Posted by : kayalislam Friday, 16 September 2011


விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த
அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமத்தே

தங்கு புகழ் அன்னையர்க்கும் தங்கமான தங்கையர்க்கும்
சங்கமான மங்கையர்க்கும் சங்கையான பாத்திமத்தே

பெண்களுக்குக் கண்மணியாய்ப் பெரியவர்க்கு விண்மணியாய்
பண்பிருக்கும் நன்மணியாய் பாருயர்த்தும் பாத்திமத்தே

அன்பு காஸிம் உம்மு குல்தூம் அப்துல்லா ருகையா ஜைனப்
இன்ப தாஹிருடன் பிறந்த இன்னமுதே பாத்திமத்தே

இன்ஜமாதுல் ஆகிர் மாதம் இருபது நாள் சென்ற பின்னர்
மென் கதீஜா வயிற்றுதித்த மேன்மை ஸித்தி பாத்திமத்தே

செங்கதிரோன் பொற்குழம்பைச் சிந்தவந்த வெள்ளி காலை
மங்களமாய் வந்துதித்த மாமணியே பாத்திமத்தே

அருளிருக்கும் பொருளிருக்கும் அகன்றிருக்கும் பாரிடத்தின்
கருவிருக்கும் திருநபிக்குக் கனிவளிக்கும் பாத்திமத்தே

ஓடியாடிப் பாட வேண்டும் ஓட்டிளமைப் போதிறையை
நாடியோடித் தனித்திருந்த நற்கொடியே பாத்திமத்தே

பிஞ்சு போலும் அஞ்சதனில் பிரியமான அன்னையாகும்
துஞ்சவிறையைத் தஞ்சமானீர் தூய்மையார்ந்த பாத்திமத்தே

கருணையாரும் பெருநபியின் காலடியைப் பள்ளியாக்கி
பெருங் குணத்தின் பயிற்சியெல்லாம் பெற்ற பதூல் பாத்திமத்தே

வறுமை நாணம் நன்றி தானம் மனவடக்கம் இறையுணர்வு
பொறுமையாதி அணி சிறக்கும் புகழொளியே பாத்திமத்தே

புவியளிப்போர் பணிய வந்த புனிதனாரின் புதல்வியாகிக்
கவியளிக்கும் எளிய வாழ்வால் கவினடைந்தீர் பாத்திமத்தே

மாசிலாலும் மியல் பறிந்து மணல் விழைந்த மாண்பலியார்
ஈசனோடு பேசியேற்ற இன்பரிசே பாத்திமத்தே

கனிசிறக்கும் வேந்தரெல்லாம் கணவராகக் காத்திருந்தும்
எளியரான அலிப்புலியை ஏற்று வந்தீர் பாத்திமத்தே

பெருநபியின் புதல்வியாகி பேரறிஞர் துணைவியாகி
பெருமை சான்றோ ரன்னையாகும் பேறு பெற்றீர் பாத்திமத்தே

மருள் பெருக்கி இருள் வளர்க்கும் மாயவாழ்வின் தன்மையெல்லாம்
அருள் பெருக்கும் அரிய வாழ்வால் அடர்த்து வென்றீர் பாத்திமத்தே

கார் சுமக்கும் திருநபியின் கவின் சுமக்கும் புதல்வியாய் தண்
ணீர் சுமந்த வடு சுமக்கும் நேர்மை பீவி பாத்திமத்தே

கை சிவக்க மாவரைத்தும் கண்சிவக்க அடுப்பெரித்தும்
மெய்வியர்க்க வீட்டு வேலை மேவுமெங்கள் பாத்திமத்தே

அருளிறையைக் காலை நேரம் அன்புடனே வணங்குவோரும்
திருகை சுற்றும் அரவமுற்றுத் திகைப்படைந்தார் பாத்திமத்தே

மண்ணரரசர் உடையுணவில் மாளிகையில் மகிழ்ந்திருக்க
விண்ணரசா யெளிமையேற்று வியப்பளிப்பீர் பாத்திமத்தே

கடுங்குளிரால் நடுங்குமெழை கவலை போக்க மணவுடையைக்
கொடையளித்து பழையவாடை கொண்டு நின்றீர் பாத்திமத்தே

பசி தணிக்க கிடைத்த ரொட்டி பரிதவிக்க வந்த வேளை
புசிப்பதற்கு கொடுத்து விட்டு புகழடைந்தீர் பாத்திமத்தே

தொழுகைப்பாயி லன்றித் தூங்கும் தலையணையில் துளிர்த்திடாமல்
அழுத கண்ணீர் இறைவனுக்கே அர்ப்பணித்தீர் பாத்திமத்தே

உரை சிறக்கும் அண்ணலாரின் உளம் வருந்த ஏதுவான
திரைகடகம் நீக்கிவிட்ட தீன் முழங்கும் பாத்திமத்தே

வீட்டலுவல் பார்ப்பதற்கோர் வேலையாளை கேட்டதற்கு
நாட்டையாளும் நல்ல தந்தை நாட்டமற்றார் பாத்திமத்தே

அருமையான ஈது நாளில் ஆடை வேண்டும் புதல்வருக்காய்
உருகி நின்றே இறையிடத்தில் உளந்திறந்தீர் பாத்திமத்தே

நல்லசெந்தே னன்ன மெய்க்கு நன்மையூட்டும் நல்லுரைகள்
பல்லவையோர் புகழுமாறு பகர்ந்த பீவி பாத்திமத்தே

புனிதமான பூவையர்க்குப் பொலிவளித்து வாடுகின்ற
வனிதையர்க்கு வாழ்வளிக்க வந்ததேனே பாத்திமத்தே

மாண்பிறப்பின் பயனளிக்கும் மாநபிக்குக் காவலாகி
மாண்பளித்த அபூதாலிப் மருகியாகும் பாத்திமத்தே

நீதி வாழ்த்த நேர்மை காத்து நீணிலத்தை ஆட்சி செய்த
மாதிரங்கள் போற்றுமுமர் மாண்பறிந்த பாத்திமத்தே

கோவுரைக்கும் திருமறையைக் கோத்தளித்துச் சீர் மிகுந்த
கோவையாக்கும் நல்லுதமான் கொழுந்தியாகும் பாத்திமத்தே

பெருமையான வீரருக்குப் பேரணியாம் அலி தமக்கே
ஒருமையான துணைவியாகும் உரிமையான பாத்திமத்தே

வையகத்தி லிசைப்பரப்பி வானகத்தைச் சென்றடைந்த
சையிதான பேர்களுக்குச் சிறப்பளிக்கும் பாத்திமத்தே

பூவுறங்கப் புள்ளுறங்கப் புவனமெல்லாம் ஆழ்ந்துறங்க
நாவுறங்கா திருந்திறையின் நாமமோதும் பாத்திமத்தே

வேத நபி தூதுரைகள் வெற்றி காண அருள் பொழிந்த
நாதனொளி பெற்றுயர்ந்த நாயகியே பாத்திமத்தே

தேன்பொழியும் பெண்ணினத்தார் தேய்வகற்றும் பொன்னுரைகள்
வான்மழையாய்ப் பொழிந்துதவி வளங்கொழிக்கும் பாத்திமத்தே

சொற்களிலும் செயல்களிலும் சோர்வுகாணா தெந்நாளும்
கற்புயர்வும் நற்குணமும் காத்துவந்தீர் பாத்திமத்தே

தந்தையார் தம் தொழுகை வேளை தருக்குடைய வன்பகைசெய்
சிந்தையற்ற செயல்களுக்காய் சிந்தை நொந்தீர் பாத்திமத்தே

கோதுமையை கையரைக்க கோவுரையை நாவுரைக்க
போதுமென்ற பொன்மனத்தால் பொலிவடைந்தீர் பாத்திமத்தே

செங்குரதி பொங்கிவர செருக்களத்தில் பல்லிழந்த
தங்கு புகழ் தந்தையர்க்காய் தளர்ந்து விட்டீர் பாத்திமத்தே

போர் முகத்தில் வாய்மை நாட்டிப் புண்ணடைந்த வீரர் தம்மைப்
பார்வையிட்டுப் பணிவிடைகள் பரிந்து செய்தீர் பாத்திமத்தே

அருமையான அலிப்புலியும் அன்புருவாம் ஹஸன் ஹுஸைனும்
உருகக் கண்டும் உலக வாழ்வை உதறி விட்டீர் பாத்திமத்தே

விண்ணிடந்தில் அண்ணல் நபி வீற்றிருத்தல் காணவோதான்
மண்ணகத்தை விரைவில் நீந்து மறைந்து விட்டீர் பாத்திமத்தே

மாண்ரமலான் மாதமுள்ள வான் சிறப்பைக் காண்பதற்கோ
ஆண்டிருபத் தெட்டினுள்ளே அவனி நீத்தீர் பாத்திமத்தே

வஞ்சகர்கள் நஞ்சளிக்க வாய்மையான நல் ஹஸனார்
துஞ்சு காட்சி முன்னுணர்ந்தோ துஞ்சி விட்டீர் பாத்திமத்தே

கண்ணுஸைனும் காசிமாரும் கர்பலாவில் பெறவிருந்த
விண்பரிசை முன்னறிந்தோ விண்ணடைந்தீர் பாத்திமத்தே

காலைப் போதே குளித்து வந்து கடமையாற்றிக் கபனணிந்து
மாலைப் போதே மவுத்துமானீர் மாண்பொளிரும் பாத்திமத்தே

ஒப்பில்லாத தந்தையர் பால் ஓங்குமன்பால் மறைந்த பின்பும்
தப்பிடாமல் தொடர்ந்து செல்லும் தன்மை பெற்றீர் பாத்திமத்தே

நேசமிக்க ஆசியா நன் நெறியினின்ற மறியம்மா
ஆசி கூற ஆண்டகையை அடைந்த பீவி பாத்திமத்தே

இறையிடத்தி லிருந்து நாமம் இவ்வுலகி லுடம்பெடுத்தோம்
மறையும்போது அவனிடத்தே மகிழ்ந்து செல்வோம் பாத்திமத்தே

விண்ணவர்க்குத் தண்ணொளியாம் மண்ணவர்க்குக் கண்ணொளியாம்
எண்ணுவோர்க்குப் பண்ணளிக்கும் இன்னொளியே பாத்திமத்தே

என்றுமெந்தன் சிந்தை தன்னை ஈர்த்து நிற்கும் விண்மலரென்
றன்றுநம்மைப் பிரிந்த நாதர் அக நெகிழ்ந்தார் பாத்திமத்தே

தேன் பொழியும் பேருரைகள் தெவிட்டிடாமல் ஈந்து நிற்கும்
வான் புகழும் வள்ளலாரின் வடிவமான பாத்திமத்தே

அன்றுமின்றும் என்றுமொன்றும் அரிய வாழ்வை ஆய்வதற்கு
நின்றிருப்போர் மன்றிலென்றும் நின்றிலங்கும் பாத்திமத்தே

கற்பரசே கனிவரசே கவிதையூறும் மாதரசே
பொற்பரசே பொறையரசே புகழரசே பாத்திமத்தே

மணவிளக்கே மணிவிளக்கே மன விளக்கே மனை விளக்கே
குண விளக்கே குலவிளக்கே குடிவிளக்கே பாத்திமத்தே

நல்ல முத்தே நங்கை முத்தே நல்லறிஞர் செல்வமுத்தே
இல்லறத்தின் இன்பமுத்தே இனிய முத்தே பாத்திமத்தே

இறையுணர்வின் நிறையுருவே இறுதி நபி யின்னுருவே
மறையுரையின் நெறியுருவே மறுவிலாத பாத்திமத்தே

செருக்கொழித்த மருக் கொழுந்தே செம்மையுண்மை சேர் கொழுந்தே
அருட்கொழுந்தே திருக் கொழுந்தே அருங்கொழுந்தே பாத்திமத்தே

கோங்கலரும் பூங்கொடியே குரைஷியரின் குலக் கொடியே
ஓங்கு புகழ் ஒரு கொடியே ஓண்கொடியே பாத்திமத்தே

உயர்சுடரே உயிர்ச்சுடரே ஊனமில்லா ஒளிச் சுடரே
அயர்வகற்றும் மணிச் சுடரே அருட்சுடரே பாத்திமத்தே

நோயகற்ற நோன்பிருந்து நோவகற்றும் நாயகியே
தாய்மையொளிர் தையலர்க்குத் தாயகியே பாத்திமத்தே

வையகத்தின் வான்மதியே வானகத்தின் பான்மதியே
தையலர்க்குத் தண்மதியே தங்கமான பாத்திமத்தே

அன்பு வாழ்வே பண்பு வாழ்வே அரிய வாழ்வே பெரிய வாழ்வே
துன்ப வாழ்வில் இன்ப வாழ்வைத் துலக்க வந்தீர் பாத்திமத்தே

விண்ணினின்று மண்ணிலுற்ற வியப்பளிக்கும் மாசிலாத
தண்மதியாம் போன்றிலங்கும் தகைமையாரும் பாத்திமத்தே

நாவலரும் காவலரும் நாவலோங்கும் பாவலரும்
ஆவலோடு போற்றமாதர் ஆவியானீர் பாத்திமத்தே

மாநிலத்தின் மாரதமாம் மாபெரிய பாரதத்தில்
மாநிலத்தோர் நாரதத்தில் மாண்பொளிரும் பாத்திமத்தே

பாரகத்தின் ஊரகத்தைப் பேரகத்தோர் ஏரகத்தைச்
சீரகத்தோர் நேரகத்தைச் சிவிகையாக்கும் பாத்திமத்தே

வரட்சியோட்டும் வான்முகிலே வளப்பமூட்டும் கார் முகிலே
திரட்சியாக நன்மை சேர்க்கும் திருமுகிலே பாத்திமத்தே

உம்பரேத்தும் அம்புயமே உண்மை நன்மை உறைவிடமே
செம்பொன் கோடி ஈடிலாத செஞ்சொலூறும் பாத்திமத்தே

மதி விளக்கும் மர்ளியாவாம் மாண்பளிக்கும் தாஹிராவாம்
பதி சிறக்கும் நல் ஜஹ்ரா பண்பு காத்தூன் பாத்திமத்தே

பூமலரும் புகழ் மலரும் பொன் மலரின் நன்மலராம்
பாமலரும் நாமலரும் பரவ நிற்கும் பாத்திமத்தே

பள்ளரிய புகழையெல்லாம் பாவெடுத்து கூறவந்த
அன்படியேன் பணியிதுவே அன்பளிப்பே பாத்திமத்தே

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.