித்தபின்பு
சூகை முலைமாறி சுரந்தது காண் பாலாக
கல்லும் மரமும் கைரான பிள்ளையென்று
நல்ல ஸலாமுரைக்கும் நாங்கள் கொண்டு போகையிலே
பட்ட மரங்களெல்லாம் பச்சை மரமாய் பழுக்கும்
துட்ட மிருகமெல்லாம் துய்ய ஸலாமுரைக்கும்
ஹலீமா வளவிலுள்ள கருவழித்த ஆட்டினங்கள்
மலீஹாய்ப் பருத்ததுகாண் வள்ளல் வரிசையினால்
குட்டங்குறை நோயுள்ளவர் குதாநபியைத் தொட்டிருந்தால்
கெட்டபலாய் நீங்கும் கிருபையுடையோனருளால்
வந்துவந்துப் பார்ப்பார்கள் பலதிலுள்ளோ ரெல்லாம்
சந்திரனோ சூரியனோ தங்கமோ யென்று சொல்வார்
சிற்றூரி லுள்ளவர்கள் திசைகேட்டு தீவிரமாய்
பத்திபத்தியாய் வருவார் பயகாம்பரைப் பார்க்க
வந்தவர்க ளெல்லாம் மதிபார்த் துரைப்பார்கள்
அந்த மிவர்போல் அழகரில்லை யம்புவியில்
திகைத்து மதிமயங்கி தீன்குடிப்புத் தானிழந்து
முகத்தை யுற்றுப்பார்த்து நிற்பார் பீவி ஹலீமாவளவில்
அஹ்மதிர்ரஸூல் பொருட்டா லவ்வூரெல்லா மலிந்து
சுகமாக வாழ்ந்தனர்கள் துய்யோன் பறகத்தினால்
மழையில்லாக் காலந்தனில் வரிசையுள்ளோர் தம்மைவைத்து
மொழிவாரிவர் பொருட்டால் முன்னவனே நீயிறக்காய்
அப்போது மேகம் அறைந்து இடி முழங்கி
தப்பாமலே சொரியும் சாடிவாய் போலாக
ஹலீமா உரைக்கிறார் கருணை முஹம்மதனார்
மலீஹாய் வலதுமுலை வருத்தி யருந்துவர்காண்
இடதுமுலை யருந்தார் எங்கள் நைனாரிறஸூல்
உடனான ளம்றத்துக்காய் உறுதிநெறியாய் விடுவார்
திரண்ட மதிமுகத்தார் ஸிராஜூ விளக்கில்லாமல்
இருண்ட இரவில் இருந்தோம் மிவரொளிவில்
குழந்தைப் பருவம்
தாராட்டி சீராட்டி சங்கையாய் நீராட்டி
பாராட்டி பால் பூட்டி பாங்காய் வளர்ந்தனர்காண்
நடக்கப் பருவம் நபியிறஸூ லானபின்பு
கடக்கணம் மேய்க்கவென்று காவலுடன் ஏகினர்காண்
அப்போது மூவர்வந்து அஹ்மதுதன் நெஞ்சுதனை
செப்பமாய்க் கீறிகல்பைத் துய்தாய்க் கழுகினர்காண்
ஒப்பமாய்ப் பின்பு நெஞ்சை யொன்றாய்ப் பொருத்தினர்கள்
ஒப்புவமை யில்லா வுடையோ னருளாலே
ழம்றத்தென்னும் பிள்ளையிதை நன்றாக கண்டளவில்
உம்மளவில் சென்றோடி உரைத்தா ரிதுகருமம்
அப்போ தவரழுது அஹ்மதரை வந்தெடுத்து
செப்புமகனே யுனக்குத் தீங்கேது என்றுரைத்தார்
தாயாருடனுரைப்பார் சங்கையார் மூவர்வந்து
நாயனருளால் ஸதுரை நன்றாகக் கீறினார்கள்
கல்பைப் பிளந்து கழுவி பொருந்தியபின்
நில்லாம லேகினர்கள் நீதியுள்ள மாதாவே
பின்பு சிலகாலம் பெருமான் வளர்ந்த பின்பு
அன்பான பேரர்பக்கல் அஹ்மதரைக் கொண்டு வந்தார்
பேரர் அப்துல் முத்தலிபும் பிரிசமாய் முத்திக்கொண்டு
பேராம் ஹலிமாக்கு பொன்பூ மிக அளித்தார்
இருந்து வளர்ந்த இயல்பெல்லாம் பேரருக்கு
திருந்த உரைத்தனர்காண் ஸூல்தானுடன் காரியங்கள்
ஆடையும் பொன்னும் அழகான மாடாடும்
தேடும் பொருளெல்லாம் திரண்டதுகாண் தீன்நபியால்
நயினார் முஹம்மதனார் நெறியும் ஒழுக்கத்திலும்
ஜைனாகத் தான் வளர்ந்தார் ஜீனத்துள்ள பேரர்பக்கல்
பொய்யுரைகள் பேசாமல் பொல்லாங் கணுகாமல்
மெய்யான தீன் வழியில் வீறாய் வளர்ந்தனர் காண்
குபீர் ஷிர்கு செய்யாமல் குறிகேட்டில் ஆகாமல்
நபருடைய பேரர்பக்கல் நன்றாய் வளர்ந்தனர் காண்
விசுவாசி என்றிவரை வீரான பட்டஞ்சொல்லி
பிசகாமல் சொல்வார்கள் பெரியோர்க ளாசரித்து
தந்தை, தாய் பிரிவு
வயிற்றில் அறுமாதம் வள்ளல் இருக்கையிலே
சைத்தியமாக செத்தார் தகப்பர் அப்துல்லாதான்
மதீனமெனும் மூரில் வரிசைநபித் தகப்பர்
மதிபோல் முகமுடனே மண்ணில் ஒடுங்கினர்காண்
நாலுவயதில் நபீ தாயார் ஆமினத்து
காலம் நிரம்பி கபுறாம் வாயிற்புகுந்தார்
இருநான்கு சென்றபின்பு இனிய அப்துல்முத்தலிபும்
கருணையுடையோன் அருளால் கபுரில் ஒடுங்கினர்காண்
பின்பு அபூதாலீபுதான் பிரிசமாய் நன்னபியை
அன்பாய் வளர்த்தனர் காண் அம்புலிபோல் நின்றிலங்கி
ஷாம் தேசம் போகல்
ஆம் பனிரண்டானபின்பு ஆன அபூத் தாலிபவர்
ஷாமூர்க்கு போகவென்று சங்கையுடன் கொண்றெழுந்தார்
கொண்டு வழிப்போக்கையிலே கூண்டுஸலாம் சொல்லி விழும்
கண்டகற்களும் மரமும் கருணை நயினார்தமக்கு
புஸ்றாவென்னும் நகரில் புஹைறாவு றாஹிபுதான்
குஷியாக முத்திரையும் குறிபலனுங் கண்டதினால்
அலாமத்து கண்டு அஹ்மதரைத் தானறிந்து
குலாவுடைய அம்முடனே கூறினார் பாதிரியார்
ஷாமூர்க் கிவரைக் கொண்டு ஸபர் செய்யலாகாது
ஷூமி யஹூதியர்கள் துன்மார்க்கஞ் செய்வார்கள்
மீள வருகையிலே வீறுடைய அம்முடனே
நீழலிட்டு வந்தது காண் நீள்மேகம் நன்னபிக்கு
மக்கா திரும்பல்
வந்தார் முஹம்மதனார் மக்கமெனும் நகரில்
சிந்தை மகிழ்ந்திருந்தார் துய்யஅம்மு பக்கலிலே
மக்கத்தி லுள்ளவர்கள் வாகாய் சிறியாரை
பக்கத்தில் மல்பிடிக்க பார்த்து மகிழ்ந்திருப்பார்
அஹ்மதி றஸூலும் அவ்விடத்தில் பார்த்திருப்பார்
தகுதியுடையோரை சறுக்கார்கள் பிள்ளையர்கள்
பொல்லா அபூஜஹில் தான் ஃபுருக்கா னுடையோரை
மல்லாக வேணுமென்று வாய்மதப்பாலே யழைத்தான்
ஹயா மிகுதியான கருணை முஹம்மதனார்
நியாயமல்ல வென்றெழுந்தார் நெறியுடைய அம்மருளால்
தூசிப்போட்டு வந்தவனை துய்ய நபீயிரஸூல்
வீசியெடுத் தெறிந்தார் மேலோர்கள் தாம் நகைக்க
ஆன அபூதாலீபும் அப்பாஸும் ஹம்ஸாவும்
ஜீனத் தபூலஹபும் சிறியாரை யாசித்தார்
வர்த்தகம் செய்தல்
வயதிருபத் தஞ்சுதனில் வல்லிகதீஜா பயலோடு
உய்தமுள்ள ஷாமூர்க்கு ஓசையுடையோ ரெழுந்தார்
கச்சைவடம் செய்ய வென்று கதீஜா அனுப்பியபின்
மிச்சமாய் செய்து வந்தார் மேலா னருளாலே
கதீஜத்தெனும் வல்லியர் தான் கருதினார் நன்னபியை
அதிக கலியாணம் ஆடம்பரமாய் முகிக்க
கொட்டுங் குளமும் குறவை சத்தமும் வெடிலும்
தட்டிமுறை சாயசங்கை யல்லயென் றுரைத்தார்
அழியும் துன்யாவில் ஆசை யெல்லாம் அழியும்
களியும் விளையாட்டும் கத்தா முனிவாகும்
திருமணம்
ஒன்பது அம்முடைய உத்தார சொல்படியே
அன்பாய் கதீஜாவை ஆனநிகாஹூ செய்தார்
குவைலிதெனும் தலைவர் கொஞ்சுங் கிளிமகளை
சபையுடைய நல்நயினார் தகுமாய் மணமுடித்தார்
பெண்ணில் அழகாம் பிறைபோல் கதீஜாவை
மண்ணில் நிகரில்லா முஹம்மதிர் றஸூல் முடித்தார்
நபி பட்டம்
நாற்பது ஆமில் நயினார் முஹம்மதற்கு
கூர்ப்பாய் நபிபட்டந் தான் குணமாக வந்தது காண்
திங்கட்கிழமை சிறப்பாய் றமலானில்
மங்காத மக்கந்தனில் வந்தது காண் தூது பட்டம்
தூதர் ஜிபுரயீல் தான் துய்ய நபீ யளவில்
ஆதிமுதல் கொண்டு வந்தார் ஆன ஸூறத்து அலக்கை
பின்பு முஸம்மிலெனும் பேருடைய ஸூரத்து தான்
அன்பா யிறங்கிற்று காண் அண்ணல் அஹ்மதுக்கு
சன்மார்க்கப் பிரச்சாரம்
அச்சப்படுத்தி அறிவிய்யுமென் றேவியபின்
உச்சாயமா யழைத்தார் ஒருவன் வணக்கத்திற்கு
காதிபென்றும் ஸாஹிரென்றும் கருத்துடைய ஷாஇரென்றும்
ஆதி நபியை அதபு கெட பேசுவர்கள்
ஷைபான் உத்துபாவும் ஷைத்தான் அபூஜஹீலும்
ஜபான பேச்சாக அஹ்மதரை பேசுவர்கள்
சாகா பெரியோன் சடுதி இவர்கள் தம்மை
ஆகா பலாயால் அழித்தானிவர் பொருட்டால்
அவ்வல் இஸ்லாமானார் அணங்கி கதீஜத்துதான்
செவ்வாக பின்பு வந்தார் ஷெய்கு அபூபக்கரும்
அலியும் உதுமானும் ஆனத்தல்ஹா ஸஃதும்
அலையாத மார்க்கத்திற்கு அபூபக்கருக்கு பின் வந்தனர்கள்
பொன்னாலே ஸில்ஸிலத்து போட்டுவாள் கைபோட்டு
மன்னர் நபீயை வதைக்க உமறெழுந்தார்
எழுந்தேகிப் போகையிலே இரச கலிமாவுரையை
அழுத்தமாய் கேட்ட பின்பு அஹ்மது பால் தீனில் வந்தார்
மாட்டின் கலிமாவை வாகாய் உமர் கேட்டு
தேட்டமாய் தீன் வழியில் துய்யநபீ பக்கல் வந்தார்
உபறுபுனு கத்தாபு உறுதிதனில் வந்தளவில்
கமரி திகைத்தார்கள் காபிருக்குள் ஆண்களெல்லாம்
சிறிய தகப்பர் சிறப்பான ஹம்ஸத்துதான்
அறிய உமறுக்கு முன் அன்பாக தீனில் வந்தார்
மிஃராஜ்
புராக்குப் பரியேறி வீறாய் இறையோனை
திறமாகக் காட்சி செய்து திரும்பினா றோரிரவில்
மக்கந்தனி லுள்ளவர்க்கு வள்ளல் நபியிறஸூல்
ஷக்கறவே சொன்ன பின்பு சந்தாபமாய் திகைத்தார்
மிக்க அபூபக்கரும் வீறான தீனவரும்
ஹக்கெனவே ஈமான் கருத்தாக கொண்டனர்காண்
எதுரிபெனும் ஊரில் இரு மூன்று பேர் நபிக்கு
மதுரமுள்ள மக்கந்தன்னில் வந்தீமான் கொண்டனர்காண்
ஹிஜ்ரத்து
யதுரிபெனும் பட்டணத்தில் இஸ்லாம் பறந்த பின்பு
மதிபோல் முஹம்மதனார் மக்கம் விட்டேகினர்காண்
மதீனமெனும் பதிக்கு வள்ளல் எழுந்தேறியபின்
அதிக இஸ்லாமில் அவரவரே வந்தனர்கள்
பின்பு படைகூடி பேரான மக்கந்தனில்
அன்பாக வந்து அஹ்மதுர் றஸூல் பிடித்தார்
மறுகால் மதீனத்திற்கு வள்ளல் எழுந்தேறி
திறமாக சேனைபடை தேசந்தனில் அனுப்பி வைத்தார்
புரிசைகளும் கோட்டைகளும் பூங்காவனத் தோப்பும்
வரிசை மிகுதியுள்ள பலதுகளைப் பிடித்தனர்கள்
பலமுடைய பேர்களென்ன பெரியோன் குறான் மொழியில்
நலவான யார்கள் தம்மை நாயன் புகழ்ச்சி செய்தான்
அபூபக்கரும் உமறும் அண்ணல் உதுமான் அலியும்
சவுறமுள்ள யார்களெல்லாம் சங்கையுள்ள பேரிவர்காண்
எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அதியற்புத மகிமைகள்
திட்டாந் தரங்கள் கொண்டு தீன்வழியில் வந்தவர்கள்
மட்டில் அடங்காது வாயால் துலைக்கரிது
மங்கா மதிபிளவை மண்ணிலவர சொன்னவர்க்கு
எங்கும் நடுங்கும் இவர் கீர்த்தி கேட்டளவில்
உடும்புமுதல் ஓட்டகையும் உன்னிசலாம் சொன்னவர்க்கு
நடுங்கும் புவியேழும் நாயனருளாலே
மாட்டினமும் ஆட்டினமும் வரிசைஸூஜூ திட்டவர்க்கு
கூட்டங் களெல்லாங் கலையும் கோமானிவ ரடுத்தால்
கல்லும் மரமும் கருதிசலாம் சொன்னவர்க்குக்
கொல்லும் கரடிபுலி குணமாகத் தாழ்பணியும்
ஆட்டை ஹயாதாக்கிவைத்த அண்ணல் முஹம்மதர்க்கு
காட்டிலுள்ள மான்மரைகள் கனமாய்ச் ஸலாமுரைக்கும்
கைபரென்னும் பதியில் கறுத்த ஹிமானுடனே
றைபில்லா பேசியர்கு எல்லா மடிபணியும்
பொழுதைத் திருப்பிவைத்த பெருமான் முஹம்மதர்க்குப்
பழுதறவே எல்லாரும் பாங்காய்ப் பணிந்து நிற்பார்
துப்பி உமிழ்ந்து துலக்கமில்லாக் கண்விழியை
செப்பமுள்ள கண்ணாக்கும் சுல்தான் முஹம்மதனார்
கழன்ற விழி ஐனை கையால் தரிபடுத்தி
அழுத்தமுள்ள கண்ணாக்கும் அஹ்மதிறசூலிவர்காண்
பட்ட மரங்கள் தன்னை பச்சைமர மாக்கிவைக்கும்
குட்டங்குறைத் தீர்க்கவந்த கோஜு முஹம்மதர்காண்
செத்தஸைது தனக்கு துலக்கமாய்ச் சாட்சி சொன்ன
புத்தை விளபணிவைத்த புறுகான் முஹம்மதர்காண்
பட்டகுத்தி ஈத்தமரம் பள்ளிதனில் அலற
கட்டி அணைத்தக் கருணை முஹம்மதர்காண்
உப்புக் கிணற்றில் உமிழ்ந்தமுத மாக்கிவைத்தோர்
செப்புரை யில்லாஊமை செப்ப துஆவிரந்தோர்
கெஞ்சி துஆவிரந்தார் கிருபை முஹம்மதனார்
அஞ்சி படிவாசல் ஆமீனுரைத் ததுகாண்
ஒனாய் சலாமுரைத்த உண்மை நயினார் தமக்கு
ஆனைக் கரடிப்புலி ஆசரித்து தாழ்பணியும்
மானைப் பிணையாகநின்ற வள்ளல் அஹ்மதனார்
பூனைக்கிறங்கி புனல்சாய்ந்த புண்ணியர்காண்
உம்மு ஜமனென்பவரும் உருநபிதன் நீர்பவுலை
அம்மிக் குடித்து அழகான பெண்ணானார்
நிலவைப் பிளந்தழைத்தார் நயினார் நபியிறசூல்
பலரும் விழியால்காண பாங்கான மக்கந்தனில்
முன்காணும் போலே முதுகுப் புறத்தாலே
பின் கானு மெங்கள் பெருமான் அஹ்மதர்காண்
நாழிமா கொண்டு நபி ஆயிரம் பேர்க்கு
நீளும் பசி தீர்த்த நயினார் முஹம்மதர்காண்
தாயுந் தகப்பரையும் தகுமாய் ஹயாத்தாக்கி
தீன் வழியில் ஆக்கிவைத்த சுல்தான் முஹம்மதர்காண்
வெளிக்கிருக்க வேண்டுமென்று வீராய் யிருமரத்தை
அழைத்தா ரதுகள்வந்து அமைந்து மறைந்ததுகாண்
நாட்டாளிவந்து நயினாருடன் உரைத்தான்
காட்டும் புதுமையென்று காட்டினா ரப்பொழுது
மரத்தை அழைத்து வடிவாய் ஸலாமுரைத்து
துரத்திபோ என்று சொன்ன துய்ய முஹம்மதர்காண்
அப்போது அஃறாபீ அண்ணல் முஹம்மதர்க்கு
ஒப்பாக ஈமான் உறுதியாய் கொண்டனர்காண்
அன்றுப் பிறந்த அணையாடைப் பிள்ளையுடன்
வென்றியுடன் பேசிநின்ற வீரர் முஹம்மதர்காண்
குருவாம் முஹம்மதனார் கொடைகொடுக்குங் கையாலே
திறைபோல் நசல்பிணியைத் தொட்டா லப்போதகலும்
ஹாஜத் திருக்க வென்று கல்லினத்தை யேவியபின்
நேசமுடன் கல்லினங்கள் நெருங்கி மறைந்ததுகாண்
வாய்க்காலின் அக்கரையில் வலியபெருங் கல்லினத்தை
நோக்கி அழைத்த பின்பு நீர்மீதில் வந்தது காண்
ஈத்த மரக்குலையை யெங்கள் நபியழைத்து
ஏத்தாக போகச்சொன்ன எங்கள் நயினார்காண்
முன்னூறு பேர்களுக்கு மோசமற ஓர்ஸஹனில்
அன்ன ஒஜீபனத்தை அழகாய் அமைந்தனர்காண்
அஹதான நாயகனை அறுஷேறி காட்சிசெய்தார்
உஹது மலையை யுதைத்தார் அலையாமல்
ஈத்தமட்டை தன்னை யெடுத்து உகாஷத்துக்கு
ஏத்தமுள்ள பட்டயமா யீந்தார் பெரும் படையில்
உலர்ந்த உற்ஜூனை ஊனமைத்த பட்டயமாய்
கலந்து பெரும்படையில் கத்தியில்லா பேர்க்களித்தார்
ஆட்டுக் குரங்கு அஹ்மதுட னஞ்செனவே
தேட்டமுடன் தின்றபின்பு செப்பி யுரைத்ததுகாண்
கடிந்த இருளில் கதிரொளிபோல் ஆமினுக்கு
தொடர்ந்தேகி வந்ததுகாண் துய்யோன் பறக்கத்தினால்
படைவந்து சூழ்ந்தபின்பு பயகாம்பர் மண்ணையள்ளி
சடுதி யெறிந்தவர்கள் சங்கைகெட்டு ஓடினார்கள்
உலூசெய்த தண்ணீரை யுண்டோர் வசக்கேடு
மலைபோல் அகன்றதுகாண் வரிசையுள்ள தண்ணீரால்
அன்னமும் அருந்தையிலே அழகாய் தஸ்பீஹூ
உன்னி யுரைத்ததுகாண் உண்ணும் களரிதனில்
நீள ஸடியில்லா நயினார் முஹம்மதர்க்கு
மீள வருகையிலே முகில் குடையாய் வந்ததுகாண்
ஏறவொண்ணா பெருமரத்தை யேறுமர மாக்கிவைத்த
நூறொளிவில் ஊசிதன்னை நோக்கி ஹூமைறா யெடுத்தார்
சப்புற மஞ்சேறி சங்கையுடனே அர்ஷில்
ஒப்புவுமை யில்லானை யுரும்விழியால் காட்சிசெய்தார்
ஹிராவும் துபைறும் கிருபையுள்ளோர் ஏறினதால்
தறாபாய் அலைந்ததுகாண் சந்தோஷமாய் குஷியாய்
மலையி லிருக்கையிலே வண்ணப்புறா சிலந்தி
கலைபோல் கய்றுநெய்து கருத்தாகக் கூவிற்றுகாண்
குஃப்பார்கள் வந்து குறித்தவர்கள் பார்த்தபின்பு
ஙஃப்பார் அவர்கள் கண்ணை அழித்தான் தெரியாமல்
வீட்டை வளைத்த பின்பு வீருடையோர் மண்ணையள்ளி
தேடிய காபிர்கள்மேல் தூவி நடந்தனர்காண்
சுறாக்கத்தெனு மவந்தன் துய்யபரி கால்நிலத்தில்
வராமல் பதிந்ததுகாண் வரிசையுடையோர் பொருட்டால்
பட்டயத் தாலே பயகாம்பரை யொருத்தன்
வெட்டவந்த கைசோர்ந்து விறுமுத்தி யாகநின்றான்
கெஞ்சி இரந்தான் கிருபை நயினாரிடத்தில்
முஞ்சகுண மில்லார் முனியாமல் போகச்சொன்னார்
காதிம் அனஸவர்க்கு கருதி துஆவிரந்தார்
நாதனருளால் நலமிகுதி பெற்றார் காண்
மஹ்மூதெனு மவர்தன் வாகுடைய வதனந்தனில்
அஹ்மதுர் றசூலுமீந்தார் அழகம்புலி போலானார்
நாபிஅத் தென்பவருக்கு நயினார் துஆவிரந்தார்
நோவு பிணியில்லாமல் நூற்றியிருப தாயிருந்தார்
ஈக்கொசுகு மேலில் இராது ஒருக்காலும்
நோக்குமடி மண்ணில்லா நூறு முஹம் மதர்காண்
திட்டாந் தரமிகுதி சுல்தான் முஹம்மதர்க்கு
மட்டி லடங்காது பஹ்று போலாயிருக்கும்
அவ்லியா வெண்ணியெல்லாம் அவர்கடலி லாயிருக்கும்
நவிலும் படிகேட்டு நடக்கின்ற நாயகர்காண்
உத்தமத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உயர் பண்பு
தாழ்ச்சி மிகுதியுள்ள சங்கைநயி னாரிறசூல்
தீட்சைபெற்ற யார்களுக்கு சிறப்பாய் ஸலாமுரைப்பார்
ஆடுதவ்று ஒட்டகங்கள் அஹ்மதிரஸூல் கறப்பார்
ஆட்டை அவர்கையால் அழகாய் கழுகுவர்காண்
வீட்டைத் திருகரத்தால் விளங்க பெருக்குவர்காண்
காட்டி லுவாம்பழத்தை கருங்கலையை தின்னுவர்காண்
கம்புளி ஸூஃபு கனமுடைய கோதடிகள்
சிம்பா நபியிறசூல் சிறப்பாகத் தாமுடுப்பார்
அம்புவியில் முன்னடக்க அஹ்மதுறஸூல் பொருந்தார்
தும்பு விறகுதன்னை சுமந்து வருபவர்காண்
எடுக்கவொண்ணா கல்லினத்தை எடுத்து சுமந்துவந்து
அடுத்து உதுமான்கபுரில் அலாமத்து வைத்தவர்காண்
அஹ்மதிர் றஸூலும் ஆயிஷத்து மாதாவும்
மகுணமுடன் இசலி வாகாய் நடப்பார்கள்
ஒருக்கா லிவர்முந்துவார் ஒருக்கா லவர்முந்துவார்
திருக்காட்சி செய்தநபி சீராகு மென்றுரைப்பார்
சீலப்பிள்ளை சமைத்து சிறியார் விளையாட
ஆலம் நபிபொருந்தி அமத்தாமல் பார்த்து நிர்ப்பார்
மாதவிடை யாயிருக்கும் வல்லிமிஞ்சும் தண்ணீரை
காத மணக்கவரும் கருணைநயினார் குடிப்பார்
ஆயிஷத்து தன்னை யழகாய் உனுக்கில் வைத்து
மாயிசாம்பேர் சிலம்பம் மங்கையர்க்கு காட்டுவர்காண்
பேரர் ஹசன் ஹுசைனைப் பிரிசமாய் தோளில் வைத்து
சீராக கொண்டேகும் சின்கண் முஹம்மதர்காண்
ஜைனபு நாச்சியார்தன் சிறப்பான பிள்ளைதன்னை
ஜீனத்துடன் தோளில்வைக்கும் சீமான் முஹம்மதர்காண்
வீட்டிலுள்ள வேலைதனை வேத முஹம்மதனார்
கூடவீட்டிலிருந்து கூசாமல் செய்பவர்காண்
பெண்டுகள் பிள்ளையுடன் பேரன்மார் தங்களுடன்
வென்றியுடன்னன்றி செய்து வீராய் யிருந்தனர்காண்
ஆட்டுத்தாள் தின்ன அழைத்தால் நபியிறஸூல்
மாட்டேனென்று சொல்லாமல் வழிப்பாடா யேகுவர்காண்
பாஸாரிலேகி வரிசையுடன் நன்மை தின்மை
கூசாமல் சொல்லுமெங்கள் கோஜூ முஹம்மதர்காண்
கடையில் சரக்குகொண்டு கையிலே யிருக்கையிலே
தொடர்ந்தவர்கள் கேட்பார்கள் துய்யோர் கொடுக்கார்காண்
படையில் புலியாம் பயகாம்பர் நம்மிறஸூல்
அடியாரை பெண்டுகளை அடியார் ஒருக்காலும்
பெண்டுகள் பிள்ளையுடன் பெருமையுள்ள சீஷருடன்
வென்றியுடன் முதனம் வீறாக சொல்லுவர்காண்
இரண்டுலட்சம் பேர்களுண்டு நல்ல நயினாருக்கு
முண்டி அவர்கள் தம்மை முனியார் ஒழுக்காலும்
கல்புறங்கா நம்மிறசூல் கருதி ஒருக்காலும்
கல்புநாய் தன்னை கடிந்து நோக்காடு செய்யார்
எறும்பு கொசுயினத்தை யிறங்கி யொருக்காலும்
திறமுண்டு செய்து கொல்லார் திங்கள் முஹம்மதர்காண்
தகப்பனில்லாப் பிள்ளைதன்னை தலையைத் தடவிக்கொண்டு
உகப்பாக கூட்டிவுண்ணும் உண்மை முஹம்மதர்காண்
தட்டுமுட்டுக் கண்டால் சங்கையுள்ள நம்நயினார்
கட்டிச் சுமந்து கருவீட்டில் செல்லுவர்காண்
அன்னம் கறிதன்னை ஐபாய் யொருக்காலும்
உன்னி யுரையாத உண்மை முஹம்மதர்காண்
பிள்ளையடியார்கள் பெண்கள் பிறர் குற்றமெல்லாம்
தள்ளிப் பொறுக்குமெங்கள் சங்கை முஹம்மதர்காண்
தருமக் கொடை வள்ளல்
இரக்க மிகுதியுள்ள எங்கள் நயினாரிறஸூல்
இரக்கவந்த பேர்களுக்கு ஈவார் முதல்மிகுதி
காற்றுங் கடலும் கருமேகமும் மலையும்
ஏத்தநபீ கொடைக்கு இவையெல்லாம் ஒவ்வாது
தேடிவந்த பேர்களுக்கு ஸெய்து முஹம்மதனார்
ஆடைவெள்ளிப் பொன்னினங்கள் அழகாய் கொடுப்பவர் காண்
வணக்க சீலர்
வானவரும் பூமியரும் வரிசை அன் பியாமாரும்
தானமுடன் ஒவ்வார்கள் தகுமாம் வணக்கத்துக்கு
இரவில் முழித்து யிறையோனை யொருகாலில்
பருதி யளவும் பரிவாய் வணங்குவர்காண்
குருவி யினம்போல் குரல்விட்டழுது நின்று
மருவி றஹ்மானை வணங்கும் முஹம்மதர்காண்
உம்மத்தின் மேலிரங்கு முண்மை முஹம்மதனார்
இம்மி றைந்தாபோலே யிரவில் அழுபவர்காண்
குருவாம் முஹம்மதனார் குதாவைப் பயந்திரவில்
அருவி நீர்போலே யழுவார்காண் ஆணிமுத்தாய்
திங்கள் வியாழன் சிறப்பான வெள்ளிதனில்
சங்கை அய்யாமுல்பீளில் தக்கநோன் புள்ளவர்காண்
றஜபு ஷஃபான் யவ்ம் அறபா ஆஷூறா
திசையாய் முஹர்ரம்தனில் தீனுடையோர் நோன்பு வைப்பார்
ஸதக்காவை தின்னாத சங்கைநயி னாரிறஸூல்
பதுக்காமல் நாளைக்கொன்று பாங்காய் கொடுப்பவர்காண்
மதிபோல் வதனுடைய வள்ளல் பயகாம்பர்
ஹதியாக் கெதிராய் கனமாய் கொடுப்பவர்காண்
எளிய வாழ்வு
துனியாவை நாடாத துய்யநபி யிறஸூல்
கனியான நாயகனைக் கண்டு வணங்குவர்காண்
பசியா லிடையிற்கல்லைப் பாங்காக வைத்துகட்டும்
குஷியாக நின்றுதொழும் கோஜா முஹம்மதர்காண்
போட்டு பொறுப்பார் ஃபுறுக்கான் முஹம்மதனார்
ஆட்டுத் தோல்மேலே அழகாய் யுறங்குவர்காண்
முடியான கம்பளியில் முஹம்மதிர் றஸூல்நயினார்
மடியாமல் நித்தம் வடிவாய் யுறங்குவர்காண்
மரத்தாலே பாத்திரத்தில் வரிசைநபி னாரிறஸூல்
கரத்தாலே கோரிதின்பார் களரிதனி லிருந்து
கருவான ரொட்டிதனை கனத்த பசியாயிருந்து
பரிவாக தின்னுமெங்கள் பக்றான நயினார்காண்
எளியார்கள் தம்மை யிரங்கிப் புகழ்ச்சி செய்வார்
தெளிவா யவர்களுடன் சிறப்பாய் கலந்திருப்பார்
இரப்பார் இறைப்பக்கலில் என்னை யெளியாரினத்தில்
பறப்பாக கூட்டருள்வாய் படைத்தோனே யென்றுசெப்பி
சொல்வார் நபியெளியார் சீமான் தனக்குமுன்பாய்
சொல்வார்கள் ஜன்னத்துக்கு சீராக தாவருஷம்
ஒருநா ளிருக்கால் உண்ணாத நம்மிறஸூல்
கிரிபோல் கொடை கொடுப்பார் கேட்டுவந்த பேர்களுக்கு
தோல்கோதும் பால்நிரம்ப தின்னாத நம்மிறஸூல்
மாலாசை தன்னை வருடார் ஒருக்காலும்
நாற்பது நாளளவும் நபிவீட்டிலே நெருப்பு
கூர்ப்பாக யில்லையென்றார் குணமான ஆயிஷத்து
ஈத்தப்பழமும் இனிய தண்ணீரும் புசித்து
ஏத்தமுட னிருந்தார் எங்கள் நயினாரிறஸூல்
பித்தீகு நற்சுரக்காய் விருப்பமுள்ள வெள்ளரிக்காய்
வெற்றியுள்ள நம்நயினார் விருப்பமுடன் தின்பவர்காண்
ஈத்தம் பழமும் இனிய முந்திரிப்பழமும்
ஏத்தமாகத் தின்னுமெங்கள் யிறஸூல் முஹம்மதர்காண்
ஈரவெங்காயம் இரஸூல் முஹம்மதனார்
சீராக வெந்தபின்பு திண்ணமுடன் தின்றனர் காண்
தோல்கோதும்பு ரொட்டியை துய்ய நபியிறஸூல்
ஆள்களுக்குங் கொடுத்து அழகாயருந்துவர்காண்
கோழிறைச்சி கொக்கிறைச்சி ஹூத்திறைச்சி முசலிறைச்சி
நீளமுள்ள மரையிறைச்சி நயினா ரருந்துவர்காண்
குற்றம் பொறுக்குமெங்கள் கோஜா முஹம்மதரை
கத்தி பரிவார்கள் கனமறிய மாட்டாமல்
பத்தி யிழுப்பார்கள் பரிவட்ட கம்பளியை
புத்தியில்லா மனிதரென்று பொறுப்பார் நபியிறஸூல்
ஆகாத பேச்சுரையை அலிஉமறு கேட்டளவில்
வாகான வால்பிடுங்கி வதைப்பமோ வென்றுரைப்பார்
அப்போழ் நபிசொல்வார் அறியாத மாந்தனிவன்
ஒப்பாய் கொடை கொடுத்து ஓடிப்போ வென்றுரைப்பார்
நபியிறஸூல் வீடுதனி லிரண்டுஷஹ் றாமளவும்
அவித்த வஜீபனங்கள் ஆயிஷா யில்லையென்றார்
மூன்று நாலுநாள் முஹம்மதுர் ரஸூல் நயினார்
தாண்டப் பசியில் தழும்பா திருப்பார்காண்
வாந்த மிகுதியுள்ள வள்ளல் முஹம்மதனார்
கூந்தாலி கொண்டு குடியத்தை வெட்டினர் காண்
ஆட்டை யறுத்து அறிந்தார் சிலமனிதர்
காட்டில் நபியிறஸூல் ஹத்தபுமிக கொண்டு வந்தார்
அகமலர்ப்பும் முகமலர்ப்பும் ஆதரவும் மிகுதியுள்ளோர்
தகுதியுடன் நானிலத்தில் சங்கையுட னேறுவர் காண்
தாட்சியுடன் பிறகாலே சங்கையுள்ள பேரர்களை
தீட்சை பெற்ற யார்கள் தம்மை செப்பமுடன் வைப்பவர்காண்
கஸ்தூரியும் அம்பரும் காஃபூரும் சந்தனமும்
விஸ்துடையோர் பள்லத்துக்கு மிஸ்க்கிவைக ளொவ்வாவது
ஆசாரம் செய்யும் அஹ்மதி ரஸூல்நயினார்
பேசார் விழுப்பேச்சு பேசுவதெல்லாம் வஹியாம்
உத்தாரமின்றி ஒருக்காலு மொருசெயல்கள்
வித்தாரமாக செய்யார் வீரர் முஹம்மதர்காண்
சொல்லும் செயலும் துருஸ்தான ஹாலனவும்
அல்லும் பகலும் அதபா யிருப்பவர்காண்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிப்பெரும் மகத்துவம்
துன்யாவின் வாழ்கையெல்லாம் துய்யோர் முனிந்துகொண்டு
கனியான வல்லவனை காலமெல்லாங் காதல் வைத்தார்
புலூக்கியா வென்பவர் தான் பூமியெல்லாம் திரிந்தார்
குல்க்கழகாம் நன்னபியை குஷியாகக் காணவென்று
பொன்னாலே தவ்றாக்கில் பெருமான் நபினஃத்தை
மின்னொளிபோல் கண்டதினால் மிகுதி இஷ்க்காய் திரிந்தார்
ஆகா யஹூதி அறுத்தானிவர் வன்னிப்பை
பாகமாய் கண்டான் மறுநா ளிருமடங்காய்
இந்தபடி யவனும் இயல்பை யறுத்துவர
அந்தமுள்ள வஸ்பியல்பு அழகாய் வளர்ந்து வரும்
தவ்றாத்தும் இன்ஜீலும் சங்கையுள்ள வேதங்களும்
அவ்றாது நபிவஸ்பு அழகாய் மிகுதி வரும்
அறுஷும் குறுஷும் அவர் வஸ்பை கேட்டலையும்
பறுஷும் கடல் மலையும் பயகாம்பரைப் புகழும்
பறக்கு கின்ற பட்சியெல்லாம் பயகாம்பர் பேரைகேட்டால்
உறக்கமிழந்து ஒரு தாரையாய் கேட்கும்
வல்லாஹி வல்லாஹி வல்லாஹி வல்லாஹி
சொல்லால் தொலையாது துய்யோர்ப் புகழ்படைப்பால்
வானும் அறுஷும் வரிசைக்குறுஷும் திரையும்
மீனும் பொழுதும் இந்தும் மிகுதி ஸலவாத்துரைக்கும்
ஆண்டபெரியோன் அஹ்மதி றஸூல்நபியை
நீண்ட புகழாய் நிறப்பினான் வேதந்தனில்
தாஹாவென்றும் யாஸீனென்றும் தகுமான ஹாமீமென்றும்
வாகான பேருரைத்து வல்லான் விழித்தனர்காண்
துன்யாவின் மண்மணலைத் துலைக்கரிது எண்ணாலே
கனியான நாயகரைக் கவ்லரிது கல்க்காலே
மக்கந்தனில் பிறந்து வாகாய் வளைந்தெழுந்து
ஷக்கறவே நாலுபத்தில் சங்கைபட்டம் வந்ததுகாண்
பின்பு அஷர் ஆண்டு பெருமைமக்கத்தில் இருந்தார்
அன்பாய் மதீனந்தனில் அஷர்மூன்று ஆண்டிருந்தார்
எங்கள் நயினார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வபாத்து
அறுபத்தி மூன்றாண்டில் அஹ்மதூர் ரஸூல்நயினார்
சிறப்பாய் மவுத்தானார் திங்கள்கிழமைதனில்
அஸ்ஹா படங்களெல்லாம் அழுது மதியிழந்து
பிசகாமல் ஆயிஷத்தின் பிறையி லடக்கினர்காண்
எல்லாப் படைப்பும் அவர்மவுத்துக் காயிரங்கி
வல்லான் தன்பக்கல் புக்காவாய் யழுதார்கள்
வீடிழந்தார் சில மனிதர் வெளியிழந்தார் சில மனிதர்
சோடிழந்தார் சில மனிதர் தீனிழந்தார் சில மனிதர்
உயிரிழந்தார் சில மனிதர் உடலிழந்தார் சில மனிதர்
ஸைரிழந்தார் சில மனிதர் ஸம்த்திழந்தார் சில மனிதர்
காற்றுகட லமளியிலே கப்பலிலே ஆனவர்போல்
ஏற்றமுள்ள யார்களெல்லாம் இரைந்தங் கழுதார்கள்
கபுறை வளைந்து கரைந்தழுது நோக்காடாய்
ஸபுரை யிழந்து சலித்தார்கள் காலமெல்லாம்
பெண்டுக ளெல்லோரும் பேதலித்து புத்தியின்றி
கன்றினங்கள் போல கதறி யழுதனர்கள்
றபீவுல் அவ்வல்மாதம் ஈறாறு திங்களிலே
ஹபீபிறஸூல் நயினார் கபுரிலொடுங் கினர்காண்
முன்னோன் விதிப்படியே யெழுந்து மிமாமில்லாமல்
தன்னாக மலக்குமனு தனித் தனியே தொழுதனர்காண்
அறுபதல்ஃபும் முப்பதல்ஃபும் ஆகத்துகை யிருவரிலும்
மறைவாய் கபுறமைந்தார் மறையோர் புதனிரவில்
மூஸா உடப்பிறந்தாள் உம்முகுல்தூம் நாச்சியையும்
முருஸல் நபி ஈஸா மாதா நல் மர்யமையும்
மோசன் பிருஅவ்ன் மர்அத்தெனும் ஆசியையும்
முறுஸல்க் கரசானோர் சொர்க்கமதில் மணமுடிப்பார்
எங்கள் ஜோதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுறு ஷரீபு ரவுலா மகிமை
எங்கள் நபிகபுறை யெழுபதல்ஃபு வானவர்கள்
சங்கையுடன் சூழ்ந்து நிற்பார் தரணிமுடிவளவும்
வல்லானருள் படியே வானவர்கள் முறை முறையே
நல்லார் நபி தமக்கு நல்ல ஸலவாத்துரைப்பார்
பொன்னாலே குப்பாவும் பொன்னாலே கிந்தீலும்
எந்நாளும் மின்னொளி போல் இலங்கும் மெங்கள் நபிகபுறு
என்னுடைய பாவத்தினால் எங்கள் நபி றவுலாவை
உன்னிப்போய்க் காணாமல் ஒஞ்சியிருக்கிறேன்
யாஸெய்யிதி பாவிக்கு நாடிது ஆவிரவும்
நோய்த் தோஷம் வாராமல் நோக்கி துஆவிரவும்
மறுமையில் முதலிடம்
முந்த எழுப்பப்படும் முஹம்மதுர் றஸூல் நபியை
பிந்தியெல்லா முருஸல்களும் பிறகா லெழுவார்கள்
வானவர்களும் றுஸூலும் வள்ளல் லிவானிழலில்
ஜீனத்துடன் நிற்பார்கள் செம்மலை சூழ்ந்து கொண்டு
உம்மத்தைத் தேடி நிற்பார் உண்மை முஹம்மதனார்
செம்மி வருவார்கள் சிறப்புடையோர் உம்மத்துக்கள்
பொற்பதியிற் சென்று புதுக்கக் கலியாணஞ்செய்து
துப்பாக காட்சி செய்து சுகித்தங் கிருப்பவர்காண்
துஆப் பிறார்த்தனை இறைஞ்சல்
வல்ல பெரியோனே வள்ளல் நபியுடனே
தொல்லையற சுவர்க்கம் செல்ல உதவி செய்வாய்
ஏழுகடலும் எழுவான முமறுஷும்
வாழ்வுடையோர் வஸூபெழுத மாட்டது மைவரக்காய்
முத்திரைப் போடுகிறேன் மிஸ்க்கீன்ஸா மென்பவன் தான்
முத்தி லுதித்தோர்தன் மேலான அவ்ஸாபை
துய்ய ஸலவாத்துக்கொண்டும் துய்யக் கருணைக்கொண்டும்
மெய்யுடைய நபி தமக்கும் விருப்பமுள்ள தோழருக்கும்
நபியுல்லா மாலைதனை நன்றாய்க் குறைதீர
பவனியுடன் கேட்டவர்க்கு பாவப்பிணிநோயகலும்
வல்லாஹி இதனைக் கொண்டு மாறும்த்து பொன்தஹபா
பல் எங்கிலும் பீகதின் மன்றாட்டு தேடுகிறேன்
ஹாமீம் நபியுடைய கருணைமிக யுண்டாக
ஆமீன் ஆமீன் ஆமீன் அல்லாஹ் உதவிசெய்வான்